Read in : English
தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பின் தரவுகள்படி, போதைமருந்து துஷ்பிரயோக வழக்குகளில் தமிழ்நாடு மூன்றாவது மாநிலமாகத் திகழ்கிறது; போதை மருந்து மாஃபியா கும்பல்களுக்கு எதிரான ஒரு மூர்க்கமான யுத்தம் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அதைப் போல கேரளாவிலும் ஏராளமான போதைமருந்து, போதைப்பொருள் துஷ்பிரயோக வழக்குகளில் இளைஞர்களும் மாணவர்களும் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் போதைமருந்து மாஃபியாவுக்கு எதிரான ஒரு பல்முனை தாக்குதலை, ஒரு தர்மயுத்தத்தை கேரளா அரசும் நடத்திக் கொண்டிருக்கிறது.
சூழ்நிலையின் கடுமை கருதி, போதைமருந்து மாஃபியாவை ஆறு மாதங்களுக்குள் வேரோடு அழிக்கக் காவல்துறை கங்கணம் கட்டியிருப்பதாக தமிழகத்தின் டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்திருக்கிறார். சமீபத்தில் தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு சமர்ப்பித்திருக்கும் 2021க்கான அறிக்கைப்படி, போதைமருந்து மற்றும் மனம் பாதிக்கும் வஸ்துக்கள் சட்டம்-1985ன் கீழ் பதியப்பட்ட வழக்குகள் எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாவது இடத்திலும் (5403 வழக்குகள்), உத்தரப்பிரதேசம் முதலாவது இடத்திலும் (10,852), பஞ்சாப் இரண்டாவது இடத்திலும் (6909) இருக்கின்றன.
கேரளாவில்தான் நிலைமை மிக ஆபத்தானதாக இருக்கிறது. அந்த மாநிலத்தின் குற்ற ஆவணங்கள் அமைப்பின் தரவுகள்படி, இந்தாண்டு கேரளாவில் இதுவரை பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்திருக்கிறது
உண்மையில், கேரளாவில்தான் நிலைமை மிக ஆபத்தானதாக இருக்கிறது. அந்த மாநிலத்தின் குற்ற ஆவணங்கள் அமைப்பின் தரவுகள்படி, இந்தாண்டு கேரளாவில் இதுவரை பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்திருக்கிறது. 2020ல் பதியப்பட்ட வழக்குகள் 4,650; 2021ல் 5,334. 2022ல் இதுவரையிலான எண்ணிக்கை 16,956 ஆக உயர்ந்திருக்கிறது.
கேரளாவின் யுத்தம்
கேரளாவில் நிலவும் அபாயகரமான சூழலால், முதல்வர் பினராயி விஜயன் மாநிலம் முழுவதும் போதைமருந்து மாஃபியாவுக்கு எதிரான ஒருமாத கால யுத்தத்தை அறிவித்திருக்கிறார். காவல்துறை, கலால்வரித் துறை போக, பல்வேறு அரசுத் துறைகள், மாநில, ஒன்றிய அரசுகளின் முகமைகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், மதக்குழுக்கள் மற்றும் பிற அமைப்புகள் ஆகியவற்றையும் இந்த யுத்தத்தில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளார். ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டிருக்கும் விஜயன், கடந்த அக்டோபர் 6 அன்று இந்த யுத்தத்தை இணையம் வழியாகத் தொடங்கி வைத்தார். அதிலிருந்து காவல், கலால், கல்வி, உள்ளூர் நிர்வாகம், வருவாய் ஆகிய துறைகள் போதைமருந்து வினியோக வலைப்பின்னலை உடைத்தெறியும் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் தலைவர்களாக மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த மாதிரியான குழுக்கள் பஞ்சாயத்துகளிலும் வார்டுகளிலும் பெற்றோர்-ஆசிரியர் கழகங்களின் ஆதரவோடு கல்வி நிலையங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரிய மாநகரங்களில், போதைமருந்து வினியோகம் செய்பவர்களைக் கண்டுபிடிக்க ஆட்டோ ஓட்டுநர்களையும் கூலித் தொழிலாளர்களையும் கொண்டு ஒரு பின்னல்வலையும் உருவாகியிருக்கிறது.
மேலும் படிக்க: ஊக்கமருந்து சோதனை: தேங்கிப்போன தடகள வீராங்கனை தனலட்சுமி
மாணவர்கள் மத்தியில் போதை!
மாணவர்கள் தங்கள் பதின்மவயதில் பரிசோதனை முயற்சியாக உறிஞ்சி இழுக்கும் போதைப் பொருட்களான பசை, பெட்ரோல், எரேசர் திரவம், ஏரோசோல் ஆகியவற்றை நுகர்கின்றனர். பின்னர் சாராயம், புகையிலை ஆகியவற்றுக்கு நகர்ந்து கிளர்ச்சியூட்டும் போதைமருந்துகளை உட்கொள்ள ஆரம்பிக்கின்றனர். நண்பர்களாலும் நெருங்கிய சில உறவுக்காரர்களாலும் போதைப்பழக்கத்தில் இறங்கிய பலபேர் வாழ்க்கையின் சோதனைகளிலிருந்து தப்பிக்கும் ஒருவழியாக இதைப் பார்க்கின்றனர்.
பணக்கார மாணவர்கள் போதை ஆனந்தம் தேடி நிறைய செலவழிக்கிறார்கள். ஏழை மாணவர்கள் அந்தப் பணக்கார மாணவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களுக்குப் போதைமருந்துகள் வாங்கிக் கொடுக்கும் சாக்கில் தங்களைச் சந்தோசப்படுத்திக் கொள்கின்றனர்.
மாணவிகள் ஆரம்பத்தில் லேசான போதை வஸ்துக்களை உட்கொள்கின்றனர். பின்பு அவற்றிற்கு அடிமையாகி போதைமருந்துகள் வாங்குவதற்குத் தேவைப்படும் பணத்திற்காக நுகர்வோர் நிலையில் இருந்து கடத்தல்காரர்களாக மாறிவிடுகின்றனர். விலையுயர்ந்த போதைமாத்திரைகள் வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் மாட்டிக்கொண்ட பெண்கள் விபச்சாரத்திலும்கூட ஈடுபட்டு சீரழிந்து விடுகின்றனர்.
சமீபத்தில் வயநாட்டைச் சார்ந்த ஒரு சாதாரண பெண் வியாபாரி பகிர்ந்துகொண்ட நிகழ்வு இது.
ஒரு சின்னப்பெண் அந்த வியாபாரியை அணுகி, தான் பேருந்தைத் தவறவிட்டதாகச் சொன்னாள்; அதனால் தனக்கு ரூ.20 கொடுத்து உதவும்படி கேட்டுக் கொண்டாள். மற்றொரு நாள் இதே சின்னப்பெண் இன்னொரு கடையில் இதே கதையைச் சொல்லி பணம் கேட்டிருக்கிறாள். சந்தேகமடைந்த அந்தப் வயநாட்டுப் பெண் வியாபாரி காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அந்தச் சின்னப்பெண் சில மூத்த பையன்களால் போதை உலகத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறாள்.
அகில உலகப் போதைமருந்து வலைப்பின்னலின் தலைவனாகச் செயல்பட்ட ஷக்கீல் ஹர்ஷத் (34) என்பவனை கோழிக்கோடு அருகில் கலால் துறை கைது செய்து, 212 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் எல்எஸ்டி ஸ்டாம்புகளையும், மற்ற போதை வஸ்துக்களையும் அவனது வாகனத்திலிருந்து பறிமுதல் செய்தது
பையன்கள் அவளைப் பணம் கேட்டு நச்சரித்து தொல்லைப்படுத்த அவள் இந்த மாதிரி பல கடைகளில் இறங்கி பணம் கேட்டிருக்கிறாள். இது காவல்துறை புலன்விசாரணையில் தெரியவர, அந்தச் சின்னப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்; அவளின் தாயை கவுன்சிலிங்கிற்கு அனுப்பியுள்ளனர். பொதுவாக காவல்துறை வயது குறைந்தவர்கள் மீது போதைவழக்கு பதிவதில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு போதை வஸ்துக்களை வினியோகம் செய்த கள்ள வியாபாரிகளைத் தேடிக் கைது செய்கிறது.
கேரள அரசின் அதிரடியான நடவடிக்கைகள் இப்போது பலனளிக்க ஆரம்பித்திருக்கின்றன. ‘கேரளா ப்ரோ’ என்றழைக்கப்படும் ஜினேஷ், விஷ்ணு என்ற இரண்டு முக்கிய போதைமருந்து வியாபாரிகளைக் கலால்துறை கைது செய்திருக்கிறது. திருச்சூர் மாவட்டத்தில் 250 மாணவர்களுக்கு எம்டிஎம்ஏ என்னும் பிரபலமான சிந்தெடிக் போதைமாத்திரையை சப்ளை செய்ததாக இருவரும் கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த வாடிக்கையாளர்கள் பட்டியலை ஆய்வு செய்த காவல்துறை, போதை மருந்திற்காக ஒவ்வொரு மாணவரும் மாதம் ரூ.3,000 செலவழித்ததைக் கண்டுபிடித்தது.
வாட்ஸ்அப், முகநூல் ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலம் போதைமருந்துப் பிடியில் தவிக்கும் மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது கலால்துறை.
ஜினேஷ், விஷ்ணு இருவரும் பிடிபட்டபோது, அவர்களுக்கு மீனவர் சமூகத்திலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் படிக்க: குற்றம் புரிந்த மனிதர்களும் குற்றம் புரியா அதிகாரியும்
எம்டிஎம்ஏ உற்பத்தி
போதை மருந்துக்கெதிரான கண்காணிப்பில் காவல் துறையும் மற்ற முகமைகளும் மும்முரமாக இறங்கிவிட்டபடியால், எம்டிஎம்ஏ என்னும் சிந்தெடிக் போதை மாத்திரையைத் தயாரிக்க கேரளா முழுவதும் ரகசிய இடங்களை உருவாக்கும் முயற்சியில் மாஃபியா குழுக்கள் இறங்கிவிட்டன. இந்த வேலைக்குப் பல பெண்களை சம்பளத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் சமீபத்திய கைதுப் படலத்தில் வெளிப்பட்டன.
திருவனந்தபுரத்தில் பூவர் என்னும் இடத்திலும், கொச்சியில் ஒரு உணவகத்திலும் நடந்த அதிரடிச் சோதனைகளில் பெருமளவு எம்டிஎம்ஏ போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
மற்றுமொரு நிகழ்வில், கலால் துறை ஒரு போதைமருந்து வினியோக வலைப்பின்னலைக் கட்டுடைத்தது. இது சம்பந்தமாக, போதைமருந்து வியாபாரிகளால் ‘டீச்சர்’ என்றழைக்கப்படும் ஒரு பெண்ணை அதிகாரிகள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பெண் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, தான் ஒரு நிரபராதி என்று கூறியிருக்கிறார்; பின்னர் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.
கோழிக்கோடு அருகில் அகில உலகப் போதைமருந்து வலைப்பின்னலின் தலைவனாகச் செயல்பட்ட ஷக்கீல் ஹர்ஷத் (34) என்பவரைக் கலால் துறை கைது செய்து, பலகோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளைக் கைப்பற்றியது. அவனது வலைப்பின்னலில் நாளொன்றுக்கு ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள போதை மருந்து விற்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது. மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்தது இந்த வலையம்.
எம்டிஎம்ஏ என்னும் சிந்தெடிக் போதை மாத்திரையைத் தயாரிக்க கேரளா முழுவதும் ரகசிய இடங்களை உருவாக்கும் முயற்சியில் மாஃபியா குழுக்கள் இறங்கிவிட்டன. இந்த வேலைக்குப் பல பெண்களை சம்பளத்திற்கு வைத்திருக்கிறார்கள்
கசாபா காவல்துறையும், மாவட்ட குற்றத்தடுப்புப் படையும், போதை வஸ்துக்களுக்கு எதிரான மாவட்ட சிறப்புச் செயற்படையும் ஒன்றிணைந்து தொடுத்த இந்த யுத்தத்தில் 212 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் எல்எஸ்டி ஸ்டாம்புகளும், மற்ற போதை வஸ்துக்களும் ஷக்கீல் ஹர்ஷத்தின் வாகனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவரது ரகசிய இடத்தில் செய்யப்பட்ட அதிரடிச் சோதனையில் 100 கிராம் எம்டிஎம்ஏ, 10 கிராம் ஹஷீஷ் எண்ணெய், 179 கிளர்ச்சியூட்டும் மாத்திரைகள், 345 எல்எஸ்டி ஸ்டாம்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. எம்டிஎம்ஏவின் சந்தை மதிப்பு மட்டுமே ரூ.7,42,000. கடந்த ஆறுமாதங்களில் 47 கிலோ கஞ்சா, 500 கிராம் எம்டிஎம்ஏ, 50 கிராம் பிரவுன் சுகர் ஆகிய போதை வஸ்துக்களைக் கைப்பற்றியிருக்கிறது சிறப்புப் படை.
ரகசிய ஒப்பந்தங்கள்
போதைப்பொருள் சந்தையின் களத்தில் செயல்படுபவர்கள் பெரும்பாலும் அந்நியர்களாக இருப்பதால், அவர்களை இனங்கண்டு கைது செய்வது காவல்துறைக்குக் கடினமாக இருக்கிறது.
அவர்கள் செயல்படும் முறை இதுதான்:
ஆரம்பத்தில் வாடிக்கையாளர் தொலைபேசியில் உள்ளூர் முகவரைத் தொடர்பு கொள்வார்; அந்த முகவர் ‘பாஸ்’ என்றழைக்கப்படும் நபரின் தொலைபேசி எண்ணைத் தருவார். அந்த பாஸ் வளைகுடாவில் வசிப்பவர். வாடிக்கையாளரின் ஏரியா, வாகன எண், நிறம், தேவைப்படும் பொருள் அளவு, அதற்கான செலவு ஆகிய விவரங்களை பாஸ் கேட்பார். வாடிக்கையாளர் தரும் தரவுகள் சரியானதா என்று பாஸ் நியமிக்கும் ஒரு மூன்றாவது ஆள் சரிபார்ப்பார். பின்பு அந்த பாஸ் சப்ளையரை அழைத்து பொருளை வாடிக்கையாளரிடம் ஒப்படைத்துவிடும்படி சொல்வார்.
செப்டம்பர் 5 முதல் 8 வரையிலான நான்கு நாட்களில் மொத்தம் 652 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. காவல்துறையும், கலால்துறையும் சேர்ந்து நடத்திய சோதனையில் 775 கிலோ கஞ்சாவும், 490 லிட்டர் சாராயமும், 1.5 கிலோ எம்டிஎம்ஏவும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையில் போதைமருந்து துஷ்பிரயோகம் செய்பவர்களின் வலைப்பின்னலுக்குள் புகுந்த கொச்சி காவல்துறை அதிகாரிகள், உணவகங்கள் மூலமாக அவர்கள் போதைமருந்துகளைப் பரிவர்த்தனை செய்வதைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, எல்எஸ்டி, எம்டிஎம்ஏ போன்ற போதை வஸ்துக்கள் பயன்படுத்துபவர்களைக் காவலர்கள் அடையாளம் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், கொச்சியில் பல இளைஞர்கள் அவற்றைத் தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொள்கிறார்கள்.
பாதுகாப்பு மண்டலம்
போதைமருந்துக் கும்பல்கள் பெரும்பாலும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் குறிவைத்து தங்கள் நிழற்தொழிலைச் செய்வதால், கல்விநிலையங்களில் பாதுகாப்பு வளையங்களைக் கட்டமைப்பதில் கேரளா அரசு மும்முரம் காட்டுகிறது. காவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகள் என்று பலதரப்பட்டவர்கள் போதைக்கெதிரான இந்தத் தர்மயுத்தத்தில் உணர்வோடு ஈடுபட்டிருக்கிறார்கள்.
கடுமையான விழிப்புணர்வும் எச்சரிக்கையும் மிக்க இந்த போராட்டத்தை விடாப்பிடியாகத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். அப்போதுதான் கேரளாவின் சமூக வாழ்வை நாசமாக்கும் போதை வஸ்து வியாபாரிகளின் தீய பிடியை, நிழற்பின்னலை உடைத்தெறிய முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
Read in : English