Read in : English
திராவிட மாடல் வளர்ச்சி குறித்த மதிப்பீடு இப்படித்தானிருக்கிறது: பெரியார் இன்னுமிருக்கிறார், அலமாரிகளில் புத்தகங்களாக; தெருக்களில் சிலைகளாக. அதனால் சமூகத்தில் எல்லாம் சரியாகவே இருக்கிறது, கிட்டத்தட்ட.
திராவிட இயக்கத்தின் தலைமையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள ‘பிரமிக்கத்தக்க’ மாற்றங்கள் பற்றிய மேடை முழக்கங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றுதான் என்பதில் ஐயமில்லைதான். ஆனாலும் திராவிட ஆர்வலர்கள் மெய் சிலிர்த்துக்கொள்ளும் இச்சித்திரத்தில் உள்ள கரும்புள்ளிகளுக்கு யார் பொறுப்பு?
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Madras Institute of Development Studies —-MIDS) எனும் புகழ்மிக்க நிறுவனத்தைச் சார்ந்த ஏ. கலையரசன் மற்றும் எம் . விஜயபாஸ்கர் இணைந்து ஆக்கியிருக்கும் திராவிட மாடல்: தமிழக அரசியல் பொருளாதாரம் குறித்த ஆய்வு என்ற நூலை ஸ்டாலின் அரசு தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது. ஆர்வலர்கள் புளகாங்கிதமடைகின்றனர்.
நாட்டில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றுதான் என்பதில் ஐயமில்லைதான். ஆனால், திராவிட ஆர்வலர்கள் மெய் சிலிர்த்துக்கொள்ளும் இச்சித்திரத்தில் உள்ள கரும் புள்ளிகளுக்கு யார் பொறுப்பு?
இதே நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய ஆய்வாளர் எம். எஸ். எஸ். பாண்டியன் சமூகவியல் நிபுணர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலம். பெரியாரும் திராவிட இயக்கமுமே தமிழ்ச்சமூகத்தின் அனைத்து நோய்களுக்கும் ஒரே அருமருந்தென வாதிட்டவர். யாராவது விமர்சனம் செய்தால் அவர்களைப் பார்ப்பனர்களின் கைக்கூலிகள் எனச் சாடுவார்.
ஆனாலும், அவர் கற்றுத் தேர்ந்தவர்தானே? வரலாற்று நிகழ்வுகளைத் திரிக்காமல், அதே நேரம் தாம் விரும்பிய விளக்கங்களைச் சமூகவியல் மொழியில் சிறப்பாக முன்வைக்க அவருக்கு நம்பகத்தன்மை கிடைத்தது. திராவிட இயக்கத்தைப் பற்றி எழுத முற்படும் எவரும் அவரை மேற்கோள் காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டனர்.
ஏறத்தாழ அவரது பாணியிலியே ஆனால் வெறும் சண்டப்பிரசண்டமாயில்லாமல் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான தரவுகளுடன், கலையரசனும் விஜயபாஸ்கரும் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் தமிழகம் கண்டுள்ள வளர்ச்சியினை விதந்தோதுகின்றனர்.
மேலும் படிக்க: பாஜகவின் தேசியவாத வளர்ச்சியை திராவிட மாடல் சித்தாந்தம் ஜெயிக்குமா?
மற்ற மாநிலங்களைவிடத் துரிதகதியில் தமிழகத்தில் கிராமப்புற வறுமை குறைந்திருக்கிறது. தேசிய சராசரியைவிடத் தமிழ்நாட்டுத் தனிநபர் வருமானம் படுவேகமாக உயர்ந்திருக்கிறது. பல்வேறு சாதிக்குழுக்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரம் நவீனமயமாகியிருக்கிறது, விவசாயத்தின் பங்கு மாநில வருவாயில் வெறும் எட்டு சதம் மட்டுமே.
நூலாசிரியர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர் :
“தலித்துகள் தலித் அல்லாத நில உடைமையாளர்களை அண்டிப்பிழைக்க வேண்டிய கட்டாயம் இப்போதில்லை. அம்மக்களில் ஒருபகுதியினர் வேளாண்மை சாராத துறைகளில், ஒப்பீட்டளவில் அதிக சம்பளம்தரும் பணிகளில் நுழைந்தனர். இந்தியா முழுக்க தலித்துகளின் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டது; ஆனால், தமிழகத்தில் அது இன்னும் மிகக் கூர்மையாக நிகழ்ந்தது. தலித் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தலித் மக்களுக்கான தொழில் மற்றும் வணிக அமைப்பு மனதாரப் பாராட்டுகிறது…”
கல்வி, பொது சுகாதாரம், சமூக நீதி, அனைத்திலும் நாமே முதலிடத்தில், இப்படிப் போகிறது வாழ்த்துப்பா.
இக்குறியீடுகள் பொதுவான தமிழ்நாட்டு வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிப்பதானால் நம்மை விட்டுவிட்டு வல்லுநர்கள் ஒரு முகமாக ஏன் கேரளத்தைப் புகழ்ந்து தள்ளவேண்டும்? அதுதானே மனித வளர்ச்சியில் முதலிடத்தினை வகிக்கிறது? தமிழ்நாடு 11வது இடத்தில்தானே!
ஆனாலும், சொல்லிக்கொள்ளும்படியான சாதனையை நிகழ்த்தியுள்ளோம். பொதுவாகச் சட்டம் ஒழுங்கு நிலவுகிறது. இரவில் பயணம் செய்யும் பெண்கள் சென்னையில் மிகப் பாதுகாப்பாக உணர்கின்றனர். பொதுசுகாதாரத் துறை ஒப்பீட்டளவில் திருப்திகரமாகச் செயல்படுகின்றது. ஏராளமான அரசு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள். சாலை, மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
ஆனால், தமிழ்நாடு ஒன்றும் சொர்க்கபுரியாகிவிடவில்லை. வறுமை விரவிக்கிடக்கிறது. நகரமோ கிராமமோ வறுமையின் தாண்டவத்தை நேரில் பார்க்க முடிகிறது. இலவசங்களென்றால் அடிதடிதான். மிதிபட்டு இறப்பதுகூட வழக்கமாகிவிட்டது.
மாதம் ரூ 25,000 வருவாயுள்ள நபர் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவராகக் கொண்டால், அந்த அளவு ஊதியம் பெறுவோர் இந்திய மக்கள்தொகையில் ஐந்து சதமே என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
இன்றைய விலைவாசியில், அதுவும் வீட்டு வாடகை எகிறிக்கொண்டிருக்கும்போது, 25,000 எந்த அளவு போதுமானதாக இருக்கும் என்பதற்கப்பால், தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கை நிலை அந்த ஐந்து சத தரத்திற்கும் மேலாகவா இருக்கப்போகிறது? அப்படி இருக்கையில் ஆஹா, ஓஹோ எனப் புல்லரித்துப்போவானேன்?
தமிழகம் உண்மையிலேயே சிறப்பானதொரு வளர்ச்ச்சியினைக் கண்டிருக்கிறது. பின்தங்கிவிட்ட மாநிலமல்ல. ஆனாலும், இன்னும் பரவலான வறுமை இருக்கிறது
எல்லோருக்குமான முன்னேற்றம் என்ற வசீகரப் பேச்சுக்கள் இருக்கட்டும். நிஜத்தில் பெரும்பாலான அளவுகோல்கள்படிப் பார்த்தால் தலித்துகள் இன்னும் பின்தங்கியேதான் இருக்கிறார்கள். ஆதாரத்திற்கு நாம் வெகுதூரம் செல்ல வேண்டாம். ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் ‘காலனி’களைப் பாருங்கள்; தலித் குடியிருப்புகளைப் பாருங்கள். அவையெல்லாம் பிரதானமான ஊர்களின் அங்கங்கள் என்றா கருதப்படுகின்றன? ‘ஊர்’ என்பது வேறு; சேரிகள் அல்லது காலனிகள் என்பது வேறு. தலித்துகள் ஊர்வழியாக நடந்து தங்கள் சேரிகளுக்குச் செல்ல முடிவதில்லை. மரணத்தில்கூட சமத்துவம் இல்லை. சாதி இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தலித்துகள் பிணங்களை எரிக்கவோ புதைக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.
இங்கே 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் இருக்கிறது. ஆனால், தலித்துகள் இன்னும் வெளியேதான் வாழ்கிறார்கள். அது எப்படி? உயர்சாதி ஆதிக்கத்தைத் தகர்த்தது திராவிட இயக்கம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த வெற்றிடத்தில் யார் நுழைந்தது? ஆதிக்கச் சாதிகள் விட்ட இடத்தில் இப்போது சமூகரீதியாக ஆதிக்கம் செலுத்துவது இடைநிலை சாதிகள். தலித்துகள் ஒடுக்கப்படும் நிலையில்தான் இன்னும் இருக்கிறார்கள்.
ஒரு கட்டமைப்பு தகர்க்கப்படுகையில், உச்சியிலிருப்போர் வீழ்த்தப்படுகின்றனர். இயல்பாகவே அடுத்த படிநிலையிலிருப்போர் மேலே நகர்கின்றனர் என்பார் பாண்டியன். ஆம். அது உண்மைதான். ஆனால், திராவிட இயக்கத்தின் வழியே ஒரு மாபெரும் சமூகப் புரட்சி அரங்கேறி 55 ஆண்டுகள் ஆனபின்பும் தலித்துக்கள் உள்ளிட்டோர் அடித்தட்டுகளிலேயே உழல்வதென்ன நியாயம்? ஆர்வலர்களின் சமாதானங்களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துவிட்டது.
மேலும் படிக்க: முற்போக்கான தமிழகம் பாலின விசயத்தில் பின்தங்கி இருக்கிறது: தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வு
சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒரு செயற்பாடுதான். ஆனால், அப்படிப் பயனடைந்தோரின் சந்ததியினர் இன்னும் அத்தகைய சலுகைகளை அனுபவிக்ன்றனர், அவர்கள் மத்தியிலேயே பின் தங்கியவர்களுக்கு வாய்ப்பளிக்க மறுக்கின்றனர். முன்னேறிய பிரிவினரை (கிரீமி லேயர்) இந்த இட ஒதுக்கீட்டிலிருந்து வடிகட்ட வேண்டிய தேவையைப் பற்றிப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான முதல் ஆணையமே வலியுறுத்தியது. அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாவது ஆணையம் இடஒதுக்கீட்டுப் பயனாளிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படவேண்டிய 24 வேறு சாதிகளை அடையாளப்படுத்தியது.
மிகப் பின் தங்கிய சமூகத்தில் பிறந்தும் இட ஒதுக்கீட்டின் விளைவாய் எவ்வளவு தூரம் முன்னேறியவர் என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டும் நூலாசிரியர்கள் கிரீமி லேயர் குறித்த அம்பாசங்கரது பரிந்துரைகளைப் பற்றி ஏதும் சொல்லவே இல்லை. அம்பாசங்கர் என்றல்ல, கிரீமி லேயரை வடிகட்ட முன்வந்து, பின் 1980 நாடாளுமன்றத் தேர்தல்களில் சந்தித்த படுதோல்விக்குப் பின்னர் அம்முயற்சியை எம்ஜிஆர் கைவிட்டது பற்றியும் மவுனம் சாதிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல பரம்பரை கர்ணம் பதவியை ஒழித்து அரசுத் தேர்வுகள் மூலமாகவே அந்நியமனங்கள் என 1981இல் அன்றைய எம் ஜி ஆர் அரசு சட்டமியற்றியது. ஆனால், நூலில் 1975இல் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்டதென்கின்றனர். அந்த முடிவு மேல்சாதி கர்ணம் நிர்வாகத்தில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த தலித் மக்களுக்கு மகிழ்ச்சியளித்தது, பெரும் சுமையினை அப்புறப் படுத்தியது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு நடவடிக்கைக்காகக் கருணாநிதியைப் பாராட்டுவது அறமன்று, அறிஞர்களுக்கு அழகுமன்று.
தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்கவேண்டி, எம் ஜி ஆரையும், அ இஅதிமுகவையும் திராவிடக் கட்சியாகவே தாம் கருதுவதாக நூலாசிரியர்கள் காட்டிக்கொள்கின்றனர், ஆனால் அவர்களுக்கு அதில் நாட்டமில்லை என்பது தெளிவு. கருணாநிதி மீது பல்வேறு ஊழல் புகார்களை வைத்து, அவரது ஜனநாயக விரோதச் செயல்பாடுகளைக் கண்டிப்பதாகக்கூறிதான் எம்ஜிஆர் வெளியேறினார், புதிய கட்சி உருவாக்கினார், மக்களிடையே பேராதரவு பெற்றார், தொடர்ந்து தேர்தல்களில் திமுகவை வெற்றிகண்டார். ஆனால், இங்கும் மவுனமே.
இங்கே 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான். ஆனாலும் தலித்துகள் தமிழ்ச் சமூகத்தின் அங்கமாகவா கருதப்படுகின்றனர்? ஊருக்கு ஒதுக்குப் புறமாக, சேரிவாழ் மக்களாகத்தானே கருதப்படுகிறார்கள்.
தற்போதைய தேக்கம், சிக்கல்கள், மோதல்கள் பற்றி எதுவுமே கலையரசனும் விஜயபாஸ்கரும் சொல்லவில்லை எனக்கூறவியலாது. இறுதிப் பகுதியில் மிக மிக மென்மையாக, ஒரு வித வருத்தத்துடன் பதிவுசெய்கிறார்கள்தான், ஆனால் தீர்வாக எதையும் சொல்லவில்லை.
ஒருவேளை தேசத்திலிருக்கும் ஓர் உப அரசினால் இவ்வளவுதான் செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர் போலும்
இப்படித்தான் தவறுகள், குற்றங்கள் பற்றி சுட்டிக்காட்டும் துணிவு ஆய்வாளர்களுக்கே இல்லாமல் போக திராவிட இயக்கம் தொடர்ந்து வழி தவறுகிறது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்; கெடுப்பாரிலானுங் கெடும்
எனும் வள்ளுவ வாக்கினை தமிழின் பெயரால் ஆட்சியினை நடத்துவோர் மறக்கலாகாது.
ஜப்பான் அறிஞர் நோபொரு கரஷிமா ஒருதடவை இப்படிச் சொன்னார்: “தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சரித்திரப்பூர்வமாக முக்கியமானது; சமூகரீதியாக முற்போக்கானது; குறிப்பாக சாதிக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்ற அவர்களின் கண்ணோட்டம் சிறப்பானது. ஆனால், அவர்களிடம் அறிவுஜீவித்தனத்திற்கு எதிரான ஒரு போக்கு இருக்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது. சீனாவில் கலாச்சாரப் புரட்சி ஏற்பட்டபோது உருவான சூழல் போன்றது இது. சீனக் கலாச்சாரப் புரட்சி சரித்திரபூர்வமாக தேவையானதாக இருந்திருக்கலாம். ஆனால் அது கல்வியாளர்களுக்கு பெரும் நாசத்தை உண்டுபண்ணியது.”
மாநில அரசியல் பற்றியும், அதன் பொருளாதார, சமூக, கல்விசார் கொள்கைகள் பற்றியும் தீர்க்கமாக விமர்சனப் பூர்வமாக மதிப்பீடு செய்யும் வழக்கம், குறிப்பாக கல்வி நிலையங்களில் இல்லை.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் தென்னிந்தியாவின் தலைமையகமாகவே சென்னையிருந்தபோது உருவான ‘எஃகுச் சட்டகம்’ திறமையான நிர்வாகம் உருவாகக் காரணமாயிருந்தது.
பின்னர் தொடர்ந்த காங்கிரஸ் ஆட்சியிலும் அந்த ‘எஃகுச் சட்டகம்’ மேலும் வலுப்பெற்றது. தொழிற் வளர்ச்சியிலும் தமிழ்நாடு பீடு நடைபோட்டது. ஊழல் இப்போது சந்திக்கும் அளவில் இல்லை. அந்த அளவில் வலிமையான அடித்தளமிடப்பட்டது.
அத்தகைய பின்புலத்தில் மலர்ந்த திராவிட ஆட்சி அப்போதிருந்த கட்டமைப்பைச் சீர்குலைக்கவில்லை. திமுக, அ இஅதிமுக இரண்டுமே ஊழல், அதிகார துஷ்பிரயோகம் இவற்றுக்கப்பால் வளர்ச்சியில் அக்கறை காட்டின.
இன்று ஓரளவு நிம்மதியான வாழ்க்கை, மெல்ல மெல்ல என்றாலும் முன்னேற்றமே பின்னடைவில்லை என்ற ஒரு சூழல் நிலவுவதற்கு1967க்குப் பின்னமைந்த அனைத்து அரசுகளும், முதல்வர்களும் காரணம். மறுக்கவியலாது.
ஆனால், அவர்களை மனிதகுலமே சந்தித்திராத பெரும்தலைவர்கள் என ஆராதிப்பதும் திராவிட ஆட்சியில் சமூகம் சந்தித்து வரும் அவலங்கள் குறித்து அமைதிகாப்பதும் பெருந்தவறு.
Read in : English