Read in : English
பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்துக்குள் நுழைவதற்கு முன்னர் கடந்து வந்த பாதையை அசை போடுவோம். அது ஒரு வகை சுவை. போலவே, பல ஆண்டுகளுக்கு முன் நம் மூதாதையர்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதும், அப்போதிருந்த அரசுகள் என்ன செய்தன என்பதும் சுவாரசியத்தைத் தரும். அதனாலேயே, நம்மில் பலர் வரலாற்றை அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படிப்பட்ட வரலாற்று நாயகர்களில் ஒருவரான ராஜராஜ சோழனை மையப்படுத்தி எழுத்தாளர் கல்கி எழுதிய புனைவுதான் ‘பொன்னியின் செல்வன்’.
பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பு என்பதுபோல, கல்கி பத்திரிகையில் தொடராக வெளிவந்த காலத்தில் ஒவ்வொரு வாரமும் வாசகர்களை நகம் கடிக்க வைத்த படைப்பு. படிக்கப் படிக்க ஒவ்வொருவரது மனதிலும் அதிலுள்ள பாத்திரங்களும் நிகழ்வுகளும் விதவிதமாக உயிர் பெற்றதே அதன் வெற்றிக்குக் காரணம். அப்புதினம் பல்வேறு பதிப்புகளைக் கண்டுவிட்டது; பல மொழிகளில் ஆக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எழுபதாண்டுகளைக் கடந்து தற்போதுதான் அக்கதை திரையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது ரசிகர்களுக்குத் திருப்தியைத் தருகிறதா? இந்தக் கேள்வியோடே இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட ‘பொன்னியின் செல்வன்’ குழுவே காத்துக் கொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வன் படித்துவிட்டீர்களா?
சுந்தர சோழர் எனும் சோழப் பேரரசர் நோய்வாய்ப்படுகையில், அவரது ஒன்றுவிட்ட சகோதரரான மதுராந்தகரை அரியணையில் ஏற்றும் முயற்சி நடைபெறுகிறது. தஞ்சைக்கு வடக்கே உள்ள அத்தனை அரசுகளையும் போர் செய்து வெற்றி கொள்ளும் வெறியில் இருக்கிறார் சுந்தரரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இளைய மகன் அருள்மொழி வர்மனோ கடல் கடந்து இலங்கைக்குப் படையுடன் சென்றிருக்கிறார். இந்த நேரத்தில், மதுராந்தகர் பின்னால் தளபதி பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் தலைமையில் சிற்றரசர்கள் அணி வகுக்கின்றனர்.
‘பொன்னியின் செல்வன்’ படித்திருந்தாலும், அது தெரியாதவர்களுக்குப் பாடம் நடத்துவதைப் போலவே திரைக்கதை அமைத்திருக்கிறது ஜெயமோகன், குமரவேல், மணிரத்னம் கூட்டணி. அதனால், அப்புத்தகத்தை நான் பார்த்ததில்லை என்று சொன்னாலும் பங்கமில்லை.
இந்தச் சதி பற்றி உளவுத்தகவல் வர, நிலைமையை அறிய தன் படையில் இருக்கும் வந்தியத்தேவனைத் தஞ்சைக்கு அனுப்புகிறார் ஆதித்தன். அவருடைய சகோதரி குந்தவை, பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி ஆகியோரைச் சந்திக்கிறார் வந்தியத்தேவன். அதன் தொடர்ச்சியாக, இலங்கை சென்று அருள்மொழிவர்மனைச் சந்திக்கிறார். அதற்குள், அவரைச் சிறை பிடித்துவர ஆணை பிறப்பிக்கப்படுகிறது. ஆட்சியைக் கைப்பற்றுபவன் எதையும் சமாளிப்பான் என்ற எண்ணத்தில், அந்த ஆணைக்கு ஒப்புதல் தெரிவிக்கிறார் சுந்தரர்.
இதற்கு நடுவே, பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஒற்றர்களுடன் தொடர்பில் இருக்கும் நந்தினி, இலங்கை சென்று அருள்மொழியைக் கொல்ல ஆள்களை அனுப்புகிறார். அதன்பின் என்ன நடந்தது? அருள்மொழி தஞ்சை திரும்பினாரா என்பதைச் சொல்கிறது ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1.
ஏற்கெனவே ‘பொன்னியின் செல்வன்’ படித்திருந்தாலும், அது தெரியாதவர்களுக்குப் பாடம் நடத்துவதைப் போலவே திரைக்கதை அமைத்திருக்கிறது ஜெயமோகன், குமரவேல், மணிரத்னம் கூட்டணி. அதனால், அப்புத்தகத்தை நான் பார்த்ததில்லை என்று சொன்னாலும் பங்கமில்லை.
சுவாரஸ்யம் இருக்கிறதா?
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் ஒரு கதைப்படம்
‘பொன்னியின் செல்வன்’ தொடர் அல்லது புதினம் படித்தவர்களுக்கு இத்திரைப்படம் ஆச்சர்யம் தராது. அதேநேரத்தில், வந்தியத்தேவன் முதல் திரையில் பேசும் ஒவ்வொரு பாத்திரத்திற்குமான கலைஞர்களின் தேர்வு அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வாய்ப்பு அதிகம். சிலருக்கு அது அதிர்ச்சியாகவும் வாய்க்கலாம்.
உதாரணமாக, ஆழ்வார்க்கடியான் நம்பியாக இப்படத்தில் ஜெயராம் நடித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படித்தபோது என் மனதில் இயக்குநர் டி.பி.கஜேந்திரன் தான் படிந்தார். நந்தினி என்றபோது மாதுரி தீட்சித் போன்ற பேரழகி கண்ணில் தெரிந்தார். இந்த மனக்கிளர்ச்சி ஒவ்வொருவரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் அறிந்த பிரபலங்களுக்கும் ஏற்ப மாறுபடும்.
அது மட்டுமே, இப்படம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை. ஏன், வந்தியத்தேவன் தொடங்கி ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை என்று இந்தப் பட்டியல் நீளலாம். மணிரத்னத்தால் தேர்வு செய்யப்பட்டு இப்பாத்திரங்களை ஏற்றிருக்கும் நடிகர் நடிகைகளைப் பெரிய அளவில் விமர்சிக்க இயலாது என்பதே ஆறுதல்.
அடுத்தடுத்து அறிமுகமாகும் பாத்திரங்கள், நிகழ்வுகள், உரையாடலில் வெளிப்படும் தகவல்கள், அதன் வழியே விரியும் கதை என்று காட்சிகள் முழுக்க ஏதேனும் ஒன்று நிரம்பி வழிகிறது. அதுவே, சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகரும் உணர்வைத் தரலாம். அதேநேரத்தில், இரண்டாம் பாகத்தில் பல அதிரடித் திருப்பங்கள் இடம்பெற வேண்டுமென்ற காரணத்திற்காக முதல் பாகத்தில் பல தகவல்களைச் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குநர். அதுவும் கூட, கதையை ஏற்கெனவே படித்திராதவர்களுக்கு சுவாரசியம் தராமல் போகலாம்.
பெரும்கூட்டத்துக்கு நடுவே சுழன்றாடுகிறது ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் கேமிரா. பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில் இருந்து கோட்டைச் சுவர் தாண்டி வந்தியத்தேவன் தப்பிக்கும் காட்சி, அற்புதமான கூட்டுழைப்புக்கு உதாரணம்.
வசனங்களைப் பொறுத்தவரை பிறமொழிக் கலப்பில்லாத தமிழ் ஒலிப்பது அருமை. அதேநேரத்தில், பெரிதாக வட்டார வழக்கைக் கைக்கொள்ளாமல் எழுத்துருவை வாசிக்கும் பாங்கிலேயே தமிழ் நடை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘நான் தான் இளவரசன் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்.. அதான் எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று சொன்னீர்களே, அதை வைத்துதான்’ என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே சுவாரசியம் கூட்டுகின்றன. போலவே, வந்தியத்தேவன் தான் எதிர்கொள்ளும் பெண்களிடம் புகழ்ந்து பேசுவதாக அமைந்த வார்த்தைகளும்கூடச் சட்டென்று பார்வையாளர்களைச் சிரிக்கவைத்து விடுகின்றன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஏகா லகானியின் ஆடை வடிவமைப்பில் அரச பரம்பரையினர் தொடங்கிச் சாதாரண குடிமகன்கள் வரை கண்கவர் உடைகளை அணிந்திருப்பது கண்ணைப் பறிக்கிறது. தோட்டா தரணியின் கலை வடிவமைப்பில் அரண்மனை உட்புறங்கள் மட்டுமல்லாமல் படகுகள், தோணிகள், கப்பல்கள், குடைவரை கோயில்கள், புத்த விகாரங்கள், கோட்டை மதில் சுவர்கள், ரகசிய சுரங்கப் பாதைகள், சந்தைகள், திருவிழா அரங்குகள் என்று ஒவ்வொரு களமும் கவனத்தை ஈர்க்கிறது.
பெரும்கூட்டத்துக்கு நடுவே சுழன்றாடுகிறது ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் கேமிரா. பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில் இருந்து கோட்டைச் சுவர் தாண்டி வந்தியத்தேவன் தப்பிக்கும் காட்சி, அற்புதமான கூட்டுழைப்புக்கு உதாரணம்.
இரண்டு டஜனுக்கும் மேலான பாத்திரங்கள், பின்னணியில் திரியும் மனிதர்கள், ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட அபிப்ராயங்கள் என்று நீளும் புனைகதையைத் திரைக்கதை ஆக்குவதற்குக் கடின உழைப்பு வேண்டும். அதையொட்டி மிக நேர்த்தியாகப் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் ஸ்ரீகர்பிரசாத்.
இவையனைத்துக்கும் மேலாக ஒரு கமர்ஷியல் படத்திற்கான பாடல்களைத் தந்து திரையில் இருந்து பார்வையை விலக்காமலிருக்க உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்களுக்கான காட்சியமைப்புகள் ஆச்சர்யம் தரவில்லை என்றாலும், ‘டம்டம்டம்டமரே’, ‘ராட்சஸ மாமனே’ போன்ற பாடல்களில் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நம் சுவாரசியத்தை அதிகப்படுத்துகின்றன.
இடைவேளைக்கு முன்னரே 5 பாடல்கள் இடம்பெற்றிருப்பதால், பின்பாதியில் ‘அலைகடல்’ மட்டுமே வருகிறது. அதுவும் கூடத் திரையில் ஒரு நிமிடத்திற்கு மேல் ஒலிப்பதில்லை. இதனாலேயே முன்பாதியில் பின்னணி இசை பாடல்களுக்கு நடுவே வரும் இடையிசை போன்றே அமைந்திருக்கிறது. அதற்குச் சேர்த்துவைத்து பின்பாதியில் போர், சதியாலோசனை, துரத்தல், வருத்தம் என்று பல்வேறு உணர்வுகளை உயர்த்திப் பிடிக்க உதவியிருக்கிறது பின்னணி இசை.
மணிரத்னம் எங்கே?
மேலும் படிக்க: ஜெயமோகனுக்குச் சிறப்புச் சேர்க்குமா பொன்னியின் செல்வன்?
‘மௌனராகம்’, ‘தளபதி’, ‘நாயகன்’ போன்றவற்றைக் கண்டு அதிசயித்தவர்களும் சரி; 2000களில் ‘இருவர்’, ‘அலைபாயுதே’ என்று வரிசையாக மணிரத்னம் திரையில் காட்டிய உலகம் அதுவரை மக்கள் காணாததாக இருந்தது உண்மை. கேமிரா கோணங்கள், திரையில் நிரம்பியிருக்கும் வண்ணம், ஒளி, வசனங்கள் ஒலிக்கும் விதம் என்று பலவும் மேற்கத்திய வாசனையோடு இருந்தன. அதனாலேயே பெரிதும் கொண்டாடப்பட்டன. அவற்றில் இருந்த சமூக, பண்பாட்டு, அரசியல் அம்சங்கள் கேள்விக்குள்ளாக்கப்படும் வகையில் சர்ச்சைக்குரியதாகவும் இருந்தன. அவற்றில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’.
சைவர்களா, வைணவர்களா யார் உயர்ந்தவர்கள் என்ற கேள்வியையோ, இலங்கையிலுள்ள புத்த விகாரம் சென்று புத்த மத குருமார்களிடம் ஒரு தமிழ் அரசர் ஆசீர்வாதம் பெறுவதையோ விமர்சிக்க இயலாது. ஏனென்றால், அவை கல்கியின் எழுத்துகளிலேயே வெளிப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டு மக்களில் குறிப்பிட்ட சதவிகித மக்கள் அறிந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை அப்படியே படமாக்குவது என்ற மணிரத்னத்தின் செயல்பாடு ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறது.
‘பாகுபலி’ வரிசையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக நிகழ்வது போன்ற ஒரு சரித்திரப் புனைவைப் படமாக்கினால் போதும் என்ற முடிவை நோக்கி நகர்ந்திருப்பதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். அதனால், வழக்கமான மணிரத்னத்தைக் காண இயலவில்லை. திரையில் அழகியலோடு பிரம்மாண்டம் வெளிப்பட்டால் போதும் என்ற எண்ணத்துடன், பல நடிகர்களை ஒன்றாகத் திரையில் காணச் செய்யும் அனுபவமே ரசிகர்களை மீண்டும் மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் என்று நினைத்தாரா, தெரியவில்லை.
ஆனால், அதுவே சாதாரணப் பார்வையாளர்களுக்கு திருப்தியைத் தந்திருப்பதைத் திரையரங்கில் கிடைக்கும் வரவேற்பில் இருந்து அறிய முடிகிறது. அதிலிருந்து, தற்போதைய ட்ரெண்டுக்கேற்ப ‘மினிமம் கியாரண்டி’ படைப்பொன்றைத் தந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. மற்றபடி, மணிரத்னத்தின் தனிப்பட்ட ரசிகர்கள் சிலாகிக்க இதில் பிரம்மாண்டமான காட்சியமைப்பைத் தவிர வேறெதுவும் இல்லை.
Read in : English