Read in : English
நட்சத்திர நாயகர்களின் படங்கள் வெளியாகும்போது திரையின் முன்னால் ஆரத்தி காட்டுவதில் தொடங்கிப் பல அடி உயர கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதுவரை கடவுளர்க்கு நிகரான மரியாதையை ரசிகர்கள் நடிகர்களுக்குத் தருகிறார்கள். என்னதான் ஒரு திரைப்படம் ஓஹோவென்று சிலாகிக்கப்பட்டாலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற ஒரு மாதத்தின் 1 முதல் 15 தேதிகளுக்குள் திரைப்பட வெளியீடு நடந்தாக வேண்டும்; அந்த வரையறையை மீறி 15 முதல் 30 அல்லது 31 தேதிகளில் வெளியாக வேண்டுமானால் அந்நாளில் ஏதேனும் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும். அப்படியில்லாவிட்டால் ரசிகர்களால் கூட அப்படத்தைத் திரும்பத் திரும்ப ரசிக்க முடியாத சூழல் உருவாகிவிடும்.
அதையும் மீறி மாதத்தின் பின்பாதியில் ஒரு சாதாரண நாளன்று வெளியாகும் திரைப்படம் பெருவெற்றி பெற, உண்மையிலேயே அது அபாரமானதாக இருக்க வேண்டும். ஆச்சர்யமாக இருக்கிறதா? தமிழ்த் திரையுலகம் தந்திருக்கும் தரவுகள் அதையே காட்டுகின்றன. இப்படியொரு நிலைமைக்குக் காரணம் குறிப்பிட்ட நாள்களில் நிலவும் பணப்புழக்கம். ஆம், பணப்புழக்கம் எப்போது அதிகமிருக்கும் என்பதை மனத்தில் கொண்டே பெருவாரியான திரைப்பட வெளியீடு எந்த நாளில் என்பது முடிவுசெய்யப்படுகிறது.
மாதத்தின் பின்பாதியில் ஒரு சாதாரண நாளன்று வெளியாகும் திரைப்படம் பெருவெற்றி பெற, உண்மையிலேயே அது அபாரமானதாக இருக்க வேண்டும். ஆச்சர்யமாக இருக்கிறதா? தமிழ்த் திரையுலகம் தந்திருக்கும் தரவுகள் அதையே காட்டுகின்றன.
பணம் புழங்கும் காலம்!
பெரும்பாலான தொழிலாளர்கள், கூலிப் பணியாளர்கள், அரசு மற்றும் நிறுவனங்கள் சார்ந்து பணியாற்றுவோர் உட்பட உழைக்கும் வர்க்கம் அனைத்துமே முதல் தேதியைச் சார்ந்து இயங்குபவை. 1 முதல் 10ஆம் தேதிக்குள் சம்பளம் வாங்கித்தான் குடும்பம் நடத்த வேண்டுமென்ற கட்டாயம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இவர்களை நம்பி வணிகம் செய்வோரும் கூட, ஒரு மாதத்தின்முதல் 15 தேதிகளுக்குள் கணிசமான லாபத்தை ஈட்டுவார்கள். மூன்றாவது, நான்காவது வார ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பல கடைகள் மற்றும் அங்காடிகள் விடுமுறை விடப்படுவதில் இருந்து இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
மேலும் படிக்க: சன் பிக்சர்ஸ், ரெட் செயிண்ட் மூவிஸ் திரைப்படத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறதா?
முதல் பதினைந்து நாள்களில் மட்டுமே மக்களிடம் பணப்புழக்கம் அதிகமிருக்கும். மூன்றாம் நான்காம் வாரங்களில் பண்டிகைகள் வரும்போது கடன் வாங்கிக் கொண்டாடும் சூழலுக்கு ஆளாவார்கள். பணம் பாக்கெட்டில் இல்லாவிட்டால் படம் பார்க்கச் செல்வது எப்படி?
தற்போதுதான் மாதத்தின் கடைசி வாரத்தில் சம்பளம் பெறும் வழிமுறை பெருகியிருக்கிறதே என்ற கேள்வி தோன்றலாம். அப்படிப்பட்டவர்களும் கூட, மேலே சொன்ன வழிமுறையைத்தான் பின்பற்றுவார்கள். மிகச்சிலரின் கையில் பணமிருந்தாலும்கூட, ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பதன் அடிப்படையிலும், பின்பாதியில் பணத்தைச் செலவழிக்கத் தயங்கும் வழக்கமான மனோபாவத்தினாலும் கொண்டாட்டங்களைத் தவிர்ப்பதே வழக்கமாக இருந்து வருகிறது.
ஆதலால், மாதத்தின் பின்பாதியில் வெளியாகும் படங்கள் பெரிய வெற்றிகளை ஈட்டாது என்பது ஒரு தீவிரமான நம்பிக்கை. அது மூடத்தனமானதா நிதிப் புழக்கத்தைக் கணக்கில்கொண்டு புத்திசாலித்தனத்துடன் பின்பற்றப்படுகிறதா என்பதைத் திரைப்பட வெளியீடு தொடர்பான விவரங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடியும்.
ஒரு நட்சத்திரத்தின் திரைப்படம் 16 முதல் 26 தேதிகளுக்குள் வெளியானால் அவருக்குப் பொருளாதாரரீதியான பிரச்சினைகள் அதிகமென்ற முடிவுக்கு வரலாம். சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரிய பின்புலம் இல்லையென்றோ நடுத்தர அல்லது குறைந்த பட்ஜெட் படம் என்றோ புரிந்துகொள்ளலாம்.
அதிகத் திரையரங்குகளில் வெளியீடு!
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் பல படங்கள் ஒரு மாதத்தின் மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு மாதத்தின் 16 முதல் 26 தேதி வரை வெளியாகும் படங்களுக்கே இப்படிப்பட்ட சாபக்கேடு. மாதக் கடைசியில் வெளியாகும் படங்கள் ஒரு வார காலத்திற்கு மேல் ஓடும் என்பதன் அடிப்படையில் அடுத்த வாரத்தில் புத்துணர்வு பெறும்.
அந்தக் காலத்தில் அதிகத் திரையரங்குகள் இருந்தபோதிலும் முதல் வெளியீட்டில் குறிப்பிட்ட பிரதிகள் மட்டுமே வெளியாகும். 50 அல்லது நூறு நாள்கள் கழித்து புறநகர்ப்பகுதிகள், சிறு நகரங்கள், கிராமங்கள் என்று டூரிங் டாக்கீஸ்கள் வரை அப்படத்தின் பிரதி பயணிக்கும். அதற்கேற்ப தயாரிப்பு தரப்பு முதல் தியேட்டரில் முறுக்கு விற்பவர்கள்வரை லாபத்தைக் கண்டு வந்திருக்கின்றனர்.
2000களுக்குப் பிறகு, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றி அதிகத் திரையரங்குகளில் வெளியாகும் வழக்கம் தமிழ்நாட்டிலும் புகுந்தது. அது, ஆரம்ப நாள்களிலேயே ஒரு படத்தைக் காண வேண்டுமென்ற ரசிகர்களின் விருப்பத்திற்குத் தீனி போட்டது உண்மைதான். இதுவே, சொத்தையான படங்களையும் அதீத சந்தைப்படுத்துதல் உத்திகள் கொண்டு ரசிகர்கள் முன் கடைபரப்ப வழிவகுத்தது என்பது தனிக்கதை. நூத்தி சொச்சம் பிரதிகளைக் கொண்டு பல மாத காலம் ஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம் திரையிடப்படுவதற்குப் பதிலாக, பல நூறு பிரதிகள் பல திரையரங்குகளில் மிகச் சில நாள்கள் ஓடுவதால் லாபம் உடனடியாகக் கிடைக்கும் என்று கணக்கு பார்க்கப்பட்டது; தொழில்நுட்பம் அதற்கு உதவியது.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன்: விளம்பரங்கள் வெற்றிக்கு உதவுமா?
அவ்வாறு வெளியாகும் படங்கள் லாபத்தைக் கொழிக்க வேண்டுமென்றால், பணப்புழக்கமும் பணத்தைச் செலவழிக்கும் மனப்பழக்கமும் இருந்தாக வேண்டுமல்லவா? அங்குதான், ‘ஒண்ணுல இருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம்’ என்று என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய பாடல் அர்த்தமுள்ளதாகிறது.
நட்சத்திரங்களுக்கான வரவேற்பு!
2000க்குப் பிறகு வெளியான கமல்ஹாசனின் படங்களில் ‘வேட்டையாடு விளையாடு’ 2006 ஜூன் 25 அன்றும், ‘உன்னைப் போல் ஒருவன்’ 2009 செப்டம்பர் 18 அன்றும், மன்மதன் அம்பு 2010 டிசம்பர் 23 அன்றும், ‘விஸ்வரூபம்’ கேரளம் உட்பட பிற பகுதிகளில் 2013 ஜனவரி 25அன்றும் தமிழ்நாட்டில் பிப்ரவரி 7 அன்றும் வெளியானது. இவற்றில், பொருளாதாரரீதியான பிரச்சினைகள் மற்றும் தடைகளைக் கடந்து வெளியான ‘வேட்டையாடு விளையாடு’வின் வெற்றி கமல்ஹாசனின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமானது.
ரஜினியின் திரையுலக வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய ‘பாபா’, 2002 ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. 2014 மே 23இல் ‘கோச்சடையான்’, 2016 ஜூலை 22இல் ‘கபாலி’, 2018 நவம்பர் 29இல் ‘2.0’ ஆகியன வெளியாகியிருக்கின்றன. இவற்றில் ‘கோச்ச்டையான்’ வெற்றி பொருட்படுத்தத்தக்கது அல்ல என்பதால், நம்மை ஆச்சர்யப்படுத்துவது ‘கபாலி’யின் வெற்றி மட்டுமே!
2000ஆவது ஆண்டில் அஜித்குமார் நடித்த ‘முகவரி’ பிப்ரவரி 19 அன்றும், ‘உன்னைக் கொடு என்னை தருவேன்’ அதே ஆண்டு மே 19 அன்றும், 2001 ஆகஸ்ட் 17இல் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படமும் வெளியாகியிருக்கின்றன. 2007 ஜூலை 20இல் ‘கிரீடம்’, 2011 ஆகஸ்ட் 31இல் ‘மங்காத்தா’, 2013 அக்டோபர் 31இல் ‘ஆரம்பம்’, 2017 ஆகஸ்ட் 24இல் ‘விவேகம்’ ஆகியவை வெளியாயின. இவற்றில் ‘மங்காத்தா’, ‘விவேகம்’ ஆகியவற்றின் திரைப்பட வெளியீடு ‘விநாயக சதுர்த்தி’யை ஒட்டி நிகழ்ந்தது. ‘ஆரம்பம்’ வெளியான வாரத்தில் ‘தீபாவளி’ வந்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று வெளியான ‘வலிமை’ வெற்றி என்று அறிவிக்கப்பட்டாலும், அப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதை நாமறிவோம்.
மேலே சொன்ன படங்கள் தவிர்த்து, மூன்று நட்சத்திரங்களின் இதர படங்களனைத்தும் 1 முதல் 15 தேதிகளுக்குள் வெளியானவை. அவற்றில் சில தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு வெளியீடுகளாக வந்தவை.
செப்டம்பர் 29 அன்று செல்வராகவனின் ‘நானே வருவேன்’, அதற்கடுத்த நாள் ‘பொன்னியின் செல்வன்- பாகம் 1’ ஆகியவை வெளியாகின்றன. இவ்விரண்டுமே பெரிய படங்களாக அறியப்படுபவை.
2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை வெளிவந்த விஜய் படங்களில் மே19, 2000இல் ‘குஷி’, அதே ஆண்டு அக்டோபர் 26இல் ‘பிரியமானவளே’, ஜூலை 19, 2002 அன்று ‘யூத்’, அக்டோபர் 24, 2003இல் ‘திருமலை’, மார்ச் 24, 2006இல் ‘உதயா’, ஏப்ரல் 17, 2004இல் ‘கில்லி’, ஆகஸ்ட் 29, 2004இல் ‘மதுர’, பிப்ரவரி 18, 2005இல் ‘சுக்ரன்’, டிசம்பர் 18, 2009இல் ‘வேட்டைக்காரன்’, ஏப்ரல் 30, 2010இல் ‘சுறா’ ஆகியன வெளியாயின. பண்டிகை நாள்களையொட்டி வந்த படங்களைக் கழித்துப் பார்த்தால் ‘குஷி’, ‘கில்லி’ படங்களின் வெற்றி மட்டுமே நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. இவை இரண்டுமே ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவிஸ் தயாரிப்பில் வெளியானவை என்பது இன்னொரு ஆச்சர்யம்.
2010க்குப் பின்னர் விஜய் நடித்த பல படங்களின் திரைப்பட வெளியீடு ஒரு மாதத்தின் 1 முதல் 15 நாள்களிலோ பண்டிகை நாள்களையொட்டியோ அமைந்திருக்கிறது.
இதே கணக்கை விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என்று பல நட்சத்திரங்களின் படங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். 2022இல் பெருவசூலைச் சந்தித்த முதல் பத்து படங்களில் ‘வலிமை’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘ராக்கெட்ரி’ ஆகியவற்றின் திரைப்பட வெளியீடு மட்டுமே 16 முதல் 26 தேதிகளுக்குள் அமைந்தது. ஓரளவுக்கு மக்களின் கவனம் கவர்ந்த படங்களாக நெஞ்சுக்கு நீதி, டயரி ஆகியன திகழ்கின்றன.
இந்தக் கணக்கு சரிதானா?
ஒவ்வொரு மாதத்திலும் எந்த வெள்ளிக்கிழமையன்று அதிகத் திரைப்படங்கள் வெளியாகின்றன, அதிக அளவில் பார்வையாளர்களைத் திரட்டுகின்றன என்பதை அறியலாம். அதையும் மீறி, ஒரு நட்சத்திரத்தின் திரைப்படம் 16 முதல் 26 தேதிகளுக்குள் வெளியானால் அவருக்குப் பொருளாதாரரீதியான பிரச்சினைகள் அதிகமென்ற முடிவுக்கு வரலாம். சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரிய பின்புலம் இல்லையென்றோ நடுத்தர அல்லது குறைந்த பட்ஜெட் படம் என்றோ புரிந்துகொள்ளலாம்.
உதாரணமாக, செப்டம்பர் 23ஆம் தேதியன்று ஆதார், பபூன், ட்ரிகர், ட்ராமா, குழலி, ரெண்டகம் என்று ஆறு படங்கள் வெளியாயின. இவற்றில் ஆதார், ட்ரிகர் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. செப்டம்பர் 29 அன்று செல்வராகவனின் ‘நானே வருவேன்’, அதற்கடுத்த நாள் ‘பொன்னியின் செல்வன்- பாகம் 1’ ஆகியவை வெளியாகின்றன. இவ்விரண்டுமே பெரிய படங்களாக அறியப்படுபவை. இவை ஏன் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகவில்லை என்ற கேள்வியை எழுப்பினால் மேலே சொன்னவை சரிதானா என்ற முடிவுக்கு வரலாம்.
மேலே சொன்ன காரணம்தான் குறைந்த பட்ஜெட் படங்கள் மூன்றாவது, நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வெளியாகி ஓரிரு நாள்களுக்குள் திரையரங்குகளை விட்டே விரட்டப்படும் சூழலுக்கு ஆளாக வைக்கிறது. ஒருவேளை மீடியம் பட்ஜெட் படங்கள் முதலிரண்டு வாரங்களிலும் பெரிய பட்ஜெட் படங்கள் மூன்றாம் நான்காம் வாரங்களிலும் வெளியானால் இந்த வாதத்திற்கு முடிவு கட்ட முடியும். தமிழ் சினிமா வர்த்தகப் பண்டிதர்கள் அதற்குத் தயாராக இருப்பார்களா?
Read in : English