Read in : English
தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும், லாரிகளும், கார்களும், மூன்று சக்கர வாகனங்களும், சரக்குவாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்னைக்கு வருவதும் போவதுமாக இருக்கின்றன. வாரயிறுதி நாள்களிலும், பண்டிகைக் காலங்களிலும் இந்தப் போக்குவரத்து எண்ணிக்கை மும்முடங்காகிறது; இந்தப் போக்குவரத்துச் சுமையைத் தாங்கக்கூடிய அளவுக்குச் சாலைகள் இல்லை. தென் மாவட்டங்களுக்குப் போதுமான ரயில் இணைப்பு இல்லாததால்தான் சாலையில் போக்குவரத்து சாலை கொள்ளாத அளவுக்கு உள்ளது. 700 கிமீ-க்கும் மேலான தூரம் கொண்ட, சென்னை எழும்பூருக்கும் கன்னியாகுமரிக்கும் இடையிலான முழுமையான இரட்டை ரயில் பாதை பணியும் மின்மயமாக்கலும் 2023 ஜூலைக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாகச் செல்லும் இந்த ரயில்பாதைத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், பயணிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மட்டுமல்ல, முக்கியத்துவம் வாய்ந்த கடலோரப் பகுதிகளில் பயணிக்கும் தொழில், வேளாண்மைத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும் ஒரு பெரிய வரமாக அது அமையும்.
அதிர்ஷ்டமிருந்தால் காலக்கெடுவிற்குள் நாகர்கோயிலுக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையிலான இரட்டை ரயில் பாதைப் பணியும் முடிக்கப்பட்டு, மின்மயமாக்கப்பட்டுவிடலாம். அதனால் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு ரயில் தொடர்பு மேம்படும்.
தென் மாவட்டங்களுக்குப் போதுமான ரயில் இணைப்பு இல்லாததால்தான் சாலையில் போக்குவரத்து சாலை கொள்ளாத அளவுக்கு உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த கடலோரப் பகுதிக்கான முக்கியமான ரயில் தொடர்புக்காக நீண்டகாலம் காத்திருந்தாயிற்று. முதலில் குறுகலான, வேகம் குறைந்த மீட்டர்கேஜ் பாதையை பிராட்கேஜ் பாதையாக மாற்றுவதற்குக் காத்திருந்தோம்; பின் அதை மின்மயமாக்கி இரட்டையாக்கும் இறுதி கட்டத்தில் காத்திருக்கிறோம்.
இந்த ரயில்பாதை மேம்படுத்தப்பட்டபின்பு பயண நேரமும் செலவும் குறையும். பயணிக்கும் மக்களுக்கும் செளகரியமும் பாதுகாப்பும் அதிகரிக்கும். மேலும், பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாடும் சாலை வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே குறைந்துவிடும்.
இதற்கிடையில் மற்ற வடக்கு-தெற்கு மார்க்கத்தில் இரட்டை ரயில்பாதைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அரக்கோணம்-செங்கல்பட்டு பாதை, விழுப்புரம்-கடலூர்-நாகப்பட்டினம்-தஞ்சாவூர்-காரைக்குடி-மானாமதுரை பாதை ஆகியவை அந்தத் திட்டங்களில் அடங்கும்.
மேலும் படிக்க: 105 ஆண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில்வே பாலத்துக்கு இந்த ஆண்டு குட்பை!
முழு ரயில்பாதைக் கட்டமைப்பும் துரிதமான அதிதிறன் கொண்ட பிராட்கேஜ் அமைப்பாக மாற்றப்படும் பட்சத்தில், இதுவரையில்லாத ரயில் தொடர்பு வசதியை மிகக் குறைந்த செலவில் பெறும்வகையில் யூனிகேஜ் அமைப்பைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, மேற்குத் தமிழகத்திலிருந்து வரும் ரயில்கள் செங்கல்பட்டு வழியாக சென்னையை அடைய முடியும். தெற்கு, மற்றும் கிழக்கிலிருந்து வரும் ரயில்கள் அரக்கோணம் வழியாக சென்னையை அடைய முடியும். இதனால் சாலைப் போக்குவரத்து கணிசமாகக் குறைந்து சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களும் மட்டுப்படும்.
ரயில்வே உட்கட்டமைப்புப் பயன்பாட்டை மேம்படுத்தும் முகாந்திரத்துடன், திண்டுக்கல் வழியாகச் செல்லும் தெற்கு மாவட்டங்களின் ரயில்களும், தெற்கிற்கு அப்பாலுள்ள தென்பகுதிகளிலிருந்து திருச்சி-விருத்தாச்சலம்-சென்னை பாதையில் செல்லும் ரயில்களும் கரூர்-சேலம்-விருத்தாச்சலம்-செங்கல்பட்டு- அரக்கோணம்-சென்னை என்ற மாற்றுப்பாதையில் செல்லலாம்; அல்லது கரூர்-சேலம்-ஜோலார்பேட்டை-சென்னை என்ற இன்னொரு மாற்றுப்பாதையில் செல்லலாம்.
நாகர்கோயிலுக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையிலான இரட்டை ரயில் பாதைப் பணியும் முடிக்கப்பட்டு, மின்மயமாக்கப்பட்டுவிடலாம். அதனால் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு ரயில் தொடர்பு மேம்படும்.
அதைப்போல, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலிருந்தும், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து புறப்படும் ரயில்கள் சேலம்-விருத்தாச்சலம்-செங்கல்பட்டு-தாம்பரம் பாதை வழியாகப் பயணிக்கலாம்; மேலும் வடக்கு நோக்கிச் செல்லலாம். தமிழகத்தின் தெற்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருகின்ற ரயில்கள் கடலூரை அடைய முடியும் என்பதால் புதுச்சேரி ஒன்றிய பிரதேசமும் அதனால் நன்மையடையும்.
சேலம்-விருத்தாச்சலம் மார்க்கத்தை இரட்டை ரயில்பாதையாக்கி மின்மயமாக்கினால், நிலங்களைக் கபளீகரம் பண்ணி மாசுபடுத்தக்கூடிய சேலம்-சென்னை எட்டு-வழி சாலைத் திட்டத்திற்கு அவசியமே இருக்காது.
ரயில்பாதைகளை மேம்படுத்திவிட்டால், பல பகுதிகளில் இருக்கும் ரயில்வே கிராஸிங்குகளை நீக்கிவிட்டுச் சாலைக்கு மேலாக அல்லது கீழாகப் பாலங்கள் கட்டி கால்நடைகள் புகாதபடி வேலிகளும் உண்டாக்கலாம். அப்போது பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இது எல்லாம் நிகழும் என்று நாம் நம்புவோமாக!
Read in : English