Read in : English
வி சுதர்சனின் ‘டெட் எண்ட்’(முட்டுச்சந்து) புத்தகம் இந்திய வாழ்க்கையில் நிலவும் அன்றாட நிஜத்தின் கதையைச் சொல்கிறது; நீதி தவறும் கதையைச் சொல்கிறது; நீதியை நிலைநாட்ட முயலும் மனிதர்களின் கதையையும் சொல்கிறது.
தனது சகோதரனுக்கு மெடிக்கல் சீட் பெறுவதற்கும், ஆசிரியர் பயிற்சி எடுக்கும் ஒரு மாணவியின் மதிப்பெண்களை மீண்டும் மதிப்பீடு செய்ய வைக்கவும், கேரளாவிலிருந்து பெங்களூருக்கு 1980-களின் பிற்பகுதிகளில் ஒரு வழக்குரைஞர் செல்கிறார். அந்தக் கதையை மீளுருவாக்கம் செய்கிறது டெட் எண்ட்.
அந்த வழக்கறிஞர், தனது சகோதரனுக்கு மெடிக்க சீட் பெறச் சென்ற மருத்துவக் கல்லூரியையும் ஆசிரியர் பயிற்சி நிலையத்தையும் நடத்தும் மனிதர் ஒருவருக்கு சட்ட சேவை அளிக்கத் தீர்மானிக்கிறார். அந்த மனிதரின் தொழில்போட்டியாளர்தான் ராமகிருஷ்ண ஹெக்டே அரசில் கூட்டுறவுத் துறை மந்திரியாகவும், பின்பு உள்துறை அமைச்சராகவும் இருந்த ஆர்.எல்.ஜலப்பா. மந்திரியும் அதே இடத்தில் மருத்துவக் கல்லூரி கட்ட விரும்புகிறார்; தன் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கல்லூரி கட்ட அனுமதிவாங்கிவிடுகிறார்; அவரது போட்டியாளரான மருத்துவக் கல்லூரி நடத்தும் மனிதர் தோற்கிறார். ரஷீத் என்னும் அந்த வழக்கறிஞர் பலிகடாவாகிறார்; கொலை செய்யப்படுகிறார்.
புத்தகத்தில் அணிவகுக்கும் சம்பவக்கோவைகள் வழக்கமான இந்தியத்தன்மை மிக்கவை. கொலை செய்யக்கூடத் தயங்காதவராகவும் அதை மூடிமறைக்க அதிகாரத் துஷ்பிரயோகம் செய்பவராகவும் ஜலப்பா காட்டப்படுகிறார்.
இந்தியாவின் கட்டமைப்பில் எல்லா இடங்களிலும் அராஜகவாதிகள் இருப்பது போல, விழுமியங்களில் நம்பிக்கை வைத்துத் தங்கள் கடமைகளைத் தொழில்ரீதியான அறத்துடன் செய்பவர்களும் இருக்கிறார்கள். அறம் தவறும் நீதிபதியும் இருக்கிறார்; நீதித்துறையில் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நீதிபதியும் இருக்கிறார்; மும்முரமாகக் குற்றம் புரியும் போலீஸ்காரரும் உண்டு; குற்றவாளிகளை விடாப்பிடியாக விரட்டிப் பிடித்து சத்தியத்தையும், நீதியையும் நிலைநாட்டும் போலீஸ்காரர்களும் உண்டு. அதிகாரமுள்ள பெரிய மனிதர்களிடம் இணக்கமாகச் சென்று அவர்கள் இடும் மோசமான பணிகளைச் செய்யும் அதிகாரியும் உண்டு; அதே அதிகாரிகளுக்கான விதிமுறைகளைப் பயன்படுத்தி நீதியை மீட்டெடுக்கும் அதிகாரிகளும் உண்டு.
ஆனால், நல்லவர்கள் டெட் எண்ட் புத்தகத்தில் தோற்கிறார்கள். கெட்டவர்கள் நினைத்ததைச் சாதிக்கிறார்கள். இந்தியாவில் இது அடிக்கடி நிகழ்கிற விசயம்தான்.
நமது திரைப்படங்களும், சில சமயங்களில் நமது புத்தகங்களும், இந்திய சமூகத்தில் கொட்டிக்கிடக்கும் அநீதிகளுக்கும், அதர்மங்களுக்கும் மாற்றுமருந்தாக தர்மத்தை அதீதமாகவே தூக்கிப் பிடிக்கின்றன (சத்தியமேவ ஜெயதே என்பது நமது தேசிய சின்னத்தில் இருப்பதுதானே. வாய்மையே வெல்லும் என்பது தமிழ் படிவம்). ஆனால் இந்திய நிஜம் என்பது ‘ஜானே பி தோ யாரோ’ என்ற கடந்த நூற்றாண்டு இந்திப் படத்தில் காட்டப்படும் தர்மத்தின் படுகொலையைத்தான் அதிகமாகப் பிரதிபலிக்கிறது; ‘ஜனாதிபதியின் எல்லா ஆட்களும்’ (ஆல் தி பிரசிடெண்ட்ஸ் மென்) என்ற கார்ல் பெர்ன்ஸ்டெயின் மற்றும் பாப் வுட்வார்டு எழுதிய அபுனைவு புத்தகத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனின் வாட்டர்கேட் சர்ச்சையில் காட்டப்படும் நீதியை நிலைநாட்டும் உத்வேகத்தை இந்திய களநிலவரம் அதிமாகப் பிரதிபலிப்பதில்லை.
சுதர்சனின் புத்தகம் முழுக்க முழுக்க ஒரு பத்திரிகையாளனின் செய்தித் தொகுப்பு. அதில் வரும் பாத்திரங்கள் நிஜம். விவரிக்கப்படும் சம்பவங்கள் நிஜவாழ்வில் நிகழ்ந்தவை. நீண்ட காலத்திற்கு முன்பு என்று சொல்ல முடியாத ஒரு காலகட்டத்தில் நாளேடுகளில் அவை தலைப்புச் செய்திகளானவை. புத்தகத்தில் அணிவகுக்கும் சம்பவக்கோவைகள் வழக்கமான இந்தியத்தன்மை மிக்கவை. கொலை செய்யக்கூடத் தயங்காதவராகவும் அதை மூடிமறைக்க அதிகாரத் துஷ்பிரயோகம் செய்பவராகவும் ஜலப்பா காட்டப்படுகிறார். பிணத்தை அப்புறப்படுத்துவதை நேரடியாகவே ஜலப்பா கண்காணிக்கிறார் என்று புத்தகம் சொல்கிறது.
மேலும் படிக்க: தூத்துக்குடி: காவல்துறை அதிகாரியின் அனுபவங்கள்
ஜலப்பா, அவரது கூலிப்படையினர்கள், கூட்டுக்களவாணிகளான அதிகாரிகள், போலீஸ்காரர்கள் ஆகியோருக்கு எதிரான சிபிஐ வழக்கில் சிடுமூஞ்சி ஒழுக்கசீலர் சிவப்பா கடுமையாக வாதம் செய்கிறார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான அவர், ஜெயலலிதாவுக்கு எதிராகத் தைரியமாக எழுந்துநின்று அந்த அம்மையாரின் சட்டப்பூர்வமான வீழ்ச்சிக்குக் காரணமானவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
டெட் எண்ட் புத்தகத்தின் கதாநாயகன் சிபிஐ அதிகாரி கே. ரகோத்தமன்தான். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் அரசுத்தரப்பு வாதத்தின் பங்களிப்பு பற்றி நேர்மையான விளக்கம் அளித்த அதிகாரி என்று ரகோத்தமனைத் தமிழகத்திற்கு நன்றாகவே தெரியும். கிடப்பில் போடப்பட்ட ஜலப்பா வழக்கை விடாப்பிடியாகத் தொடர்ந்து கடும் பிரயத்தனத்துடன் விசாரணைக்குக் கொண்டுவந்தார். ஜலப்பாவும் இன்னும் சிலரையும் தவிர எஞ்சியோர் குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், நாள்பட்ட மேல்முறையீடுகளில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முடிவில் அவர்கள் ரகோத்தமனைப் பரிகசித்தனர்.
கிடப்பில் போடப்பட்ட ஜலப்பா வழக்கை விடாப்பிடியாகத் தொடர்ந்து கடும் பிரயத்தனத்துடன் விசாரணைக்குக் கொண்டுவந்தார் ரகோத்தமன். மேல்முறையீடுகளில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முடிவில் அவர்கள் ரகோத்தமனைப் பரிகசித்தனர்.
ரகோத்தமன் ஒரு பழைய சித்தாந்த அரசு அதிகாரி. மனசாட்சிப்படி நடக்கும் ஒரு நேர்மையாளர் அவர். அரசு உத்தியோகத்தை நேர்மையான உழைப்பு என்று கருதிய கடந்துபோன ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர். அவரைப் போன்ற சிலர் நம்மில் இன்னும் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரை ஆசிரியருக்கே நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியைத் தெரியும். அவர் ஷேர் ஆட்டோவில் பயணிப்பவர்; சென்னைப் புறநகரில் தனது பணி ஓய்வுப் பணத்தில் ஓர் எளிமையான அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார். நீண்ட காலம் உயர்பதவியில் அவர் பணியாற்றினார் என்பதற்கு அந்த வீடு ஒன்றுதான் சாட்சி.
டெட் எண்ட்டில் ரகோத்தமன் பேருக்கு அபார்ட்மெண்ட் என்று சொல்லக்கூடிய ஒரு வீட்டில் வசிக்கிறார். அங்கே இந்தியப் பாணி கழிவறைதான் இருக்கிறது. மத்திய அரசு உத்தியோகத்தில் கிடைத்த சில சலுகைகளில் ஒன்று அவரது மகளுக்கு மத்திய அரசின் கேந்திரிய வித்யாலத்தில் கிடைத்த கல்வி. ரகோத்தமன் ஓய்வு பெற்று மறைந்து விட்டார்; பெருந்தொற்று அவரைத் தின்று தீர்த்தது. ஆனாலும் அவர் நேர்மை, சத்தியம் அடங்கிய ஒரு பெரும் பாரம்பரியத்தைப் பின்னே விட்டு சென்றிருக்கிறார்.
குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஜலப்பாவும், மற்றவர்களும் குற்றம் புரிந்து அதை மறைக்கும் சாகசக் கலைஞர்கள் என்று டெட் எண்ட்டில் சுதர்சன் ஒளிவுமறைவின்றி அடித்துச் சொல்கிறார். ‘சொல்லப்படுகிறது’ என்பது போன்ற பத்திரிகைத்துறை சொல்லாடல்களில் அவர் தன்னை ஒளித்துக் கொள்ளவில்லை. ரகோத்தமன் போன்ற நம்பிக்கையான செய்தி மூலங்கள் தனக்குச் சொன்னதை சுதர்சன் அப்படியே சொல்கிறார். அவர் புத்தகத்தில் குற்றவாளிகளும், ஊழல்வாதிகளும் இருக்கிறார்கள்.
மேலும் படிக்க: மரபணுவியல் புரட்சியைப் பேசும் புதிய தமிழ் நூல்
புத்தகத்தின் மொழிநடை யாரையும் விட்டுவைக்கவில்லை. ஒரே விதிவிலக்கு நீதித்துறை மட்டுமே. நீதிபதிகளும் உடந்தை என்று காட்டப்படுகிறது; ஆனால் அப்பட்டமாகச் சொல்லப்படவில்லை. அவர்களின் உள்நோக்கங்கள் சூட்சுமமாக உணர்த்தப்படுகின்றன. நிதர்சனமாக விவரிக்கப்படவில்லை. விரோதமான நீதிபதியை வழக்கிலிருந்து பின்வாங்க வைத்த சிவப்பாவைப் போன்றவர்கள் மூலம் நீதிபதிகளின் தீய நோக்கங்கள் உணர்த்தப்படுகின்றன.
இந்திய இதழியலில் மனிதநேய அம்சம் மிகவும் குறைச்சல். நிகழ்வுகள், கொள்கை, பிரச்சினைகள் இவைதான் அதற்கு முக்கியமான விசயங்கள். ஜனங்கள், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என்பது எல்லாம் புனைவு எழுத்தாளர்களுக்கு உரியவை. விவரணைப் பத்திரிகையியலில் பயிற்சி அளிக்க தி நியூயார்க்கரிலிருந்து ஓர் எடிட்டரைக் கொண்டுவந்த ‘கேரவன்’ தவிர, ஒரு சில பத்திரிகையியல் கதைகளும், புத்தகளும்தான் சிறப்பான தரவுகளையும், விவரணைகளையும் தருகின்றன.
டெட் எண்டில் பல விவரங்களை உள்ளடக்க சுதர்சனம் மெனக்கெட்டிருக்கிறார். பலிகடா ஆனவர்களின், குற்றவாளிகளின், போலீஸ்காரர்களின் உணவுப் பழக்கங்களைத் தெளிவாகவே விவரித்திருக்கிறார் அவர். கிளமென்ஷாவின் (காட் ஃபாதரின் இத்தாலிய கேங்க்ஸ்டரின் ஞாபகம் வருகிறதா?) இறைச்சித் துண்டுகள் போன்ற ராகிக் களியும் சிவப்பாவுக்குப் பிடித்தது; ரகோத்தமனுக்கு சிக்கன் கறி. பாதிக்கப்பட்டவர்கள் பூரி போல பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு நிரம்பிய ‘பன்’ பற்றி விரிவாக விவாதிக்கிறார்கள்.
கொடுமையான ஒரு குற்றத்தின் பின்புலமாக, உணவு, வக்கிரம் பிடித்த பாலியல் செய்கை, கேடுகெட்ட அரசியல்வாதிகள், மற்றும் நேர்மையான போலீஸ்கார்கள், வழக்குரைஞர்கள், நீதிபதிகள் என்று நிறைய அம்சங்கள் அமைந்திருக்கின்றன.
இந்திய நிஜம் புலன்களைத் தாக்கக்கூடியது. டெட் எண்ட் புத்தகமும் அதையே செய்கிறது; ஆனாலும் அது ஒரு நீதிக்கதையைச் சொல்கிறது.
Read in : English