Read in : English
ஐபோன் வைத்துக்கொள்வது சமூக அந்தஸ்தின் அடையாளம் ஆகிவிட்டது. எப்படியாவது ஒரு ஐபோன் வாங்கி விட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் மீது மக்கள் பேரார்வம் கொண்டுள்ளனர். ஆனால், தனது தயாரிப்புகளின் தரத்தில் சமரசம் செய்யாத நிறுவனம், அதன் விலையை மட்டும் ஏடாகூடமாக உயர்த்தி வாடிக்கையாளர்களைச் சோதிக்கிறது. செப்டம்பர் 7 அன்று வெளியான புதிய ஆப்பிள் ஐபோன் 14 தொகுப்பு ஸ்மார்ட்போன்களே இதற்குச் சான்றுகளாக இருக்கின்றன.
பழைய மாடலான ஐபோன் 13 போனைவிடப் புதிய மாடலின் விலை ரூ.10,000 அதிகம். மேலும், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை விற்பனை ஆகியவை இம்மாதம் 23ஆம் தேதி தொடங்குகின்றன.
இந்த நாள்களில் பயனர்களுக்கு அதிரடிச் சலுகைகள் வழங்கப்படும். ஐபோன் 13 விலை ரூ.55,000க்குக் குறைவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஐபோன் 14ஐ வாங்குவது சரியான தேர்வாக இருக்குமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
மேலும் படிக்க: டெக்மதி: பிளிப்கார்ட்டின் ஓவர் ஸ்மார்ட்டான மொபைல் அப்கிரேட் திட்டம்!
கட்டுக்கடங்காத ஐபோன் பிரியர்கள்
“என்ன தான் நீ ரேட்டப் போடு; நான் வாங்குறேன் உன் பொருள” என்று சொல்லும் அளவுக்கு ஆப்பிள் தனது தயாரிப்புகள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாகத் தான் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் பள்ளியில் என்பவர், உள்நாட்டில் ஐபோன் 14 விற்பனை தொடங்கும் முன்பே, துபாய்க்கு விமானத்தில் பறந்து அங்கிருந்து புதிய ஐபோனை வாங்கி வந்துள்ளார்.
பழைய மாடலான ஐபோன் 13 போனைவிடப் புதிய மாடலான ஐபோன் 14இன் விலை ரூ.10,000 அதிகம். ஐபோன் 14 ஐ வாங்குவது சரியான தேர்வாக இருக்குமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
துபாயில் உள்ள ஆப்பிளின் பிரத்யேக பிரீமியம் விற்பனையாளரான மிட்ரிப் சிட்டி சென்டரை (Midrif City Centre) தீரஜ் அதிகாலையில் அடைந்து, இந்தியாவில் வெளியிடப்படுவதற்குச் சில மணிநேரத்துக்கு முன்பு போனை தன் வசமாக்கினார். அவர் துபாய் பயணச் செலவைத் தவிர, இந்திய மதிப்பில் 1.29 லட்ச ரூபாயை (5,949 AED) போனை வாங்குவதற்காகச் செலவிட்டுள்ளார்.
செப்டம்பர் 7 அன்று வெளியான போனின் விற்பனை இந்தியாவில் 16 ஆம் தேதி தொடங்கியது. ஆனால், அதற்குள் போனை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் துபாய்க்குச் சென்று ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் எனும் பிரீமியம் வெர்ஷனைச் சொந்தமாக்கியுள்ளார்.
ஐபோன் 15 முதல் பெரிய மாற்றங்கள்
முக்கியமாக, ஐபோன் 15 முதல் நிறுவனம் பெரிய மாற்றங்களைத் தனது ஸ்மார்ட்போன்களில் கொண்டுவருகிறது. அதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் டைப்-சி இணைப்பு ஆதரவும் அடங்கும். ஐரோப்பிய யூனியன், தங்களின் ஒன்றியத்தில் விற்கப்படும், ஆப்பிள் ஐபோன் உள்பட அனைத்து எதிர்கால ஸ்மார்ட்போன்களிலும் USB-C போர்ட் பொருத்தப்பட வேண்டும் என்று விதிகளை வகுத்துள்ளது.
2024ஆம் ஆண்டிற்குள் இந்த விதியை மின்னணு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதி பிற மின்னணுச் சாதனங்களுக்கும் பொருந்தும். டேப்லெட்டுகள், டிஜிட்டல் கேமராக்கள், ஹெட்ஃபோன்கள், கையடக்க வீடியோ கேம் கன்சோல்கள், இ-ரீடர்கள், மடிக்கணினிகள் என அனைத்து மின்னணுப் பொருள்களும் இவ்விதிக்கு இணங்க வேண்டும்.
இந்த நிலையில், ஆப்பிளின் பிரத்யேக லைட்னிங் சார்ஜிங் போர்ட்டுடன் வெளியாகியுள்ள ஐபோன் 14 பயனர்களுக்குப் பின்னடைவையே தரும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வோர் ஆண்டும் புதிய புராசஸர்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள், இந்த ஆண்டு தனது ஐபோன் 14இல் கடந்த ஆண்டு வெளியிட்ட, அதாவது ஐபோன் 13இல் உள்ள அதே ஏ-15 பயோனிக் சிப்செட்டையே பயன்படுத்தியுள்ளது. ஐபோன் 14 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் ஆகிய உயர்ரக மாடல்களுக்கு மட்டுமே ஏ16 பயோனிக் புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சமாக அவசரகால அழைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது போனில் இருக்கும் சிம் வேலை செய்யவில்லை என்றாலும், அவசரகால அழைப்புகளை சேட்டிலைட் உதவியுடன் மேற்கொள்ள முடியும்.
இப்படி இருக்கையில், ஒருவர் அதிக விலை கொடுத்துப் புதிய ஐபோனை வாங்குவதைவிட, பழைய மாடல் அவர்களுக்கு ஏற்ற விலையில் அதே தரத்தில் கிடைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
மேலும் படிக்க: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: தனிநபர் தரவுகளுக்குப் பாதுகாப்பில்லையா?
ஐபோன் 14இல் என்னென்ன மாற்றங்கள் உள்ளன?
ஐபோன் 13ஐப் போலவே அச்சு அசலாகத் தோற்றமளிக்கிறது ஐபோன் 14. இதில் 12 மெகாபிக்சல் கேமரா அமைப்பு என அனைத்துமே அப்படியே இருக்கிறது. ஆனால், கேமரா சென்சார்கள் இன்னும் சிறந்ததாக ட்யூன் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் குறிப்பிடுகிறது.
மேலும், புதிய அம்சமாக அவசரகால அழைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது போனில் இருக்கும் சிம் வேலை செய்யவில்லை என்றாலும், அவசரகால அழைப்புகளை சேட்டிலைட் உதவியுடன் மேற்கொள்ள முடியும். இந்த அம்சத்தைத் தான், நிறுவனமும் அதிக அளவில் விளம்பரப்படுத்தி வருகிறது.
புராசஸரைப் பொறுத்தவரை, பழைய ஏ15 பயோனிக் 3 கோர்களைக் கொண்டு செயல்பட்டது. ஆனால், அதில் 4 கோர்கள் கட்டமைக்கப்பட்டுப் புதிய ஐபோன் 14இல் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரு வகைகளுக்கு மட்டுமே இந்த புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14 ஸ்மார்ட்போன் விலை ரூ.79,900 இல் தொடங்குகிறது.
மேம்பட்ட பதிப்பான ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு மாடல்களிலும் ஏ16 பயோனிக் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேமரா சென்சார்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த போன்களின் விலை ரூ.1.27 லட்சத்தில் தொடங்குகிறது. வாங்க நினைக்கும் சிலருக்கு எட்டாக் கனியாக இருக்கலாம்.
Read in : English