Read in : English
வெளிநாட்டுக் கப்பல்களில் பயன்மிகு பணிகளை, கப்பல் பொது இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய ரெக்ரூட்மெண்ட் அண்ட் பிளேஸ்மெண்ட் சர்வீஸ் (ஆர்பிஎஸ்) முகவர்கள் மூலமாகவே பெற முடிந்தது. இதுதான் இதுவரையான நிலைமை. இந்தக் கட்டுப்பாட்டு அமைப்பு கடலோடிகளாகப் பணிசெய்பவர்களைச் சுரண்டுவதைத் தடுப்பதற்காகவும், அவர்களின் சம்பளங்களைக் காக்கவும், கப்பலில் உண்டு உறையும் செலவுகளை, வீடுதிரும்பும் செலவுகளை, காப்பீட்டை மற்றும் இதர செலவுகளைச் சமாளிப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது.
கப்பல் பொது இயக்குநரகத்தின் கப்பல் வணிக நோட்டீஸைச் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து ஆணையிட்டது. ஒருவர் எந்தத் தொழிலையும், எந்தப் பணியையும் செய்யலாம் என்ற சட்டப்படியான உரிமையை இந்த நோட்டீஸ் மீறுகிறது என்று உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. இந்த உத்தரவால் இனி இந்தியக் கடலோடிப் பணியாளர்களை நேரடியாகவே வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
உலகம் முழுவதும் உள்ள கடலோடிப் பணியாளர்களில் ஏறத்தாழ ஐவரில் ஒருவர் இந்தியர். ஆனால், வெளிநாட்டுக் கப்பல் வேலைகளில் சீனாவிடமும் பிறநாட்டுப் பணியாளர்களிடம் இந்தியக் கடலோடிப் பணியாளர்கள் கடுமையாகப் போட்டிபோட வேண்டியிருக்கிறது. வெளிநாட்டுக் கப்பல் வேலைகளில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான சம்பளம் கிடைக்கிறது.
அங்கே பணிகள் எளிதாகக் கிடைக்கும் என்ற காரணத்தால் இந்தியக் கப்பல்களில் சம்பளம் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆர்பிஎஸ் நிறுவனங்கள் அடிக்கடி சம்பளக் குறைப்பில் ஈடுபடுகின்றன; ஆர்வமுள்ள கடலோடிப் பணியாளர்களிடம் குறைந்த சம்பளத்திற்காக அந்த நிறுவனங்களால் பேரம்பேச முடிகிறது.
உலகம் முழுவதும் உள்ள கடலோடிப் பணியாளர்களில் ஏறத்தாழ ஐவரில் ஒருவர் இந்தியர். ஆனால் வெளிநாட்டுக் கப்பல் வேலைகளில் சீனாவிடமும் பிறநாட்டுப் பணியாளர்களிடம் இந்தியக் கடலோடிப் பணியாளர்கள் கடுமையாகப் போட்டிபோட வேண்டியிருக்கிறது
ஆர்பிஎஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் இருக்கின்றன. ஆனாலும், அவற்றின் முகவர்கள் பலர் தொடர்ந்து கடலோடிப் பணியாளர்களைச் சுரண்டுகிறார்கள்; அவர்களின் சம்பளங்களையும், இதர நன்மைகளையும் மனசாட்சியே இல்லாமல் இழக்கச் செய்கிறார்கள். கப்பல்துறையில் நுழைய விரும்பும் கடலோடிப் பணியாளர்கள் நிறையச் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. கப்பல்களில் பயிற்சி எடுத்து பின்பு இந்தத் துறையில் நுழைய விரும்பும் ஆள்களிடம் அறவுணர்வற்ற முகவர்கள் அதிகமாகவே பணம் வசூலிக்கிறார்கள்.
வெளிநாட்டுக் கப்பல் நிறுவனத்தால் நேரடியாகப் பணியமர்த்தப்படும் கடலோடிகளுக்குக் குடியேற்ற ஒப்புதல் (இமிகிரேஷன் கிளியரன்ஸ்) கிடைப்பதை இந்தியாவில் 2018இல் ஏற்படுத்தப்பட்ட ‘ஈ மைக்ரேட்’ அமைப்பு தடுக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை நீதிமன்றம் விசாரித்தது. “அங்கீகாரிக்கப்படாத ஆர்பிஎஸ் முகவர்களால் பணித்தேர்வு செய்யப்படும் கடலோடிகளும், வெளிநாட்டுக் கப்பல் உரிமையாளர்களால் பணித்தேர்வு செய்யப்படும் கடலோடிகளும் (மூத்த அதிகாரிகள் தவிர) குடியேற்ற சோதனை மையங்களில் தடுக்கப்படுவார்கள்” என்று விதிமுறைகள் சொல்கின்றன.
மேலும் படிக்க: +2 மாணவ, மாணவிகள் படிக்க வழிகாட்டும் புதுச்சேரி சண்டே மார்க்கெட் சாலையோர வியாபாரிகள்!
“கடலோடிகளின் பணித்தேர்வுக்கான விதிமுறைகள் அங்கீகரிக்கப்படாத பணித்தேர்வைக் கட்டுப்படுத்துகின்றன; அதனால் கடலோடிகளின் உரிமைகளுக்கு உத்தரவாதம் கிடைப்பதற்கு அந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன” என்று நீதிபதி ஆர். சுப்ரமணியன் கூறினார்.
வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்கள் தனிப்பட்ட நபர்களைப் பணிகளுக்காகத் தேர்வு செய்வதை வணிகக் கப்பல்துறை விதிகளால் தடுக்க முடியும். ஆனால், அதற்காக முழுமையான தடையை அந்த விதிமுறைகளால் விதிக்க முடியாது. ஏனென்றால், தொழில் செய்யும் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அது எதிரானது. “இந்த விதிமுறைகளின் நோக்கம் சந்தேகத்திற்கிடமில்லாமல் பாராட்டத்தக்கதுதான்.
அதே நேரத்தில் முழுமையான தடை என்பதை அனுமதிக்க முடியாது. அப்படிப்பட்ட தடைக்குச் சட்டப்பூர்வமான அதிகாரம் இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) உத்தரவாதம் அளிக்கும் அடிப்படை உரிமையைக் கட்டுப்படுத்தும் செயலாகும் அந்தத் தடை” என்று நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்வினையாற்றிய தேசிய கப்பல்துறைக் குழுவின் உறுப்பினரான சஞ்சய் பரஷார், “தீர்ப்பால் ஆர்பிஎஸ் நிறுவனங்களின் தொழில் தொய்வடையும்” என்றார். “ஏனென்றால், இனி வெளிநாட்டுக் கப்பல் உரிமையாளர்கள் நேரடியாகவே இந்தியக் கடலோடிகளைப் பணிகளுக்காகத் தேர்வு செய்துகொள்வார்கள். கப்பல் பொது இயக்குநரக விதிகளை இணையவழியாக அவர்கள் பின்பற்றிக்கொள்வார்கள். எனினும், கடலோடிகளின் தரமதிப்பீடுச் சான்றுக் கட்டமைப்பில் இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை” என்றார் அவர்.
வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்கள் தனிப்பட்ட நபர்களைப் பணிகளுக்காகத் தேர்வுசெய்வதை வணிகக் கப்பல்துறை விதிகளால் தடுக்க முடியும். ஆனால், அதற்காக முழுமையான தடையை அந்த விதிமுறைகளால் விதிக்க முடியாது. ஏனென்றால், தொழில் செய்யும் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அது எதிரானது
“கறாரான தேர்வுமூலம் கடலோடிகளின் திறன்களைப் பல்வேறு படிநிலைகளில் ஆய்வுசெய்து இந்திய அரசு சான்றிதழ் அளிக்கிறது, இது வழக்கம்போல் போய்க்கொண்டிருக்கும்” என்றார் பரஷார்.
மேலும் படிக்க: அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர் நியமன முறை நியாயமானதா?
“கடலோரத்தில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் தொழில் இந்தத் தீர்ப்பினால் மேலும் வளர்ச்சியடையும்” என்றார் அவர். “மொத்தத்தில் இந்தத் தீர்ப்பு கப்பல் பொது இயக்குநரகத்தையும் இந்திய அரசையும் தட்டி எழுப்பும் ஓர் அறைகூவல். மாறிக்கொண்டே இருக்கும் இந்தப் புதிய உலகத்தில் புதிய விதிகளைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கும் தீர்ப்பு இது” என்றார் அவர்.
கடலோடிகளுக்குத் திறன்சான்றிதழ் தருவதற்குப் புதிய விதிகளை உருவாக்க வேண்டும். ஏனென்றால், வெளிநாட்டுக் கப்பல்களில் இந்தியக் கடலோடிகளுக்குப் பணி கிடைக்கும்போது அவர்களுக்குச் சான்றிதழ் அளித்து அனுப்பிவைத்த ஒரே அதிகாரப் பாதையாக இதுவரை ஆர்பிஎஸ் முகவர்கள்தாம் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.
Read in : English