Read in : English
‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ நடிகர் மாதவனின் கன்னிமுயற்சி இயக்கத்தில் வெளியாகி வணிகரீதியாகப் பலமொழிகளில் வெற்றி பெற்று பெரும்பாலானவர்களின் பாராட்டுதல்களையும் வசூலையும் சம்பாதித்த ஒரு திரைப்படம். இந்த வாழ்க்கைச்சரிதத் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் 9.0/10 என்ற ஐம்டிபி மதிப்பீடு அதன் ஜனரஞ்சகப் புகழைப் பறைசாற்றுகிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் பொய்மைகளில் கட்டமைப்பட்டிருக்கிறது; அல்லது மேனாள் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் முக்கியத்துவம் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கதாநாயகப் பாத்திரத்தின் நிஜமான முன்னாள் சகவிஞ்ஞானிகள் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். உளவு வழக்கில் நம்பி நாராயணனுடன் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவர் டி. சசிகுமரன் இந்தத் திரைப்படம் 90 சதவீதம் பொய் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். நிஜத்தில் நம்பி கொடுமைப்படுத்தப்படவே இல்லை என்று சூசகமாக அவர் சொல்கிறார்.
ராக்கெட் உந்துவிசைத் தொழில்நுட்பத்தின் தலைமை ஆர்க்கிடெக்ட் ஏ. ஈ. முத்துநாயகமும், கிரையோஜெனிக் எஞ்சின் திட்ட இயக்குநர் ஈ.வி.எஸ். நம்பூதிரியும் ராக்கெட்ரி படத்தை விமர்சித்துள்ளனர். நம்பி கைது செய்யப்பட்டதால் கிரையோஜெனிக் எஞ்சின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்ற வாதத்தை இந்த விஞ்ஞானிகள் மறுதலிக்கின்றனர். தனது கைது நாட்டின் கிரையோஜெனிக் எஞ்சின் வளர்ச்சியின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது என்று நம்பியும் தனது சுயசரிதத்திலும் திரைப்படத்திலும் கூறுகிறார்.
இஸ்ரோ உளவுச் சர்ச்சையில் என்னதான் நிகழ்ந்தது என்பதைப் பற்றி திரைப்படம் வெளியானதிலிருந்துச் சுழன்றாடும் உரையாடல்களில் சமீபத்தில் நிகழ்ந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு மேலுமொரு பின்சேர்க்கை. மொத்தத்தில் கிட்டத்தட்ட இந்தச் சர்ச்சை ஜப்பான் இயக்குநர் அகிரா குரோசாவாவின் ‘ராஷோமோன்’ (1950) திரைப்படத்தைப் போலிருக்கிறது. (தமிழில் ‘அந்த நாள்’ படத்தை (1954) சொல்லலாம்). ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்கிறார்கள்; அவரவர் கதைக்கேற்ப அவரவர்களே கதாநாயகர்களாகத் தெரிகிறார்கள். தனது நோக்கங்களும் செயல்களும் மட்டுமே தூய்மையானவை; மற்றவர்களுடையவை சந்தேகத்துக்குரியது என்பது போன்ற பாவனை ஒவ்வொருவரிடம் தென்படுகிறது. அதனால் ‘நம்பி விளைவு’ ‘ராஷோமோன் விளைவு’ போல தோற்றமளிக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவர் டி. சசிகுமரன் இந்தத் திரைப்படம் 90 சதவீதம் பொய் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். நிஜத்தில் நம்பி கொடுமைப்படுத்தப்படவே இல்லை என்று சூசகமாக அவர் சொல்கிறார்
நிஜவாழ்க்கையிலும் இலக்கியத்திலும் இப்படித்தான் இருக்கிறது. நமது வாழ்க்கைக் கதையில் நாமே கதாநாயகர்கள்; மற்றவர்கள் வில்லன்கள்.
இஸ்ரோ உளவு வழக்கைப் பற்றிச் சம்பந்தப்பட்டவர்கள் உட்பட பலர் புத்தகங்கள் பல எழுதியிருக்கின்றனர். வெவ்வேறு விதமான கண்ணோட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. நம்பி நாராயணன், பத்திரிகையாளர் அருண் ராமுடன் சேர்ந்து, எழுதிய ‘ரெடி டூ ஃபயர்’ என்ற சுயசரிதம், ஆகப்பெரிய சதிகளும், கூட்டுக் களவாணித்தனமும் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு பொறியியலாளரின் தொழில் மற்றும் வாழ்க்கை பற்றிய விவரணை.
இந்த வழக்கில் புலன்விசாரணை செய்த உளவுத்துறை அதிகாரிகள் எம். கே. தார் மற்றும் கே.வி. தாமஸ் ஆகிய இருவரும் வழக்கைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பத்திரிகையாளர் ஜே. ராஜசேகரன் நாயர் சமீபத்தில் வெளியிட்ட புத்தகம் இந்த வழக்கைப் பற்றி பல செய்திகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. நம்பியின்மீது போடப்பட்டது பொய்வழக்குதான் என்பதை ஒத்துக்கொள்ளும் அவர், நம்பி எதிர்உளவுச் செயற்பாட்டில் ஈடுபட்டார் என்றும், ரஷ்யாவின் கிரையோஜெனிக் எஞ்சின்களை மட்டுமல்ல ரஷ்யாவி்ன் தொழில்நுட்பத்தையும் நம்பி சட்டத்திற்குப் புறம்பாகக் கொண்டுவந்தார் என்று நாயர் சொல்கிறார்.
இஸ்ரோவின் மற்ற முன்னாள் பணியாளர்களும் தங்கள் பணி அனுபவங்களை எழுதியிருக்கின்றனர். அவர்களில் முத்துநாயகமும் அடக்கம். அவரது விவரணையில் அவர்தான் கதாநாயகன்; அல்லது குறைந்தபட்சம் முதன்மைப் பாத்திரம்; மற்றவர்கள் கூட்டாளிகள்; உடனுழைத்தவர்கள்; அல்லது எதிரிகள். ‘ரெடி டூ ஃபயர்’ புத்தகம் அதைப் போன்ற ஒரு விவரணைதான்.
முத்துநாயகம் பல ஆண்டுகளாக நம்பியின் பாஸாக இருந்தவர். அவரைப் பற்றி நம்பி நல்லவிதமாகச் சொல்லவில்லை. முத்துநாயகம் தேசத்தின் நலனைவிட, இஸ்ரோ நிறுவனத்தின் நலனை விட, சுயமுன்னேற்றத்திலும் அரசியல் விளையாட்டிலும் ஈடுபாடுகொண்ட ஒரு வழமையான அரசு அதிகாரி என்று ‘ரெடி டூ ஃபயர்’ புத்தகத்தில் எழுதும் நம்பி தனது கருத்தாக்கங்களையும் தொழில்வாழ்க்கையையும் சீர்குலைக்க விரும்பியவர் என்று முத்துநாயகத்தைச் சித்தரிக்கிறார்.
உளவுப் பார்த்ததாக ஒத்துக்கொண்டு சசிகுமரன் வாக்குமூலம் கொடுத்தபோது தன்னையும் பொய்யாக மாட்டிவிட்டதாக நம்பி சொல்கிறார். ஒருவேளை கொடுமைப் படுத்தப்பட்டதால் அப்படி அவர் சொல்லியிருக்கலாம் என்று சொல்லும் நம்பி சசிகுமரனைத் துரோகி என்று வர்ணிக்கிறார். இருவரும் இஸ்ரோவில் சில நேரங்களில் ஒன்றாகப் பணிபுரிந்தாலும் அவர்களுக்கிடையே நல்லுறவு இருந்ததில்லை என்று ‘ரெடி டூ ஃபயர்’ கூறுகிறது.
கிட்டத்தட்ட இந்தச் சர்ச்சை ஜப்பான் இயக்குநர் அகிரா குரோசாவாவின் ‘ராஷோமோன்’ (1950) திரைப்படத்தைப் போலிருக்கிறது. (தமிழில் ‘அந்த நாள்’ படத்தை (1954) சொல்லலாம்). ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்கிறார்கள்
நிஜத்தில் என்னதான் உண்மை? அதைக் கண்டுபிடிக்க உதவக்கூடிய சில விசயங்களை நாம் அவதானிக்க வேண்டும்: அவை பின்வருமாறு:
1. இஸ்ரோ ஆகப்பெரியவொரு நிறுவனம். அற்புதமான, புதிதான, மிகவும் முன்னேறிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கும் கடப்பாடு கொண்டது. விக்ரம் சாராபாயால் மிகவும் புதுமையான நிறுவனமாகத் தொடங்கப்பட்டாலும், மிகப்பெரியதோர் அரசு நிறுவனமாக அது வளர்ந்தது. இந்தியாவில் அரசுக் கட்டமைப்புகள் புதுமையை வளர்த்தெடுப்பதில்லை; விதிகள், சம்பிரதாயங்கள், பிரச்சினை வராதவாறு பாதுகாப்பாகச் செயல்படுதல் ஆகியவற்றைப் பற்றித்தான் அரசுக் கட்டமைப்புகள் அதிக அக்கறை கொண்டிருக்கும். புதுமை செய்கிறேன் என்று காலத்தைத் தாண்டி யோசிப்பவர்கள் விதிகளை மீறினால் அவர்களுக்கு எதிரிகள் உருவாகிவிடுகின்ற சாத்தியம் உண்டு. மற்றவர்கள் கடுப்பாகி விடுவார்களே என்பதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல், தன் கருத்துக்களில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, முன்னேறி தன்இலட்சியங்களைச் சாதிக்கத் துடிக்கும் ஒரு பிடிவாதக்காரராக, தானெனும் அகந்தை கொண்டவராக, ஆணித்தரமாகப் பேசுபவராக நம்பி நாராயணன் தென்படுகிறார். அந்த மாதிரியான நபர்களை நிர்வாகம் ஊக்குவிக்கும். ஏனென்றால் அவர்கள் சாதனை செய்து மேலதிகாரிகளைக் கட்டுக்குள் வைப்பார்கள்.
நம்பி நாராயணண் போன்றவர்களைப் பற்றி பகைவர்கள் அவதூறு பேசி ஒன்றாகச் சேர்ந்து சதி செய்வது பெரும்பாலான நிறுவனங்களில் நிகழ்கின்ற ஒன்றுதான். இஸ்ரோவின் அதிகாரக் கட்டமைப்பில் நம்பி இரண்டாவது கட்டத் தலைமையில் இல்லை. அவருக்கும் மேலே முத்துநாயகம் போன்ற மூத்த அதிகாரிகள் இருந்தனர்.
மேலும் படிக்க:
பஞ்சாங்கம் பார்த்து மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதா?: நடிகர் மாதவன் கூறியது சர்ச்சை!
ராக்கெட்ரி: நம்பி நாராயணனுக்கு மாதவன் செலுத்திய மரியாதை!
2. நமது திரைப்படங்கள் எல்லோரையும் வெல்லக்கூடிய அல்லது குறைந்தபட்சம், அதிக முக்கியத்துவம் கொண்ட கதாநாயகனையும், அவரது மேன்மையான, தாழ்வான செயல்களையும் சுற்றியே இயங்குபவை. இதற்கு ‘ராக்கெட்ரி’யும் விதிவிலக்கல்ல. அதுவொரு வழமையான இந்தியத் திரைப்படம். விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்ப உற்பத்தி என்பது ஆயிரக்கணக்கானவர்களின் பங்களிப்பில் நிகழ்வது. ஒரு திரைப்படம் என்ற முறையில், ‘யுரேகா’ என்று கூவும் விஞ்ஞானியின் உத்வேக மனநிலைப் படிமங்கள் அதில் நிறையவே இருக்கின்றன. அந்தக் கண்டுபிடிப்பு உற்சாகம்தான் திரைப்படத்தில் வரும் நம்பி நாராயணன் ஜெயிப்பதற்கு உதவியது. ஆனால் நிஜத்தில் அந்த மாதிரியான எழுச்சிக் கணங்கள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. ‘ரெடி டூ ஃபயர்’ மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் நம்பி மற்றவர்களுக்கும் அவர்களுக்குரிய மரியாதையைத் தருகிறார்.
3. ரோகிணி என்ற பெயரில் ஏவிய சிறிய திட எரிசக்தி ராக்கெட்டுகளுடன் 1960-களில் ஆரம்பிக்கப்பட்டது இஸ்ரோ. திட எரிசக்தியின் ஆதரவாளர் அப்துல் கலாம். அதில்தான் அவருடைய பணியும் அமைந்தது. திட எரிசக்தியை வைத்துத்தான் ’டிஆர்டிஓ’ மூலம் அவர் ஏவுகணைகளை வளர்த்தெடுத்தார். திட எரிசக்திகளிலிருந்து நம்பி விலக விரும்பினார். அதிசக்தி மிக்க ராக்கெட்டுகளை உருவாக்கவும், விண்வெளியில் வலுவான செயற்கைக் கோள்களை ஏவுவதற்கும் உதவக்கூடியது மேம்பட்ட திரவநிலை எரிசக்திக் கட்டமைப்புதான் என்று சொல்லி அதை முதலிலிருந்தே ஆதரித்தார் நம்பி. கிரையோஜெனிக்கில், ஹைட்ரஜன் போன்ற எரிபொருட்கள் பூஜ்யத்திற்கும் கீழான படிநிலையில் திரவமாக வைக்கப்பட்டு ராக்கெட்டில் ஏற்றப்படுகிறது.
கிரையோஜெனிக் ராக்கெட்டுகள் அதிகசக்தி வாய்ந்தவை. தனது புத்தகத்தில் கலாம் பற்றி நம்பி பெருந்தன்மையாகப் பேசுகிறார். திட எரிபொருள் விஞ்ஞானி கலாம். ஆனால் அற உணர்வுத் தொழில் நேர்த்தியாளார் அவர். மற்ற தொழில்நுட்பங்களை அவர் தடுத்ததில்லை. படத்தில் நம்பி கலாம் சொல்வதைத் திருத்துவது போலவும், கலாம் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டு பின்னே செல்வது போலவும் ஒரு பெருங்கணத்துக் காட்சி இருக்கிறது. ஆனால் ‘ரெடி டூ ஃபயர்’ புத்தகத்தில் அப்படியெல்லாம் இல்லை.
அமெரிக்காவின் திட்டத்தை முறியடித்து, ரஷ்யாவின் எஞ்சின்களைக் கொண்டு வந்ததில் நம்பிக்குப் பெரும்பங்கு உண்டு என்றாலும், கிரையோஜெனிக் எஞ்சின்களை வளர்த்தெடுத்ததில் பல முன்னணி விஞ்ஞானிகளுக்கும் முக்கியமான பங்கு இருந்தது போலத்தான் தெரிகிறது.
4. பிரான்ஸில் வேலை செய்துகொண்டிருக்கும் போது தனது சகபணியாளரின் குழந்தை இந்தியாவில் இறந்துவிட்ட செய்தி நம்பிக்குக் கிடைக்கிறது. ஆனால் ராக்கெட் வளர்ச்சித் திட்டம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தச் சோகச் செய்தியை தன் சகபணியாளரிடம் தெரிவிக்காமல் இருக்கிறார் நம்பி. இப்படிச் சொல்கிறது திரைப்படம். ஆனால் புத்தகத்தில் அந்தச் சகபணியாளருக்கு மிகவும் முக்கியமல்லாத பாத்திரம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.
5. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு நிபுணத்துவம் அடைந்தால் இந்தியாவால் பெரிய பெரிய செயற்கைக்கோள்களை குறைந்த விலையில் உருவாக்கி ஏவிவிட முடியும். அதனால் எழுந்துவரும் செயற்கைக்கோள் சந்தையில் ஒரு பகுதியை இந்தியா கைப்பற்றிவிடும். இந்த அச்சத்தினால் அமெரிக்கா இந்தியாவை இந்தத் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் அடையாமல் தடுக்க நினைத்தது என்று நம்பி நாராயணன் சொல்கிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த போது, இந்தியாவுக்குக் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வழங்குவதான ஒப்பந்தத்தை மீறும்படி ரஷ்யாவை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது. ஆனால் எஞ்சின்களை மட்டுமே கொண்டுவருவது போல தந்திரம் செய்து, நம்பி இந்தத் தொழில்நுட்பத்தின் கூறுகளையும் சேர்த்துக் கொண்டுவந்தார்.
விமானம் மூலமாக அனுப்புவதாக ரஷ்யா சம்மதித்திருந்த சரக்குகள் முழுவதுமாக வந்துசேரவில்லை. ஏனென்றால் நம்பி அதற்குள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார். பொய் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதால் கிரையோஜெனிக் எஞ்சின் வளர்ச்சி 15 ஆண்டுகள் தாமதமானது என்று அவர் மிகத் தெளிவாகவே சொல்கிறார்.
6. நம்பியின் முக்கிய பங்களிப்பு விகாஸ் என்னும் திரவ எரிசக்தி எஞ்சின். அதுதான் பிஎஸ்எல்வி-யை வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்காவின் திட்டத்தை முறியடித்து, ரஷ்யாவின் எஞ்சின்களைக் கொண்டு வந்ததில் நம்பிக்குப் பெரும்பங்கு உண்டு என்றாலும், கிரையோஜெனிக் எஞ்சின்களை வளர்த்தெடுத்ததில் பல முன்னணி விஞ்ஞானிகளுக்கும் முக்கியமான பங்கு இருந்தது.
7. உளவுத்துறை தன்னைக் கொடுமைப்படுத்தவில்லை என்றும், சில நாட்கள் மட்டும் உளவுத்துறை வசம் நம்பி இருந்தார் என்றும் சசிகுமரன் சொல்கிறார். நம்பியையும் உளவுத்துறை இம்சிக்கவில்லை என்பது இந்தக் கூற்றின் சூட்சுமத் தகவல். ஆனால் நம்பியின் உடலில் இம்சிக்கப்பட்ட தடங்கள் இருந்ததை ஒரு மருத்துவர் கண்டறிந்தார் என்று ஒரு சிபிஐ அறிக்கையை ‘ரெடி டூ ஃபயர்’ புத்தகம் மேற்கொள் காட்டுகிறது. சசிகுமரன் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றால், அவர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தன்னையும், நம்பியையும் பொய்யாக ஏன் மாட்டிவிட வேண்டும்? மாலத்தீவுப் பெண்களான மரியம் ரஷிதாவும், ஃபெளவ்ஷியா ஹாசனும் ஏன் எல்லோரையும் மாட்டிவிட வேண்டும்?
விடுதலையான பின்பு தற்கொலை விளிம்பில் இருந்த நம்பி, போராடவும், நஷ்ட ஈடு கேட்கவும், தன்மீது போலி வழக்கை ஜோடித்த உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரவும் தீர்மானித்தார். ஒரு தேசத்துரோகியின் மகனாகவும், மகளாகவும் தங்களின் அடையாளங்கள் மாறிவிடக் கூடாது என்பதற்காகவே நம்பி வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று அவரது குழந்தைகள் அவரைச் சமாதானப்படுத்தி வற்புறுத்தினர் என்று ‘ரெடி டூ ஃபயர்’ சொல்கிறது.
Read in : English