Read in : English
தொடக்கக்கட்ட ஆய்வுக்குப் பின்னர், சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் காஞ்சிபுர மாவட்டத்தின் பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று, பயணம் மற்றும் விருந்தோம்பல் துறைகளைப் பாதிப்பதற்குச் சுமார் இரண்டாண்டுக்கு முன்பு, ஒன்றிய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இரண்டாவது விமான நிலையம் தேவைப்படும் 21 மாநகரங்களை அடையாளம் கண்டிருந்தது.
பொருளாதார வளர்ச்சியின் காரணமாகப் பயணிகள் மற்றும் சரக்கு விமானச் சேவைகளின் தேவை அதிகரித்துவிட்டதால் அந்த 21 மாநகரங்களுக்கு இரண்டாவது விமான நிலையம் தேவைப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் பொருளாதார விசயங்களுக்கான அமைச்சகக் குழு (சிசிஈஏ) ரூ.2,467 கோடி செலவில் சென்னை மீனம்பாக்க விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தது.
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது பற்றிய பேச்சு பல ஆண்டுகளாகவே இருக்கிறது. 2008இன் பசுமைக்கள விமானநிலையக் கொள்கையின்படி விமான நிலையம் அமைக்க விண்ணப்பிக்கும்படி பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது. இந்தச் செயல்முறையை நாடாளுமன்றத்தில் விளக்கிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், “ஒரு விமான நிலையத்தை உருவாக்க நினைக்கும் மாநில அரசு அல்லது விமானநிலையத்தை உருவாக்குபவர் முதலில் ஒரு முன்மொழிவை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு இரண்டு கட்ட ஒப்புதலுக்காக அனுப்பிவைக்க வேண்டும். முதலில் ‘களத்திற்கான அனுமதியும்’ பின்பு ‘கொள்கை அளவிலான ஒப்புதலும்’ வழங்கப்படும்” என்று கூறியது. “அந்த முன்மொழிவுகள், பசுமைக்கள விமானக் கொள்கையின் விதிமுறைகளுக்குத் தகுந்தவாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படும்” என்று துணை அமைச்சர் வி.கே.சிங் 2022 ஆகஸ்டு 1 அன்று கூறினார்.
செலவு உட்பட விமான நிலையத் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றும் பொறுப்பு “சம்பந்தப்பட்ட மாநில அரசு (திட்டத்தை முன்னிருத்தும் பட்சத்தில்) உட்பட விமான நிலையத்தை உருவாக்குபவரையே சாரும்” என்று அரசுக்கொள்கை தெளிவாகவே சொல்கிறது.
மேலும் படிக்க:
புவியியல் ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் சென்னையில் என்ன திட்டமிடல் தேவை?
சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் பற்றிய பேச்சு பல வருடங்களாகவே இருக்கிறது. 2008இன் பசுமைக்கள விமானநிலையக் கொள்கையின்படி விமான நிலையம் அமைக்க விண்ணப்பிக்கும்படி பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முயலும் திமுக அரசும், திட்டத்திற்கு அனுமதியளித்து புதிய விமான நிலைய உருவாக்கத்தில் பங்கெடுக்க வேண்டிய ஒன்றிய அரசும், சேர்ந்துதான் ரூ.20,000 கோடி எனத் தற்காலிகமாக மதிப்பிடப்பட்டிருக்கும் விமான நிலையத்தை உருவாக்கி இயக்க வேண்டும். தமிழகத்தைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். கனிமொழி என்விஎன் சோமுவிற்குக் கொடுக்கப்பட்ட விளக்கம் இது.
திராவிட மாடல் அரசு சாதிக்க நினைக்கும் ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் புதிய திட்டம் ஆகப்பெரும் கிரியா ஊக்கியாகச் செயல்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். மீனம்பாக்கம் விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன் ஏழாண்டுகளில் அது சேவை செய்யும் பயணிகளின் எண்ணிக்கையைவிட மும்மடங்கு அதிகமாக வருடத்திற்கு 10 கோடி பயணிகளுக்குப் புதிய விமான நிலையம் சேவை செய்யும் என்ற மதிப்பீட்டை முதல்வர் எடுத்துரைத்திருக்கிறார்.
கோவிட்டுக்கு முன்பான காலகட்டத்தில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சந்தை நிலையாக விரிந்துகொண்டிருந்தது.
என்றாலும், பொதுவாக இந்திய விமான உட்கட்டமைப்பு உலகத் தரத்திற்குச் சற்றுக் குறைச்சலாகவே மதிப்பிடப்படுகிறது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு முந்தைய 2019-20 காலகட்டத்தில் 341 மில்லியனாக இருந்த விமானப்பயணிகளின் எண்ணிக்கை 2032-33இல் 827 மில்லியனாக உயரும் என்று சென்னை விமான நிலையத்தையும் நிர்வகிக்கும் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (ஏஏஐ) சமீபத்தில் மதிப்பீடு செய்திருக்கிறது. சென்னையின் உச்சபட்ச விமானப்பயணிகளின் எண்ணிக்கை 2019 டிசம்பரில் 2.09 மில்லியன் என்று ஏஏஐ பதிவுசெய்திருக்கிறது.
பொதுமக்களின் கருத்து அலைகள்
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக அந்தப் பகுதியின் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். வருவாய்த் துறை அதிகாரிகளிடமிருந்து சரியான தகவல்களைப் பெறுவதற்கு அவர்கள் பெரிதும் முயன்றுவருகிறார்கள்.
அவர்களின் அச்சங்களைத் தீர்த்துவைக்க திமுக அரசு முயல்கிறது. புதிய விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான நஷ்டஈடாக அந்த நிலங்களின் மதிப்பைவிட மூன்றரை மடங்கு அதிகமாகவே உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்படும் என்று பொதுத்துறை அமைச்சர் எ.வா. வேலு ஊடகங்களிடம் சொல்லியிருக்கிறார்.
பெருந்தொற்றிலிருந்தும், பணவீக்கத்திலிருந்தும், எரிசக்தி விலையுயர்விலிருந்தும் மெல்ல மீண்டுவரும் இந்தச் சூழ்நிலையில், உள்நாட்டு, பன்னாட்டுத் துறைகளில் விமானப் பயணக் கட்டணம் ஏறியிருக்கிறது. இந்தச் சூழலில் புதிய விமான நிலையம் பொதுமக்களுக்கு எப்படி நீண்டகாலப் பயனைத் தரும் என்பதில் தெளிவு இல்லை. இந்த நிலைமையில், சென்னைக்கான பசுமைக்கள விமான நிலையம் கட்டும் தீர்மானம் சரியான நேரத்தில் எடுத்த முடிவுதானா என்று வினாக்கள் எழுப்பப்படுகின்றன.
மேலும் படிக்க:
ட்ரோன்கள்: இயக்குவதற்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்கள்?
தொடக்கக்கட்ட ஆய்வுக்குப் பின்னர், சென்னையிலிருந்து 70 கிமீ தூரத்தில் காஞ்சிபுரம், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. திராவிட மாடல் அரசு சாதிக்க நினைக்கும் ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் புதிய திட்டம் ஆகப்பெரும் கிரியா ஊக்கியாகச் செயல்படும் என்று ஸ்டாலின் நினைக்கிறார்
உலக விமானப் போக்குவரத்து தற்போது மீட்சி அடைந்துகொண்டிருக்கிறது. என்றாலும், 2019இல் ஏற்பட்ட எதிர்மறை நிலைமை இன்னும் தீரவில்லை. தற்போது அது -31.3 சதவீதத்தில்தான் இருக்கிறது என்று மே மாதத்துத் தரவுகள் சொல்கின்றன. விமானங்களின் இருக்கைகள் நிறைவு முன்னேறிக்கொண்டிருக்கிறது. என்றாலும், அதுவும் -28.9 சதவீதத்தில்தான் இருக்கிறது. பன்னாட்டு சிவில் விமானப்போக்குவரத்து நிறுவனத்தின் (ஐசிஏஓ) 2022 ஜூலை மாதத்து அறிக்கை சொல்லும் தகவல்கள் இவை.
விமான நிலையங்களுக்கு அதிமுக்கியமான இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையின் உலக அளவிலான பங்கு 2.2. சதவீதம் என்று பன்னாட்டு விமானப் போக்குவரத்துக் கழகம் (ஐஏடிஏ) மதிப்பீடு செய்திருக்கிறது. அதே சமயம் சீனாவின் பங்களிப்பு 17.8 சதவீதம்; அமெரிக்காவின் பங்களிப்பு 25.6 சதவீதம். இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேலும் உயர்கின்ற சாத்தியம் உண்டுதான். ஆனால், அதற்கான புறக்காரணிகளான பணவீக்கம், எரிசக்தி விலைகள் மற்றும் விமானப் பயணத் தேவையைக் குறைக்கக்கூடிய அதிவேகமான மாநகரங்களுக்கிடையிலான ரயில்கள் ஆகியவற்றைப் பற்றி மதிப்பீடு ஒன்றும் செய்யப்படவில்லை.
இறுதிக்கட்ட பயண இடைவெளிகள்
சென்னையின் மெட்ரோ ரயில் பெரிதாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், வட சென்னை, கோயம்பேடு ஆகிய இடங்களுடன் சென்னை விமான நிலையத்திற்குத் தொடர்புப்பாதை இருக்கிறது. ஆனால், விமானப் பயணிகளுக்கு விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தை அடைவதில் ஏராளமான தடைகள் இருக்கின்றன என்று சென்னைக்கு வரும் எவர்க்கும் தெரியும். சென்னையிலிருந்து கிளம்பும் விமானப் பயணிகளுக்கு (வருபவர்களுக்கு அல்ல) மெட்ரோ ரயில்களிலிருந்து நேராக விமான நிலையத்திற்கு ‘ட்ராவலேட்டர்’ மூலம் செல்வதற்கு வசதியிருக்கிறது. ஆனால், மெட்ரோ ரயில் சேவைகளைப் பற்றிய தகவல்களும், டெர்மினல்களின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் பயணிகள் வழிகாட்டிப் பலகைத் தகவல்களும் இன்னும் அரிச்சுவடி நிலையிலேதான் இருக்கின்றன.
சென்னை மாநகரின் பல்வேறு புறநகர்ப் பகுதிகளுக்கும், முக்கியப் பகுதிகளுக்கும் செல்வதற்குத் தோதான விமான நிலையப் பேருந்து வசதியின்மை என்பது பல ஆண்டுகளாகத் தொடருகின்ற பெரிய பிரச்சினை. குறிப்பாக ஜெயலலிதாவின் தலைமையிலான அஇஅதிமுக ஆட்சியின்போது, இந்தப் பேருந்து வசதியை உருவாகாமல் தடுத்தது அரசியல்பலம் கொண்ட டாக்ஸிக்காரர்களின் செல்வாக்குதான். இந்தக் குறைப்பாட்டைத் தீர்ப்பதற்கு தற்போதைய திமுக அரசும் முயலவில்லை.
எதிர்காலச் சந்ததிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் பெருங்கொடையாகத் திகழும் வண்ணம் சென்னையின் நவீனச் சின்னமாகப் பரந்தூர் விமான நிலையம் மிளிர வேண்டும். இந்த அரும்பெரும் பணிதான் ஸ்டாலின் எதிர்கொண்டிருக்கும் மிகக் கடினமான சவால்!
பரந்தூரில் அமைக்கப்படவிருக்கும் இரண்டாவது விமானத்திற்கான உட்கட்டமைப்புகள் எவ்வளவு வேகமாக உருவாக்கப்படும்? அதிகமாகச் செலவு செய்து சென்னையிலிருந்து 70 கிமீ தூரம் பயணித்து, சரியான நேரத்திற்கு பரந்தூர் விமான நிலையத்திற்குச் சென்று காத்திருக்கும் அளவுக்கு அந்தப் புதிய விமான நிலையம் தகுதியானதாக இருக்குமா? உதாரணமாக, பரந்தூரிலிருந்து பெங்களூருக்குப் பயணிக்கும் நேரம் 35 நிமிடங்களுக்கு மேல் தாண்டாதுதான்.
ஆனால், பயண முஸ்தீபுகளுக்கே அதிக நேரமாகிவிடுமே! விமானப் போக்குவரத்து இரண்டு நிலையங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் என்றும், நீண்ட தொலைவு விமானப்பயணங்கள் பரந்தூரிலிருந்து செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் விவாதிக்கலாம். ஆனால், மீனம்பாக்கத்தில் வந்திறங்கி மேற்கொண்டு தொலைதூரப் பயணம் செய்பவர்களுக்கு இந்த ஏற்பாடு சரிப்பட்டுவருமா?
காஞ்சிபுர மாவட்டத்தில் இருக்கும் பகுதிகளில் வாழும் கிராமத்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த இரண்டாவது விமான நிலையத் திட்டத்தின் மீதான தீர்மானம் பற்றி எந்தவொரு விவாதமும் நிகழவில்லை; அதில் மக்களின் பங்களிப்பும் இல்லை. மக்களின் பயத்தைப் போக்க வேண்டும்; ஏரிகள், நீர்ப்பாசனத் தேக்கங்கள் போன்ற சுற்றுப்புறச்சூழல் வளங்களின் இழப்பைச் சரிசெய்ய வேண்டும்; வணிகரீதியிலான பலத்தை ஏற்படுத்த வேண்டும்; உட்கட்டமைப்பிற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்; எதிர்காலச் சந்ததிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் பெருங்கொடையாகத் திகழும் வண்ணம் சென்னையின் நவீனச் சின்னமாக பரந்தூர் விமான நிலையம் மிளிர வேண்டும்.
இந்த அரும்பெரும் பணிதான் ஸ்டாலின் எதிர்கொண்டிருக்கும் மிகக் கடினமான சவால்!
Read in : English