Read in : English
உச்சநீதிமன்றம் ‘இலவசங்கள்’ தொடர்பாக விசாரித்துவரும் வழக்கைத் தமிழக ஆளும் கட்சி திமுக அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வர்ணித்திருக்கிறது. பெரிய நிறுவனங்களின் கடன்களை பாஜகவின் ஒன்றிய அரசு தள்ளுபடி செய்வது அந்த நிறுவனங்களுக்கு அரசு தரும் இலவசங்கள் இல்லையா என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.
இலவசங்கள் தொடர்பான மனுவொன்றை விசாரித்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றத்திடம் இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்ட திமுக, நரேந்திர மோடி அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் அதானிக் குழுமத்தின் ரூ. 72,000 கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியது. “கடந்த ஐந்து வருடங்களில், ரூ. 9.92 இலட்சம் கோடி கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. இதில் ரூ. 7.27 இலட்சம் கோடி பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன்களாகும். இது நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட இலவசங்கள் இல்லையா?” என்று ஆகஸ்டு 20 அன்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றில் திமுக கேட்டிருக்கிறது.
பாஜக தலைவர் அஷ்வினி உபாத்யாய சமூகத்தில் விளிம்புநிலை மக்களுக்கு அளிக்கப்படும் ‘இலவசங்களை’ மட்டுமே தன்மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பெரும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆகப் பெரிய கடன்களையும் வரிவிடுமுறைகளையும் அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று திமுக கூறியிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டம் பாகம் 4 சொல்லும் வழிகாட்டிக் கொள்கைகளுக்கு இணங்க எடுக்கப்படும் சமூகநலன், சமூகநீதி நடவடிக்கைகளை ‘இலவசங்கள்’ என்ற சொல்லால் வர்ணிப்பதைத் திமுக வலுவாக ஆட்சேபித்திருக்கிறது. “அரசுக் கரூவூலத்திற்கு ஏற்படும் நிதிச்சுமையைப் பற்றி மனுதாரர் நிஜமாகவே அக்கறை கொண்டவர் என்றால், ஆகப் பெரிய பணக்கார கார்ப்பரேட்டுகளுக்கும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் தரப்படும் கடன் தள்ளுபடிகளிலும் வரி விடுமுறைகளிலும் அவர் அக்கறை கொண்டிருக்க வேண்டும்.
மோடி அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் அதானிக் குழுமத்தின் ரூ. 72,000 கடன் தள்ளுபடிசெய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில், ரூ. 9.92 லட்சம் கோடி கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. இது எல்லாம் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட இலவசங்கள் இல்லையா?
ஆனால், சமூகநலன் திட்டங்களுக்குச் செலவழிக்கப்படும் தொகையைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிக மதிப்புள்ள பெருநிறுவனக் கடன்களின் தள்ளுபடிகளைப் பற்றி ஒன்றும் தெரியாதவராக மனுதாரர் சந்தோசமாகவே இருந்துவிட்டார்” என்று சொன்னது திமுகவின் மனு.
சமூகத்தின் விளிம்புநிலை மக்களைக் கைதூக்கிவிடும் ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்படும் சமூகநலன் திட்டங்களை ‘இலவசங்கள்’ என்று சொல்ல முடியாது என்று திமுக விவாதித்தது.
தொலைக்காட்சிப் பெட்டி, சைக்கிள், மடிக்கணினி ஆகியவற்றைச் சமூகநலன் திட்டங்கள்படி ஒடுக்கப்பட்டோர்களுக்கு விநியோகம் செய்வதில் தமிழ்நாட்டுக்குத் தனிப்பெயர் உண்டு. கார்ப்பரேட்டுகளுக்குப் பெரிய பெரிய வரிவிலக்குகளைக் கொடுத்துக்கொண்டு, அதே நேரம், ஏழைகளுக்கும் அடிமட்டத்து மக்களுக்கும் உணவு, கல்வி, பயண மானியங்கள் ஆகியவற்றை வழங்கும் சமூகநலன் திட்டங்களைத் தடுக்க நினைப்பது என்ன நியாயம்? இதற்கு மனுதாரர் பதில் சொல்லியாக வேண்டும் என்று திமுக கூறியது.
இந்தியா ஒரு சமதர்மப் பொருளாதார நாடு என்பதற்கு, சமூகத்தில் நலிந்தவர்களின் நன்மைக்கான திட்டங்களைத் தொடர்வதன் மூலம் பொதுநலத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பொருள். “சமூக நலன் செலவீனத்தை இலவசங்களின் பண்பாடு என்று சொல்வது தவறானது. பல ஆண்டுகளாகச் சமூக நலன் திட்டங்களால் விளைந்திருக்கும் நன்மைகள் திட்டங்களுக்கான நிதிச்செலவுகளை விட ஆகப்பெரியவை” என்று திமுக தனது மனுவில் மேலும் சொன்னது.
இந்தியாவின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்பு ஒரு விசாரணையின் போது, “பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலவசங்கள்” கொடுப்பது கடுமையான ஒரு பொருளாதாரப் பிரச்சினை என்றும், தேர்தல் நேரத்து “இலவசங்களின் பட்ஜெட்” வழக்கமான நிதியாண்டுப் பட்ஜெட்டைத் தாண்டிச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க:
இலவச வாக்குறுதிகள் சமூகநலனுக்கானவையா?
இலவசங்கள் கருவூலத்தைக் காலிசெய்கின்றனவா?
இந்த விஷயத்தில் வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கும்படி உச்சநீதிமன்ற அமர்வு இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது. ஆனால், சரியானதொரு சட்டம் இல்லாத பட்சத்தில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் தருவதாக வாக்காளர்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில்சொன்னது.
அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. சட்டசபைகளாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் உருவாக்கப்பட்டு அரசால் நிறைவேற்றப்படும் கொள்கைகளில் நீதிமன்றம் “இறங்கி ஆழம் பார்க்க முடியாது.” அப்படிச் செய்வது பகிரப்பட்ட அதிகாரங்களின் எல்லைகளைத் தாண்டுவதாகும் என்று திமுக தன் மனுவில் கூறியது.
திமுகவுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இதைப் போன்றதொரு வாதத்தை முன்வைத்தது.
சமூகத்தின் விளிம்புநிலை மக்களைக் கைதூக்கிவிடும் ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்படும் சமூகநலன் திட்டங்களை ‘இலவசங்கள்’ என்று சொல்ல முடியாது என்று திமுக விவாதித்தது
மதிய உணவு, வேளாண்மைக்கான இலவச மின்சாரம், ஆதி திராவிடர்களுக்கான இலவச வீடுகள், கலப்புத் திருமணத்திற்கு ரூ. 5,000 நிதியுதவி, அரசு மருத்துவமனைகளில் இலவச வைத்தியம் ஆகியவற்றைத் தனது அரசின் சமூக நலன் திட்டங்கள் என்று திமுக பட்டியல் போட்டுக் காண்பித்திருக்கிறது.
சமூகத்தில் நலிந்தவர்களுக்கு மிகவும் அவசியமான இந்தத் திட்டங்களால் தமிழ்நாடு ஏழை மாநிலமாகிவிடவில்லை என்றும் திமுக மனுவில் சொன்னது. “மாறாக, தமிழ்நாட்டை இந்தத் திட்டங்கள் மேம்படுத்தியிருக்கின்றன. வருமான சமதர்மத்தில் இருந்த பெரிய இடைவெளியைக் குறைத்திருக்கின்றன. ஜிடிபி-யிலும், தொழில்மயமாவதிலும் நாட்டில் மூன்றாம் இடத்தைத் தமிழ்நாடு பிடிப்பதற்கு இந்தத் திட்டங்கள் உதவியிருக்கின்றன” என்று திமுக வாதம் செய்தது.
திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் ஆணிவேரே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடுதான் என்று மனுதாரரான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.
ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் உதித்த திராவிட இயக்கத்தின் தோற்றத்தையும் எழுச்சியையும் விவரித்த பாரதி, விளிம்புநிலை மனிதர்களுக்குக் கல்வி வசதியை ஏற்படுத்தித் தந்ததுதான் திராவிடத் தலைவர் தியாகராயர் (1852-1925) தலைமையிலான நீதிக்கட்சி எடுத்த முதல் நடவடிக்கை என்று பிடிஐ-யிடம் கூறினார். தியாகராயர் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி, புத்தகங்கள், மதிய உணவு ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்.
அரசியலமைப்புச் சட்டம் பாகம் 4 சொல்லும் வழிகாட்டிக் கொள்கைகளுக்கு இணங்க எடுக்கப்படும் சமூகநலன், சமூகநீதி நடவடிக்கைகளை ‘இலவசங்கள்’ என்ற சொல்லால் வர்ணிப்பதை திமுக வலுவாக ஆட்சேபித்திருக்கிறது
“இதுதான் மாணவர்களைப் பள்ளி செல்லத் தூண்டியது. அவற்றை நீங்கள் இலவசங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவை காலப்போக்கில் பரிணாமம் அடைந்தன. அன்றைய மதிய உணவுத் திட்டம்தான் இன்றைய சத்துணவுத் திட்டமாக வளர்ந்திருக்கிறது. இப்போது நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்குக் காலையுணவுத் திட்டத்தையும் கொண்டுவந்திருக்கிறார்” என்று சொன்னார் பாரதி. காலங்காலமாகக் கல்வி என்பது குறிப்பிட்ட ஒரு சின்ன வட்டத்தில் மட்டுமே புழங்கிவந்தது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களிடமும் மற்றவர்களிடமும் கல்வியைக் கொண்டுசென்று அதைப் பரவலாக்கியது அந்தச் சமூகநலன் திட்டங்கள்தாம் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் கு. காமராஜர் காலத்தில் எஸ்எஸ்எல்சி வரை கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. திமுக நிறுவனர் சி.என். அண்ணாத்துரை முதல்வராக ஆட்சி செய்த காலத்தில், பியூசி வரை கல்வி இலவசமாக இருந்தது. “இலவசக் கல்வி கலைஞர் (காலஞ்சென்ற திமுக தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி) ஆட்சியில் பட்டப்படிப்புவரை நீட்டிக்கப்பட்டது. இதனால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த மாணவர்களால் கல்லூரிப் படிப்பையும் தொடர முடிந்தது…. முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்திருக்கும் மாணவிகளுக்கான ரூ.1,000 உதவித் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெண்ணுரிமையை, பெண்ணதிகாரத்தை நிலைநாட்டும் திட்டமிது. இதுதான் சமூகநீதிப் பண்பாட்டுச் சின்னமான தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி கண்ட கனவு. இந்தக் கனவுதானே திராவிடச் சித்தாந்தத்தின் ஆணிவேர்” என்று முடித்தார் ஆர்.எஸ்.பாரதி.
(இந்தக் கட்டுரை முதலில் The Wire இதழில் வெளியானது)
Read in : English