Read in : English
கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதி என்ற மாணவியின் தற்கொலை நடந்ததைத் தொடர்ந்து பல தற்கொலைகள் பல இடங்களில் நடந்திருக்கின்றன. இது போன்ற தற்கொலைகளைப் பற்றிய பரபரப்பான ஊடகச் செய்திகள் ஏற்கெனவே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன என்று உளவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஒரு தற்கொலைச் செய்தியை மிகவும் பரபரப்பாக ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது, தற்கொலைசெய்துகொண்டவரது இடத்தில் தம்மைப் பொருத்திப் பார்ப்போர் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு 15 சதவீதம் அதிகரிப்பதைக் காண முடிகிறது என்று இந்தியாவின் முன்னணித் தற்கொலைத் தடுப்பு இயக்கமான சினேகாவின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் கூறுகிறார். இன்மதி இணையதளத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், “செய்தியில் இடம்பெற்ற வழிமுறையிலேயே தற்கொலை செய்துகொள்வதும் நடக்கிறது” என்றும் குறிப்பிடுகிறார்.
இந்திய மனநல இதழ் ஒன்றுக்காக எழுதிய “தற்கொலையில் ஊடகச் செயல்பாடுகள் – தற்கொலை பற்றிய செய்தி வெளியீட்டில் ஊடகத்துக்கான வழிகாட்டுதல்கள்” என்ற தலையங்கத்தில், தற்கொலைகளைப் பற்றிச் செய்தி வெளியிடும்பொழுது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு நெறிமுறைகள் என்ன என்பதைச் சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஊடகத்தில் செய்தி வெளியிடுவதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களைத் தற்கொலைக்குத் தூண்டவும் முடியும், அந்த எண்ணத்திலிருந்து அவர்களை மீட்டு அமைதிப்படுத்தவும் முடியும் எனும் சூழலில், ஊடகங்கள் எவ்வளவு பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டியதிருக்கிறது? டாக்டர் லட்சுமி விஜயகுமார்
ஊடகத்தில் செய்தி வெளியிடுவதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களைத் தற்கொலைக்குத் தூண்டவும் முடியும், அந்த எண்ணத்திலிருந்து அவர்களை மீட்டு அமைதிப்படுத்தவும் முடியும் எனும் சூழலில், ஊடகங்கள் எவ்வளவு பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டியதிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
மேலும் படிக்க:
கள்ளக்குறிச்சி வழக்கு:மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உயிரா விலை?
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஏன் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?
ஜூலை 18ஆம் நாள், ஸ்ரீமதியின் தற்கொலைக்கு 5 நாள்களுக்குப் பிறகு, சேலம் மாவட்டம் மேச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தான் படித்த அரசுப் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த முயற்சியில் அவருக்குப் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஜூலை 25ஆம் நாள், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவி, தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டார். இதற்கு அடுத்த நாள், மற்றொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கடலூர் மாவட்டத்தில் தன்னுடைய வீட்டில் தற்கொலைசெய்துகொண்டார்.
தற்கொலைச் செய்திகள் ஊடகத்தில் பரவலாக இடம்பெறுவதைப் பார்த்துச் சிலருக்குத் தாமும் அதே போல தற்கொலைசெய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது என்கிறார் டாக்டர் லட்சுமி விஜயகுமார். இதழ் ஒன்றில் வெளியான கட்டுரையைச் சுட்டிக்காட்டி, அரசியல்வாதிகளோ புகழ்பெற்ற மனிதர்களோ தற்கொலை செய்துகொள்ளும்பொழுது அதேபோலத் தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் 14.3% அதிகரித்திருக்கிறது. இதற்கு வெர்தர் விளைவு (werther effect) என்று பெயர் என்கிறார் அவர்.
என்ன செய்யலாம்?
உலக சுகாதார நிறுவனம், இந்திய பிரஸ் கவுன்சில் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தற்கொலைகளைப் பற்றி ஊடகங்கள் எப்படி எழுத வேண்டும் என்று வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறார்கள் என்று டாக்டர் லட்சுமி விஜயகுமார் கூறினார். “தற்கொலையைச் செய்தியைத் தலைப்பில் போடக் கூடாது, அந்தச் செய்தியைப் பரபரப்பாக்கக் கூடாது, தற்கொலை செய்து கொண்ட முறையை விரிவாக எழுதக் கூடாது என்று இந்த வழிகாட்டுதல்கள் பேசுகின்றன” என்று டாக்டர் லட்சுமி விஜயகுமார் தெரிவித்தார். இந்த வழிகாட்டுதல்கள் இருந்தாலும் நடைமுறையில் அவை பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்றும் கூடுதலாக அவர் கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த வழிகாட்டுதல்களுக்கான பணியில் பங்கெடுத்த டாக்டர் லட்சுமி விஜயகுமார், “பல நாடுகளில் இந்தியாவில் இருப்பதைப் போல இந்த வழிகாட்டுதல்களே இல்லை. ஆனால், இந்த வழிகாட்டுதல்களை எப்படிச் செயல்படுத்துவது என்பதுதான் நம்முன் இருக்கும் பெரிய கேள்வி” என்கிறார்.
ஊடகங்கள் தற்கொலைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடும்பொழுது, செய்தியுடன் கூடுதலாக நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்கும் மாற்று வழிகள் பற்றிய விவரங்களையும் வெளியிடலாம்
அமெரிக்காவின் தேசிய தற்கொலைத் தடுப்பு அமைப்பு வெளியிட்ட ஆவணம் ஒன்று தற்கொலைகளைச் செய்திகளைப் பொறுப்புணர்வுடன் வெளியிடுவது பாபஜினோ விளைவின் (papageno effect) ஒரு பகுதி என்று கூறுகிறது. பாபஜினோ விளைவானது முதலில் குறிப்பிட்ட வெர்தர் விளைவின் வீரியத்தைக் குறைக்கக் கூடியது.
ஊடகங்கள் தற்கொலைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடும்பொழுது, செய்தியுடன் கூடுதலாக நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்கும் மாற்று வழிகள் பற்றிய விவரங்களையும் வெளியிடலாம். தற்கொலைத் தடுப்பு தொலைபேசி எண்களை அழைப்பது, மனசுக்குப் பிடித்த நண்பர்களுடன் பேசுவது போன்ற வழிகளைத் தற்கொலைச் செய்திகளோடு கூடுதலாக வெளியிடும்போது, தற்கொலை எண்ணம் கொண்டவர்களிடம் அது நேர்மறையான எண்ணத்தை விதைத்துத் தற்கொலை முயற்சியிலிருந்து மீட்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்.
Read in : English