Read in : English
செப்டம்பர் முதல் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட, திமுக அரசு முடிவு பண்ணியிருப்பதால் தமிழ்நாட்டில் இப்போது மின்சாரக் கட்டணம் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. முன்பு ஆளும்கட்சியாக இருந்த இன்றைய அஇஅதிமுக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.
ஆனால், மாநில அரசு மின்கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், டான்ஜெட்கோவின் நிதிநெருக்கடி, நிதி நிறுவனங்களிலிருந்து மேலும் கடன் வாங்கமுடியாத சூழல் ஆகியவற்றால் இந்தக் கட்டண உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லித் தன் முடிவை நியாயப்படுத்தியிருக்கிறது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான மாற்று வழிகளும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளில் மின்சாரத்தை அதிகம் நுகராத உபகரணங்களை நுகர்வோர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளும் இருக்கின்றன என்பது இந்த அரசியல் பரமபத விளையாட்டில் மறந்து போய்விட்டன.
இந்த அரசியல் சண்டைகளுக்கான காரணங்கள் தமிழ்நாடு நிதியமைச்சர் 2021-ல் வெளியிட்ட வெள்ளையறிக்கையும், கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) அறிக்கைகளுமே. டான்ஜெட்கோவின் கடன்கள் அளவுமீறி போனது அஇஅதிமுகவின் ஆட்சியின் போதுதான் என்று இந்த அறிக்கைகள் சொல்கின்றன. அந்தக் கட்சியின் ஆட்சியில் பெரிய அளவிலான நட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது ஏற்பட்ட மோசமான நிதி மேலாண்மையைப் பற்றி சிஏஜி கருத்துகள் சொல்லியிருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு, நிலக்கரி இறக்குமதியில் ஊழல்கள் இருக்கின்றன என்று திமுகவும் குற்றஞ்சாட்டியது.
2020-21 நிதியாண்டு நிலவரப்படி, ரூ.1,11,084.50 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கிறது; இது, கடந்த 2011-12 நிதியாண்டிலிருந்து பத்தாண்டுகளில் நட்டம் 106.8 சதவீத அளவு உயர்ந்திருக்கிறது என்று வெள்ளையறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. சிஏஜியின் முக்கியமான விமர்சனம் இதுதான்: மின்துறையின் நிதி மீளுருவாக்கத்திற்கான ஒன்றிய அரசின் ’உதய்’திட்டத்தை மாநில அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது; டான்ஜெட்கோவின் கடன்களை முழுவதுமாக எடுத்துக்கொள்ளாமல் இழுத்தடித்தது அரசு; தொழில்நுட்ப ரீதியான மின்சார இழப்பைக் குறைக்க அரசு செயல்படவில்லை; உரிய வருமானத்தை ஈட்டும் வகையில், வேளாண்மைக்கும், குடிசைகளுக்கும், எல்லாத் தரப்பினருக்கும் வழங்கப்பட்ட மின்சாரத்தை அரசு சரியான மீட்டரில் அளக்கவில்லை.
மேலும் படிக்க:
சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?
எச்சரிக்கை: ஈரக்குமிழ் வெப்பநிலையின் விளைவுகள் என்ன
முந்தைய அஇஅதிமுக அரசு ‘உதய்’திட்டத்தின்கீழ் டான்ஜெட்கோவின் முழுக்கடன் நிலுவைகளுக்கும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், வெறும் 34.38 சதவீதக் கடனுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக்கொண்டது. அதனால் 2017-20 காலகட்டத்தில் ரூ. 9,150.60 கோடிக்குக் கூடுதல் வட்டியை அது கட்டியது. மேலும், பத்திரங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்திக் கடன்களைச் சமாளிக்க வழிவகைசெய்யப்படவில்லை. அதனால் ரூ. 1,003.86 கோடிக்கான கூடுதல் வட்டியைத் தவிர்க்க முடியவில்லை என்று சிஏஜி சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் நிதித் தொல்லைகள், தவறான நடவடிக்கைகள், தவறவிட்ட நல்வாய்ப்புகள் ஆகியவற்றால் அஇஅதிமுக ஆட்சியில் டான்ஜெட்கோவின் கடன் நிலுவைத் தொகை 2019-20 ஆண்டுகளில் ரூ.1,23,895.68 கோடியாக உயர்ந்தது.
முந்தைய அஇஅதிமுக அரசு ‘உதய்’திட்டத்தின்கீழ் டான்ஜெட்கோவின் முழுக்கடன் நிலுவைகளுக்கும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், வெறும் 34.38 சதவீதக் கடனுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக்கொண்டது. அதனால் 2017-20 காலகட்டத்தில் ரூ. 9,150.60 கோடிக்குக் கூடுதல் வட்டியை அது கட்டியது.
இந்த ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்பட்டதன் மூலம், சிலரைப் பணக்காரர்களாக்கவும், அடிமட்டத்து மக்களை மேலும் ஏழைகளாக்கவும்தான் தமிழக அரசு செயல்படுவது போலத் தோன்றுகிறது என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தனது டிவிட்டர் கணக்கில் எழுதியிருக்கிறார். (தற்போது தமிழக அரசு கடைப்பிடிக்கும் சீர்திருத்தத் திட்டமே பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் திட்டம்தான் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்).
கூரை வெளிச்சம்
ஆனால், இதிலிருந்து மீள்வதற்கு வேறொரு வழி இருக்கிறது. அதைத்தான் செயற்பாட்டாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு மணிக்கு 5 முதல் 5.5 கிலோவாட் வரை சூரிய ஆற்றல் மின்சாரத்தைத் தமிழ்நாட்டால் தயாரித்துக்கொள்ள முடியும், இதை 1998-2018-க்கான உலகவங்கியின் தகவல் தெரிவிக்கிறது. இந்த மதிப்பீடு இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும். தக்கணத்தின் தெற்குப் பகுதியில் இந்த மதிப்பீடு சற்று அதிகமாக இருக்கிறது. மேற்கு மாநிலங்கள் மணிக்கு 5.8 கிலோவாட் சூரிய ஆற்றல் மின்சாரத்தைத் தயாரிக்கும் திறன் கொண்டவை.
அதிகபட்ச மின்சாரத் தேவையுள்ள சென்னையில், கூரைகள்மீது சூரியவொளி தகடுகளைப் பதித்து மாநிலத்தின் மின்தொகுப்பிற்குக் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து சேர்த்திருக்க முடியும். அப்படிச் சேர்ந்திருந்தால் சிறிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும்கூடத் தரமான மின்சாரத்தைத் தேவையான அளவுக்குத் தொடர்ந்து வழங்கமுடியும்.
ஆனால், தமிழ்நாட்டின் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தித் திறன் வெறும் 537 மெகாவாட் மட்டுமே; அதில் 75 சதவீதம் தொழிற்துறையில் இருக்கிறது என்று தி ஹிந்து பிசினெஸ்லைன் கடந்த வருடம் தெரிவித்தது. இந்தியாவின் பெரிய நகரமயமான மாநிலத்தில் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தித் திறன் வாய்ப்புக்கும், சாதித்திருக்கும் திறனுக்கும் இடையிலிருக்கும் பெரும் இடைவெளி இதிலிருந்து தெளிவாகவே தெரிகிறது.
மின்தேவையை உருவாக்கும் பல்வேறு அரசு முகமைகளின் செயற்பாட்டையும், மின்சாரம் வழங்கலையும் மறு ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு, மின்கட்டணம் உயர்ந்திருக்கும் இந்தக் காலகட்டமே சரியான நேரம். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கட்டுமானங்களை நிறுவும் நோக்குடன், கட்டிட விதிகளை மீள்கட்டமைப்பு செய்து அமல்படுத்த வேண்டும்.
பரவலாக்கப்படும் சூரிய ஆற்றல் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன், மாநில அரசு அவ்வப்போது ஆணைகள் பலவற்றை வெளியிட்டிருக்கின்றன. உதாரணமாக, எவரும் கூரையில் சூரியவொளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி தகடுகளைப் பொருத்திக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளலாம்; மொத்தமாக அந்த மின்சாரத்தை அரசு மின்தொகுப்பிற்கு வழங்கலாம்; அல்லது தேவைக்குப் போக மிச்சப்படும் மின்சாரத்தை வழங்கலாம்; அதற்கு ஈடுநிதியும் தரப்படும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணைய விதிகள், 2021 சொல்கின்றன.
மேலும், 16 குடியிருப்பு இல்லங்களும், 300 சதுரமீட்டர் பரப்பும் கொண்ட உயர்ந்த கட்டிடங்களிலும், அதிக உயரமில்லாத கட்டிடங்களிலும் சூரியவொளித் தகடுகள் பதித்து மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை மின்னேணிகளுக்கும் பம்புகளுக்கும் அந்தக் கட்டிடங்களின் பொதுப் பகுதிகளுக்கும் பயன்படுத்தலாம்; மொத்த மின்பயன்பாட்டை அளக்க மீட்டரும் பொருத்தப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கொண்டுவந்த தமிழ்நாடு ஒன்றிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019 சொல்கின்றன.
இந்த விதிகளை எல்லாம், கடந்த பல ஆண்டுகளாகவே கடன் அதிகரிப்புத் தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கும் டான்ஜெட்கோ பின்பற்றியிருக்கிறதா என்பது விவாதிக்க வேண்டிய விசயம்.
கூட்டுறவு மாதிரியும், வானிலைக் கவலைகளும்
கிராமப் பொருளாதாரத்திற்கு உந்துசக்தி கொடுக்கவும், அடிமட்டத்து மக்கள் தன்னிறைவு அடைவதற்கும் உருவான கூட்டுறவு அமைப்புகளுக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும் பேர்பெற்றது தமிழகம். வானிலை மாற்றம் பற்றிய கவலைகளும், விரிவாக்கம் செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தியால் ஏற்படும் மாசுக்களும் சூழ்ந்த இந்தக் காலகட்டத்தில், சூரிய ஆற்றல் மின்னுற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு கூட்டுறவு அமைப்புகளையும், சுய உதவிக் குழுக்களையும் பயன்படுத்தலாம்.
இந்த மாதிரியான பிரச்சினையைத் தீர்க்கும் வண்ணம் ஜெர்மனியும் ஸ்பெயினும் மக்கள் சக்தியைப் பயன்படுத்தி சூரிய ஆற்றல் மின்சாரக் கூட்டுறவுச் சங்கங்களை ஏற்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றன. சராசரி குடிமகன் சிறியதொரு சூரிய ஆற்றல் மின்திட்டத்தில் சிறிய முதலீடு செய்து மின்கட்டணத்தில் 30 சதவீதம் தள்ளுபடி பெறலாம் (ஸ்பெயினில் உள்ளது போல).
இந்தியாவின் மக்கள்தொகையையும், நடுத்தர வகுப்பின் அளவையும் கணக்கில் வைத்துப் பார்த்தால், மேலே சொன்ன மாதிரை அமல்படுத்துவது மிகவும் எளிது. சூரிய ஆற்றல் மின்னுற்பத்திக் கட்டுமானத்தை நிறுவும் செலவு ஒன்றும் பெரிதாக இருக்காது. ஒரு ஆஃப்-கிரிட் கேடபிள்யூஎச் சூரியவொளி மின்னுற்பத்தி அமைப்பை நிறுவ ரூ.96,000 ஆகுமென்றும், கிரிட்டோடு தொடர்பு கொண்ட ஒரு சிஸ்டத்தின் கேடபிள்யூஎச்-சிற்கு ரூ. 60,000 ஆகுமென்றும் தமிழகத்து சூரிய ஆற்றல் மின்கட்டுமானங்களின் விளம்பரங்கள் சொல்கின்றன.
சூரிய ஆற்றல் மின்னுற்பத்திக் கட்டுமானங்களைப் பிரபலப்படுத்தவும், அவற்றை நிறுவுவதற்கும் டான்ஜெட்கோ தவறியது அதன் நிதிநெருக்கடிகளுக்கான காரணங்களில் ஒன்று என்று அது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
ஜெர்மனியும் ஸ்பெயினும் மக்கள் சக்தியைப் பயன்படுத்தி சூரிய ஆற்றல் மின்சாரக் கூட்டுறவுச் சங்கங்களை ஏற்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றன. சராசரி குடிமகன் சிறியதொரு சூரிய ஆற்றல் மின்திட்டத்தில் சிறிய முதலீடு செய்து மின்கட்டணத்தில் 30 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
தமிழகத்தில் மின்சாரக் கட்டமைப்பு என்பது பெருத்த வாடகை கேட்பது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒவ்வொரு புதிய மின்சாரத் தொடர்புக்கும் அதிகாரப்பூர்வமற்ற விலைகளும் உண்டு. இலஞ்சம் இல்லாமல் ஒரு ‘த்ரீ-பேஸ்’இணைப்பு வாங்குவது சாத்தியமில்லை. மாறாக, அரசியல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மின்சாரத் திருட்டைத் தடுக்க எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. தெருவோரத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும், பெரும்பாலும் கோயில்களுக்கும், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் கூட்டங்களுக்கும் அலங்கார விளக்குகளுக்காக மின்சாரம் திருடப்படுவது எந்தவிதத் தடையுமின்றி நடைபெறுகிறது.
ஸ்டார் மதிப்புக் கொடுத்து எரிசக்தித் திறனை மதிப்பீடு செய்வது பற்றித் தெரிந்திருப்பது தனிப்பட்ட நுகர்வோர்களுக்கு மிகவும் முக்கியம். அதிக நட்சத்திரங்களைப் பெற்றால், ஒரு பல்ப் அல்லது ஒரு ஃபேன் அல்லது ஒரு மின்சாதனம் குறைந்த அளவு மின்சாரத்தையே பயன்படுத்திக்கொள்கிறது என்று அர்த்தம். இப்படி எரிசக்தித் திறன் பயன்பாட்டை மதிப்பீடு செய்வதை நுகர்வோர்கள் மத்தியில் டான்ஜெட்கோ பிரபலப்படுத்துவது நல்லது. அப்படிச் செய்வது, நுகர்வோர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்ததும் போலாகும்.
Read in : English