Read in : English
சமீபத்தில் ஒரு சீன நிறுவனம் எலான் மஸ்க்கின் டெஸ்லாவைக் கடந்து சென்று உலகத்தின் ஆகப்பெரும் மின்சார கார் உற்பத்தியாளராக முன்னேறிருக்கிறது. டெஸ்லா இந்தியச் சந்தைக்குள் நுழையாததால், அதிகம் அறியப்படாத சீன நிறுவனமான ‘பிஒய்டி’ நுழைந்துவிட்டது. விரைவில் இந்தியாவில் மின்சார வாகனத் தயாரிப்பாளர்களுடன் அந்தச் சீன நிறுவனம் தோளோடு தோள்சேர்ந்து கூட்டு முயற்சியில் இறங்கவிருக்கிறது.
பிஒய்டியின் சென்னை ஆலை மேலும் அதிகமான முதலீட்டுடன் விரிவாக்கப்படலாம் என்பது சுவாரஸ்யமானதொரு விளைவாக இருக்கும்.
’பில்ட் யுவர் ட்ரீம்ஸ்’ (உங்கள் கனவுகளைக் கட்டமைத்துக் கொள்ளுங்கள்) என்பதின் சுருக்கமான பிஒய்டி (BYD) என்னும் இந்தச் சீன நிறுவனம் ’எதிர்காலத்திற்குத் தயாராகும் கார்களை’ உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்து, சென்னையில் புதிய மின்னணு உற்பத்தி ஆலையை உருவாக்க இந்தியாவில் 2007-ல் நுழைந்தது.
டயர்-1 மாநகரங்களுக்கான மின்சாரப் பேருந்துகளை பிஒய்டி-இந்தியா 2013-லிருந்து உற்பத்தி செய்துவருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே உட்பட 10-க்கும் மேற்பட்ட மாநகரங்களில் இந்த பிஒய்டி மின்சாரப் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
’பில்ட் யுவர் ட்ரீம்ஸ்’ (உங்கள் கனவுகளைக் கட்டமைத்துக் கொள்ளுங்கள்) என்பதின் சுருக்கமான பிஒய்டி (BYD) என்னும் இந்தச் சீன நிறுவனம் ’எதிர்காலத்திற்குத் தயாராகும் கார்களை’ உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்து
எதிர்பாராத வெற்றியாளர்
முழுக்க மின்சார மயமான கார்களை உற்பத்தி செய்து இந்தியாவின் மின்சாரப் புரட்சியில் ஓரங்கமாவதில் தீவிரமாக இருக்கிறது பிஒய்டி என்று அதன் இந்தியப் பிரிவின் செயல் இயக்குர் கெட்சு ஷாங் 2021-ன் ஆரம்பத்தில் சொன்னார். அந்த வருடத்தில் நவம்பரிலே அந்த நிறுவனம் பல்நோக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வணிக வாகனங்களிலிருந்து பயணிகள் வாகனங்களுக்கு மாறியது.
பிஒய்டி ‘ஈ6’ என்னும் முழுக்க மின்சாரமயமான பல்நோக்கு வாகனத்தை அறிமுகப்படுத்திய போது பலர் வியந்தனர்; பல்வேறு மோட்டார்வாகன ஆர்வர்லர்களின் இதயங்களை அந்த ’ஈ6’ கொள்ளையடித்தது. அப்படி இதயத்தைப் பறிகொடுத்தவர்களான ஆஷிஷ் பரத்வாஜ் மற்றும் கிரிஷ் கார்கெரா ஆகிய இரண்டு மோட்டார்வாகன ஆராய்ச்சியாளர்கள் ’ஈ6’ வண்டியில் மும்பையிலிருந்து டில்லி வரைக்கும் ஐந்து நாட்களில் 2,203 கிமீ தூரம் பயணித்து சாதனை படைத்தனர்.
”தொடர்ந்து செல்லக் கூடிய இந்தியாவிற்காக தொடர்ந்து செல்லும் ஒரு பயணம்,” என்ற பிஒய்டி-யின் தீவிர முயற்சியின் ஒரு பாகமாக, கிரிஷும், ஆஷிஷும் இந்தியாவில் மிகவும் நீண்டதொரு மின்வண்டிப் பயணத்தை முடித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
மே 31 முதல் ஜூன் 4 வரை நிகழ்ந்த அந்தப் பயணத்தில், அகமதாபாத்-உதயபூர் பாதையில் சுற்றிச் சென்ற போது ஒரேவொரு நாளைத் தவிர, மற்ற நாட்களில் ஒரு நாளைக்கு ஒருதடவை மட்டுமே ’பிஒய்டி ஈ6’ மின்சார வண்டிக்கு மின்னேற்றம் செய்யப்பட்டது என்று ஆஷிஷ் பரத்வாஜ் இன்மதியிடம் தெரிவித்தார்.
மொத்தம் 2,000 கிமீ தூரம் சென்ற அந்தப் பயணத்தில் மொத்தமாக ஆறு தடவை மட்டுமே வண்டிக்கு மின்னேற்றம் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
“பழையதும் சிறந்ததுமான டொயோட்டா இனோவா காரோடு ஈ6 போட்டி போட முடியும். இதில் மூன்றவாது இருக்கை வரிசை இல்லையென்றாலும், கேபின் வெளியும் செளகரியும் ஒப்பிடக்கூடியவை,” என்றார் ஆஷிஷ்.
பிஒய்டி ‘ஈ6’ என்னும் முழுக்க மின்சாரமயமான பல்நோக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தியபோது பலர் வியந்தனர்; பல்வேறு மோட்டார்வாகன ஆர்வர்லர்களின் இதயங்களை அந்த ’ஈ6’ கொள்ளையடித்தது
விலை அதிகம் என்றாலும், பிஒய்டி ஈ6 ஆகச்சிறந்த பசுமை பல்நோக்கு வாகனக் கட்டமைப்புத் திட்டத்தின்படி உருவாகியிருக்கிறது. படுவேகமாக மின்னேற்றம் செய்யலாம்; ஒரு தடவை செய்யும் மின்னேற்றத்திற்குப் பின்பு, ஒருமணிக்கு 130 கிமீ வேகத்தில் மொத்தம் 520 கிமீ தூரம் செல்லலாம்.
உலகச் சந்தையில் மின்வாகன விற்பனையில் இப்போது டெஸ்லாதான் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. என்றாலும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியச் சந்தையில் அந்த நிறுவனம் இல்லை என்பதால், நாட்டில் ஆகச்சிறந்த வெளிநாட்டு மின்சார வாகனப் பிரண்டாக பிஒய்டி ஈ6-தான் திகழ்கிறது.
மேலும் படிக்க:
அம்பாசடர் மீண்டு(ம்) வருகிறது, மின்சாரக் கனவோடு
மின்வாகன உற்பத்தி: டெஸ்லாவுக்குத் தமிழ்நாட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன!
பி ஒய்டியின் மின்சாரப் பேருந்துகள்
சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட பிஒய்டியின் மின்சாரப் பேருந்துகள் இந்தியாவில் பல்வேறு மாநகரங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மாசினை ஏற்படுத்தாமல் ஒரு சுத்தமான பசுமைமிகு சூழலை மக்கள்தொகை அடர்த்தியான அந்த மாநகரங்களில் பிஒய்டி பேருந்துகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் அவற்றின் விலை அதிகம்; அவற்றை ஓட்டுவதற்கு ஆகும் செலவும் அதிகம். டயர்-2, டயர்-3 மாநகரங்களை விட, டயர்-1 மாநகரங்கள் படுவேகமாகவே செலவுகளைச் சமாளித்து விடுகின்றன. எனினும் பிஒய்டி மின்சாரப் பேருந்துகளை எளிதாக அதிகச் செலவில்லாமல் ஓட்டும் வண்ணம், தேவையான உட்கட்டமைப்பை உருவாக்கி நிர்வகிக்க வேண்டும்.
சென்னையின் அண்டைப் பெருநகரமான பெங்களூரு சமீபத்தில் பிஒய்டி மின்சாரப் பேருந்துகளை பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்துக் கழகத்திற்காக வாங்கி அவற்றை அந்த மாநகரத்தில் ஓட விட்டிருக்கிறது. பெங்களூருவின் ஒட்டுமொத்த கரியமில வாயு வெளிப்பாட்டில் 20 சதவீதப் பங்கு பாரம்பரிய டீசல் பேருந்துகளுக்கு உண்டு என்று சில அறிக்கைகள் சொல்கின்றன.
முழுக்க மின்சார மயமான 40 அடியிலான பிஒய்டி பேருந்துகளை இயக்குவதற்கான செலவு டீசலில் ஓடும் பாரம்பரிய பேருந்து ஓடும் செலவுடன் ஒப்பிடக்கூடியதுதான் என்றும் கட்டணங்களிலும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் பிஒய்டி நிறுவனம் சொல்கிறது.
வடக்கில் பிஒய்டி மின்சாரப் பேருந்துகள் மணலி-ரோஹ்டாங் பாதையில் காற்றை மாசுப்படுத்தாமல் அதைச் சுத்தமாக வைத்திருந்து ஓடுகின்றன. இதுவரை மின்வாகனங்கள் ஓடாத குத்துயரப் பகுதிகளின் ஒன்றான அந்தப் பகுதியில் மின்சாரப் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பிஒய்டி மின்சாரப் பேருந்துகள் இந்தியாவில் இதுவரை இரண்டரை கோடி கிமீ தூரம் ஓடியிருக்கின்றனஎன்று பிஒய்டியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும் இந்தப் பேருந்துகள் 25,000 டன் கரியமில வாயுவைக் குறைத்திருக்கின்றன.
ஆஷிஷ் பரத்வாஜ் மற்றும் கிரிஷ் கார்கெரா ஆகிய இரண்டு மோட்டார்வாகன ஆராய்ச்சியாளர்கள் ’ஈ6’ வண்டியில் மும்பையிலிருந்து டில்லி வரைக்கும் ஐந்து நாட்களில் 2,203 கிமீ தூரம் பயணித்து சாதனை படைத்தனர்
தமிழ்நாட்டிற்கு வெற்றி வாய்ப்பு?
ஆசியா-பசிஃபிக் பிராந்தியத்தில் படுவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மின்சாரப் பேருந்துச் சந்தை இந்தியா. இதில் தமிழ்நாட்டுக்கு கணிசமானப் பங்கு உருவாகும் வாய்ப்பு அதிகம்.
சமீபத்தில் தமிழ்நாடு, ஜெர்மனியின் வளர்ச்சி நிதிக் கழகமான கேஎஃப்டபிள்யூ-வுடன் ஓர் உடன்படிக்கையைக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் 12,000 BS-VI பேருந்துகளோடு 2,000 மின்சாரப் பேருந்துகளையும் தமிழ்நாடு கொள்முதல் செய்யவிருக்கிறது. வட்டியில்லாக் கடனுக்கான செலவை 20-80 சதவீத அடிப்படையில் தமிழகமும், கேஎஃப்டபிள்யூ-வும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உடன்படிக்கை சொல்கிறது.
சென்னையிலிருக்கும் சாலைப் போக்குவரத்துக் கழகம் மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கு மாநில அரசுக்கு உதவும்வகையில் ஓர் உலகளாவிய டெண்டரை வெளியிட்டிருக்கிறது. மின்னேற்றத்திற்கான உட்கட்டமைப்பை அந்தக் கழகமே ஏற்படுத்தும். பிஒய்டியின் சென்னை ஆலைகளில் ஏற்கனவே பிஒய்டியும் அசோக் லேலண்டும் மின்சாரப் பேருந்துகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பதால், மாநில அரசு உலகளாவிய டெண்டரை மறுஆய்வுக்கு உட்படுத்தி உள்ளூர் டெண்டரை அனுமதிக்கலாம்.
பொதுத்துறை பேருந்துப் போக்குவரத்தில் ஆகப்பெரிய கட்டமைப்பையும், உட்கட்டமைப்பையும் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பிஒய்டியின் மின்சாரப் பேருந்து உற்பத்தி பெருமளவில் வெற்றி பெற்றால், சென்னை என்னும் மோட்டார்வாகன மையத்தில் மின்சாரப் பேருந்துகளின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தும் நோக்குடன் முதலீட்டை அதிகரித்து, எதிர்காலத்திற்குத் தயாராகும் ஒரு மின்சாரப் பொதுப்போக்குவரத்து கட்டமைப்புக்குத் தமிழகம் நகர்ந்துவிடும்.
Read in : English