Read in : English

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கான்பூர் ஐஐடி முன்னாள் தலைவருமான கல்வியாளர் மறைந்த மு. ஆனந்தகிருஷ்ணன் (12.7.1928 – 29.5.2021) இந்தியக் கல்வி நிலை குறித்து எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை (The Indian Education System – From Greater Order to Great Disorder) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.

இந்த ஆங்கிலப் புத்தகத்தை பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணனுடன் இணைந்து எழுதி தற்போது அதனைப் புத்தகமாக்கி வெளியிட்டவர் டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் பைண்டர் நிறுவனர், கல்வியாளர் டி. நெடுஞ்செழியன். இந்தப் புத்தகத்திலிருந்து கிடைக்கும் பணம், தமிழ்நாடு ஃபவுண்டேஷன் மூலம் அறச்செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

1928ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வாணியம்பாடியில் முனிரத்தினம், ரங்கநாயகி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் ஆனந்தகிருஷ்ணன். சாதாரணக் குடும்பம். அவரது அப்பா வீடுகளுக்கு தேவையான சிமெண்ட் ஜாலி செய்யும் தொழிலைச் செய்து வந்தார். அவரது குடும்பம் பெரியது. அவரையும் சேர்த்து ஒன்பது குழந்தைகள். ஐந்தாம் வகுப்பு வரை நகராட்சிப் பள்ளிக் கூடத்தில் படித்த ஆனந்தகிருஷ்ணன், பிறகு எஸ்எஸ்எல்சி வரை இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

எஸ்எஸ்எல்சி முடித்த பிறகு, ஆனந்தகிருஷ்ணனுக்கு முனிசிபாலிட்டியில் கிளார்க் வேலை வாங்கி விட வேண்டும் என்று அவரது அப்பா நினைத்தார். ஆனால், ‘நல்லா படிக்கிற பையனின் படிப்பை நிறுத்தி விடாதே! இன்டர்மீடியட் படிக்க வை’ என்று அவரது பள்ளி ஆசிரியர் ஆர்.சி. ராமனாத அய்யர் கூறினார். அவரது பேச்சுக்கு மறுபேச்சு சொல்லாமல், வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் ஆனந்தகிருஷ்ணனை இன்டர்மீடியட் படிப்பில் சேர்த்து விட்டார்.

இன்டர்மீடியட் படிப்பில் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றார் ஆனந்தகிருஷ்ணன். இதற்கிடையே, இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருக்கும்போதே, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அவருக்கும் உறவுக்காரப் பெண் ஜெயலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு, கிண்டி பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படிப்பில் சேர இடம் கிடைத்தது. படித்து முடித்ததும். பு95சுஇல் திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறையில் இளநிலைப் பொறியாளர் பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த வேலை கசந்ததால், அங்கிருந்து, சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார்.

அவரது மகத்தான சேவையைக் கௌரவிக்கும் வகையில் 1996இல் பிரேசில் நாட்டின் உயரிய விருது (The Order of Scientific Merit from the President of Brazil) ஆனந்தகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது

இதையடுத்து, ரயில்வே துறையில் கிளாஸ்—1 பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது. அமெரிக்காவில் மேற்படிப்புப் படிக்கவும் உதவித் தொகை கிடைத்தது. எனவே, ரயில்வே துறையில் வேலை சேரும் எண்ணத்தைவிட்டு விட்டு, அமெரிக்காவில் மினஸோட்டா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பில் படிக்கச் சேர்ந்தார். அங்கு படித்து முடித்தும் பகுதி நேரமாக வேலைபார்த்துக் கொண்டே, அதே பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து முடித்து விட்டு 1961ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார்.

மேலும் படிக்க:

மீண்டும் பள்ளிக்கூடம்: குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்குமா விளையாட்டுகள்?

மாநிலக் கல்விக் கொள்கை: தமிழ் பயிற்று மொழி, அருகமைப் பள்ளி முறையை நிபுணர் குழு பரிந்துரை செய்யுமா?

அங்கிருந்து வந்ததும் தில்லியில் மத்திய சாலை ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட்டில் சீனியர் சயின்டிபிக் ஆபீசராக பணியில் சேர்ந்த அவருக்கு, கான்பூர் ஐஐடியில் உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தது. புதிதாகத் தொடங்கப்பட்ட கான்பூர் ஐஐடியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த அவர் அங்கு டீனாவும் பின்னர் பொறுப்பு இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

பொக்கரானில் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, 1974ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முதன் முறையாக அறிவியல் ஆலோசகராக (Science Counselor) அவர் நியமிக்கப்பட்டார். ஒரு சில ஆண்டுகள் இந்தப் பணியில் இருந்த ஆனந்தகிருஷ்ணனுக்கு, 1978இல் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் (United Nations Centre for Science and Technology for Development) சீஃப் ஆஃப் நியூ டெக்னாலஜி என்ற பொறுப்பில் வேலை கிடைத்தது. பின்னர், ஐக்கிய நாடுகள் சபையிலேயே அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார்.

அவரது பணிக்காலத்தில் ஐ.நா. சபையின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 72 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். ராணுவ ஆட்சிக்குப் பிறகு, ஜனநாயகம் திரும்பிய பிரேசில் நாட்டில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை அளித்து, அதன் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும் அவருக்கு முக்கியப் பங்கு இருந்தது. அவரது மகத்தான சேவையைக் கௌரவிக்கும் வகையில் 1996இல் பிரேசில் நாட்டின் உயரிய விருது (The Order of Scientific Merit from the President of Brazil) ஆனந்தகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையே, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. சீனாவில் அவர் செய்து கொண்டிருந்த புராஜக்ட் முடிவு பெறாத நிலையில் அந்தப் பொறுப்பை அவரால் ஏற்க முடியவில்லை. அதையடுத்து, 1990ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரானார்.

அண்ணா பல்கலைக்கழகத்திலேயே இரு முறை மொத்தம் ஆறு ஆண்டுகள், அதாவது பு996வரை அவர் துணைவேந்தராக இருந்தார்.

அவரது பதவிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சீர்திருத்தப் பணிகள் ஏராளம். பிளஸ் டூ நுழைவுத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்துவதற்கு ‘மார்க் சென்ஸார் ரீடர்’ என்ற நவீன சாதனத்தைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார்.

அவரது காலத்தில் தான் பொறியியல் மாணவர் சேர்க்கையில் ‘சிங்கிள் விண்டோ அட்மிஷன் சிஸ்டம்’ என்கிற ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டது

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணனின் 90வது பிறந்த நாள் நிகழ்ச்சி. அவருடன், அவரது மனைவி ஜெயலட்சுமி

அவரது காலத்தில் தான் பொறியியல் மாணவர் சேர்க்கையில் ‘சிங்கிள் விண்டோ அட்மிஷன் சிஸ்டம்’ என்கிற ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு பல விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய நிலை மாறி, ஒரே விண்ணப்பம் போட்டால் போதும், மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டிய அந்த முறை தற்போதும் நடைமுறையில் தொடருவது அவர் தமிழ் சமூகத்துக்கு அளித்த கொடை எனலாம். அந்த நேரத்தில், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாலும்கூட, இரண்டாம் ஆண்டில்தான் பாடப்பிரிவுகளைக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யும். தனியார் கல்லூரிகள் பணம் வாங்கிக் கொண்டு பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்வதாக வந்த புகார்களை அடுத்து, கல்லூரியில் சேரும் போதே பாடப்பிரிவும் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முறையைக் கொண்டு வந்தார்.

ஆனந்தகிருஷ்ணன் துணைவேந்தராக இருந்தபோதுதான், மருத்துவ, பொறியியல் தொழில் படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீட்டு முறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணிக் காலம் முடிந்த பிறகு, 1996இல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பணியில் ஆறு ஆண்டு காலம் இருந்தார். அந்த கால கட்டத்தில் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகப்படுத்துவதில் இவரது பங்கு முக்கியமானது.

அதற்கான பாடப் புத்தகங்களைத் தயார் செய்யும் குழுவிற்கு அவர் தலைவராக இருந்தார். 2017இல் தமிழ்நாட்டில் பள்ளிப் பாடத்திட்டத்தை திருத்தி அமைப்பதற்கான குழுவின் தலைவராக இருந்து பணியாற்றி இருக்கிறார்.

மு.கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, ஐ.டி.டாஸ்க் போர்ஸ் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த ஆனந்தகிருஷ்ணனின் வழிகாட்டுதலில் உருவானதுதான் தமிழக அரசின் வெற்றிகரமான திட்டமான சென்னையில் உள்ள டைடல் பார்க். அந்த காலகட்டத்தில், முதலமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமை) இருந்திருக்கிறார்.

1999ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டை நடத்தியதில் ஆனந்தகிருஷ்ணனுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இணையத்தில் தமிழின் பயன்பாட்டு வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படும் தமிழ் விசைப் பலகையை (கீ போர்டு) முறைப்படுத்துவதில் அந்த மாநாட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதன் தொடர்ச்சியாகத் தான் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (தற்போது தமிழ் இணையக் கல்விக் கழகம்) உருவானது. சென்னை மாநாட்டைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் இந்த மாநாட்டை நடத்துவதற்காக உலத் தொழில்நுட்ப மன்றம் (INFITT) உருவாக்கப்பட்டது.

இரண்டாயிரமாவது ஆண்டில் அந்த அமைப்பின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை தரமணி பகுதியில் உள்ள பல்வேறு அறிவியல் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைந்து அறிவியல் நகரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அவரது முயற்சி இன்னமும் முழுமையாக நிறைவேறவில்லை.

மால்கம் ஆதிசேஷய்யா உருவாக்கிய எம்ஐடிஎஸ் என்று அழைக்கப்படும் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்ட்டீஸ் கல்வி நிலையத்தின் தலைவராக இருந்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் உள்பட பல்வேறு மாநில, மத்திய அரசுகளின் ஆய்வுக் குழுக்களில் பணியாற்றியிருக்கிறார். அவர் முதலில் பணியில் சேர்ந்த கான்பூர் ஐஐடியின் ஆட்சிமன்றக் குழுத் தலைவராகவும் (2007-2016) இருந்திருக்கிறார். தமிழ்நாடு ஃபவுண்டேஷன் அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவராகவும் இருந்து பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்.

சிறிய ஊரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும்கூட, தனது திறமையாலும் நேர்மையான உழைப்பாலும் சர்வதேச அளவில் முத்திரை பதித்து தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க முடியும் என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன்

2002ஆம் ஆண்டில் அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 2003இல் அவர் படித்த மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தலைமைப்பண்பு விருது (Distinguished Leadership Award of the University of Minnesota) கிடைத்தது. கான்பூரில் உள்ள சத்திரபதி சாகுஜ் மகராஜ் பல்கலைக்கழகம் (2010), கோட்டாவில் உள்ள ராஜஸ்தான் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (2014) ஆகியவை கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி ஆனந்தகிருஷ்ணனை கௌரவித்துள்ளன.

சர்வதேச அளவில் பணிகள் செய்திருந்தாலும் பழகுவதற்கு எளியவர். பணிகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதிலும் நேர்மையாகப் பணி செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பவர். அமெரிக்காவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு, மகன்கள் அமெரிக்காவில் பணிகளில் இருந்த போதிலும்கூட, பிறந்த நாட்டுக்காகவும் தன்னை வளர்த்த மண்ணுக்காகவும் பணிபுரிய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் தங்கி இருந்து கல்விப் பணிகளைச் செய்து வந்தார். கடந்த ஆண்டு 92வது வயதில் மரணமடைந்த ஆனந்தகிருஷ்ணன் நினைவாக அவரது பிறந்த நாளான ஜூலை 12ஆம் தேதியையொட்டி அவர் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது

சிறிய ஊரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும்கூட, தனது திறமையாலும் நேர்மையான உழைப்பாலும் சர்வதேச அளவில் முத்திரை பதித்து தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க முடியும் என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், கல்வியாளர், பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival