Read in : English
இயக்குநர் மணிரத்னம் படமாக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், இனி உலகத்தினர் சோழர்கள் பற்றி பொன்னியின் செல்வன் மூலம் அறிந்துகொள்வார்கள் என்றும் நம் குழந்தைகளுக்குச் சோழர்கள் யார் எனக் காட்ட இப்படம் உதவும் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.
சோழர்கள் கால வாழ்க்கையைத் திரையில் மணிரத்னம் உயிரோட்டத்துடனும் நம்பகத்தன்மையுடனும் உருவாக்கியுள்ளார் என்பது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிப்பதில் பொன்னியின் செல்வன் குழுவினர் இறங்கியுள்ளனர்.ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களால் ஆன ஒத்துழைப்பை இதற்கு நல்குகின்றன. இந்தப் படத்தால் சமுதாயம் எதிர்கொள்ள உள்ள பெரிய ஆபத்து இதுதான். உண்மையில் வரலாற்றைத் தெரிந்துகொள்ள இந்தப் படம் உதவுமா என்பதை அசைபோட்டுப் பார்ப்போம்.
ஒரு படத்தின் மேக்கிங்கைவிட அதன் மார்க்கெட்டிங்கில் கைதேர்ந்தவர் மணிரத்னம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கத் தயாராகிறார். பொன்னியின் செல்வன் குறித்துத் தொடர்ந்து வரும் செய்திகளை அதை மெய்ப்பிக்கின்றன. எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய எழுபது ஆண்டுகளாக வாசகர்களால் பேசப்பட்டு வருகிறது.
ஐம்பதுகளில் கல்கி எழுதிய இந்த நாவல் முழுக்கக் கற்பனையில் உருவானது. அந்தக் கற்பனைக்குச் சில வரலாற்று நிகழ்வுகளும் கதாபாத்திரங்களும் தூண்டுகோல்களாயிருந்துள்ளன
ஐம்பதுகளில் கல்கி எழுதிய இந்த நாவல் முழுக்கக் கற்பனையில் உருவானது. அந்தக் கற்பனைக்குச் சில வரலாற்று நிகழ்வுகளும் கதாபாத்திரங்களும் தூண்டுகோல்களாயிருந்துள்ளன. மற்றபடி கல்கி எழுதிய சோழர் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனே இட்டுக்கட்டப்பட்ட புனைவு என்பதை மனத்தில் இருத்திக்கொண்டுதான் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1950 அக்டோபர் 29 இதழில் தொடங்கிய பொன்னியின் செல்வன் 1954 மே 16 இதழில் நிறைவுபெற்றது. நாவலை எழுதி முடித்த பின்னர் 1954 மே 30 இதழில் கல்கி ஒரு முடிவுரையையும் எழுதியுள்ளார். அதில், நாவலில் விடை காணப்படாத கேள்விகளுக்கு கல்கி விடை கூறியுள்ளார். ஆக, தன்னளவில் இன்னும் சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் கொண்ட நாவலாகவே அது இருந்தபோதும், இதற்கு மேலும் நாவலை வளர்த்துச் சென்றால் ஒருவேளை வாசகருக்கு அலுப்புத் தட்டிவிடலாம் என்பதாலேயே நாவலை கல்கி முடித்திருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.
மேலும் படிக்க:
ஜெயமோகனுக்குச் சிறப்புச் சேர்க்குமா பொன்னியின் செல்வன்?
நடிக்கிறார்களா தமிழ் எழுத்தாளர்கள்?
நாவலாக முடிந்துவிட்டாலும் அடுத்தடுத்த வடிவமாக மாறத் தன்னளவில் சாத்தியத்தைக் கொண்ட நாவல் இது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
அந்தச் சாத்தியத்தின் விளைவாக, பொன்னியின் செல்வன் நாடகமாக சென்னை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளது. இந்த நாடகத்தில் ஆர்.எஸ்.மனோகர், எம்.என்.ராஜம், வி.எஸ்.ராகவன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நாடக வடிவம் கொடுத்தவர் செ.ஆ.கிருஷ்ணமூர்த்தி. தொலைக்காட்சி நாடகமாக ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எதுவும் கைகூடிவரவில்லை. எம்.ஜி.ஆருக்காக இயக்குநர் மகேந்திரன் இதைத் திரைக்கதையாக்கியிருக்கிறார்; ஆனாலும் திரைக்கதை திரைக்கு வர முடியவில்லை.
ஆனால், அவர்களுக்கெல்லாம் எட்டாத பொன்னியின் செல்வனை எட்டிப் பிடித்திருக்கிறார் மணிரத்னம். ஒருவகையில் அதுதான் அவரது சிறப்பு.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக தருவதற்கு உண்மையிலேயே மணிரத்னம் தகுதியான இயக்குநர்தானா என்பதே அது. அதனுடன் ஒட்டி பொன்னியின்
செல்வன் நாவலைப் படமாக்க என்ன தகுதி வேண்டும் என்னும் கேள்வியும் மனத்தில் எழும். இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் காண முற்பட்டால் பொன்னியின் செல்வன் உருவாக்கும் மாயையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுபட முடியும்.
மணிரத்னத்தைப் பொறுத்தவரை சமகாலத்தில் தன் தகுதிக்கு மீறிப் புகழப்பட்டுவிட்ட இயக்குநர்களில் ஒருவர் அவர். பொழுதுபோக்குப் படங்களை உயர் தொழில்நுட்பத்தில் தரக்கூடிய இயக்குநர் அவர் என்பதில் உண்மை உண்டு. அதே வேளையில் எடுத்துக்கொண்ட கதையைப்பன்முகத் தன்மையுடன் பரிசீலித்து, ஆழமாகவும் விரிவாகவும் அதற்குத் திரைக்கதை அமைத்துப் படமாக்கும் ஆற்றல்கொண்டவர் அவர் அல்ல என்பதையும் மறுத்துவிட முடியாது.
அதற்குத் தேவையான சமூகப்புரிதல்கொண்டவராக அவர் அமையாததது அவரது தவறல்ல. ஆனால் அதை நம்மால் அடையாளம் காண முடியவில்லை எனில் அது நமது தவறு.
இதற்குச் சான்று தேடி எங்கும் அலைய வேண்டாம். அவர் எத்தகைய இயக்குநர் என்பதை எடுத்துச்சொல்ல அவர் உருவாக்கிவைத்துள்ள படங்கள் மட்டுமே போதும். உண்மைச் சம்பவங்களை அடியொற்றி அவர் உருவாக்கிய படங்களை ஒருமுறை மனத்தில் ஓட்டிப் பாருங்கள். அதன் பின்னர் உவப்பு வெறுப்பின்றி அவரது பட உருவாக்கம் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள்.
இதுவரை அவர் உருவாக்கிய படங்களில் பம்பாய், உயிரே, இருவர்,கன்னத்தில் முத்தமிட்டால், ஆகிய படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் இருவர் படத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்க வரலாற்றைச் சொல்லும் படம் என்று கூறப்பட்டாலும் அதில் அதிகமாகத் தனிமனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளே அலசப்பட்டன. ஏன் மணி ரத்னத்தால் திராவிட இயக்க வரலாற்றை அதிகமாகத் திரையில் காட்ட முடியவில்லை?
திராவிட இயக்க வரலாற்றின் சாதனை பற்றிப் படமெடுக்க வேண்டும் என்றால் அதற்கு வரலாற்றை அதிகமாகத் தெரிந்திருக்க வேண்டும். அந்த இயக்கம் பற்றிய ஆழமான புரிதல் வேண்டும். இவற்றையெல்லாம் விட அந்த இயக்கத்தின் தாக்கம் பற்றிய உண்மைகளை அப்படியே திரையில் காட்ட திட மனம் வேண்டும். இவையெல்லாம் சற்றுக் கடினமான வேலை.
இதைத் தமிழர் வரலாறு என்று பிதற்றுவது பேதமை. தமிழர் வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஒருபோதும் இப்படியான நாவலோ திரைப்படமோ உதவாது
அப்படியென்றால் எது எளிதான வேலை? திராவிட இயக்க மனிதர்கள் இருவரது வாழ்க்கைச் சம்பவங்களின் முக்கியமான தருணங்களை எடுத்துக்கொண்டு அதன் வழியே ஐம்பதாண்டு வரலாற்றைச் சொல்கிறேன் என்று பேர் பண்ணிக்கொண்டு எளிதாக ரசிகர்களை மயக்கும் ஒரு சினிமாவை உருவாக்கிவிட முடியும்.
அப்படியொரு முயற்சியே அவர் கைவண்ணத்தில் உருவான கறுப்பு வெள்ளைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்ற இருவர். இருவர் மட்டுமன்று அவர் உருவாக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படமும் ஒரு நுனிப்புல் படம்தானே?
பொதுவாகவே, ஒருவிதமான மெலோடிராமா வகைக் கதைகளையே, காதல், நட்பு, அம்மா பாசம் போன்ற வழக்கமான செண்டிமெண்ட்கள் நிறைந்த கதைகளையே அவர் படமாக்க எடுத்துக்கொள்கிறார். அவற்றை செண்டிமெண்ட்கள் அற்ற அறிவுஜீவித் தனப் பாவனையில் மணிரத்னம் உருவாக்கிவருகிறார். அவருக்குக் கைவந்த கலை என்பது அசட்டுக் காதல் மட்டுமே. அதுவும் விடலைப் பருவத்தினரை மட்டுமே ஈர்க்கும் காட்சிகளைத் தான் அவரால் அமைக்க முடிகிறது.
சமூகம் பற்றி, வாழ்க்கை பற்றிச் ஆண் பெண் உறவு பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கிய மனிதர்கள் மணிரத்னம் உருவாக்கும் தக்கையான, தட்டையான திரைப்படங்களிலிருந்து விலகி வந்துவிடுவார்கள். பருவ வயதின் மயக்கத்தில் மாத்திரமே மணிரத்னம் மிகப் பிரமாதமான இயக்குநர் என்று மயங்கிக் கிடக்க முடியும். மயக்கம் தெளிந்துவிட்டால் மணிரத்னம் ஓர் இயக்குநர் அவ்வளவுதான் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும்.
இப்படியோர் இயக்குநர் பொன்னியின் செல்வன் போன்ற நாவலைப் படமாக்குவது எளிது. ஏனெனில், அடிப்படையிலேயே பொன்னியின் செல்வன் நாவல் தியாகம், வீரம், காதல் போன்ற தனிமனிதர்களை மயக்கத்தில் தள்ளும் சாத்தியம் கொண்ட சம்பவங்களால் புனையப்பட்டது.
ஆகவேதான் தமிழ்நாட்டில் இந்த நாவல் பெருவாரியான வாசகப் பரப்பைச் சென்றடைந்தது. மேலும், அநேகரால் புகழப்பட்ட போதும், இது தமிழர் வரலாற்றை உள்ளது உள்ளபடியே கூறும் நாவலன்று. அப்படியான நாவலின் முதன்மைத் தருணங்களை ஒன்றிணைத்துத் திரைக்கதை அமைத்து பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாக்கியுள்ளார்கள். அவ்வளவுதான்.
இதைத் தமிழர் வரலாறு என்று பிதற்றுவது பேதமை. தமிழர் வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஒருபோதும் இப்படியான நாவலோ திரைப்படமோ உதவாது. இப்படியான திரைப்படம் வழியாக வரலாற்றைத் தெரிந்துகொள்ள முயல்வது, தாகத்துக்குக் கானல்நீரை அள்ளி அள்ளிக் குடிப்பது போல் ஆகிவிடும்.
Read in : English