Read in : English
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை, அதாவது நவீன ஸ்மெல்டர் அண்ட் ரிபைனிங் காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆக்சிஸ் கேபிடல் நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா நிறுவனம் இந்த ஆலையை விற்பனை செய்ய உள்ளது என்றும் ஆர்வமுள்ள பொருளாதாரத் திறன் கொண்ட தரப்பினர் தங்களைப் பற்றிய தொழில் விவரங்களுடன் ஜூலை 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டுள்ள ஊடக விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள சூழ்நிலையில், இந்த விற்பனை அறிவிப்பு வெளிவந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த போராட்டத் தலைவர் மகேஷ்
2018ஆம் ஆண்டிலிருந்து இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இந்த நிறுவனத்தில் உள்ளஆக்ஸிஜன் ஜெனரேஷன் யூனிட்டிலிருந்து மூன்று மாத காலம் ஆக்ஸிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும் ஆலையை மூட வேண்டும் என்று கோரியும் அப்பகுதி மக்கள் 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடத்திய ஊர்வலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தகக்கது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள சூழ்நிலையில், இந்த விற்பனை அறிவிப்பு வெளிவந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திடீரென்று ஆலையின் 9 பிரிவுகளும் வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வளாகமும் விற்பனை செய்யப்படுவதாக வேதாந்தா நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
“தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தாவின் ஒரு தொழிற்சாலையான ஸ்டெர்லைட் காப்பர், உலகத் தரம் வாய்ந்த மற்றும் கழிவு வெளியேற்றாத தொழிற்சாலையாகும். இது உலகின் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட (ஐஎஸ்ஏ) மற்றும் 4,00,000 எம்டிபிஏ திறன் கொண்ட ஒருங்கிணைந்த காப்பர் ஸ்மெல்டர் மற்றும் ரிபைனரி நிறுவப்பட்டுள்ளது. மற்றொரு 4,00,000 எம்பிடிஏ திறன் கொண்ட ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் ரிபைனரி, காப்பர் ராட் பிளாண்ட், 160 எம்டபில்யு கேப்டிவ் பவர் பிளாண்ட், சல்பரிக் ஆசிட் பிளாண்ட் (கெம்டிஸ்), பாஸ்பரிக் ஆசிட் பிளாண்ட் மற்றும் சிறந்த குடியிருப்பு ஆகியவை உள்ளன. உலக நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தொழிற்சாலை மற்றும் சுற்றுச்சூழலுக்கான உயர் தரத்தைக் கொண்டுள்ளது”. என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த அந்த நாளில் யார் இருந்தார்கள்?
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? போராடுவார்களா?
இந்த விளம்பரம் ஆச்சரியத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள். 2018 ஆண்டில் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த கிராமமாகிய குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த போராட்டக் குழுத் தலைவரான மகேஷ், “அதிக விற்பனையாகும் நாளிதழில் இந்த விளம்பரம் கொடுப்பது, மிகப் பெரிய தொழிற்சாலையை விற்பதற்கு உதவுமா என்று தெரியவில்லை. இந்தத் தொழிற்சாலை விற்பனை குறித்த தகவலை மக்களுக்குச் சொல்லுவதற்காகத்தான் இந்த விளம்பரம் வெளியிட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என்கிறார்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவரும் வழக்கறிஞருமான ஹரிராகவன்.
“கார்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டம் மூலம் பல்வேறு பணிகளுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பிரதிநிதிகள் பணத்தைச் செலவு செய்கிறார்கள். ஆலையைத் திறப்பதற்காக உள்ளூர் மக்களிடம் அண்மையில் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் தற்போது ஆலையை விற்பதாகச் சொல்கிறார்கள். இது நேர்மையான செயலாகப்படவில்லை. இதற்குப் பின்னால், நமக்குத் தெரியாத ஏதோ இருக்கிறது” என்கிறார் அவர். விற்பனை செய்வதற்கு விளம்பரம் கொடுக்க வேண்டிய விதிமுறைக்காக இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை.
வேறு ஒரு பெயரில் இந்த ஆலையைத் திரும்ப தொடங்குவதற்கான முயற்சியாகவே இந்த விளம்பரம் தெரிகிறது.
“இந்த விளம்பரத்திற்குப் பின்னால் அரசின் பங்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை” என்கிறார் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான பாத்திமா பாபு.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான பாத்திமா பாபு.
வேறு ஒரு பெயரில் இந்த ஆலையைத் திரும்ப தொடங்குவதற்கான முயற்சியாகவே இந்த விளம்பரம் தெரிகிறது. இந்த ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கூறப்படும் புகார்கள் ஒருபுறம் இருந்தாலும்கூட, உள்ளூர் தொழில்களுக்கும் இடம் அளிக்கவில்லை. உள்ளூர் ஆட்களுக்கும் வேலை அளிக்கவில்லை என்பதும் குறையாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், 5ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் 25 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் இந்த ஆலை தருவதாக அந்த ஆலை விற்பனை விளம்பரத்தில் கூறப்படுகிறது. இந்தியாவுக்கான தாமிர (காப்பர்) தேவையில் உத்தேசமாக 40 சதவீதம் இந்த ஆலையில் உற்பத்தி செய்யபடுவதாகவும் அந்த விளம்பரம் கூறுகிறது.
“ஸ்டெர்லைட் என்பதற்காக அல்ல, காப்பர் ஸ்மெல்டர் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்பதற்காகத்தான் இந்த ஆலை செயல்படுவதை எதிர்க்கிறோம். சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்காத காலாவதியான இயந்திரங்களை வைத்துக்கொண்டு இந்த ஆலையை, வேறு ஒரு பெயரில் மீண்டும் எப்படி செயல்பட அனுமதிக்க முடியும்” என்று கேள்வி எழுப்புகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவரும் வழக்கறிஞருமான ஹரிராகவன்.
Read in : English