Read in : English
தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் எனப் புகழ்பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா திருமணம். திருமணம் மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் ஜூன் 9 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றிருக்கிறது. நயன்தாரா, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரது காதல், திருமணம் வரை வந்திருக்கிறது.
நடிகர்கள் ஷாரூக் கான், ரஜினிகாந்த், அஜித், சூர்யா, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். திருமணம் காலையில் நடைபெற்றபோதும், திருமணப் புகைப்படங்கள் மதியமே ஊடகங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால், ஊடகங்கள் தொடர்ந்து திருமணத் தகவல்களைத் தருவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தன. திருமணத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் செல்போனில் படமெடுக்க அனுமதியில்லை போன்ற பல கட்டுப்பாடுகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வோருக்கு விதிக்கப்பட்டிருந்தன.
கட்டுப்பெட்டித்தனமாகத் திருமணம் நடந்துவந்த இந்தத் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஒன்றாக நடந்திருக்கிறது நயன்தாராவின் திருமணம். இந்தத் திருமணம் குறித்த தகவல் வெளிவந்த நாள் முதலே அது தொடர்பான விஷயங்கள் அனைத்துமே பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பரவின. நயன்தாராவின் திருமணம் நடைபெற்ற விதம் சிலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது; பலர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
ஊடகங்களில் அவரது திருமணம் இந்த அளவுக்கு விரிவாக அலசப்படுகிறது. திருமண நிகழ்வே ஓடிடி தளம் ஒன்றுக்கு கோடிக்கணக்கான தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது
தமது திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டியவர்கள் அந்தத் தம்பதியே. திருமணத்துக்கு யாரை எல்லாம் அழைக்க வேண்டும், எங்கே திருமணம் நடைபெற வேண்டும் முதலான அம்சங்களை முடிவுசெய்ய வேண்டியவர்கள் அவர்களே. அவர்கள் அழைத்தால் போய் வாழ்த்தலாம் இல்லையெனில் வேறு வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாம். இந்த விஷயங்களில் எல்லாம் வேறு யாரோ ஊடகங்களோ தலையிட முடியாது.
அது தம்பதிகளின் தனிப்பட்ட உரிமைசார்ந்தது. ஆனால், நயன்தாரா விஷயத்தில் இந்த உரிமை தொடர்பான அம்சங்கள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அவரது திருமணம் சமூக ஊடகங்களில் பெரிய அளவிலான விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
ஏனெனில் நயன்தாரா திருமண விஷயத்தின் சில அம்சங்கள் அதை வழக்கத்துக்கு மாறான திருமணமாக மாற்றியிருக்கிறது. அதனால்தான் ஊடகங்களில் அவரது திருமணம் இந்த அளவுக்கு விரிவாக அலசப்படுகிறது. திருமண நிகழ்வே ஓடிடி தளம் ஒன்றுக்கு கோடிக்கணக்கான தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது.
அதைப் பிரபலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஒருவர் இயக்குகிறார் என்பதையெல்லாம் கண்டு தமிழ்ச் சமூகம் ஆச்சரியத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
தனது திருமண நிகழ்வை இப்படி வணிகமாக்கலாமா எனச் சிலர் கேட்கிறார்கள். கேள்வி கேட்போர் ஒரு விஷயத்தை எளிதாக மறந்துவிடுகிறார்கள். நல்ல வருமானம் தரும் என்றால் தங்கள் திருமண நிகழ்வை விற்றுவிடவே செய்வார்கள் என்பதைத் தான் மறந்துவிடுகிறார்கள். என்ன சிக்கல் என்றால் இதைப் போன்ற சாமானியர்கள் திருமண நிகழ்வை யாரும் பணம் கொடுத்துப் பார்க்கத் தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால், பிரபலமான நடிகை ஒருவரது திருமணத்தைப் பார்க்க அநேகர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் அவரது திருமணத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்காதவர்கள். எனவே, அந்த நிகழ்வை வீடியோவாகப் பார்க்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்து அதன் மூலம் பணம் பண்ணக் கிடைத்த வாய்ப்பை நயன்தாராவும் ஓடிடி தளமும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
உண்மையிலேயே சுயமரியாதை என்ற ஒன்று இருந்தால் இப்படியான நிகழ்ச்சி பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டிருக்கக் கூடாது. ஆனால், அப்படி நடைபெறவில்லை. ஏனெனில் ஊடகங்களின் நோக்கமும் வியாபாரம் தான். சரி சாமானியர்களுக்கு என்ன பிரச்சினை? பிரபலங்கள் மீதான சாமானியரின் பொறாமை அவர்களது மனதை எரியச்செய்கிறது, திருமணம் பற்றிய கேள்விகளை எரியச் செய்கிறது.
நயன்தாராவின் திருமணத்துக்கு ஊடகர்கள் அழைக்கப்படவில்லை. அழைக்கப்படாமலே பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிட்டன ஊடகங்கள் என்பது வேறு கதை. இப்படி ஊடகர்கள் அழைக்கப்படாமல்தான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் திருமணம் 1978இல் திருப்பதியில் நடைபெற்றது என்பதை இங்கே நினைவூட்ட வேண்டியதிருக்கிறது. சூப்பர் ஸ்டாருக்கு ஒரு நியதி, லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஒரு நியதியா இருக்க முடியும்? இருவருக்கும் ஒரே நியதிதானே? ரஜினியின் திருமணம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது, அழைக்காமல் நாங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்க, வந்தால் உதைப்பேன் அவன் சொன்னதாக அப்போது சர்ச்சை எழுந்ததாம்.
அந்த ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க விக்னேஷ் சிவன், நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறார். ஆக, தமிழகத்தில் ஊடகர்களை அழைக்காமல் திருமணத்தை நடத்திய முதல் திரைப் பிரபலம் நயன்தாரா அல்ல.
சரி, ஆடம்பரமான திருமணம் தமிழ்நாட்டில் இப்போதுதான் முதன் முறையாக நடைபெறுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை பல கோடி ரூபாய் செலவில் 1995 இல் நடத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. அவர் அடுத்த தேர்தலில் படு தோல்வியடையந்ததற்கான காரணங்களில் ஒன்றாக அந்தத் திருமணமே சொல்லப்பட்டது. அந்த அளவு ஆடம்பரமாக நயன்தாரா திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஆனாலும் நயன்தாராவின் திருமணம் பலத்தை விமர்சனத்தை எதிர்கொண்டுவருகிறது. இப்படியான ஆடம்பரத் திருமணங்கள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன என்ற புள்ளிவிவரங்களைத் தந்து சிலர் புளகாங்கிதம் அடைகிறார்கள். இந்தப் போக்கு ஆபத்தானது.
நயன்தாராவின் திருமணம் இந்த அளவு கவனத்தை ஈர்க்க என்னதான் காரணம்? அடிப்படையில் நயன்தாரா மீது தமிழக ரசிகர்களுக்கு இருக்கும் மோகம் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், நயன்தாரா சுதந்திரமான மனப்போக்கு கொண்ட நடிகையாகவே தன்னை முன்னிலைப்படுத்தியிருக்கிறார். காதல் விஷயங்களில் பல்வேறு அனுபவம் கொண்ட நடிகையாகவும் அவர் இருந்திருக்கிறார்.
அவை எவற்றையும் இருட்டில் மறைத்துக்கொள்ளாமல் வெளிச்சத்தின் முன்னே தூக்கிப் போட்டிருக்கிறார். இந்தத் தன்மை பொதுச் சமூகத்தை அசைத்துப் பார்க்கிறது. அதன் பழமைவாதத்துக்குச் சம்மட்டி அடி கொடுக்கிறது. அதைப் பொதுச் சமூகம் தாங்க இயலாமல் வெவ்வேறு வகையில் எதிர்வினை புரிகிறது.
நயன்தாராவின் திருமணம் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படும் தன்மையைப் பார்க்கும்போது உள்ளபடியே கவலையாக இருக்கிறது. தனிநபர் வாழ்க்கையில் சமூகம் தலையிடும் போக்கு உச்சகட்டத்தை எட்டிவிட்டதோ என்று அச்சமாக உள்ளது
மேலும், நயன்தாரா போன்ற பிரபலமான நடிகை ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்வதில் ரசிகர்களுக்குப் பேரார்வம் இருக்கிறது. அவர்கள் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பசியேறி இருக்கிறார்கள். அதனால் தான் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப கோடிக்கணக்கான பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர் நடிகைகளின் திருமண நிகழ்ச்சி ஏற்கெனவே விஜய் தொலைக்காட்சியில் தொடராகவே ஒளிபரப்பானது. ஆகவே, அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி பற்றி அறிந்தவர்களுக்கு நடிகை நயன்தாராவின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பின் உரிமத்தின் சந்தை மதிப்பு தெரிந்திருக்கும். சந்தை மதிப்பு மிக்க ஒரு பொருள் தன்னிடம் இருக்கிறது அதை விற்கிறார் நயன்தாரா. அவ்வளவுதான். இதற்குச் சமூகம் கொந்தளிக்க வேண்டிய அவசியமில்லை.
நயன்தாராவின் திருமணம் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படும் தன்மையைப் பார்க்கும்போது உள்ளபடியே கவலையாக இருக்கிறது. தனிநபர் வாழ்க்கையில் சமூகம் தலையிடும் போக்கு உச்சகட்டத்தை எட்டிவிட்டதோ என்று அச்சமாக உள்ளது. நடிகை நயன்தாராவின் பழைய காதல்களைப் பற்றியும் காதலர்களைப் பற்றியுமான செய்திகள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் புழக்கத்தில் விடப்பட்டன. இப்படியான செய்திகளைப் பரிமாறும் மனநிலை குறித்துதான் நாம் கவலைகொள்ள வேண்டியதிருக்கிறது.
பண்பட்ட மாநிலம் என்றும் பண்பாடு மிக்கவர்கள் என்றும் மார்தட்டும் ஒரு மாநிலத்தில் நடிகை ஒருவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பதால் அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்த செய்திகளை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்துபார்ப்பது ஆக்கபூர்வமான விஷயமா? தனது தனிப்பட்ட வாழ்வு பற்றிய எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் துணிச்சலாகச் செயல்படும் நயன்தாரா போன்ற பிரபலத்தை இப்படியான விமர்சனங்களால் முடக்கிப்போட்டுவிட முடியும் என அப்பாவித்தனமாக நம்புகிறதா பொதுச் சமூகம்?
Read in : English