Read in : English
எதிர்க்கட்சியாக ஒரு தசாப்தகாலத்தைக் கழித்துவிட்டு, திமுக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து ஓராண்டாகிவிட்டது. பெருமைமிகு ஓராண்டு ஆட்சி என்ற விளம்பரங்கள் பெரிய நாளேடுகளிலும், மின்னூடகங்களிலும் ஜொலிக்கின்றன. அந்த விளம்பரங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்கள் இவை: ‘உந்துசக்தி,’ ’நிலையான ஆட்சி’, ’உட்கட்டமைப்புக்கு ஊக்கம்,’ ’சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குப் புத்துயிர் கொடுத்தல்.’ ஆனால் உண்மையில் இந்த ஓராண்டு ஆட்சியில் சாதனைகள் இருந்ததா என்பதைச் சில தரவுகளைச் சோதித்தால் தெரியும்.
கடந்த வாரம், அஸ்ஸாமும் தனது அரசின் ஓராண்டு ஆட்சியைக் கொண்டாடியது. ஆனால் தமிழ்நாட்டின் சாதனைகள் அஸ்ஸாமின் சாதனைகளுக்கு இணையில்லை. அங்கே இருக்கும் மதிப்பீடுகளும், அளவுகோல்களும் நிஜத்தன்மை கொண்டவை; ஆனால் தமிழ்நாட்டில் உள்ளதோ சந்தேகத்துக்குரியது. உதாரணமாக, அஸ்ஸாமில் குற்றவிகிதம் ஒரு இலட்சத்திற்கு 57 சதவீதம் குறைந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 13.89 சதவீதம். இந்த இரண்டு விசயங்களிலாவது தமிழ்நாட்டின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியாது.
மின்தடைகள், போதைமருந்துக் கடத்தல் சம்பவங்களின் அதிகரிப்பு, அரசுத் துறைகளில் இலஞ்ச ஊழல் என்பவை இந்த ஆட்சியின் சில அம்சங்கள். திராவிட மாடலின் முக்கிய அம்சமே அதிகாரப்பகிர்வுதான். ரூ. 40 இலட்சம் மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்த அதிகாரம் கத்தரிக்கப்பட்டு மாநிலத் தலைநகருக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
கடந்த வாரம் அஸ்ஸாமும் தனது அரசின் ஓராண்டு ஆட்சியைக் கொண்டாடியது. ஆனால் தமிழ்நாட்டின் சாதனைகள் அஸ்ஸாமின் சாதனைகளுக்கு இணையில்லை. அங்கே இருக்கும் மதிப்பீடுகளும், அளவுகோல்களும் நிஜத்தன்மை கொண்டவை; ஆனால் தமிழ்நாட்டில் உள்ளதோ சந்தேகத்துக்குரியது
மேலும், 2022-ல் ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் ரூ.23,500 கோடி கடன் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே 2021-22 நிதியாண்டில் அது சுமார் ஒரு இலட்சம் கோடி கடனைப் பெற்றிருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்களிப்பட்ட இலவசங்களுக்கும், சலுகைகளுக்கும் அந்தக்கடன் பயன்பட்டது. ஆனால் ஊடகங்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
இரட்டை இலக்க அல்லது உயர்ந்த பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பதற்கு உச்ச முன்னுரிமை கொடுக்க வேண்டிய பொதுக்கொள்கைகளை தற்போதைய திமுக அரசு வடிவமைப்பது போலத் தெரியவில்லை. உயர்ந்த பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பது சமூகநலத் திட்டங்களை நடைமுறைப் படுத்த அரசிற்கு உதவும் என்பது இங்கே சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. உதாரணமாக, தேசத்தின் மொத்த ஏற்றுமதிகளில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 9 சதவீதம்தான்; ஆனால் கர்நாடகத்தின் பங்களிப்பு 19 சதவீதம்.
தடுமாறும் மின்துறையில், நட்டத்தில் சுருண்டுக் கிடக்கும் பொதுப்போக்குவரத்துத் துறையில், நட்டத்தில் தள்ளாடும் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் செய்ய வேண்டிய, பல தசாப்தங்களாக நிலுவையில் கிடக்கும் முக்கிய சீர்திருத்தங்களைப் பற்றித் திமுக வெறும் உதட்டளவிலே பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது சம்பந்தமாக அரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குத் தேவையான மூலதனத்தையும், போதுமான உட்கட்டமைப்பு வசதிகளையும் தந்து அவற்றிற்குப் புத்துயிர் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது; ஆனால் அது இன்னும் நிகழ்ந்தபாடில்லை.
மாநில அரசியல் பெரும்பாலும் சமூக நீதி என்ற பெயரில் சமூக நலன், இலவசங்கள், சாதி, மொழி, இத்யாதி என்று அவற்றில் மையம் கொண்டிருப்பதால், கடந்த ஓராண்டில் ஒரு புதிய தொடக்கநிலைத் தொழில்நிறுவனம் கூட உருவாகவே இல்லை. மேலே சொல்லப்பட்ட சாதி, மொழி என்று எதுவும் பொருளாதாரத்திற்கு நீண்டகாலப் பயனைத் தரக்கூடியதல்ல.
திராவிட மாடலின் முக்கிய அம்சமே அதிகாரப்பகிர்வுதான். ரூ. 40 இலட்சம் மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்த அதிகாரம் கத்தரிக்கப்பட்டு மாநிலத் தலைநகருக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது
கொள்கைச் சறுக்கல்கள் இந்த ஓராண்டில் நிகழ்ந்திருக்கின்றன. நீட்டுக்கு எதிரான மசோதா, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் நேரடி நியமனம், புதிய மாநிலக் கல்விக் கொள்கைக்கு குழுவொன்றை அமைத்தல், கெயில் போன்ற திட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிடுதல் ஆகியவை அந்தக் கொள்கைச் சறுக்கல்கள்.
தேசிய வேளாண்மைச் சந்தைத் திட்டத்தில் வர்த்தகர்களுக்கான மண்டிகளின் மின்பதிவில், தமிழ்நாடு படுமோசமாகச் செயல்பட்டிருக்கிறது. வெறும் 63 மண்டிகள் (2,912 வர்த்தகர்கள்) மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; மொத்த விவசாயிகளில் வெறும் 1 சதவீதத்தினரை, அதாவது, 2.15 இலட்சம் விவசாயிகளைக் கொண்ட 98 விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் மட்டுமே பதிவு செய்திருக்கின்றன. இந்த விசயத்தில் நன்றாகச் செயல்பட்ட மாநிலங்கள் குஜராத், மகாராஷ்ட்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியான ஆகியவை.
தமிழக அரசு கொண்டுவந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ என்னும் திட்டம் தேவையான ஒன்றுதான். அந்தப் புதுமையான முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் வேதனை என்னவென்றால் அந்தத் திட்டம் கடைக்கோடி பாமரன் வரைக்கும் சென்று சேரவில்லை என்பதுதான். எனினும் உற்பத்திக் காரணிகளின் பலங்கள் நிறைந்த ஒரு நீண்டகால மரபு தமிழ்நாட்டுக்கு உண்டு; அதன் அடிப்படையில் இந்த மாநிலம் தானாகவே நன்முறையில் செயல்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பெருமையில் அரசு பங்குக் கேட்க முடியாது.
பலபரிணாம வறுமைக் குறியீடு (மல்டிடைமன்ஷனல் பாவர்ட்டி இண்டெக்ஸ்) தனது சமீபத்திய அறிக்கையில் குறைவான வறுமைநிலை கொண்டிருக்கும் ஒருசில உச்ச மாநிலங்களில் ஒன்று என்ற இடத்தைத் தமிழ்நாடு பிடித்திருக்கிறது. ’சஸ்டெயினபிள் டிவலப்மெண்ட் கோல்ஸ்’ (எஸ்டிஜிஸ் மூன்றாவது எடிசன், ஜூன் 2021) என்ற மதிப்பீட்டு முறையில், தமிழ்நாடு இரண்டாவது ராங்கையும், உச்சத்தில் இருக்கும் மூன்று மாநிலங்களில் ஒன்று என்ற இடத்தையும் பிடித்திருக்கிறது (மற்ற இரண்டு மாநிலங்கள் கேரளாவும், இமாச்சலப் பிரதேசமும்).
மருத்துவம், பொதுச்சுகாதாரம் மற்றும் குடும்பநலன் ஆகியவற்றிற்கு நிதியாண்டு 2021-ல் மொத்த பட்ஜெட் செலவில், மற்ற மாநிலங்களை விட, மிக அதிகமான சதவீதத்தைத் தமிழ்நாடு (5.3 சதவீதம்) ஒதுக்கியிருக்கிறது. டில்லிதான் இதில் உச்சத்தில் இருக்கிறது (12 சதவீதம்).
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ், 2.47 கோடி மின்னட்டைகள் வழங்கி தமிழ்நாடுதான் உச்சத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தகுதியான குடும்பம் ஒவ்வொன்றும் ரூ. ஐந்து இலட்சம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு பெறுவதற்கு மொத்தம் 10.9 இலட்சம் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மாநிலத்தில்.
2016-ல் அடல் இனோவேஷன் மிஷன் அறிவிக்கப்பட்டபோது, புதிய ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான கல்விப்பிரிவில் அதிகமான விண்ணப்பங்கள் (230) தமிழ்நாட்டிலிருந்துதான் பெறப்பட்டன. நிறுவனங்கள்/தனிமனிதர்கள் பிரிவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் (129 விண்ணப்பங்கள்) நின்றது. இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் தொடங்கிய ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு அதிகமாக நிதியுதவி செய்யப்பட்ட உச்ச மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் (ரூ.25.58 கோடி) இருக்கிறது.
2022-ல் ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் ரூ.23,500 கோடி கடன் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே 2021-22 நிதியாண்டில் அது சுமார் ஒரு இலட்சம் கோடி கடனைப் பெற்றிருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்களிப்பட்ட இலவசங்களுக்கும், சலுகைகளுக்கும் அந்தக்கடன் பயன்பட்டது. ஆனால் ஊடகங்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
கடந்த ஓராண்டில் பல புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தொழில்மயப்படுத்துதலின் அடுத்த நிலையைக் கட்டமைக்க, உறுதியான சூழலை அமைத்துக்கொடுத்து அதன்மூலம் சாத்தியமான முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை.
மிகமிக முக்கியமானது இதுதான். ஒன்றிய அரசுடனும், அதன் அமைப்புகளுடனும், துறைகளுடனும் மாநில அரசு ஓர் இணக்கான உறவைக் கொள்வது நல்லது. அப்போதுதான் பொதுக்கொள்கை ஒருங்கிணைப்பில் ஒரு சமச்சீர்வு உண்டாகும்; நேரத்திற்கு நிதியுதவிகளைப் பயன்படுத்த முடியும். திட்டங்களைத் தெரிவு செய்து நடைமுறைப்படுத்த முடியும். இல்லாவிட்டால் முடிவில் தோற்றுப்போவது மாநிலமும், அதன் மக்களும்தான்.
சமூக நீதி, அதிகாரச் சக்தியைக் கொடுத்தல் என்றெல்லாம் வாய்ஜால வார்த்தைகளில் பேசிக்கொண்டு, அடிப்படை பொருட்களுக்குக் கூட அரசைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு மக்களைத் தமிழ்நாடு தள்ளியிருக்கிறது. சொந்தக் காலில் நின்று சம்பாதித்து ஜீவனம் நடத்தும் வல்லமையை மக்களுக்கு தமிழகம் தந்ததில்லை.
அதனால் திமுகவின் ஓராண்டு ஆட்சி சராசரிக்குக் கீழேதான் என்று மதிப்பிட வேண்டியிருக்கிறது.
ஊடகங்களில் முழங்கிய பொற்கால ஆட்சி என்பதெல்லாம் பொய்யுரைக்கும் புனைவு அன்றி நிஜமல்ல.
(ஆசிரியர் ஒரு பொருளாதார நிபுணர்; பொதுக்கொள்கை விற்பன்னர்)
Read in : English