Read in : English
திரை இயக்குநர் பா இரஞ்சித்தின் மதுரை கூடுகை சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கிறது. ‘தலித் மக்களின் விடிவெள்ளியே வா,’ என்று உணர்ச்சிவசப்படாத கட்சி சார்பற்ற தலித் ஆர்வலர்களே இல்லை எனலாம். திருமா கண்டுகொள்ளவில்லை. பா இரஞ்சித்தும் அவரைப் புறக்கணித்தார். தலித் என்று தன்னை அழைத்துக்கொள்ளவே மறுக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கும் அங்கே இடமில்லை. அடித்தட்டு தலித்துக்களான அருந்ததியரைப் பற்றி நிகழ்வுகளில் எவரும் மூச்சு விட்டதாகக்கூடத் தெரியவில்லை. இருக்கும் ஓரிரு கருத்தியலாளர்களயும் நீலம் அமைப்பினர் அழைக்கவில்லை போலும், இந்நிலையில் அனைத்து தலித் மக்களையும் ஒருங்கிணைக்கும் தலைமை உருவாவது சாத்தியமா என்ற கேள்வி நம் முன் மீண்டும் எழுகிறது.
சில ஆண்டுகள் முன் புதுவையில் சிறிய அரங்குக்கூட்டம். விளம்பரமெல்லாம் இல்லை. பேசியது பலராலும் அறியப்பட்ட தலித் உயர் அதிகாரி கிறித்துதாஸ் காந்தி. அவர் திறமையானவர் என்றாலும் அவருக்கு முக்கிய பதவிகள் ஏதும் தரப்பட்டதில்லை. அவர் வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசுபவர், அதனாலேயே அவரைப் பல அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காது.
அந்தக் கூட்டம் பற்றி இன்னொரு பிரபல தலித் ஆர்வலர் குறைபட்டுக்கொண்டார். இதெல்லாம் குறுங்குழு மனப்பான்மை, என்றார். ‘ஏன், உங்களை அழைக்காததாலா?’ என்று கலாய்த்தேன். ‘இல்லை அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள் யாரென்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அனைவருமே பள்ளரினத்தவர்,’ எனப் பதிலளித்தார். இது தற்செயலாகக் கூட நடந்திருக்கலாம். என்னிடம் புகார் கூறியவர் ஒரு ஆதி திராவிடர்/பறையர். எனவே இயல்பாகவே எழுந்திருக்கக்கூடிய எரிச்சலாயிருக்குமோ எனவும் நினைத்தேன்.
(கட்டுரை நெடுகிலும் பறையர் மற்றும் பள்ளர் எனும் சொல்லாடல்களே. ஆதி திராவிடர் மற்றும் தேவேந்திரர் என்று அவ்வச் சமூகத்தினர் தங்களை அழைத்துக்கொள்கின்றனர் என்றாலும், புரிதல் வேண்டி எளிமையாக இப்படியே அழைப்போம்.)
பின்னர் காந்தியிடம் ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பில் பேட்டி எடுக்கச் சென்றபோது, அவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை தீவிரமாக ஆதரித்துப் பேசினார். அவர் மிக தடாலடியாகப் பேசுகிறாரே, நடந்துகொள்கிறாரே என்று கேட்டபோது, காந்தி, அப்படிப் பேசுவது காலத்தின் கட்டாயம் என்றார். சொல்லிலும், செயலிலும் militancy அவசியமே என்றும் அந்த அதிகாரி வாதிட்டார். வேறு சில சந்தர்ப்பங்களில் கிறித்துதாஸ் காந்தி வெளிப்படையாகவே, நாம் அவர்கள் என பள்ளரினத்தோரையும் மற்றவர்களையும் பிரித்துப் பேசியதையும் என்னால் உணரமுடிந்தது. இப்போது, கிருஷ்ணசாமி பாஜகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட சூழலில் காந்தி என்ன சொல்கிறார் எனத் தெரியவில்லை. தொடர்பு விட்டுப்போய்விட்டது. என்னுடைய ஊகம் அதற்கும் அவர் ஒரு நியாயம் கற்பிக்கக்கூடும்.
காங்கிரசிலும் மற்ற கட்சிகளிலும் தேர்தல் நேரத்தில் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தலித் தலைவர்கள் மெல்ல மெல்ல 90 களில்தான் பொதுவெளிகளில் அங்கீகாரம் பெறத்தொடங்கினர் – குறிப்பாக கிருஷ்ணசாமியும் திருமாவளவனும்.
சிவகாமி ஐஏஎஸ் இன்னொரு ஒதுக்கப்பட்ட பள்ளரின அதிகாரி. அவரது பேட்டிகளிலும் உரைகளிலும் பொறி பறக்கும். நக்கீரன் வாரமிருமுறையேட்டில் அவர் தனது போராட்டங்களை விவரித்து எழுதிய கட்டுரைத் தொடர் தலித்துக்களின் அவல நிலையினை நமக்கு உணர்த்துவதாயிருந்தது. அவரும் இப்போது பாஜக அணியில்தான். பஞ்சமி நில மீட்பிற்காகப் போராடப்போவதாக அறிவித்திருந்தார். அது வெறும் அறிவிப்புடனேயே நின்றது. எனக்குத் தெரிந்து பள்ளரினத்திலிருந்து அண்மைக்காலத்தில் நாம் கேட்ட முக்கிய குரல்கள் இவைகள் தாம். இப்போது எல்லாம் தேய்ந்து மறைந்தேவிட்டது.
புதிய தமிழகம் 1998 தேர்தல்களில் ஏழெட்டு தொகுதிகளில் கணிசமான வாக்குக்கள் பெற்று திமுக-தமாக வேட்பாளர்கள் தோல்விக்குக் காரணமாயிருந்து, பலரது கவனத்தை ஈர்த்தபோதுதான் முதல்முதலாக பள்ளரின அடையாள அரசியல் மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றதெனலாம். அதற்கு முன்னும் சரி, கிருஷ்ணசாமியின் வீழ்ச்சிக்குப் பின்னரும் சரி, தலித்துக்களின தலைமை பறையரினத்தாரிடமே இருந்து வந்திருக்கிறது.
முக்கியக் காரணம் பறையர்கள் அல்லது ஆதி திராவிடர்களின் மக்கட் தொகை, ஏறத்தாழ 13 சதம் என்று கணிக்கப்படுகிறது. அவர்கள் தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு இடங்களிலும் வசிக்கின்றனர். பிரிட்டிஷாரின் சலுகைகளால் அதிகம் பயன்பெற்றவர்களும் அவர்களே. ஒப்பீட்டளவில் பள்ளர்கள் அளவு பறையர்கள் துணிச்சலற்றவர்கள், எதிர்த்துக் களத்தில் நிற்கமாட்டார்கள் என்றெல்லாம் பொதுக் கருத்துண்டு. ஆனாலும் கல்வியில் அவர்களே அதிகம் முன் நிற்கின்றனர். இயல்பாகவே தலைமை அவர்களுக்குச் செல்கிறது.
பள்ளர்கள் அதிகமாக தென் மற்றும் மத்திய மாவட்டங்களிலேயே காணப்படுகின்றனர். செறிவாக வாழ்கின்றனர், சற்று நிலபுலன்களும் உண்டு, தென் மாவட்டத் தொகுதிகள் பலவற்றில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். ஆயினும் அவர்களது எண்ணிக்கை ஐந்தல்லது ஆறு சதம் மட்டுமே.
அருந்ததியர்கள் மூன்றல்லது நான்கு சதம் தான். அதிலும் அவர்களில் கணிசமானோர் அல்லது அனைவருமே தெலுங்கினைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அவர்கள் ஈடுபடுத்தப்படும் தொழில்களாலும் அவர்கள் மொழியாலுமே ஒதுக்கப்படுகின்றனர்.
கிறித்துதாஸ் காந்தி ஓர் ஆய்வில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “தமிழ்நாட்டில் 76 இனங்கள் பட்டியல் இனத்தில் (SC) இருப்பினும் பறையர், பள்ளர், அருந்ததியர் என்ற மூன்று பேரினங்களின் தொகுப்பில் மட்டும் 95 சதவிகிதப் பட்டியல் இன மக்கள் வருகின்றனர். இம்மூன்று பட்டியல் இனங்களின் கிளையாக இருக்கும் 22 இனங்கள் தவிர மீதி 54 பட்டியல் இனங்களின் மக்கள் தொகை 5 சதவிகிதத்திற்குள் அடங்கிவிடுகிறது.
பறையர் தொகுதி (உட்பிரிவுகள்-8) = 63.53%
பள்ளர் தொகுதி (உட்பிரிவுகள்-7) = 17.07%
அருந்ததியர் தொகுதி (உட்பிரிவுகள்-7) = 14.89%
பிறர் (உட்பிரிவுகள்-54) = 4.51% “
எனக்களிக்கப்பட்ட தகவல்களும் காந்தியின் கணிப்பும் ஏறத்தாழ சரியாக இருக்கிறது என்றே கருதுகிறேன். அந்த அளவில் எண்ணிக்கையில் பெருந் திரளாயிருக்கும் பறையரினத்தாருக்கு கூடுதல் அரசியல் செல்வாக்கிருப்பதில் வியப்பில்லை. அதை எப்படி அவர்கள் பயன்படுத்துக்கின்றனர் என்பதுதான் கேள்வி. அப்பிரிவின் தலைவர்கள் அனைவருமே ஏறத்தாழ குறுங்குழு வாதத்திற்குப் பலியானவர்தாம்.
காங்கிரசிலும் மற்ற கட்சிகளிலும் தேர்தல் நேரத்தில் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தலித் தலைவர்கள் மெல்ல மெல்ல 90 களில்தான் பொதுவெளிகளில் அங்கீகாரம் பெறத்தொடங்கினர் – குறிப்பாக கிருஷ்ணசாமியும் திருமாவளவனும்.
கிறித்துதாஸ் காந்தி ஓர் ஆய்வில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “தமிழ்நாட்டில் 76 இனங்கள் பட்டியல் இனத்தில் (SC) இருப்பினும் பறையர், பள்ளர், அருந்ததியர் என்ற மூன்று பேரினங்களின் தொகுப்பில் மட்டும் 95 சதவிகிதப் பட்டியல் இன மக்கள் வருகின்றனர்.
1999 நாடாளுமன்றத் தேர்தல்களின் போது மூன்றாவது அணி அமைத்த கருப்பையா மூப்பனார் கிருஷ்ணசாமி மற்றும் திருமா வழியே பரவலாக வாக்குக்கள் பெறமுடியும் என்று நம்பினார். ஓரளவு அப்படியே நடக்கவும் செய்தது.
ஆனால் அந்த அணியில் கிருஷ்ணசாமியை இடம் பெறச் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அவரிடம் தூது போனவர்களில் நானும் ஒருவன், ஆனால் நக்கீரன் காமராஜ்தான் முக்கிய பங்காற்றினார்.
ஒருவழியாக அணியும் உருவானது. என் பங்கிற்கு நான் திருமாவிற்கும், கிருஷ்ணசாமிக்கும் நெருக்கமானதொரு உறவு ஏற்படுத்த முயன்றேன். திருமாவிற்கு போன் செய்யுங்கள் என்று மன்றாடி, பிறகு அவர் மனமிரங்கி போன் செய்தார். ஆனால் அப்போது கூட அவரது குரலில் ஆணவம் தளும்பியது. ஏதோ ஒரு கட்டத்தில் நானே அனைத்து தலித் பிரிவினருக்கும் தலைவன் எனவும் முழங்கினார் கிருஷ்ணசாமி. தனது சமூகத்தின் எண்ணிக்கை பலவீனம் அவருக்கு அப்போது விளங்கவே இல்லை.
விளங்கியபோது திருமா எங்கோ சென்றுவிட்டிருந்தார். இவர் விரும்பியிருந்தாலும் அவரை நெருங்கியிருக்கக்கூட முடியாது. அந்தப் பின்னணியில்தான் கிருஷ்ணசாமி மாயாவதியின் தமிழகப் பிரதிநிதியாக முயன்றார். அதுவும் ஒன்றும் பயன் தரவில்லை.
எந்தக் கொடியங்குளக் கொடுமையினை மையப்படுத்தி தலைவரானாரோ அப்பகுதி மக்களையே கைவிட்டார். அவர்கள் ஆத்திரமடைந்தனர். அங்கு வந்து கொண்டிருந்த வாக்குக்களையும் கிருஷ்ணசாமி இழந்தார்.
துருப்புச்சீட்டுக்களை ஒன்றன் பின் ஒன்றாக இழக்க, இறுதியில் பாஜக ஜோதியில் சங்கமமானார். அதுவும் அவருக்குக் கைகொடுக்குமா என்பது தெரியவில்லை. எப்படியும் பள்ளரினத்தவர் ஒரு முக்கிய புள்ளியை இழந்துவிட்டனர்.
திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளிப்படையாக பறையர் அரசியல் பேசுவதில்லை. ஆனால் அது பறையர் அமைப்பு, அதுதான் யதார்த்தம். கட்சியின் பல்வேறு நிலைகளில் அதிகாரம் செலுத்துவதும் அப்பிரிவினர்தாம்.
கிருஷ்ணசாமி போன்று சாதீய அடுக்கில் எங்கள் இடம் வேறு என அரற்றுவதில்லை. அருந்ததியர்க்கான உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதில்லை. பொதுவாகவே தொண்டர்களிடம் பழகுவதில் திருமா மிக இனிமையானவர். ஆனால் அத்துடன் நாம் மகிழக்கூடிய அம்சங்கள் முடிந்துவிடுகின்றன. மற்றபடி சராசரி அரசியல்வாதியாகத்தான் அவர் செயல்பட்டு வந்திருக்கிறார். அடையாளம் காணப்படும் முன் மிகக் கடுமையாக ஒடுக்கும் சாதியினரை விமர்சித்து வந்தவர், பின்னர் எல்லோரும் சம்மதமே தனக்கு வாக்களித்தால் சரி என்ற ரீதியில்தான் நடந்து கொள்கிறார்.
அவரது சமரசங்களுக்கு எல்லையே இல்லை. பட்டியலிட்டு மாளாது. தமிழ்த் தேசியமா, இடை நிலை/மேல் நிலை பிராமணரல்லாதாரா. ஏன் பிராமணர்கள் மட்டும் எதிரிகளா என்ன, எல்லோரையும் ‘அரவணைத்து’ச் செல்லத் தயார். தன் அரசியல், வளம் பெறும் வழிகள், அரசியல் அதிகாரம், ஆள், அம்பாரி, சேனை இவையெல்லாம் உறுதிப்படுத்தப் பட்டால் சரி.
199ல் தேர்தல் களத்தில் இறங்கியவர் அன்றிலிருந்து இன்றுவரை தலித் பிரச்சினைகளை மையப்படுத்தி எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்? இரட்டைக் குவளை மற்ற வகை தீண்டாமை, ஒடுக்கு முறை எதற்குமே அவர் முகங்கொடுத்ததில்லை. கூட்டணியினர் அதிகமாக தலித் அடையாளத்தை முன்னிறுத்தாதீர்கள் என்றால் அதற்கும் உட்படுகிறார்.
பறையர் பிரிவில் அவருக்கு சவால் விடும் அளவு எவரும் இன்னமும் உருவாகவில்லை. வாய்ப்பிருப்பதாகவும் தெரியவில்லை. சினிமா புகழை மூலதனமாக வைத்து இயக்குநர் இரஞ்சித் களமிறங்கியிருக்கிறார். நூலகம், இதழ், கருத்தரங்கு என சில தளங்களில் தீவிரமாகவும் செயல்படுகிறார். ஆனால் நேரடியாக எப்பிரச்சினைக்கும் முகங்கொடுப்பதில்லை. மேடை ஆர்ப்பட்டத்தோடு சரி. ஏன் ஏதோ ஒரு கோயில் நுழைவு, இரட்டைக் குவளை, சேரி ஊர் பிரிவு இவற்றை எதிர்த்து போராட முன்வரலாமே… மேலே குறிப்பிட்டிருப்பதைப் போன்று மறைமுகமாக தன்னை ஒரு பறையர் ஆர்வலராகக் காட்டிக் கொள்ளவே அவர் விரும்புகிறார்.
அருந்ததியர்தான் பாவம், அவர்கள் மத்தியிலிருந்து ஓரிருவரைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அறிவுஜீவிகள் எவரும் உருவாகவில்லை. வந்திருப்பவர்களும் ஏனைய பிரிவினரை விரோதித்துக்கொள்ளாமல் மிகக் கவனமாக இயங்குகின்றனர்.
படிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது, அமைப்பு ரீதியான ஆதரவுமிருக்கிறது, அவர்களோ தங்களுக்கு மறுக்கப்படும் தலித்துகளுக்கான சலுகைகள் கோரி மட்டுமே போராடி வருகின்றனர். இவர்களால் தலித் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவென தனி ஓர் அமைப்பைக் கூட உருவாக்க முடியவில்லை.
ஆதித் தமிழர் பேரவை அதியமான் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார்: இந்த தலித் தலைவர்கள்… அருந்ததி இன மக்களின் பிரதிநிதிகளை மதிப்பதே இல்லை. தங்களது போன் எண் கூட எங்களுக்கு கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்கள். அப்படி எங்களுக்கு கிடைத்தாலும் அவர்களிடம் பேச முடியாது என்பதே வருத்தமான உண்மை.
சி.பி.எம். கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. கட்சியின் நல்லகண்ணு ஆகியோர் மிக உயர்ந்த தலைவர்கள். அவர்களுடன் நாங்கள் நிமிட நேரத்தில் போனில் தொடர்புகொண்டு பேச முடிகிறது. ஆனால் பள்ளர், பறையர் இன தலைவர்களாகச் சொல்லிக்கொள்பவர்களை நாங்கள் அணுக முடிவதில்லை. அப்படி அணுக அவர்கள் அனுமதித்தால்தானே எங்களது தரப்பை.. நியாயத்தை அவர்களிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?
படிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது, அமைப்பு ரீதியான ஆதரவுமிருக்கிறது, அவர்களோ தங்களுக்கு மறுக்கப்படும் தலித்துகளுக்கான சலுகைகள் கோரி மட்டுமே போராடி வருகின்றனர். இவர்களால் தலித் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவென தனி ஓர் அமைப்பைக் கூட உருவாக்க முடியவில்லை. இருப்பதெல்லாம் வெறும் ஏட்டளவில்தான்.
சரி என்னதான் செய்யலாம்? ஒன்றும் நடக்கப்போவதில்லை என்ற விரக்தியே மிஞ்சுகிறது. விடுதலை பெற்று 75 ஆண்டுகள், தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில், ஆனாலும் சேரி, ஊர் என்ற பாகுபாடுகூட ஒழியவில்லை. அதை ஒரு கோரிக்கையாக எவரும் முன்வைப்பதில்லை. ஊர் என்பது சாதி இந்துக்களுக்கே என்ற கொடுமை இன்றும். பொருளியல் காரணங்கள் அமைப்புக்களை, தலைவர்களை உருவாக்குவதாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவ்வாறு உருவாகும் அமைப்புக்களோ தலைவர்களோ நேர்மையானவர்களாக, அர்ப்பணிப்பு மிக்கவர்களாக இருந்தாலேயொழிய பாரதூர மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை.
Read in : English