Read in : English

ஒவ்வொரு நாளும் சென்னையிலிருக்கும் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவிற்கு, தாங்கள் பிரியமாய் வளர்க்கும் நாய்களையோ அல்லது பூனைகளையோ நன்கொடையாகத் தருவதாக நிறைய பேர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. தெருவில் அனாதையாக கைவிடப்பட்ட மற்றும் முடமான விலங்குகளைக் காப்பது ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின் பணி. விலங்குகளை நன்கொடையாகத் தரத்தயாராய் இருப்பவர்களின் வேண்டுகோளை அந்த அமைப்பு நிராகரித்தவுடன் அவர்களுக்குக் கோபம் வந்துவிடுகிறது. அதனால் வேளச்சேரியில் இருக்கும் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தின் வாசலில் தங்களின் பிரியத்துக்குரிய விலங்குகளை நள்ளிரவில் கட்டிப்போட்டுவிட்டு அவர்கள் மாயமாய் மறைந்துவிடுகிறார்கள். சிலர் பிரதான சாலைகளில் விலங்குகளை அம்போவென திரியவிட்டு ஓடிவிடுகிறார்கள். ப்ளூ கிராஸ் ஆர்வலர்கள் இந்தக் குற்றவாளிகளைப் பிடிக்கப் பல்வேறு விதமான முறைகளைக் கையாண்டும் பிரயோஜனம் இல்லை என்கிறார்கள்.

“எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. தெருவில் கைவிடப்பட்டு அனாதையாய்த் திரியும் விலங்குகளை மட்டுமே நாங்கள் எடுத்துவந்து கவனிக்கிறோம். எங்கள் தன்னார்வலர்கள் எப்போதுமே பிஸிதான். ஒவ்வொரு நாளும் நான்கு அல்லது ஐந்து கேஸ்கள் வருகின்றன. சில நாளில் அது 10 அல்லது 12 வரையிலும் போகும். நாங்கள் இதை அவர்களிடம் சொன்னால், அவர்களுக்குக் கோபம் வருகிறது. அதனால் சிலர் தங்கள் ‘பெட்’டுகளை எங்கள் ஆஃபிஸ் வாசலில் கட்டிப்போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். இது இரவில்தான் நடக்கிறது. ஏன் அப்படியொரு மோசமான தந்திரத்தை அவர்கள் கையாள்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. தெருவில் நாயை அல்லது பூனையைத் திரியவிடுவதை நியாயப்படுத்தவே முடியாது,” என்கிறார் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின் காப்பாளரும், பொதுமேலாளருமான டான் வில்லியம்ஸ்.

விலங்கு என்பது ஒரு பொருள் அல்ல. அதற்கும் உணர்ச்சிகள் உண்டு. கைவிடப்படும்போது அதுவும் சோகமாக இருக்கும்  

இதனால் நொந்துபோன வில்லியம்ஸ் ஒருவாரத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வாசலில் கட்டிப்போட்ட நாய்களின் படங்களைப் பதிவேற்றம் செய்துவிட்டு உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை பதிவுசெய்தார். “உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம், குடும்ப அழுத்தம், வீட்டுக்காரரின் அல்லது அபார்ட்மெண்ட்டின் எதிர்ப்பு, பணிமாறுதல் என்று. உங்கள் பிரியத்துக்குரிய விலங்கை தெருவில் அல்லது ஷெல்டரில் விட்டுவிடுவதை விட நண்பர்களிடம் அல்லது உறவினரிடம் அல்லது அண்டைவீட்டுக்காரரிடம் அதை ஒப்படைத்து விடலாம். ஒரு நல்ல ஜாதி நாயின் அல்லது ஒரு பூனையின் ஆயுட்காலம் எட்டு அல்லது 12 ஆண்டுகள் இருக்கலாம். அதை உங்களால் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் கணநேரத்து ஆனந்தத்திற்காக அதை வாங்காதீர்கள் அல்லது தத்தெடுத்துக் கொள்ளாதீர்கள். விலங்கு என்பது ஒரு பொருள் அல்ல. அதற்கும் உணர்ச்சிகள் உண்டு. கைவிடப்படும்போது அதுவும் சோகமாக இருக்கும்,” என்று சொல்கிறது அவரது சமூக வலைத்தளப் பதிவு.

கைவிடப்பட்ட நாய்களாலும் பூனைகளாலும் வெளியே ஜீவித்திருக்க முடியாது. அவற்றிற்குச் சாலையுணர்வு இல்லை என்பதால், அடிக்கடி விபத்தில் மாட்டிக்கொள்கின்றன. ”எங்க ஏரியா உள்ளே வராதே” என்பது போல சில தெருநாய்கள் அவற்றைத் துரத்தி விடுகின்றன.

“சில உரிமையாளர்கள் மட்டமான ஒரு தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். எங்கள் ஆஃபிஸ்க்கு அருகில் நாய்களைக் கட்டிப்போட்டுவிட்டு பின்பு யாரோ விட்டுவிட்டதாக எங்களுக்கே ஃபோன் செய்கிறார்கள். போனில் பேசுவது யாரென்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்,” என்று சொல்கிறார் வில்லியம்ஸ். விலங்குகளைக் காப்பாற்றிக் காப்பதில் அவருக்கு பல ஆண்டுகள் அனுபவம் உண்டு.

ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா ஒரு தனியார் கருணை நிறுவனம். காயம்பட்ட மற்றும் தெருவில் உடல்நலமில்லாமல் சுற்றித் திரியும் நாய்கள், பூனைகள், கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றிற்காக மருத்துவமனையையும், மறுவாழ்வு நிலையத்தையும் அந்த நிறுவனம் நடத்துகிறது.

சில உரிமையாளர்கள் மட்டமான ஒரு தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். எங்கள் ஆஃபிஸ்க்கு அருகில் நாய்களைக் கட்டிப்போட்டுவிட்டு பின்பு யாரோ விட்டுவிட்டதாக எங்களுக்கே ஃபோன் செய்கிறார்கள்.

தங்கள் எஜமானர்களால் கைவிடப்பட்ட நாய்களுக்கு கடுமையான நடத்தைப் பிரச்சினை இருக்கிறது. “தங்கள் எஜமானர்கள் தங்களைக் கைவிட்டு விட்டார்கள் என்பது நாய்களுக்குத் தெரிவதில்லை. அவை எப்போதும் எஜமானர்களுக்கு விசுவாசமாகவே இருக்கும். கைவிட்டு விட்டதற்காக அவை எஜமானர்களைக் குற்றம் சொல்வதில்லை. நாங்கள் என்னதான நாய்களை நன்றாகப் பார்த்துக் கொண்டாலும் அவை எங்களை எஜமானர்களாகப் பார்ப்பதில்லை. ‘நான் அப்படியான விலங்கு. நான் உனக்குக் கீழ்ப்படிய மாட்டேன். நான் இங்கே இருக்க வேண்டியதில்லை’ என்பதைத் தங்கள் உடல்மொழியிலேயே நாய்கள் உணர்வை வெளிப்படுத்திவிடும். அதனாலே அவை ஓர் அழுத்தத்தோடு சிரமப்படும். சில நாய்கள் உணவைக்கூட தவிர்த்துவிடும். இது ஒரு கஷ்டமான சூழல்,” என்கிறார் வில்லியம்ஸ்.

கோவிட் பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்ந்தபின்பு இந்த மாதிரி நாய்களைக் கட்டிப்போட்டு ஓடிவிடும் நிகழ்வுகள் அதிகமாகி விட்டன. ”பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் நிறைந்த வருடங்கள் கடந்து போனவுடன் மக்கள் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதனால் ’பெட்’டுகளைப் பேணிக் காப்பது அவர்களுக்குச் சிரமமாகி விட்டது. இதனால் எங்கள் அலுவல வாசலில் நாய்களைக் கட்டிப்போட்டு ஓடும் கேஸ்கள் நிறைய வருகின்றன. இதை எப்படிக் கையாள்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாய்களின் உரிமையாளர்கள் இதைப் புரிந்து கொண்டு இந்தக் கெட்ட பழக்கத்தை விட்டுவிடுவார்கள் என்று நம்புகிறேன்,” என்று முடித்தார் வில்லியம்ஸ்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival