Read in : English
உலகத்தில் நிலவும் செமிகண்டக்டர்களின் (குறைக்கடத்திகள்) பற்றாக்குறை உலக மோட்டார்வாகனத் தொழிலையே பாதிக்கும் (இந்திய தொழிலை கேட்பானேன்) என்று ஒரு வருடத்திற்கு முன்புகூட நம்மால் சொல்லியிருந்திருக்க முடியாது. அந்தச் சிப் பற்றாக்குறை இன்றுவரை தொடர்கிறது; இது மேலும் சிலகாலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சோதனையின் முன்நிகழ்வு இதோ!
பல்வேறு நாடுகளில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு சிப் தயாரிப்பாளர்களை முடக்கியது. இந்தக் காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் நடைமுறைக்கு வந்தது. அதனால் மைக்ரோசிப் வளம் கொண்ட மின்னணு சாதனங்களின் விற்பனை சக்கைப்போடு போட்டது. மடிக்கணினிகள், விளையாட்டுக் கருவிகள், அதிதிறன் தொலைபேசிகள் (ஸ்மார்ட் ஃபோன்), அதிதிறன் தொலைக்காட்சிப் பெட்டிகள் (ஸ்மார்ட் டிவி) இவையே மக்கள் அதிகம் விரும்பிய பொருட்கள். மோட்டார் வாகனங்கள் பயன்பாடு தவிர்க்கப்பட்டது.
மோட்டார்வாகனத் தயாரிப்புத் தொழிலைப் பொறுத்தவரை, உலகம் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பு, செமிகண்டக்டர்களின் தேவை குறைந்ததும் மோட்டார்வாகனத் தொழிலுக்குச் சோதனை ஆரம்பமானது. ஆகமோசமானதொரு சூழலை எதிர்பார்த்த கார் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தினார்கள்.
இந்தச் சோதனையைச் சாமர்த்தியமாகச் சமாளிக்க முடியும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. கரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பது அப்போதைக்கு அவ்வளவு சாத்தியமான விசயமாக இல்லாவிட்டாலும், வைரஸையும், அதன் வகையறாக்களையும் கட்டுக்குள்ளே வைத்திருந்தது மனிதகுலம்.
தேவை மற்றும் வழங்கல் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளி மோட்டார்வாகன, மின்னணுக் கருவி சந்தையில் பின்னடைவை ஏற்படுத்தியது. செமிகண்டக்டர்களுக்கான தேவை எப்போதும் உயர்ந்துகொண்டே போவதால், தேவையைச் சரியானபடி பூர்த்தி செய்வது இன்னும் கூடச் சாத்தியமில்லை.
ரஷ்யா-உக்ரைய்ன் போரும் இந்த இடைவெளிக்குத் தன்பங்களிப்பைச் செய்தது. அருமையான சிப்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் கச்சாப்பொருட்களை வழங்குவது இந்த இரண்டு நாடுகளே. ரஷ்யா பல்லடியத்தையும், உக்ரைய்ன் நியான் வாயுவையும் வழங்குகின்றன.
இந்தியாவின் பிரச்சினைகள்
மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் எதிர்பாராத சிப் தட்டுப்பாட்டின் மோசமான விளைவுகளைச் சந்தித்தது. இந்தியாவில் கார் வாங்க ஆர்டர் கொடுத்து காத்திருக்க வேண்டிய கால அவகாசம் மிக அதிகமானது. ஆர்டர் செய்யப்பட்ட ஒரு வாகனத்தை டெலிவரி செய்ய ஒரு வருடம் ஆகும் என்று எந்த உற்பத்தியாளராலும் சொல்ல முடியவில்லை.
இந்தியாவின் ஆகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, கார் டெலிவரியில் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. மூன்று இலட்சம் கார்களுக்கான ஆர்டர்கள் குவிந்துகிடந்தன. நிறுவனத்தின் சரித்திரத்தில் இதுதான் ஆகமோசமான தட்டுப்பாடு.
இந்தியாவின் டெட்ராயிட்டில் உள்ள நிலைமை

photo credits:hyundai.com
சென்னையில் இயங்கும் கார் உற்பத்தியாளர்களான சிட்ரோயீன், ஹூண்டாய், ரெனால்ட் மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்களும் தங்களுக்கான பிரச்சினைகளில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. புக்கிங்ஸ் அதிகமாகிவிட்டன; அதைப்போல காத்திருப்புக் காலமும் அதிகமாகிவிட்டது.
செமிகண்டக்டர் தட்டுப்பாட்டாலும், பொருள்வழங்கல் தடையாலும், ஹூண்டாய் நிறுவனம் ரஷ்யாவில் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அறிவித்தது. இந்த முடிவுக்கும் ரஷ்யா-உக்ரைய்ன் போருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று நிறுவனம் சொன்னது.
இந்தச் செய்தியிலிருக்கும் ஒரு நல்ல விசயம் ரஷ்யாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த செமிகண்டக்டர்களில் பெரியதோர் பங்கு இந்தியாவுக்குக் கிடைக்கும் என்பதுதான். இதனால் சென்னையில் இயங்கும் ஹூண்டாய், ரெனால்ட் ஆலைகள் பயன்பெறப் போகின்றன. இதன்விளைவாக கார் டெலிவரிக்காகும் கால அவகாசத்தைக் குறைப்பதற்கான ஓர் ஊக்கம் கிடைக்கும் இந்த உற்பத்தியாளர்களுக்கு.
ஆடம்பரக் கார்கள் ஆடும் விளையாட்டு
மூன்று ஜெர்மனி ஆடம்பரக் கார் பிராண்டுகளில் ஒன்றான பிஎம்டபிள்யூ சென்னையில் நிறுவிய ஆலையில் கார்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலிருக்கும் அந்த நிறுவனத்தின் மேல்தட்டு வாடிக்கையாளர்கள் பிஎம்டபிள் தயாரிக்கும் விலையுயர்ந்த ஆடம்பரக் கார்களையே விரும்புகிறார்கள் என்று நிறுவனம் நடத்திய சமீபத்து ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த நிறுவனத்து அதிகாரி சொன்ன தகவல் இது: செமிகண்டக்டர் தட்டுபாட்டினால் மக்களின் கவனம் பழைய கார் சந்தைக்குத் திரும்பிவிட்டது. தமிழ்நாட்டில் பழைய கார் வைத்திருப்பது ஒரு கெளரவம்தான். கார் வாங்க முடியுமென்றால் பழமைப்புகழ் கொண்ட நல்ல காரையே வாங்குவதற்கு இங்கே சில தூய்மைவாதக் கூட்டங்கள் இருக்கின்றன.
ஹூண்டாய், பிஎம்டபிள், ரெனால்ட் ஆகிய நிறுவனங்களுக்குப் போதுமான ஆதரவு கிடைத்ததினால், தமிழ்நாட்டின் கார் உற்பத்தித் துறை இந்த நிறுவனங்களின் இணைப்பினால் மாநிலத்திற்குச் சாதகமாகவே மாறியிருக்கிறது.
ரஷ்யாவுக்கான செமிகண்டக்டர் ஒதுக்கீட்டின் ஒருபகுதி இந்தியாவுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதால் ஹூண்டாயும், ரெனால்ட்டும் பயனடையும் வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவாக கார் டெலிவரிக்காகக் காத்திருக்கும் கால அவகாசமும் நன்றாகவே குறையும்.
Read in : English