Read in : English
சங்ககாலத்திலிருந்தே தமிழ் மக்களின் கலாச்சார வாழ்வோடு நெருங்கிய உறவுகொண்டது அரிசி. நமது மண் சார்ந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் பல தமிழ்நாட்டில் இருந்தன. ஆனால் நாட்டில் 1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் ஒர் அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘உயர்விளைச்சல்’ நெல் ரகங்கள் வந்தபின்பு இந்த மண்ணின் பாரம்பரிய நெல் வகைகள் தாமாகவே மதிப்பிழந்தன. காணாமல்போன இந்த மண்ணின் பாரம்பரிய அரிசி ரகங்களை மீட்டெடுக்கப் பலர் முயன்றார்கள். ஆனால் 2004-இல் பசுமைப் போராளியும் இயற்கை விஞ்ஞானியுமான ஜி. நம்மாழ்வாருடன இணைந்து ‘நெல்’ ஜெயராமன் தொடங்கிய விதை சேகரிப்பு முனைப்புதான் நாளடைவில் சூடுபிடித்தது. 2018இ-ல் புற்றுநோயில் காலமாகும் வரை, ஜெயராமன் நமது மண்சார்ந்த 173 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தார். பாரம்பரிய நெல் ரகங்களைப் பிரபலப்படுத்துவதற்காக, திருவாரூரில் இருக்கும் தனது சொந்த கிராமமான ஆதிரங்கத்தில் அவர் ஆண்டுதோறும் நெல் திருவிழாவை 2006-லிருந்து நடத்திவந்தார். விவசாயிகளிடமிருந்தும், வேளாண் நிபுணர்களிடமிருந்தும் அந்தத் திருவிழாவுக்கு நல்லதோர் ஆதரவு இருந்தது. Ðபாரம்பரியமான உள்ளூர் நெல் விதைகளை விவசாயிகள் சோதனை முறையில் பயன்படுத்துவதற்கு திருவிழா உதவியது. Ðபாரம்பரிய நெல் விதைககளின் நன்மைகள் நன்றாகத் தெரிந்திருந்தபோதிலும், 90 சதவீத விவசாயிகள் உயர்விளைச்சல்தரும் நெல் வகைகளையே பயிரிட விரும்புகிறார்கள். ஏன்?
பாரம்பரிய நெல் இனங்களைப் பயிரிட விவசாயிகள் முன்வந்தாலும், அது அவர்களின் நடைமுறைக்கு உகந்ததாகத் தெரியவில்லை.
பாரம்பரிய நெல் இனங்களைப் பயிரிட விவசாயிகள் முன்வந்தாலும், அது அவர்களின் நடைமுறைக்கு உகந்ததாகத் தெரியவில்லை என்று காஞ்சிபுரத்தில் ஏழை விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை விநியோகம் செய்யும் கணபதி தமிழ்ச்செல்வன் சொல்கிறார். “பாரம்பரிய நெல் ரகங்களைச் சந்தைப்படுத்த சரியான வழிமுறை ஒன்றுமில்லை. அதனால் உயர் விளைச்சல் நெல் ரகங்களுக்கே அவர்கள் திரும்புகிறார்கள். இந்தத் தொழிலில் பெரிய உற்பத்தியாளர்களோடு ஒரு சிறிய விவசாயியால் போராட முடியாது. அதனால் எந்த விவசாயியும் ரிஸ்க் எடுப்பதில்லை,” என்கிறார் தமிழ்ச்செல்வன். காஞ்சிபுரத்தில் திருபுட்குழியில் கடந்த பத்து ஆண்டுகளாகத் தனது நான்கு ஏக்கர் நிலத்தில் உள்ளூர் ரக நெல் வகைகளை அவர் பயிரிட்டு வருகிறார். மைக்ரோபயலாஜியில் இளநிலைப் பட்டம் பெற்ற அவர் ‘காட்டுயானம்’, ‘மாப்பிள்ளை சம்பா’, ‘கிச்சிலி சம்பா’, ‘ரதசாலி’ உள்பட 100-க்கும் மேலான பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்துப் பார்த்துப் பரிசோதித்திருக்கிறார். “கடந்த ஆறு ஆண்டுகளாக ஏழை விவசாயிகளுக்கு உள்ளூர் நெல் ரகங்களை விநியோகித்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் பாரம்பரியமாக இருக்கும் உள்ளூர் விதைகளை விதைத்துப் பயிரிட பலர் விரும்பினர். ஆனால் காலப்போக்கில் உயர்விளைச்சல் ரக விதைகளுக்கு மாறிவிட்டனர். ஏனென்றால் உற்பத்தி செய்த உள்ளூர் ரக நெல் இனங்களை அவர்களால் சந்தைப்படுத்த முடியவில்லை,” என்று கூறுகிறார் அவர்.

ஜெயராமன்
பாரம்பரிய விதையை விதைக்கும் முன்பு நிலத்தின் தன்மையையும், வானிலையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ்ச்செல்வன். ”நமது பாரம்பரிய நெல் ரகங்கள் ஊட்டச்சத்து மிக்கவை. ஆனால் அவற்றில் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. கன்னியாகுமரியில் வளரும் விதை காஞ்சிபுரத்தில் வளராது. மண்ணின் தன்மை மிகவும் முக்கியம். அதனால் எங்கே என்ன விதை பொருந்தும் என்பதை ஒரு விவசாயி தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மண்சார்ந்த விவசாயம் நடப்பதில்லை. இந்தப் பிரச்சினைக்கு போதிய விவசாய அறிவு இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.
இதற்கு இன்னொரு காரணம் சிகப்பு அரிசியை விட, மலிவான விலையில் வெள்ளை அரிசி கிடைப்பதுதான் என்று சொல்கிறார் திருநெல்வேலி விவசாயி கே. ஜெயகுமார். “சிகப்பு அரிசியோடு ஒப்பிடும்போது மிகவும் குறைந்த விலையில் வெள்ளை அரிசியை விற்கும் பல பிராண்டுகள் இருக்கின்றன. பாரம்பரிய ரக அரிசி வகைகள் சற்று விலை அதிகம். ஆனால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நமக்குத் தெரியும். ஆனால் சாமான்ய மக்கள் எப்போதும் மலிவான விலைகளில் கிட்டும் பொருட்களைத்தானே விரும்புவார்கள்,” என்கிறார் அவர்.
பத்திரிகையாளராகப் பணியாற்றி பின்பு விவசாயி ஆன எம். ஜே. பிரபு, இதுவரை சந்தைப்படுத்தல் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, அதுகுறித்து யோசிக்கவோ எந்த அரசாலும் முடிந்ததில்லை என்கிறார். “உழவர்கள் தங்களுக்கான வாடிக்கையாளர் வட்டத்தை தங்கள் பகுதிகளிலே உருவாக்கிக் கொள்ள வேண்டும். போங்கள்; போய் மக்களைச் சந்தியுங்கள்; உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல இயற்கை விளைச்சல் பொருட்களை வாங்கவும், அவற்றை உற்பத்தி செய்பவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். அதனால் உங்கள் விவசாயிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்; உங்கள் வாடிக்கையாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இரண்டையும் சரியாக செய்தாலே சந்தைப்படுத்தல் பிரச்சினை தீர்ந்துவிடும்,” என்று சொல்கிறார் அவர்.
விவசாயிகளே பொறுப்பெடுத்துக்கொண்டு இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு தங்கள் நன்மைக்காக அதைத் தீர்க்கவேண்டிய காலகட்டம் இதுதான் என்று சொல்கிறார் பிரபு. “சந்தைப்படுத்தலுக்கு உதவுமாறு ஒரு பல்கலைக்கழக விஞ்ஞானியைக் கேட்பதில் அர்த்தமே இல்லை. அவர்கள் தொழில்நுட்பவாதிகள்தான்; ஆனால் அவர்களால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லமுடியாது. உங்கள் வீட்டருகே இருக்கும் ஒரு சின்ன டிபார்ட்மெண்டல் ஸ்டோரே இதற்கு எடுத்துக்காட்டு. தெருவுக்கு இரண்டு அல்லது மூன்று இருக்கும். அவை நஷ்டத்தால் மூடப்பட்டதை நீங்கள் என்றைக்காவது பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்கிறார் பிரபு.
சில அமைப்புகளின் உதவியுடன் 2019-ஆம் ஆண்டுவரை தான் ஒரு முன்மாதிரித் தொழில் மாதிரியை உருவாக்கியதாக கூறும் பிரபு, அதன்மூலம் 502 விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க முடிந்தது என்கிறார். “ஒரு பொருளை நல்ல விலைக்கு விற்கமுடியாவிட்டால் அதை உற்பத்தி செய்வதில் என்ன பிரயோஜனம்? அதுபோன்ற தொழில் மாதிரிகளை உருவாக்கி விளைபொருட்களை விற்க வேண்டும். உள்ளூர் நெல்விதைகளின் நற்பலன்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாணயத்தின் ஒருபக்கம்தான். மறுபக்கம் என்பது அவற்றில் விளையும் பொருட்களை விற்பதற்கு நாமே நல்ல தொழில் மாதிரிகளை உருவாக்குவதுதான்,” என்று சொல்கிறார் அவர்.
இந்த ஆண்டு நடைபெறும் நெல் திருவிழாவில் குறைந்தபட்சம் 174 வகை பாரம்பரிய நெல்விதைகள் காட்சிக்கு வைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் மே 21, 22 ஆகிய நாட்களில் இந்தத் திருவிழா நடைபெறும்.
விதைத் திருவிழாக்களுக்கு பெரிய கூட்டங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் விழாக்கள் பாரம்பரிய உள்ளூர் ரக அரிசி வகைகளை எப்படி விற்பது என்பது பற்றிய நடைமுறைத் தீர்வுகளை விவசாயிகளுக்குத் தருகின்றனவா? நெல் ஜெயராமனின் உறவினரான எஸ். ராஜீவ், ஜெயராமன் காலமான பின்பு, ஆண்டுதோறும் நெல்விதைத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு வரவிருக்கும் நெல் திருவிழா விவசாயிகளுக்குச் சந்தைப்படுத்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கும் என்கிறார் அவர்.
இந்த ஆண்டு நடைபெறும் நெல் திருவிழாவில் குறைந்தபட்சம் 174 வகை பாரம்பரிய நெல்விதைகள் காட்சிக்கு வைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் மே 21, 22 ஆகிய நாட்களில் இந்தத் திருவிழா நடைபெறும். “சந்தைப்படுத்தல் என்பது மிகப் பெரிய பிரச்சினை என்று எங்களுக்குத் தெரியும். விவசாயிகளுக்காக கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். அவர்களின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சாத்தியங்கள் அங்கே ஆராயப்படும். இந்தமாதிரியான கலந்துரையாடல் நிகழ்வு இதுதான் முதல்தடவை,” என்கிறார் தேசிய நெல் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரான ராஜீவ். இந்த நிகழ்வின் ஒருபகுதியாக 15 ஆயிரம் விவசாயிகளுக்கு ஒவ்வொருவருக்கும் இரண்டு கிலோ பாரம்பரிய நெல்விதை இலவசமாக விநியோகிக்கப்படும். மேலும் பாரம்பரிய வேளாண் கருவிகளும் விளைபொருட்களும் காட்சிக்கு வைக்கப்படும். மரபுவழி வேளாண்மையை முன்னெடுத்துச் செல்லும் முகமாக, நம்மாழ்வார் பெயரிலும், நெல் ஜெயராமன் பெயரிலும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்தத் தேசிய நெல் திருவிழாவை நடத்துவது ஆதிரங்கத்தில் இருக்கும் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்தான்.
15 ஆயிரம் விவசாயிகளுக்கு Ðபாரம்பரிய நெல்விதைகள் இலவசமாக விநியோகிக்கப்படுவது ஆண்டு நெல் திருவிழா வரலாற்றில் இதுதான் முதல் தடவை என்று சொல்கிறார் ராஜீவ். “நாங்கள் விதைகள் விநியோகம் மட்டும் செய்வதில்லை. தஞ்சாவூரில் இருக்கும் உணவுத் தொழில்நுட்பம் தொழில் முனைப்பு மற்றும் மேலாண்மை தேசிய நிறுவனத்திலிருந்தும், சென்னையில் இருக்கும் வேளாண்மை சார்ந்த மற்றும் பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையத்திலிருந்தும் நிபுணர்களை வரவழைத்திருக்கிறோம். விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எப்படி விற்பது, எப்படி அவர்களே ஏற்றுமதி செய்வது எப்படி என்பது பற்றி அவர்களிடமே அந்தத்துறை நிபுணர்கள் பேசுவார்கள்,” என்று சொல்கிறார் ராஜீவ்.
Read in : English