Read in : English
எரிபொருள் பற்றாக்குறையும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வும், இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மை குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், நிலைமையைச் சரி செய்ய, புதிய கதவுகளைத் தட்டிவருகிறது இலங்கை அரசு. இந்த நிலையைச் சீரமைத்து பொருளாதார மலர்ச்சியை ஏற்படுத்தும் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளுவது குறித்து சில கருத்துகளை முன்வைததுள்ளார் இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை மூத்த பேராசிரியராக பணியாற்றும் முனைவர் கோ.அமிர்தலிங்கம். டேக்சேஷன் இன் ஸ்ரீலங்கா (Taxation in Srilanka), தி ஸ்ரீலங்கன் எக்கனாமி (The Srilankan Economy) என்ற முக்கிய புத்தகங்களின் ஆசிரியர். பொருளாதாரச் சீர்குலைவால் ஏற்படும் மனித இடப்பெயர்வுகள் பற்றி ஆராய்ந்தவர்.
பாலின சமத்துவமின்மைக்கான பொருளாதாரக் காரணிகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறார். வளர்ச்சிப் பொருளாதாரத்தில் முக்கிய அறிஞராக போற்றப்படும் இவருடன், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து நடத்திய உரையாடல்.
கேள்வி: இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலைமைக்கு காரணம் என்ன என்று கணிதுள்ளீர்கள்?
அமிர்தலிங்கம்: இலங்கைப் பொருளாதாரம் பெரும்பாலும் இறக்குமதி பொருட்களை சார்ந்து இருக்கிறது. இறக்குமதியாகும் கணினி, வாகனம், வாகன மூலப்பொருட்கள் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் ஏற்றுமதியாகும் ரப்பர், தேயிலை விலை மிகவும் குறைவு. இதனால் பொருளாதார சமநிலையில் குலைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் பெரும்பாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஐம்பதுகளில் கொரியப் போர் நடந்தபோது, மூன்று ஆண்டுகள் மட்டும் ரப்பர் விலை அதிகமாக இருந்ததால், ஏற்றுமதியால் வரவு அதிகமாக இருந்தது. ரப்பர் தேயிலை மற்றும் சுற்றுலா பயணிகள் வரத்தால் அந்நிய செலாவணி கிடைக்கிறது. சுற்றுலா பயணிகளால் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது. அது, தொற்று நோய் காலத்தில் மிகவும் சரிந்தது.
இது தவிர, புலம்பெயர்ந்த மக்கள் உழைப்பால் ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்து வந்தது. நாணய மாற்றுச் சந்தையை நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனம், ஹவாலா என்ற கள்ள வாணிகத்தைப் பெருகியது. இது அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாணய மாற்றம் செய்வதில் ஒழுங்கீனம் நிலவுவதால் அந்த வங்கிகளிடமும் டாலர் கையிருப்பு இல்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.
கேள்வி: இது அரசின் கொள்கை முடிவால் ஏற்பட்ட தவறா?
அமிர்தலிங்கம்: அதுபோல ஏற்பட்ட தவறுதான். குறிப்பாக, மத்திய கிழக்கு, மேற்குலக நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் எல்லாம் ஹவாலா என்ற முறைகேடு வழி அனுப்பப்படுகிறது. ஹவாலா முறையில் 1 டாலருக்கு மாற்றாக இலங்கை பணம் 370 ரூபாய் வரை கிடைக்கிறது. வெளிச்சந்தையில் இன்னும் அதிகம். இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை மூத்த பேராசிரியராக பணியாற்றும் முனைவர் கோ.அமிர்தலிங்கம். டேக்சேஷன் இன் ஸ்ரீலங்கா (Taxation in Srilanka), தி ஸ்ரீலங்கன் எக்கனாமி (The Srilankan Economy) என்ற முக்கிய புத்தகங்களின் ஆசிரியர்.
கேள்வி: இந்த நிலையை தீர்க்க கோரி போராட்டமும் நெருக்கடியும் இலங்கையில் அதிகரித்து
வருகிறதே?
அமிர்தலிங்கம்: உண்மைதான். பெரிய அளவில் கடன் வாங்கி பல திட்டங்களை நிறைவேற்றியது அரசு. அந்த அந்தத் திட்டங்களால் வருமானம் எதுவும் இல்லை. ஆனால் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இதனால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட சில நாடுகளிடம் வர்த்தக ரீதியாகப் பெற்ற கடனில் இந்த ஜூலையில் மட்டும், 1 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியிருக்கும். இது சலுகை கடன் அல்ல. இந்த ஆண்டுக்குள், 8 பில்லியன் டாலர் வரை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அதைத் திருப்பி செலுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியில் இப்போது டாலர் கையிருப்பு இல்லை. இதுதான் நெருக்கடிக்கு முக்கியக் காரணம்.
ஏற்றுமதி, இறக்குமதி எல்லாம், இலங்கை வர்த்தக வங்கிகள் வழியாக நடக்கின்றன. நாணய மாற்றம் செய்வதில் ஒழுங்கீனம் நிலவுவதால் அந்த வங்கிகளிடமும் டாலர் கையிருப்பு இல்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. நாட்டு மக்களிடம் பணம் இருந்தாலும் அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியவில்லை. இதுதான் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி.
சர்வதேச நிதி நிறுவனத்திடம் நிதி கேட்க உள்ளது இலங்கை அரசு. இதை வரவேற்கிறேன். நடுக்கடலில் தள்ளாடும் கப்பலை நிறுத்த நங்கூரம் பாய்ச்சியாக வேண்டும். அது போன்ற முயற்சியாக இதைப் பார்க்கிறேன்
கேள்வி: இதை தீர்க்கும் வழிமுறைகள் உள்ளதா?
அமிர்தலிங்கம்: சர்வதேச நிதி நிறுவனத்திடம் நிதி கேட்க உள்ளது இலங்கை அரசு. இப்போதுதான் அது பற்றிய எண்ணம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். நடுக்கடலில் தள்ளாடும் கப்பலை நிறுத்த நங்கூரம் பாய்ச்சியாக வேண்டும். அது போன்ற முயற்சியாக இதைப் பார்க்கிறேன். இந்த நிறுவனம் உதவினால் மற்ற நாடுகளும் உதவ முன்வரும்.
கேள்வி: எந்த வழியில் இலங்கைப் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு உள்ளது?
அமிர்தலிங்கம்: நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் சரி செய்யப்பட வேண்டும். உலக அளவில் பப்ளிக் – பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற நடைமுறை நல்ல பலனைத் தருகிறது. ஏற்றுமதியை அதிகரிக்கலாம். முன்னேறி வரும் அண்டை நாடுகளிடம் இலங்கை பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Read in : English