Read in : English
பலர் தங்கள் குடும்பத்தைக் காக்க வீட்டுவேலைக்குப் போகிறார்கள். ஆனால் ஏ. மீனா, வருமானம் ஈட்டுவதற்காக வீட்டு வேலை செய்யப் போவது தனது 14 வளர்ப்பு நாய்களைப் பாதுகாக்க. அவர் வேலை பார்க்கும் மூன்று வீடுகளிலிருந்து வரும் வருமானத்தைத் தன் நாய்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்துகிறார். நாய்களோடு 24 ஆண்டுகளுக்கும் மேலாக மீனா வாழ்ந்துகொண்டிருக்கிறார்; அதற்கொரு காரணம் இருக்கிறது. சகமனிதர்கள் மீது அவர் நம்பிக்கையிழந்து விட்டார் என்பதுதான் அது.
நாய் மீது ஆர்வம் கொண்டோர் பலர் உண்டு. ஆனால் மீனாவை வித்தியாசமாகக் காட்டுவது அவர் நாய்களுக்காகத் தன்வாழ்வையே அர்ப்பணித்ததுதான்
மனிதர்கள் அவரைப் பொறுத்தவரை சுயநலம்பிடித்தவர்கள்; பொறாமைக்குணம் கொண்டவர்கள். நாய்கள் அவரின் ஆகச்சிறந்த நண்பர்கள். 41 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமல் அவர் வாழ்வதற்கு இது ஒரு காரணம். “எனக்கு திருமணம் ஆகியிருந்தால், என் கணவர் நாய்களைத் தூர எறிந்துவிட்டு வா என்று சொல்லியிருப்பார். அதனால் நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. உலகத்தில் மற்றவர்களை விட இந்த நாய்கள்தான் எனக்கு முக்கியம்,” என்று சொல்லும் மீனா, மயிலாப்பூரில் லாலா தோட்டம் காலனியில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீட்டில் நாய்களுடன் வசிக்கிறார்.
நாய் மீது ஆர்வம் கொண்டோர் பலர் உண்டு. ஆனால் மீனாவை வித்தியாசமாகக் காட்டுவது அவர் நாய்களுக்காகத் தன்வாழ்வையே அர்ப்பணித்ததுதான். ஐந்து மாதங்களுக்கு முன்பு, காரில் அடிபட்ட ஒரு பெண் நாய்க்குட்டியை பார்த்தார் அவர். ஒருகால் அடிபட்டு குட்டிநாய் மிகவும் காயப்பட்டிருந்தது. குட்டியை எடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற மீனாவிடம் கால்நடை மருத்துவர் அது பிழைப்பது கஷ்டம் என்று கைவிரித்து விட்டார். ஆனால் நம்பிக்கையைக் கைவிடாமல் மீனா குட்டி நாயைத் தன்வீட்டுக்கு எடுத்துச்சென்றார்; அதை நல்லமுறையில் கவனித்துக்கொண்டார். அதற்கு ‘கியூட்டி’ என்று பெயர் வைத்தார். “ஆரம்பத்தில் அந்தக் குட்டி நாயைக் கவனிப்பது சிரமமாகத்தான் இருந்தது. அது சின்னதாக இருந்ததால், என் வீட்டிலிருந்த மற்ற நாய்கள் அதைத் தாக்கின. அதனால் அதை நான் வேலைசெய்யும் வீடுகளுக்குத் தூக்கிச்சென்றேன். நாளாக நாளாக குட்டி நாயின் ஆரோக்கியம் மேம்படத் தொடங்கியது. இப்போது அது மிகவும் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கிறது,” என்கிறார் மீனா.
இந்த கியூட்டியைப் போலவே மீனாவின் கைகளுக்குள் வந்து சேர்ந்த ஒவ்வொரு நாய்க்கும் ஒரு சோகமான சரித்திரம் இருக்கிறது. நிகிதா என்னும் நாய் மயிலாப்பூரில் அனாதையாகக் கிடந்தது. “தெருவில் போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாயையும் நான் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவேன். இங்கிருக்கும் எல்லா நாய்களும் இப்படித்தான் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டன. சிலவற்றிற்கு கடுமையான நோய்கள் இருந்தன. மற்றவை பட்டினி கிடந்தன. மற்ற விலங்குகளைப் போலவே நாய்களுக்கும் உணவைக் கண்டுபிடிக்கும் தன்னுணர்வு உண்டு. சமயங்களில் அவற்றால் உணவைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நமது உதவி தேவைப்படும். அந்த மாதிரியான நாய்களைத்தான் பெரும்பாலும் நான் கவனித்துக் கொள்கிறேன்,” என்கிறார் மீனா. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நாய்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருந்தது. ஆனால் அவர் எப்படியோ சமாளித்துவிட்டார். 2020இல் நான்கு நாய்கள் நோயில் இறந்துவிட்டன. ”ஊரடங்கினால் வீடுகளுக்குப் போவதை நிறுத்தினேன். என் நாய்களுக்கு உணவு வாங்க என்னிடம் பணமில்லை. சில தொண்டு நிறுவனங்கள் சமயத்திற்கு எனக்கு உதவின. இன்றைய காலகட்டத்தில் நாய்களுக்கு ஏற்படும் ‘கேனைய்ன் டிஸ்டெம்பர்’ போன்ற நோய்களைத் தடுக்க என் நாய்களுக்குத் தடுப்பூசி போட என்னிடம் பணமில்லை. அதனாலே நான்கு நாய்களை நான் இழந்தேன்,” என்று சோகமாகச் சொல்கிறார் மீனா.
ஷீரடி சாய்பாபாவிற்கும் மயிலாப்பூரின் சிவபெருமானுக்கும் பக்தையான மீனா, இந்த நாய்கள் மூலமாகத்தான் தனக்குப் பிடித்த கடவுள்களுடன் தான் தொடர்பில் இருப்பதாக நம்புகிறார். ”17 வயதிலிருந்து நாய்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். அது ஒரு நார்மலான உறவு. ஆனால் மற்ற உறவுகளைவிட இந்த உறவு மிகவும் அர்த்தமுள்ளது என்பதை விரைவில் நான் புரிந்துகொண்டேன். அதனால் ஆரம்பத்தில் என் அம்மா என்னைப்பார்த்துக் கத்துவார். ஆனால் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. விரைவிலேயே நாய்களுடன் எனக்குள் ஆழமானதோர் உறவும் இரக்கமும் உண்டானது. இந்தத் தொடர்பின் மூலம் எனக்குப் பிடித்த கடவுள்களுடன் நான் இணைந்திருக்கிறேன்,” என்கிறார் மீனா.
கருணைக்கடலில் இருப்பதுபோல உணர்கிறேன் என்று சொல்லும் மீனாவின் குரலில் கருணை ததும்பி வழிகிறது.
மீனா வீட்டைவிட்டு வெளியே நீண்டநேரம் போவதில்லை. காரணம் நாய்களைக் கவனிக்க வீட்டில் வேறுயாரும் இருப்பதில்லை. “அருகிலிருக்கும் கோயில்கள் தவிர, நான் வேறு எங்கேயும் போவதில்லை. நான் செய்வதைப் போல செய்வதற்கு என் குடும்பத்தில் வேறு யாருக்கும் ஆர்வம் இல்லை. இதனாலே என் அம்மா நீண்டநாளைக்கு முன்பே என்னைவிட்டு விலகிப் போய்விட்டார். ஆனால் நாய்களுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவற்றை இழக்க எனக்கு இஷ்டமில்லை,” என்று சொல்கிறார் மீனா.
நாய்க்கடித் தடங்கள் மீனாவில் கைகளில் இருக்கின்றன. “நாய்கள் சண்டைபோடும்போது இடையில் பாய்ந்து நான் தடுப்பேன். அப்போது அவை என்னைக் கடித்துவிடும். ஆனால் வேண்டுமென்று அவை செய்வதில்லை,” என்று சொல்லும் மீனாவின் குரலில் வருத்தமேதும் இல்லை. ஆனால் எந்தநேரத்திலும் வீடு இடிந்துவிடுமோ என்ற கவலை அவருக்கு இருக்கிறது. “கதவை மாற்றியாக வேண்டும். மழை வந்தால் ஒழுகுகிறது. சில மராமத்து வேலைகளுக்காக நான் கொஞ்சம் பணம் கடன் வாங்கினேன்,” என்கிறார் அவர். சிரமங்கள் நிறைய இருந்தாலும் மீனா மகிழ்ச்சியாகவே வாழ்கிறார். கருணைக்கடலில் இருப்பதுபோல உணர்கிறேன் என்று சொல்லும் மீனாவின் குரலில் கருணை ததும்பி வழிகிறது. அதைத்தானே கவியரசர் கண்ணதாசன் கடவுளின் மற்றொரு பெயர் என்றார்.
Read in : English