Read in : English
நிதியமைச்சர் பி. பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) தாக்கல் செய்திருக்கும் தமிழ்நாடு பட்ஜெட் மீதான பல்வேறு விமர்சனங்களில் புதிய தாராளமயக் கொள்கையின் நிதி அடிப்படைவாத மேலாதிக்கம் தெளிவாகத் தெரிகிறது என்று கூறப்படுகிறது. இதில் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை. ஆனால் ’திராவிட மாடல்’ என்றழைக்கப்படும் மாடலை, புதிய தாராளமய கொள்கையிலிருந்து தனித்து வேறுபட்டிருப்பது என்று பலர் மனதில் பதிந்திருக்கும் அந்தத் ‘திராவிட மாடலை,’ பிடிஆர் தன் பட்ஜெட் உரையில் பல தடவை குறிப்பிட்டிருந்தாலும், தமிழ்நாடு நிதிப்பொறுப்புச் சட்டத்தில் பொதிந்திருக்கும் புதிய தாராளமய கொள்கைவிதியை அவர் முக்கியமாக ஏற்றுக்கொண்டார் என்பதுதான் ஏமாற்றம்தரும் விஷயம். 15-ஆவது நிதிக்குழு அனுமதித்திருக்கும் அளவுக்கும் கீழே நிதிப்பற்றாக்குறையைக் இறக்கிக் கொண்டுவருதற்கான ஆர்வமிக்க தனது கடமையை அவர் தெளிவாகவே சொல்லிவிட்டார்.
பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பார்த்தாலே, மக்கள்சார்ந்த முன்னேற்றத்துக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருக்கிறது என்பது புலனாகும். கடந்த பட்ஜெட்டைவிட (2021-22) இந்தப் பட்ஜெட்டில் பெரும்பாலான துறைகளுக்கான ஒதுக்கீடுகள் சிறிதளவே பெயரளவில் (nominal terms) உயர்ந்திருக்கின்றன. சில ஒதுக்கீடுகள் பெயரளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில ஒதுக்கீடுகள் சற்று அதிகமாக உயர்ந்திருக்கின்றன. அந்த உயர்வுகள் பணவீக்க விகிதத்தை முறியடித்து வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும். பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு 13.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. போன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 32,599.54 கோடி ரூபாய். இப்போது அது 36,895.89 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதைப்போல கிராம முன்னேற்றம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான ஒதுக்கீடு 22,738 கோடியிலிருந்து 26,647 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது 17.2 சதவீத உயர்வு.
ஆனால் பெரும்பாலான மற்ற துறைகளுக்கான ஒதுக்கீடுகளில் உயர்வு எதுவும் இல்லை. உயர்கல்வித்துறைக்கு இந்தப் பட்ஜெட்டில் 5,668.89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 5,369.09 கோடி ரூபாய். சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கு சென்ற 18.933 கோடி. ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் 17,901.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வீழ்ச்சியை இந்த ஒதுக்கீடுகள் காட்டுகின்றன. சமூக நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகப்பாதுகாப்பு, ஆதிதிராவிடர் மற்றும் மலைசாதியினர் நலன் ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் உண்மையளவில் குறைந்துள்ளன. அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது பற்றி பட்ஜெட் மௌனம் சாதிக்கிறது.
சமூக நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகப்பாதுகாப்பு ஆதிதிராவிடர் மற்றும் மலைசாதியினர் நலன் ஆகியதுறைகளுக்கான நிதிஒதுக்கீடுகள் உண்மையளவில் குறைந்துள்ளன.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, சமச்சீர்வாக, தொடர்ந்து வேளாண்மையை நவீனமயமாக்குவதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவேண்டும். அதைப்போன்ற அதிமுக்கியமான இலக்குகளை நிறைவேற்றுவதற்காகச் செலவுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் என்று எதுவுமில்லை. கிராம வேளாண் தொழிலில் மதிப்புக்கூட்டல் அம்சத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வளர்ச்சி என்பது பரவலாக்கப்படும்; கிராமப்புற வேலையின்மைப் பிரச்சினை ஓரளவு குறையும். நகர்ப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தை சரியான சட்டத்தின் ஆதரவோடு எல்லா இடத்திலும் முன்னெடுத்துச் செல்வதற்கான முனைப்பு இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தைப் வலுப்படுத்தவும் முயற்சி இல்லை.
இந்த விளைவுகள் எல்லாம், நிதிநிலையைப் உறுதிப்படுத்துவதற்கான ’அவசர’ தேவையைப் பற்றி நிதியமைச்சர் சொன்ன கருத்துடன் ஒத்திசையானவை. உள்நாட்டு உற்பத்தியில் சதவிகிதப் பங்கு என்ற அலகில் கடன்களைக் குறைத்தல், நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்தல் ஆகியவை நிதிநிலையைப் உறுதிப்படுத்தும் அம்சங்கள். 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனது பட்ஜெட் உரையில் பிடிஆர் இப்படிச் சொன்னார்: “நிதிநிலையைப் பலப்படுத்துதல் என்பது அடிப்படைக் கொள்கை. தமிழ்நாடு நிதிப்பொறுப்பு சட்டம் சொல்லும் விதிகளை தொடர்ந்து பின்பற்றி, இனிவரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கும் இந்த மாநில அரசு. அதே சமயம், வளர்ச்சி சம்பந்தப்பட்ட செலவுகளுக்காக முதலீடும் செய்யப்படும்.”
இதிலிருக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால் நலத்திட்டங்களுக்கும், ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கும் இடையில் இருப்பதாகச் சொல்லப்படும் முரண்பாடு . கல்வி மட்டுமல்ல, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பும் மனித மேம்பாட்டுக்கு உதவும். இத்தகைய முதலீடுகள் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குச் சம்பந்தமில்லாதவை என்று ஏன் கருதப்படுகிறது? “பொருளாதாரக் கோணத்தில் பார்க்கும்போது, சமூகநலனும், ஒட்டுமொத்தப் பொருதாளார முன்னேற்றமும் சமன்படுத்தி கொண்டு செல்ல வேண்டிய இரண்டு (எதிர்மறை) பக்கங்கள்,” என்று தனது பட்ஜெட் உரையில் பழனிவேல் தியாகாராஜன் சொல்லியிருந்தார்.
சமூகநலத்திட்டங்கள் ஆட்சியாளர்களின் கருணைச் செயல்களாகவே பார்க்கப்படுகின்றன; நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் அவற்றுக்கான தகுதி மக்களுக்கு உண்டு என்று பார்க்கப்படுவதில்லை.
ஏன் சமூகநலன் (செலவுகள்) பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகவே வைக்கப்படுகிறது? சமூகநலத்திட்டங்கள் ஆட்சியாளர்களின் கருணைச் செயல்களாகவே பார்க்கப்படுகின்றன; ‘நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் இவை மக்களின் உரிமைகள்’ என்று பார்க்கப்படுவதில்லை. இந்தக் கண்ணோட்டம்தான் மேலே உள்ள கேள்விக்கு விடை. ’புதிய தாராளமயக் கொள்கை’ அடிப்படையில் ‘சமூக நலனோடும்’ ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியோடும்’ ஒத்துப்போவதில்லை. சமூகநலனையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ‘திறமையான சந்தை’ என்ற மிருகத்திற்குப் பெருந்தடையாக, தொல்லையாகப் பார்க்கும் புதிய தாராளமய சித்தாந்தத்திற்கும் இடையில்தான் உண்மையான போராட்டம் நிகழ்கிறது.
புதிய தாராளமய அமைப்பில் ஏற்படும் ‘வளர்ச்சி’ நிதிமுதலீட்டின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கவனித்துக் கொள்வதும், அதனால் சமத்துவமின்மையும், உழைக்கும் வர்க்கத்தினரின் பெருந்திரள் வறுமையும் அதிகரிப்பதும் உலகம் முழுவதும் காணப்படும் போக்குதான். அதற்காக வளர்ச்சியே வேண்டாமென்று அர்த்தமல்ல. அந்த வளர்ச்சி மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாகவும், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை, பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகளை நிறைவேற்று வதாகவும் அமைய வேண்டும் என்பதுதான் முக்கியம்.
நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றுப்பரவலின், ஊரடங்குகளின் கடுமையான விளைவுகள் மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி மந்தம், வேலையின்மை அதிகரிப்பு ஆகியவையும் மக்களை வாட்டி வதைக்கின்றன. மேலும், முறைசாராத் துறையை சீரழித்த 2016-ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு என்ற நாசகர நடவடிக்கையும், 2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி படு தோல்வியும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏற்படுத்திய துன்பம் மக்களை பாடாய்ப்படுத்துகிறது.
2017-18-க்கான உழைப்பு படை ஆய்வும், 2017-18-க்கான நுகர்வோர் செலவு ஆய்வும், 2018-19 ஆண்டை மையப்படுத்தி இந்தியாவில் கிராமப்புறங்களில் இருக்கும் வேளாண் குடும்பங்களின் நிலையைப் பற்றி சமீபத்தில் வந்த தேசிய மாதிரி ஆய்வும் மக்களிடையே பரவலாக நிலவும் துயரத்தை, வாங்கும் சக்தியிழப்பை வெளிக்காட்டின. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு பரவாயில்லைதான். ஆனாலும் கிராமப்புறத்து தமிழ்நாட்டு வேளாண் வீடுகளில் சராசரி மாத வருமானம் பற்றிய தேசிய மாதிரி ஆய்வு, அந்தச் சராசரி வருமானம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று கூறுகிறது. அறிவுபூர்வமாக வறுமையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட எந்த வரையறையின்படி பார்த்தாலும், கணிசமான அளவு கிராமத்து மக்கள் ஏழைகள்தான் என்பது அந்த ஆய்வு உணர்த்தும் செய்தி.
நிதிஅடிப்படைவாதத்தைக் கைவிடுவதோடு, ஆகப்பெரும் தொழில்கள் நடத்தும் மிகப்பெரிய பணக்காரர்களுக்கு விதிக்கப்படும் வரிகள் பலமானதாகவும் இருக்க வேண்டும். அதைப்போல முக்கியமானது, ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதிவளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 அல்லது 8 சதவீதம் வளர்ந்திருக்கிறது என்று பல ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தபின்பும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது மனதில் தோன்றுவது இதுதான்: நமக்கு வளர்ச்சி வேண்டும் நிச்சயமாக. ஆனால் அந்த வளர்ச்சி வேறுவிதமாக இருக்க வேண்டும். கிராம முன்னேற்றம், கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் பேணுதல், கிராமப்புறத்து, நகர்ப்புறத்து உட்கட்டமைப்பு ஆகியவற்றில் எல்லாம் பொதுமுதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் தந்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நிதிஅடிப்படைவாதத்தைக் கைவிடுவதோடு, ஆகப்பெரும் தொழில்கள் நடத்தும் மிகப்பெரிய பணக்காரர்களுக்கு விதிக்கப்படும் வரிகள் பலமானதாகவும் இருக்க வேண்டும். அதைப்போல முக்கியமானது, ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதிவளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்திருப்பது போல இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக கட்டமைத்துக்கொள்வதற்கு ஒரு போராட்டம் வேண்டியிருக்கிறது.
Read in : English