Read in : English
கமலா இல்லாத மாளிகை என்னாகும்? சோனியா குடும்பத்தினர் அனைவரும் நீக்கப்பட்டுவிட்டால், காங்கிரஸ் என்னாகும்? காவியமெழுதாத காகிதமாகிவிடுமா? இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? மரணப்படுக்கையில் இருக்கும் கட்சிக்கு புத்துயிர் ஊட்டிவிடமுடியுமா? உயிர்த்தெழும் வித்தை தெரிந்த இயேசு கிறிஸ்து இருக்கிறாரா என்ன? சரி, காங்கிரசுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கழித்தும் பல்வேறு தளங்களில் ஏழ்மை இன்னமும் தாண்டவமாடுகிறதென்றால் அதற்கு அதிமுக்கிய காரணம் காங்கிரஸ்தான்.
ஆயினும் உ.பி. முடிவுகள், இது இந்து மத மேலாதிக்கம் கோலோச்சும் காலகட்டம் என்பதைத் தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. மத வெறியைக் கட்டுக்குள் வைக்க அகில இந்திய அளவில் ஏதோ பெயரளவிலேனும் கட்சி அமைப்புள்ள காங்கிரஸ் நிச்சயம் தேவைப்படுகிறது.
ஒப்பீட்டளவில் ஆம் ஆத்மி கட்சியை பாஜகவிற்கு எதிராக, காங்கிரசைவிட மேலான, மாற்றாகப் பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கெதிரான ஆர்[ப்பாட்டங்களின் போதும், புதுதில்லி கலவரங்கள் போதும், கேஜ்ரிவால் மௌனம் சாதித்தது, பொதுவாகவே அவருடைய மென்மையான இந்துத்துவ ஆதரவுப் போக்கு, இவை நம்மைக் கவலை கொள்ள வைக்கின்றன.
இல்லை, இல்லை. அதெல்லாம் தேர்தல் தந்திரம், எப்படியும் அவர் ஒன்றும் வெறியர் அல்லவே என்றும் வாதிடலாம். அது உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும், அகில இந்தியக் கட்சியாக ஆம் ஆத்மி வளர இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் அதுவரை மதவெறிக்கான போர் காத்திருக்குமா என்ன?
அது 2014ஆம் ஆண்டிலேயே துவங்கிவிட்டதே. இப்போது மேலும் தீவிரமாகிவிட்டது, ஹிஜாப் தடையைக்கூட சரி என உயர்நீதி மன்றங்கள் தீர்ப்பளித்து, தேவையில்லாமல் முஸ்லிம்கள் மனதைப் புண்படுத்தி, அவர்கள் மத்தியில் தீவிரவாதத்தை வளர்க்க உதவும் காலம் இது. எனவே எப்பாடுபட்டாவது காங்கிரசுக்கு புத்துயிரூட்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டம் இது.
சோனியா குடும்பத்தினர் இல்லாத காங்கிரசுக்கு தலைமை வகிக்கக்கூடியது யார்? சசி தரூரா, குலாம் நபி ஆசாதா, கபில் சிபலா? அவர்களால் காங்கிரஸ் பெயரில்லாமல் அவர்கள் வார்டில் கூட வெல்ல முடியாதே?
இந்தியாவில் பல்வேறு தலைவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, சேர்த்துவைத்த சொத்துக்களை இழக்காமலிருக்க, வாரிசுகளை அரசியலில் இறக்குகின்றனர். முதிர்ந்த ஜனநாயக நாடுகளில் அத்தகைய போக்கைக் காணமுடியாது.
இன்னமும் நேருவின் பெயருக்கு ஒரு மரியாதை இருக்கிறது. அகில இந்திய அளவில் கட்சி இயந்திரம் இருக்கத்தான் செய்கிறது. அது மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று சமூக நல்லிணக்கத்திற்காக தீவிரமாகச் செயல்படவேண்டும், மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமெனில், தலைமை சோனியா குடும்பத்தினரிடம் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால், சோனியா காந்தியின் உடல் நிலை பலவீனமாயிருக்கிறது என்பதால், பிரியங்கா அல்லது ராகுல் காந்திதான் மேலதிகப் பொறுப்பேற்கவேண்டியிருக்கும்.
வாரிசு அரசியல், மக்களாட்சிக்குகந்ததல்ல. இந்தியாவில் பல்வேறு தலைவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, சேர்த்துவைத்த சொத்துக்களை இழக்காமலிருக்க, வாரிசுகளை அரசியலில் இறக்குகின்றனர். முதிர்ந்த ஜனநாயக நாடுகளில் அத்தகைய போக்கைக் காணமுடியாது.
நம் நாட்டில் இந்த வாரிசுகளின் எழுச்சி, இந்திரா காந்தியிலிருந்து தொடங்கியது. நேரு விரும்பினாரா, இல்லையா என உறுதியாகச் சொல்ல இயலாது. தன்னுடன் கூடவே வைத்துக்கொள்ள விரும்பினார் என்பது உண்மை, ஆனால், அவருடன் கலந்தாலோசித்ததாகத் தெரியவில்லை. தன் வாரிசு இந்திரா என எந்த இடத்திலும் எப்போதும் சொல்லவில்லை.
நேருவின் மறைவிற்குப் பின், அதிகம் வெளி உலகால் அறியப்படாத லால் பகதூர் சாஸ்திரியைத் தானே பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர். சாஸ்திரியின் அகால மறைவிற்குப் பின் அவசரகதியில் காமராஜ் இந்திராவைப் பிரதமராக்கினார்.
அப்போது பல மூத்த தலைவர்கள் இருந்தனர். அவர்களில் எவரையேனும் பிரதமராக்கியிருக்கலாம். பெரிய அளவு செல்வாக்கு இலலாதவர்கள் எனினும், கட்சி வலிமை கொண்டதாக இருந்தது, மாற்று ஏதுமில்லை. லால் பகதூர் சாஸ்திரிக்கு மட்டும் என்ன செல்வாக்கா இருந்தது? புதிதாக வருபவர் தன்னுடைய செயல்களினால் செல்வாக்கைப் பெருக்கிகொண்டிருக்கமுடியும்.
ஆனால், அவர்களிடையேயிருந்த பூசல்கள் கட்சியையும் ஆட்சியையும் உருக்குலைத்து விடும் என்று அஞ்சிய காமராஜ், நேருவின் பெயரைச் சொல்லி இந்திராவை பிரதமராக்கிவிட்டார். தவிரவும், சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இந்திரா நடந்துகொள்வார் என்றும் காமராஜும் மற்றவர்களும் கருதியிருக்கக் கூடும்.
வளர்த்த கடா மார்பில் பாயக்கூடும் என்று அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், அப்படித்தான் நடந்தது. ஜவஹர்லால் நேரு மீது மக்களுக்கிருந்த பேரன்பிற்கு புதிய வடிகாலும் கிடைத்தது. இந்திரா காந்தியை திறமையான நிர்வாகி என்று சொல்லிவிடமுடியாது. அவரது ஆணவமும் ஏராளம். அவ்வப்போது சாமியார்கள் பக்கம் சென்றார், உருத்திராட்சம் அணிந்தார். அவையெல்லாம் வாக்குக்களுக்காகவா அல்லது நம்பிக்கைகளின் வெளிப்பாடா, நமக்குத் தெரியாது, அவர் அப்படி வெளிப்படையாக செய்திருக்கவேண்டியது இல்லைதான். ஆயினுங்கூட அவர் எவ்விதத்திலும் இந்து மத வெறி எனும் தீயில் நெய்யூற்றவில்லை.
இன்னொன்றையும் கவனிக்கலாம். அவரே முட்டாள்தனமாக காலிஸ்தானிகள் வலுவடையக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும், அதற்கு மாற்றாக இந்துக்களை ஏவிவிடவில்லை. தன் பாதுகாப்புப் பணியிலிருந்த சீக்கியக் காவலர்களைக்கூட அகற்ற மறுத்து தன் மரணத்திற்கே வழிவகுத்துக்கொண்டவரல்லவா? சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை அடக்க புதிய பிரதமர் ராஜீவ் காந்தி சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டார். கொடுமைகள் அவருக்கு உடனே உறைக்கவில்லை. பின்னரும்கூட கலவரங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் உண்மை. அது அவர் மீதும் அவரது கட்சியின் மீதும் தீராக் களங்கமே.
ஆனால் அப்போதும் சரி, பின்னரும் சரி, கட்சி சீக்கியர்களை எதிரிகளாக பாவிக்க வில்லை, சித்தரிக்கவில்லை. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் சீக்கியர்களுக்கு இடமிருந்தது. பின்னர் ஒரு சீக்கியர்தான் பிரதமரானார். இஸ்லாமியர் விவாகரத்து செய்யும்போது, மனைவிக்கு குர் ஆனில் குறிப்பிட்டிருப்பதற்கு அப்பாலும் உதவித் தொகை வழங்கவேண்டும் என்ற ஷா பானு தீர்ப்புக்கு எதிராக அடிப்படைவாதிகள் கிளர்ந்தெழுந்தபோது, முதலில் தீர்ப்பை வரவேற்ற ராஜீவ், மிரண்டு போய் பின் வாங்கியதே ராஜீவ் செய்த இமாலயத் தவறு. அதோடு அவர் நிற்கவில்லை. பின் வாங்கியது வடபுல இந்து வாக்காளர்களை எரிச்சலடையச் செய்யலாம் என்றுணர்ந்து, அயோத்தி ஆலயப் பூட்டை உடைத்து, வழிபாடு தொடர உதவினார். அதன் பயனை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம்.
இத்தாலியில் பிறந்த சோனியா அண்டோனியோ மைனோவுக்கு உண்மையில் அரசியலில் ஆர்வமே இல்லை. அதிகாரத்தின் பயன்களை அனுபவிக்க விரும்பியிருக்கலாம். ஆனால் நேரடியாக ஆட்சியில் தன் கணவர் பங்கு பெறுவதை அவர் விரும்பவில்லை. ராஜீவுக்கே ஆர்வமில்லை. சஞ்சய் மரணத்திற்குப் பின் தாயின் வற்புறுத்தலில்தான் அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளரானார். எப்படியோ, ஆகிவிட்டாரே, அப்புறம் எப்படிப் பின்வாங்குவது? மனைவியை மீறி, பிரதமர் பொறுப்பையும் ஏற்றார்.
காங்கிரஸ் செய்யும் தவறுகளுக்கப்பால் நமக்கு அக்கட்சி தேவைப்படுகிறது. இடதுசாரியினரும்தான். அவர்களுக்கு ஒரு எம்பி கூட இல்லாவிட்டாலுங்கூட அவர்கள் அடித்தட்டு மக்கள் பக்கம் நிற்பார்கள். சமூகத்தின் மனசாட்சியாயிருப்பார்கள்.
ராஜீவ் கொல்லப்பட்டபோதும் சோனியா கட்சித் தலைமையேற்க முன்வரவில்லை. ஓராண்டுக்கும் மேலாகத் தட்டிக் கழித்தார். ஆனால் இறுதியில் கட்சி கலகலத்துவிடும் அபாயமிருந்ததால் தலைவரானார். அவரது தலைமையிலான காங்கிரசை மக்கள் ஏற்றனர். ஐக்கிய மக்கள் முன்னணி 2004 தேர்தல்களில் வெற்றி பெற்றது,. அவரும் பல தவறுகள் செய்தார். ஊழலில் ஈடுபட்டார் அல்லது அதை அனுமதித்தார்.
ஆனால் அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து இடதுகள், வெளியேறியிருக்காவிட்டால், காங்கிரஸ் பதவியில் தொடர பல்வேறு விரும்பத்தகாத கட்சிகளை நம்பி ஆட்சி செலுத்த வேண்டிய நிலை உருவாகியிருக்காது. இன்றைய அவலத்தை நாம் சந்திக்க நேர்ந்திருக்காது.
பஸ்தர் காடுகளில் இயங்கும் மாவோயிஸ்டுகளைப் பற்றி நன்கு ஆராய்ந்திருக்கும் பேராசியர் நந்தினி சுந்தர், காங்கிரஸ், பாஜக இரண்டுமே பெரு நிறுவனங்கள் நலனுக்காகவே செயல்படுகின்றன, ஆனாலும் பாஜகவிற்கு எவ்வித ஈவிரக்கமும் இல்லை, எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அவர்கள் செல்வார்கள், போதாக்குறைக்கு பழங்குடியினர் மத்தியில் மதவெறியை வளர்த்துவிடுவார்கள் என்கிறார்.
இடதுகளின் வற்புறுத்தலிலேயே மன்மோகன் சிங் அரசு, இன்று பலராலும் பாராட்டப்படுகின்ற நூறு நாள் வேலைத் திட்டத்தினையும் மற்றும் தகவலறியும் சட்டத்தினையும் அறிமுகப்படுத்தியது. அது போல் இன்னமும் சில ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு சிபிஎம் வழிகோலியிருக்க முடியும். ஆனால் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும் ரஷிய மயக்கத்தில் இன்றுவரை இருக்கும் அவர்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தைப் பிடிவாதமாக எதிர்க்க, உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணாதான். ஆட்சியில் எந்தப் பங்கும் இல்லை, மேற்கு வங்கத்திலேயே அவர்களது செல்வாக்கு கடுமையாக சரிந்தது, அவர்களுக்கு அங்கே இப்போது எம்பிக்களே இல்லை.
காங்கிரஸ் செய்யும் தவறுகளுக்கப்பால் நமக்கு அக்கட்சி தேவைப்படுகிறது. இடதுசாரியினரும்தான். அவர்களுக்கு ஒரு எம்பி கூட இல்லாவிட்டாலுங்கூட அவர்கள் அடித்தட்டு மக்கள் பக்கம் நிற்பார்கள். சமூகத்தின் மனசாட்சியாயிருப்பார்கள்.
ஆனால், இரு பெரும் இயக்கங்களுமே மிக பலவீனமடைந்த நிலையில் என்ன செய்யவேண்டும்?
(இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்)
Read in : English