Read in : English
நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டு முக்கியக் காரணங்களை முன்வைத்தது. மருத்துவப்படிப்பு பணம்காய்ச்சி மரமாகி போனதை எண்ணி வருத்தம் தெரிவித்த நீதிமன்றம், படிப்பு என்பது சேவையாக இருக்கவேண்டும் என்றும் நன்கொடை, கேபிடேஷன் ஃபீ என்று மாணவர்களிடமிருந்து வாங்கப்படும் பணம் ஊழலின் ஒரு வடிவம் என்றும் நீட் தேர்வு அதை தடுக்கும் என்றும் கருத்து தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் சொன்ன அடுத்த காரணம் மருத்தவ படிப்புக்கு தகுதியற்ற பணம் படைத்த மாணவர்கள் காசு கொடுத்து மருத்துவ கல்லூரிகளில் சீட் வாங்குவதையும் இந்த நீட் தேர்வு தடுக்கும் என்பதுடன், தகுதியான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிப்பதை நீட் தேர்வு உறுதி செய்யும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு, அதற்கெதிரான போராட்டம் மற்றும் அரசியலை தவிர்த்து, உச்சநீதிமன்றம் மேற்கோள் காட்டிய இந்த நோக்கங்கள் ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது என்றே சொல்லலாம். டொனேஷன் வாங்குவதை பல தனியார் மருத்துவ கல்லூரிகள் விட்டுவிட்டு, படிப்புக்கான கட்டணம் என்றே வாங்குகின்றன. கணக்கில் வரும் பணமாகவே வாங்கிக்கொள்ளும் இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் தகுதியான மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு தடைக்கல்லாக உள்ளது என்பதும் கண்கூடு. மேலும் நீட் பயிற்சிக்காகவும் தனியே ஒரு கட்டணத்தை எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.
கடந்த சிலநாட்களுக்கு முன் இன்மதியில் வெளியான கட்டுரையில் நாம் தமிழ்நாடு 10,375 மருத்துவப் படிப்புக்கான இடங்களுடன் இந்தியாவில் மருத்துவ படிப்பில் முன்னணியில் உள்ள ஒரு மாநிலம் என்று தெரிவித்திருந்தோம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,125 இடங்களும் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகழகங்களில் 5,250 இடங்கள் என்றுள்ள நிலையில், மேலும் 1,450 இடங்களும் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 கல்லூரிகள் மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 99,610 மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், 57,125 மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுடைய கனவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள்தான். இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ரூ.13,500. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இந்தக் கட்டணம் ரூ.17 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை.
நீட் தேர்வுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கு மாணவ மாணவிகள் பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதன் பின்னர் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்புவதற்கான இடங்களுக்குக் கவுன்சலிங் நடைபெறும்.
சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு, மருத்துவ கல்வி துறையின் பரிந்துரைப்படி, வாங்கவேண்டிய கட்டணம் ரூ.2.25 லட்சம் முதல் 2.75 லட்சம் வரை. ஆனால் சுயநிதிக் கல்லூரிகள் புத்தகக் கட்டணம், நூலகக் கட்டணம் என்று ஏதாவது காரணங்களை சொல்லி மேலும் ரூ.4 லட்சத்திற்கு மேல் வசூலித்துவிடுவார்கள். “ஒரு ஆறு புத்தகங்கள் பத்து குறிப்பேடுகளுக்கு ஒன்றரை லட்சம் வரை வாங்கிவிட்டார்கள். நாங்களே வாங்கிக்கொள்கிறோம் என்றாலும் விடமாட்டார்கள்,” என்கிறார் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி.
படிப்புக் கட்டணம் ரூ5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருந்தாலும் கேபிடேஷன் கட்டணம் ரூ.40 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாயைத் தாண்டும்.
இந்த சுயநிதி கல்லூரிகளில் 35 சதவீத இடங்களை கல்லூரிகள் தங்களுடைய விருப்பம் போல நிரப்பி கொள்ளலாம். படிப்புக் கட்டணம் ரூ5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருந்தாலும் கேபிடேஷன் கட்டணம் ரூ.40 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாயைத் தாண்டும். மாணவர் பெற்றுள்ள மதிப்பெண்கள், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் பரிந்துரை, கல்லூரிக்கு இருக்கும் பிரபலத்தைப் பொறுத்து இந்தக் கட்டணம் வேறுபடும்.
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, நீட் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்களை கொண்டு தரவரிசை மற்றும் இடஒதுக்கீட்டின்படி மருத்துவ இடங்கள் மாணவ மாணவிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. அரசு ஒதுக்கீட்டுக்கான ஒதுக்கீடு முடிந்தபின், சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களையும் பெறும்தவற்கு நீட் தேர்வு
மதிப்பெண்கள் கட்டாயம். என்றாலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியே. கடந்த நீட் தேர்வின்போது பிரபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெற்ற நீட் மதிப்பெண் 480. நல்ல மதிப்பெண்தான் என்றாலும் பிரபாவுக்கு கிடைத்தது சுயநிதி மருத்துவக் கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்தான் அந்த இடம் கிடைத்தது. “பணம் கட்டும் இடம் வரை சென்று விட்டோம். ஆனால் என்னுடைய அப்பாவால் ஒரு கோடி ரூபாய் கட்டமுடியுமா? எங்களால் இது முடியுமா? என்று யோசித்தேன். அப்பாவை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்” என்கிறார் பிரபா.
ஐந்து முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை இருந்த கல்விக் கட்டணம் இப்போது ரூ.17லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை சென்று விட்டது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ரூ.22 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை கல்விக்கட்டணம் வாங்குகின்றன.
நீட் தேர்வு வந்த பிறகு, கட்டாய நன்கொடை எனப்படும் கேபிடேஷன் கட்டணம் என்பதை இப்போது பல தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் வாங்குவதில்லை என்றாலும்கூட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் கல்வி கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். ஐந்து முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை இருந்த கல்விக் கட்டணம் இப்போது ரூ.17லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை சென்று விட்டது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ரூ.22 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை கல்விக்கட்டணம் வாங்குகின்றன. மத்தியத் தொகுப்பின் கீழ் வருவதாக சொன்னாலும் அதிகக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் யாரும் வராத நிலையில், நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற வசதி படைத்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகின்றது. “நீட் தேர்வால் கட்டணம் குறைந்துள்ளதாக சொல்வது சரியாகப்படவில்லை. நன்கொடை இப்போது கல்விக்கட்டணமாக ‘கணக்கில் வருவதாக‘ வாங்கப்படுகிறது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் இருந்தாலும்கூட, சுயநிதி மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கேட்கும் பணத்தைக் கட்டமுடியாமல் பலர் இருக்கிறார்கள். குறைவான மதிப்பெண்களைப் பெற்றாலும், பணம் இருப்பவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து படித்து மருத்துவர் ஆக முடிகிறது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வின் தேவைக்காகச் சொன்ன காரணங்கள் அடிபட்டு போகின்றன” என்கிறார் நெடுஞ்செழியன்.
இவ்வாறு வாங்கும் கல்விக்கட்டணத்துக்கு மைய அரசு சேவை வரி விதித்தாலும் தகும். சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்கள் ஒன்றும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்யவில்லை. “உண்மையில் அவை லாப நோக்கில் இயங்கும் நிறுவனங்கள்” என்று சுட்டிக்காட்டுகிறார் நெடுஞ்செழியன்.
இவ்வளவு பணம் கட்டி படித்து டாக்டர் ஆனாலும், நீங்கள் ஒரு நல்ல தனியார் மருத்துவமனையில் வேலையில் சேர்ந்தால் 30,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். “அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் ஏராளமான பணத்தைக் கொட்டி மருத்துவம் படியுங்கள் என்று யாருக்குமே நான் அறிவுரை வழங்கமாட்டேன். நீங்கள் படிப்புக்குக்கு கட்டிய பணத்திற்கும் வருமானத்துக்கும் சம்பந்தமே இருக்காது” என்கிறார் டாக்டர் அபினேஷ்.
கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி, தேசிய மருத்துவ ஆணையம் சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல் வி நிறுவனங்களில் பாதி இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் வாங்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. பெற்றோர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இது இருந்தாலும், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு இந்தப் பரிந்துரையை அமல்படுத்தும் என்பது சந்தேகமே. அவ்வளவு குறைந்த கட்டணங்களைக் கொண்டு மருத்துவக் கல்வி நிறுவனத்தை நடத்த முடியாது என்று தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. “நல்ல பரிந்துரை என்றாலும் தவறான ஒரு நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது” என்கிறார் நெடுஞ்செழியன்.
Read in : English