Read in : English
திருவண்ணாமலை மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி இன மாணவர் வி. ஏழுமலை (25) முதன் முறையாக டாக்டராகி இருக்கிறார். அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி மட்டுமல்ல, அந்த ஊரின் முதல் பட்டதாரியும் கூட. தற்போது அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவத்தில் எம்.டி. படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
திருவண்ணாமலையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால், கல்வராயன் மலையில் அக்கரைப்பட்டி என்ற மலை கிராமம் வரும். இந்த ஊருக்கு அருகே உள்ள பீமாரப்பட்டியிலிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டும். தர்மபுரி கோட்டப்பட்டியிலிருந்து 6,7 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தால் இந்த ஊருக்கு வந்து விடலாம். கள்ளக்குறிச்சியிலிருந்து கிலாக்காட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் பயணம் செய்தும் அக்கரைப்பட்டிக்கு வரலாம். அக்கரைப் பட்டிக்கு பஸ் கிடையாது. சில கிலோ மீட்டர் தூரம் மலைப் பாதையில் நடந்துதான் ஊருக்கு வர வேண்டும். மலைப் பகுதியில் 25 வீடுகள் உள்ள சிறிய கிராமம். அந்த ஊரில் உள்ளவை அனைத்தும் ஓட்டு வீடுகள் அல்லது கூரை வீடுகள். ஆரம்ப சுகாதார மருத்துவமனை கிடையாது. பள்ளிக்கூடமும் கிடையாது. பொருள்களை வாங்குவதற்குக்கூட பக்கத்து கிராமங்களுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். அந்த அளவுக்கு அடிப்படை வசதிகள்கூட எட்டிப்பார்க்காத மலை கிராமம் இது.
இந்த மலை கிராமத்தில் பிறந்து பல்வேறு சிரமங்களுக்கு இடையில் படித்து டாக்டராகியுள்ள வி. ஏழுமலை தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
அக்கரைப் பட்டிக்கு பஸ் கிடையாது. சில கிலோ மீட்டர் தூரம் மலைப் பாதையில் நடந்துதான் ஊருக்கு வர வேண்டும். அந்த ஊரில் உள்ளவை அனைத்தும் ஓட்டு வீடுகள் அல்லது கூரை வீடுகள். ஆரம்ப சுகாதார மருத்துவமனை கிடையாது. பள்ளிக்கூடமும் கிடையாது. பொருள்களை வாங்குவதற்குக்கூட பக்கத்து கிராமங்களுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். அந்த அளவுக்கு அடிப்படை வசதிகள்கூட எட்டிப்பார்க்காத மலை கிராமம் இது.
எனது அப்பா வேடி, மலையாளி என்கிற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவரும் பள்ளிப் படிப்பைக்கூட படிக்கவில்லை. விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். அவரது வருமானத்திலிருந்துதான் எங்களது பெரிய குடும்பம் நடக்க வேண்டும். அம்மா நீலாவதி சிறுவயதிலேயே இறந்து விட்டார். எங்களது குடும்பம் ஓட்டு வீட்டில் வசிக்கிறது. கடந்த சில ஆண்டுகள் வரை வீட்டில கரண்ட் கிடையாது. நான் விடுதியில் தங்கிப் படித்ததால், இரவு நேரத்தில் படிப்பதில் பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் ஊருக்கு வந்து போவதற்கு மலைப் பாதையில் நடந்துதான் வர வேண்டும். பஸ் போக்குவரத்து கிடையாது. பள்ளி விடுதியில் தங்கிப் படித்ததால் விடுமுறையில் மட்டும்தான் வீட்டுக்கு வந்து போவேன். எங்களது ஊரிலிருந்து தினசரி பள்ளிக்குப் போய் வருவது என்றால் மிகச் சிரமமான காரியமாக இருந்திருக்கும்.
என்னுடன் பிறந்தவர்கள் ஏழு அக்காக்கள். அத்தனை பேரையும் பள்ளியில் படிக்க வைக்கும வசதி இல்லை. அதனால் எனது ஏழு சகோதரிகளும் தொடக்கப் பள்ளிப் படிப்பையே முடிக்க முடியாமல் இடையிலேயே விட்டு விட்டனர். அம்மா இறந்துவிட்டதால், எனது அக்காக்கள்தான் வீட்டு வேலைகளைச் செய்ததுடன் என்னையும் பார்த்துக் கொண்டனர். அவர்களும் குடும்ப வருமானத்துக்காக வேலைக்குச் செல்வார்கள். தற்போது அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
பீமாரப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். அது உண்டு உறைவிடப்பள்ளி. அங்கேயே தங்கிப் படித்தேன். அதன்பிறகு, எங்களது ஊரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குட்ஷெப்பர்டு உயர்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கிப்படித்தேன். அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். எனது அப்பா கஷ்டப்பட்டு பணம் சேர்த்து அனுப்புவார். வேலை செய்து கிடைக்கும் பணத்தை எனது அக்காள்களும் அனுப்புவார்கள். அதனால்தான் பள்ளிப் படிப்பைப் படிக்க முடிந்தது. 2012ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 439 மதிப்பெண்கள் பெற்றேன்.
என்னை மேற்கொண்டு படிக்க வைப்பதற்கு வீட்டில் வசதி இல்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்திருந்த வேளையில், நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றதைப் பார்த்து எங்களது ஊர் பஞ்சாயத்துத் தலைவர் கண்ணன் சார், என்னை அரூருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அன்னை மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கச் சேர்த்து விட்டார். அங்கு படிக்கக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. விடுதியில் தங்கவும் சாப்பிடவும் அவர்கள் பணம் எதுவும் வாங்கவில்லை. அங்கு கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். இங்கும் தமிழ் மீடியம்தான். எப்படியாவது படித்து கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்பது எனது ஆசை. எனவே, தொடர்ந்து நன்றாகப் படிப்பதில் கவனம் செலுத்தினேன்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் எம்பிபிஎஸ் படித்து முடித்தேன். தற்போது, சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவத்தில் எம்.டி. படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
2014இல் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அத்தேர்வில் 1200க்கு 1145 மதிப்பெண்கள். உயிரியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றேன். இயற்பியல் பாடத்தில் 198 மதிப்பெண்களும் வேதியியல் பாடத்தில் 199 மதிப்பெண்களும் பெற்றேன். எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 199.25. அந்த ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான மாநில அளவிலான தகுதிப் பட்டியலில், பழங்குடியினரில் நான்தான் முதல் ரேங்க். எனவே, சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்தது.
கல்லூரியில் படிக்க அகரம் பவுண்டேஷன் உதவும் என்று சொன்னார்கள். அதற்கு விண்ணப்பித்தேன். நான் படிப்பதற்கு அகரம் பவுண்டேஷன் உதவியது. அதனால் கட்டணம், விடுதியில் தங்கிப் படிக்க செலவு ஆகியவற்றை அகரம் பார்த்துக் கொண்டது. எனக்கு வந்த ஸ்காலர்ஷிப் தொகையையும் நண்பர்கள் உதவியும் கல்லூரியில் படிக்கும்போது எனது மற்ற செலவுகளுக்கு உதவியது.
மலை கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதல் ஆண்டில் சேர்ந்தபோது எனக்கு பிரமிப்பாக இருந்தது. மருத்துவக் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் நடத்துவார்கள். பள்ளி முழுக்க தமிழ் வழியில் படித்த எனக்கு முதலில் பாடங்கள் புரிவதற்கு சிரமமாக இருந்தது. அப்புறம் நண்பர்கள் உதவியுடன் பாடங்களைப் புரிந்து கொண்டு படித்தேன். ஆனாலும், எந்தத் தேர்விலும் அரியர்ஸ் இல்லை. அனைத்துத் தேர்வுகளிலும் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றுவிட்டேன். கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் எம்பிபிஎஸ் படித்து முடித்தேன்.
அடுத்து, எம்டி படிக்க வேண்டும் என்பதற்காக முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்குத் தயாரானேன். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் முதுநிலை நீட் நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்கு ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. எனது நண்பர்கள் பணம் கொடுத்து உதவினார்கள். எங்கள் ஊரில் இருந்தால், இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதில் பிரச்சினை இருக்கும் என்பதால் சென்னையிலேயே இருந்தேன். இதற்கிடையே, தனியார் மருத்துவமனையில் பகுதி நேரமாக வேலைக்குச் சேர்ந்தேன். அதனால் கிடைத்த வருமானத்தை வைத்து நண்பர்களிடம் வாங்கிய தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
தற்போது, சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவத்தில் எம்.டி. படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இந்தப் படிப்பைப் படிக்க ஸ்டைபண்ட் கிடைக்கும். எம்.டி. படித்து முடித்து விட்டால் அரசு மருத்துவமனைகளில் வேலை கிடைக்கும்.
இதற்கிடையே, எனது ஊருக்கு அருகே உள்ள அரசுப் பள்ளியை நன்றாக நடக்கச் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். பலருடன் கலந்து பேசி, அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதனால் எங்கள் பகுதி குழந்தைகளுக்கு நன்கு படிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும். எங்களைப் போன்றவர்கள் படிப்பின் மூலம்தான் முன்னேற முடியும். எனக்குப் பிறகு, எனது ஊரிலிருந்து எனது சித்தப்பா பையன் வழக்கறிஞராகி இருக்கிறார். நாங்கள் முன்னேறிய மாதிரி எங்கள் பகுதியில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் படித்து முன்னேற வேண்டும் என்கிறார் டாக்டர் ஏழுமலை.
Read in : English