Read in : English

கோவிட்-19 தொற்றுப்பரவல் ஆரம்பித்து சுமார் இரண்டாண்டுகள் முடிந்த இந்நேரத்தில், உலகச் சுகாதார நிறுவனம் வைரசுக்கு எதிராக எளிமையானதோர் பாதுகாப்பு நெறிமுறையை வலியுறுத்துகிறது: மற்றவர்களுடன் நெருக்கமாக நிற்பதைத் தவிர்த்து இடைவெளிவிட்டு பேசுங்கள்; காற்றோட்டமில்லாத, கூட்டமாகக் கூடிநிற்கும் அறைகளில் இருப்பதைத் தவிருங்கள்; மாசுபடும் சாத்தியமுள்ள தளங்களைத் தொட்டவுடன் முகத்தைத் தொடாதீர்கள். சரியான முகக்கவசத்தை, குறிப்பாக என்95, எஃப்எஃப்பி2, கேஎன்95 அல்லது கேஎஃப்94 தரம்கொண்ட முகக்கவசத்தை அணியுங்கள்; அறுவைச் சிகிச்சையின் போது மருத்துவர்கள் அணியும் மூன்றடுக்கு இழைகள் கொண்ட இரட்டை முகக்கவசமும், அதன்மேல் துணிக்கவசமும் இணைந்த பாதுகாப்பான கவசத்தை அணியும்படி பொதுச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். முழுமையான தடுப்பூசியோடு  முகக்கவசமும் நோய்த்தடுப்பு முறையாக விளங்குகிறது.

டிசம்பர் 27, 2021 தொடங்கி ஜனவரி 2, 2022 வரையிலான வாரத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட ஓமைக்ரான் பாதிப்புகள், முந்திய பாதிப்புகளோடு ஒப்பிடுகையில், 71 சதவீதம் பெரும்பாய்ச்சலோடு அதிகரித்துள்ளன. வேகமாகப் பரவிவரும் தொற்றுக்களால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, கடந்த ஆண்டு இறுதியில் அரசாங்கங்கள் தங்களின் பழைய நடைமுறைகளுடன் களத்தில் இறங்கியிருக்கின்றன. புத்தாண்டுக் கொண்டாட்டத் திட்டங்கள் எல்லாம் பிசுபிசுத்துப் போய் ஏமாற்றத்தில் முடிந்துவிட்டன.

ஓமைக்ரான் வருகைக்கு முன்புவரை, அண்மைக் காலத்தில் கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகள் தமிழ்நாட்டில் காற்றில் பறக்கவிடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.

ஓமைக்ரான் வருகைக்கு முன்புவரை, அண்மைக் காலத்தில் கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகள் தமிழ்நாட்டில் காற்றில் பறக்கவிடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். வாழ்க்கை அப்போது வழமையான கதிக்குத் திரும்பியிருந்தது; ஓட்டல்களில், மதுக்கூடங்களில், கடைவீதிகளில், கேளிக்கை அரங்குகளில் மக்கள் திரள் மீண்டும் கூடியது; தொற்றுப்பரவல் தடைகளில் களைத்துப்போன மக்கள்,  அதிமோசமான காலக்கட்டம் முடிந்துவிட்டது என்று நம்பினார்கள். மாநகரப் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் முகக்கவசத்தை விட்டொழித்து நம்பிக்கையோடு பணிசெய்தனர். ஆட்டோ ஓட்டுநர்களை முகக்கவசம் அணியும்படி நம்மால் கேட்டுக்கொள்ள முடியவில்லை. அப்படி கேட்டால் உங்கள் மனநிலை சரியில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.

இந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. உருமாறிய ‘வைரஸ்’ படையெடுக்க ஆரம்பித்துவிட்டது. ஓமைக்ரான் ஒரு மிதமான வைரஸ்  வகையறா என்று மக்கள் நினைத்தாலும், மீண்டும் சாலைகளில் இப்போது தடைகள்; இரவுக் கட்டுப்பாடு; சில கடைகளும், உணவகங்களும் சீக்கிரமாகவே மூடிக் கிடக்கின்றன; பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு ஏகப்பட்ட தடைகள். ஜனவரி 9-ஆம் தேதியன்று முழுமையான ஞாயிறு ஊரடங்கு விதிக்கப்பட்டது.

இப்போது விவாதப்பொருள் இந்த ஊரடங்கு அல்லது இரவுக்கட்டுப்பாடு உருப்படியான பலனைத் தருகிறதா என்பதுதான். ஓமைக்ரானை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தமிழ்நாட்டின் நிலைமையை அவதானிக்கும் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் ஜனவரி 4ஆம் தேதி சொல்லியிருக்கிறார். அது ஒன்றும் சாதாரண ஜலதோஷம் இல்லை; உடலுக்குள் இருக்கும் ஆரோக்கிய அமைப்புகளை முற்றுகையிட்டுத் தகர்க்கக்கூடியது என்று எச்சரித்திருக்கிறார் அவர். அதன் பரவல் திடீரென்றும், ஆகப்பெரியதாகவும் இருக்கும் என்பதால், பெருகிவரும் நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்வதற்கான, அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதற்கான, அவர்களைக் கவனிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்வது மிகமுக்கியம் என்று ’டிவிட்டரில்’ சொல்லியிருக்கும் அவர், இந்த விஷயத்தில் தன் சகபணியாளர் மேரியா வான் கெர்கோவேவின் கருத்தை வழிமொழிகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட வைரஸ் பற்றிய நல்ல புரிதல் இப்போது உலகம் முழுவதும் இருப்பதால், ஊரடங்கு தேவையில்லை என்று டாக்டர் சுவாமிநாதன் சொன்னதாக ஹிந்து ஆங்கில நாளிதழ் அவரை மேற்கோள் காட்டியிருக்கிறது.

அவநம்பிக்கை உதவாது

ஆயினும் ஆரம்பத்திலிருந்தே கோவிட்டைப் பற்றி சந்தேகம் எழுப்பியவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தல், மொத்தத்தையும் மறுதலித்தல், பொதுவெளியில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க மூர்க்கத்தனமாக மறுத்தல் போன்ற அவநம்பிக்கைகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. முன்பு 2.74 மில்லியன் கோவிட் கேஸ்களையும், 36,784 மரணங்களையும் சந்தித்த தமிழ்நாடு, 2022 ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, வெறும் 8,340 கேஸ்களை மட்டுமே பார்த்தது; இந்த நம்பிக்கையான போக்கைத் தலைகீழாக மாற்றிவிட்டது இந்தப் புதிய வைரஸ்.

ஆனால், இப்போதயைப் பிரச்சினை இந்த ஊரடங்கு என்ன சாதிக்கப் போகிறது என்பதுதான். சோதனைக் காலம் முடிந்துவிட்டது என்ற பிம்பத்தைத் தவிர்க்க, மாநில, ஒன்றிய அரசுகள் தொற்றுப்பரவல் காலம் முழுவதும் மிகவும் கவனமாக சில தடைகளை விதித்தன; பயணம் செய்வதற்குத் தடுப்பூசிச் சான்றிதழ் வேண்டும் என்று வலியுறுத்தின.

பள்ளி, கல்லூரிப் படிப்புகளுக்கு ஏற்பட்ட பற்பல இடைஞ்சல்களுக்குப் பின்பு இப்போது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வியைத் தொடர்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அரசியல்வாதிகள் சிறுதொழில்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் சலுகைகள் கொடுப்பதுபற்றிப் பேசுவதே இல்லை. பொதுமக்கள் பொறுமை  இழந்துகொண்டிருக்கிறார்கள்.

புத்தாண்டுக்கு முந்தைய தடைகள்

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் கடற்கரைகளை இழுத்துமூடியும், பொங்கலுக்கு நிறைய கூட்டங்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய அரசியல், சமூக, கலாச்சார நிகழ்வுகள் மீதான தடைகளை விரிவாக்கியும், தமிழகஅரசு தன் பணியைச் செவ்வனே செய்தது. இந்தப் புதிய ஆண்டின் முதல் வாரத்திலே தொற்றுவழக்குகள் மேலும் ஏறுமுகம் காணத் தொடங்கியவுடன், தடைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டன. கடந்த ஞாயிறு ஊரடங்கின்போது ஏற்கனவே திட்டமிட்டிருந்த திருமணங்களுக்கும், மிக அவசியமான பயணங்களுக்கும் மட்டும் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டன. எனினும், ஊடகங்கள் அந்த ஊரடங்கை முழுமையான, அமைதியான ‘வெற்றி’ என்று வர்ணித்தன.

காவல்துறை உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு என்பது நுணுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட வியூகம் அல்ல. சார்ஸ்-கோவ்-2 என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாத நேரத்தில், நோயையும், நோயாளிகள் மருத்துவமனைகளில் சேருவதையும், மரணங்களையும் கடுமையான ஊரடங்கு சற்று குறைத்தது. இது 2020-ஆம் ஆண்டின் முதல் அலையில் கிடைத்த சான்று. ஊரடங்கின் குறுகியகாலப் பலன் சுகாதாரத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குத்தான். ஏனென்றால்  மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளைச் சமாளிக்க அவர்களைத் தயார்நிலையில் வைத்தது ஊரடங்கு. இது இன்றைய ஓமைக்ரானுக்கும் பொருந்தும்.

  தொற்று உச்சத்தைத் தொடும் காலகட்டங்களில் குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், குடும்பங்களைக் கவனிப்பதற்கும் ஒரு நல்ல ஏற்பாட்டைச் செய்து தரவேண்டும். குறிப்பாக வீட்டுக்கடன் போன்ற மாதக்கடன் தவணைகளைச் செலுத்துவதிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கலாம்.

தமிழ்நாட்டின் முதலாவது, இரண்டாவது அலைகளில் 120 மருத்துவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இந்திய மருத்துவக் கழகம் சொல்கிறது. முதல் அலையில் 67 மருத்துவர்களும், எண்ணிறந்த செவிலியர்களும், சுகாதாரப் பணியாளர்களும் இறந்துவிட்டனர். 2020ஆம் ஆண்டு இறுதிவாக்கில் வந்த தடுப்பூசி, சுகாதாரப் பணியாளர்களின் அழுத்தத்தைச் சற்று இலகுவாக்கியது. ஆனால் டெல்டா வைரஸ் 2021-இல் நாட்டை அசைத்துப் பார்த்தது.

மறைக்கப்பட்ட மரணங்கள்

நன்றாக இயங்கும் பொதுவிநியோக அமைப்பு பலருக்கு உணவளிக்கிறது. உண்மைதான்.  ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி ஏற்பாடுகள்  செய்யாமல் கொண்டுவரப்படும் ஊரடங்கு, நிகழும் பல மரணங்களை மறைத்துவிடுகிறது. நிதி நெருக்கடி 2008-09-ல் உச்சத்தில் இருந்தபோது அதிக அளவில் இருந்த தற்கொலை விகிதம் அடுத்த பத்தாண்டில் நன்றாகவே சரிந்தது. ஆனால் கோவிட்-19 வந்து பலபேரை வறுமைக்குள் தள்ளியது என்பதற்கு சில புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், பலர் கடனில் மூழ்கிவிட்டார்கள். அலைபேசிச் செயலிகள் மூலம் ஏற்கனவே இருந்த கடன்களை அடைக்க அதிவட்டிக் கடன்கள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து பலரைச் சிக்கவைத்து விட்டார்கள். ”உங்கள் கடன் அட்டையைத் தடவி ரொக்கம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற அறிவிப்புகள் பொதுவெளி எங்கும் நிரம்பக் கிடக்கின்றன. நல்ல சம்பளம்தரும் பணிகள் இல்லாமல் கடன்களை அடைக்கமுடியாது. தொற்று உச்சத்தைத் தொடும் காலகட்டங்களில் குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், குடும்பங்களைக் கவனிப்பதற்கும் ஒரு நல்ல ஏற்பாட்டைச் செய்து தரவேண்டும். குறிப்பாக வீட்டுக்கடன் போன்ற மாதக்கடன் தவணைகளைச் செலுத்துவதிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கலாம்.

தொற்றுப்பரவல் காலத்தில் வீட்டுக்கு வந்து உணவு, அவசிய பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை வழங்கும் வழக்கம் நிலைபெற்றுவிட்டது. ’ஊரடங்கின்’போது அவற்றை தடைசெய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வகுப்பிற்கு வருவதற்குப் பதில் அவர்களைக் குழுக்களாகப் பிரித்து வகுப்புகளுக்கு வரவைக்கலாம். திறந்தவெளிச் சூழல்களில் வகுப்புகளை நடத்தலாம். இவ்வாறு பள்ளிகள் இயங்கலாம்.

தொற்று அறிகுறிகள் கொண்டவர்களைக் கூட்டுப் பரிசோதனைகள் செய்து தமிழகஅரசு பரிசோதனைகளை விரிவுபடுத்தலாம். இது, மருத்துவமனைகளில் நோய்ப்பரவலைத் தடுத்து மற்றவர்கள் எதிர்கொள்ளும் அபாயத்தைக் குறைக்கும். இப்போது பொதுவெளியில் இருக்கும் ‘ஆர்டி-பிசிஆர்’ சோதனைமுறை வசதி, குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் குறைந்துவிட்டது;  அதிகக் கட்டணத்தில் தனியார் பரிசோதனைத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. முகக்கவசம் இல்லாமல் மக்களை பொது இடங்களில் நடமாட அனுமதிப்பதில் எந்த லாபமும் இல்லை. பரிசோதனை, நோய்க்கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை செய்தல் என்ற இந்தத் தொடர் செயற்பாட்டுக்கு அரசின் தீவிர ஆதரவு தேவை.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival