Read in : English

பெரும்பாலான இளைஞர்களை சராசரி ஸ்போர்ட்ஸ் பைக்குகளைக் கைவிட்டு, மெதுவான, கனமான  உல்லாச வண்டிகளைப் பயன்படுத்த வைத்த புகழ்பெற்றதோர் வணிகச் சின்னம் ராயல் என்ஃபீல்டு. அழிவின் விளிம்பில் இருந்த ராயல் என்ஃபீல்டு, எய்ச்சர் மோட்டார்ஸ் என்னும் பெருவாகன உற்பத்தி நிறுவனத்தால் புத்துயிர்ப்பெற்று உலகம் முழுவதும் தனது வீச்சைப் பரப்பி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தயாரித்த மோட்டார் சைக்கிள்கள் கவர்ச்சியாக இருந்ததோடு, இந்திய மக்களின் மனங்களில் அதன் பிராண்ட் நிலையான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதிவேகத்திற்குப் பேர்பெற்றது இல்லையென்றாலும், அதன் வண்டிகள் ஓட்டுபவர்களையும், பின்னிருந்து சவாரி செய்பவர்களையும், சாலைகளிலும், சாலையல்லாத வழிகளிலும் இலகுவாகப் பயணம் செய்ய வைத்தன.

’லெக்டு’ போவதற்கு ஆகச்சிறந்த வாகனம் அந்தப் புல்லட்தான் என்று  மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்குத் தெரியும். (’லெக்டு’ என்பது ஜம்மு, காஷ்மீரில் இருக்கும் ‘லெக்’, ‘லடாக்’ ஊர்களின் கொச்சைவடிவம்). மற்ற மோட்டார் சைக்கிள்களை விடவும் உயர்மலைப் பிரதேசங்களில் சவாரி செய்வதை புல்லட்டின் எஞ்சின் அழுத்தம் தாங்கிக்கொள்கி|றது.

டில்லியில் உள்ள வாடகை மோட்டார் சைக்கிள் வணிகர்கள் பைக் ஓட்டுநர்களின் ’லெக்டு’ போகும் தேவையைப் பூர்த்திசெய்து தொழில் செய்கிறார்கள். சொந்தமாக என்ஃபீல்டு வண்டி இல்லாதவர்களுக்கு,  புல்லட்டுகள் வாடகைக்குக் கிடைப்பது மிகவும் வசதியாக இருக்கிறது.

புதிய தலைமுறை எஞ்சின்கள் வர ஆரம்பித்தவுடன், அதிகத்திறன், கெட்டியான கட்டுமானம், நாகரிகமான தொழில்நுட்பம், செளகரியமான  சவாரி ஆகிய அம்சங்கள் கொண்ட புதிய தலைமுறை வாகனங்கள் வாங்கக்கூடியதாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளாக, ராயல் என்ஃபீல்டுகள் அனுபவமிக்க ஓட்டுநர்களையும், புதிய ஆர்வலர்களையும் ஒருசேர கவர்ந்து விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன.

அதிவேகத்திற்குப் பேர்பெற்றது இல்லையென்றாலும், அதன் வண்டிகள் ஓட்டுபவர்களையும், பின்னிருந்து சவாரி செய்பவர்களையும், சாலைகளிலும், சாலையல்லாத வழிகளிலும் இலகுவாகப் பயணம் செய்ய வைத்தன.

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்று ஓர் உலகளாவிய பிராண்ட்.  எல்லாக் கண்டங்களிலும் அதனுடைய விசுவாசிகள் இருக்கிறார்கள். இந்தியச் சந்தையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய அந்த  நிறுவனத்திற்கு, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய சந்தைகள் கூப்பிடுதூரத்தில்தான்  இருக்கின்றன.

ஹார்லே டேவிட்சன் மோட்டார் வண்டிகளுக்கு ஒரு மாற்றாக இல்லாமல், ராயல்  என்ஃபீல்டு தனித்துவத்துடன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. உதாரணமாக, ராயல்  என்ஃபீல்டு அமெரிக்காவில் மேற்கொண்ட பரப்புரையில் தனது இன்டெர்செப்டர் 650 வண்டியை கலிஃபோர்னியா கடலில் மிதந்துகொண்டே வழுக்கி ஓடுபவர்களுக்கான (சர்ஃபர்) மோட்டார் சைக்கிள் என்று வர்ணிக்கிறது. தேவையான  ’சர்ஃப் போர்டு’ வண்டியின் பக்கவாட்டில் இருக்கிறது. சொல்லப்போனால், கலிஃபோர்னியாவின் சூரிய ஒளியில் புத்துணர்ச்சிமிக்க காலைப்பொழுதில் கடலில் ‘சர்ஃப்’ செய்வது பல அமெரிக்கர்களின் கனவு. இந்த அமெரிக்கா அலைகளைச் சரியாகப் பிடித்துக்கொண்டு அவற்றில் சவாரி செய்கிறது ராயல் என்ஃபீல்டு.

2018-இல் இன்டெர்செப்டர் 650, மற்றும் கான்டினென்டல் ஜி.டி 650 ஆகிய வண்டிகள் அமெரிக்காவில் அறிமுகம் ஆனதிலிருந்து, மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் அன்றாடப் பயணத்திற்கு நல்ல, நடுத்தர வீச்சுகொண்ட  வாகனம் கிடைத்தது.

டாலர் 5,999 விலை கொண்ட (இந்திய பணத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய்) ராயல் என்ஃபீல்டின் இந்த இரண்டு வாகனங்கள், ஹார்லே டேவிட்சனுக்கு நல்ல போட்டியாக அமைந்தன. மிகவும் சல்லிசான ஹார்லே டேவிட்சன் வண்டியின் அடிப்படை விலையே வட அமெரிக்காவில் இப்போது டாலர் 9,750  (சுமார் 7.25 லட்சம் ரூபாய்).

ஹார்லே வாகனத்தின் ’வி-ட்வின்’ எஞ்சினோடு ஒப்பிடும்போது, ராயல் என்ஃபீல்ட் ’650’ வண்டியின் எஞ்சின்கள் அதிகச் சமச்சீர்வானவை; அதிகத்   திறன்கொண்டவை; மென்மையான ஓட்டம் தருபவை. எனினும் ஹார்லே வாகனத்தின் ’வி-ட்வின்’ எஞ்சின்களில் இருந்த சுழல் முறுக்கு விசையும், ஆற்றலும் என்ஃபீல்ட் வண்டியை விட அதிகம்.

நிதியாண்டு 2020-21 நிலவரப்படி, ராயல் என்ஃபீல்ட்டுக்கு அமெரிக்காவில் 49   தனிப்பட்ட வணிக வளாகங்கள் இருக்கின்றன; 170-க்கும் மேலான டீலர்கள் இருக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு ஜூலையில், ராயல் என்ஃபீல்டு மெக்ஸிகோ சந்தையில் நுழைந்தது. ஏழு தனிப்பட்ட கடைகளை நிறுவியது. அங்கே  இன்டெர்செப்டர் 650-ன் விலை 160,000 மெக்ஸிகன் பெஸொஸ் (சுமார் 5.8 லட்சம் ரூபாய்).

ராயல் என்ஃபீல்ட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே அதன் அசெம்பிளி யூனிட் தென் அமெரிக்காவில் அமைந்தது சமீபத்து நிகழ்வு.  அர்ஜெண்டினாவில் பியூனாஸ் ஏரஸ் மாநகரில் ‘முற்றிலும் உதிரியாக்கப்பட்ட பாகங்களை’ சேர்த்துருவாக்கும் ஆலையை நிறுவியது. இந்த ஆலை உற்பத்தியால் எதிர்காலத்தில் விநியோகம் மேலும் திறனோடும் வேகமாகவும் இயங்கும்.

பிறந்த வீடான பிரிட்டனில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரித்திருக்கிறது; அங்கீகாரமும் ஏறியிருக்கிறது. பிரிட்டன் உட்பட பல்வேறு ஐரோப்பா நாடுகளில் இருக்கும் என்ஃபீல்டு நேசர்கள், தங்கள் கண்டத்தில் மீள்வருகை புரிந்திருக்கும் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களை வரவேற்கிறார்கள்.

பிரிட்டனில் இன்டர்செப்டர் 650 ’எம்சிஎன் பெஸ்ட் ரெட்ரோ பைக் ஆப் தி இயர்’ விருதை அடுத்தடுத்து இரண்டு முறை பெற்றிருக்கிறது. இது போதாது என்று, அந்த வாகனம் பிரிட்டனில் 2019 ஆகஸ்டிலிருந்து 2020 அக்டோபர் வரை அதிக விற்பனையைச் சாதித்த நடுத்தர எடை கொண்ட மோட்டார் சைக்கிளாக இருந்திருக்கிறது. 2020-21-க்கான நிதியாண்டு அறிக்கைப்படி, 36 தனிப்பட்ட கடைகள்  உட்பட 420 சில்லறை கடைகளோடு ஐரோப்பா என்ஃபீல்டின் ஆகப்பெரிய வெளிநாட்டுச் சந்தையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்று ஓர் உலகளாவிய பிராண்ட்.  எல்லாக் கண்டங்களிலும் அதனுடைய விசுவாசிகள் இருக்கிறார்கள்.

தெற்காசியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ராயல் என்ஃபீல்டு ‘இந்தியாவில் உருவான’ மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி தன் விளையாட்டைப் பிரமாதமாகத் தொடங்கிவைத்தது. தாய்லாந்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ’மத்தியதர எடைப்பிரிவில் ஆகச்சிறந்த நவீன செவ்வியல்’ வாகனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்டெர்செப்டர் 650 விருது வாங்கியது.

தாய்லாந்து ஒரு சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால், அந்த நாட்டில் மோட்டார்  சைக்கிள் வாடகைத் தொழில் அபரிமிதமாக வளர்ந்தது. இந்தத் தொழில் அபிவிருத்தியைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்குடன், ராயல்  என்ஃபீல்டு தாய்லாந்தின் மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்களுடன் இணைந்துச் செயல்படுவது பற்றிச் சொல்லியிருக்கிறது.

கொல்லன் வீதியிலே ஊசி விற்கும் தைரியத்தோடு ராயல் என்ஃபீல்டு ஜப்பானில் நுழைந்திருக்கிறது. பல தசாப்தங்களாக ஆகச்சிறந்த உல்லாச இருசக்கர வாகனங்களை உற்பத்திசெய்கிற ஜப்பான், ராயல் என்ஃபீல்டின் கம்பீரமான நுழைவை ஆச்சரியமாகப் பார்க்கிறது.

மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் ஆகச்சிறந்த நான்கு நிறுவனங்களைக் கொண்ட ஜப்பானின் டோக்கியோ நகரில் ராயல் என்ஃபீல்டு, தனது அதிமுக்கியமான, தனித்துவமான வணிக வளாகத்தை நிறுவியிருக்கிறது.

ஜப்பானில் விற்கப்படும் ராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் விலையும், மற்ற மோட்டார் சைக்கிள்கள் விலைகளும் ஒப்பீட்டு ஆய்வுக்காகக் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஜப்பானிய ’என்’னில் விலை இந்திய ரூபாயில் விலை (தோராயமாக) மோட்டார் சைக்கிள் மாடல்
852,500 5.5 Lakhs ராயல் என்ஃபீல்டு இன்டெர்செப்டார் 650 சிசி
950,000 6.1 Lakhs எமஹா போல்ட் 950சிசி
800,000 5.1 Lakhs ஹோண்டா ரிபெல் 500 சிசி
550,000 3.5 Lakhs ஹொண்டா ஜிபி 350 சிசி
785,000 5 Lakhs சுசூகி எஸ்வி 650சிசி
913,000 5.9 Lakhs கவாசாகி வல்கன்

 

ஜப்பான் சந்தையில் உல்லாச மோட்டார் சைக்கிள்களுக்குப் பஞ்சமில்லை. எனினும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் (யமஹா, ஹோண்டா, சுசூகி, கவாசாகி) போட்டிப்போடும் முறையில் ராயல் என்ஃபீல்டு இன்டெர்செப்டார் 650-இன் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானியர்கள், புதிய அனுபவங்களுக்குத் தயாராகவே இருப்பவர்கள். அதனால் ராயல் என்ஃபீல்டு ஜப்பானில் சிறப்பாக வாணிகம் செய்யும் என்பது நிச்சயம்.

2020-இல் ராயல் என்ஃபீல்டு, ’மீட்டியர் 350’ என்னும் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதும் புதிதாய் வண்டி ஓட்டுபவர்களிடம் அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பா, ஆசியா-பசிஃபிக் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பட்ஜெட் விலையில் ஒரு மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தவேண்டிய தேவை இருந்தது. இந்தச் சந்தைகளில் நுழைவு நிலை மோட்டார் சைக்கிள் தேவையை ‘மீட்டியர் 350’தான் பூர்த்தி செய்தது.

தாய்லாந்தில் 2021-ஆம் ஆண்டின் ’250 சிசி-க்கு மேற்பட்ட சிறந்த நவீன செவ்வியல் மோட்டார் சைக்கிள்’ விருதை ‘மீட்டியர் 350’ பெற்றதோடு இல்லாமல்,  ஆஸ்திரேலியா, ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருக்கும் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களிடமும் பெரும்வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

இயற்கையெழில் கொஞ்சும் தடங்கள் வழியாகக் குழுக்களாக முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பயணங்களை ராயல் என்ஃபீல்டு கிளப் நடத்தியிருக்கிறது; இனியும் தொடர்ந்து நடத்தும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் ‘ரைடர் மேனியா’ திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ராயல் என்ஃபீல்டு ஆர்வலர்கள் ஒன்றுகூடி அதைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

ராயல் என்ஃபீல்டு வணிகம் செய்யும் ஒவ்வொரு நாட்டிலும் சங்கங்கள் இருக்கின்றன. அந்தச் சங்கங்கள் பல்வேறு இடங்களுக்குக் குழுச்சவாரி நிகழ்வை நடத்தி கொண்டிருக்கின்றன.

இன்று ராயல் என்ஃபீல்டு 26 நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு வெளியே அதன் சில்லறை விற்பனை மையங்கள் 60-க்கு மேல் இருக்கின்றன. உலகம் முழுவதும் 7.8 மில்லியன் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் இணைய உலகத்தில் இணைந்து செயல்படுகிறார்கள். ’மோட்டார்சைக்கிள் பிராண்ட்’ இனத்தை இணையத்தில் உருவாக்கி வெற்றிநடைப்போட்டு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். அப்படி என்ன இருக்கிறது அதில்? இந்தக் கேள்விக்கான விடை அதனுடைய 120 வருடத்து வரலாற்றில் இருக்கிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival