Read in : English
அல்லு அர்ஜூன் நடித்த, சுகுமார் இயக்கிய புஷ்பா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா ஓ சொல்றியா பாடல்தான் அண்மையில் தமிழக இளைஞர்கள் அநேகரின் உதடுகள் உச்சரித்த மந்திரப் பாடலாக இருக்க வேண்டும். ஓ சொல்றியா பாடல் பற்றிய செய்திகளை வெளியிடாத அச்சு இதழ்களோ, இணைய இதழ்களோ இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் தமிழ்ச் சமூகம் இந்தப் பாடலை அநியாயத்துக்குக் குறுக்குவெட்டு நெடுக்குவெட்டு செய்து அந்தப் பாடலின் பொருளை அலசி ஆராய்ந்துவருகிறது.
இதுவரையான தமிழ்ப் பாடல்களில் வெளிப்படாதவகையில் இந்தப் பாடல் வெளிப்பட்டுள்ளது என ஒரு சாரார் பாடலைச் சொல்கிறார்கள். வெளக்க அணச்சா போதும் எல்லா வெளக்குமாறும் ஒண்ணுதான் என்னும் வரிகளுக்காகக் கிறங்கிப் போயிருக்கிறார்கள் இவர்கள். இந்தப் பாடல் உண்மையிலேயே ஆண்களை இழிவுபடுத்துகிறதா, ஆண்களின் நச்சு மனத்தை வெளிப்படுத்துகிறதா என்பதற்கு முன்னர் இப்படியான பாடல்கள் தமிழில் இப்போதுதான் வெளிவருகிறதா என்பதைப் பார்த்துவிடலாம்.
1968இல் வெளிவந்த படம் பணமா பாசமா படத்தில் இடம்பெற்ற எலந்த பழம் எலந்த பழம் என்னும் பாடல் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியடைந்தது. இந்தப் பாடலை எழுதிய கவிஞர் கண்ணாதாசனே இப்படி ஒரு பாடலை எழுதிவிட்டோமே என வெட்கப்படும் அளவுக்குப் பாடலின் வெற்றி அமைந்தது
.குடும்பப் பாங்கான படங்களுக்காகப் பெயர்பெற்ற இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் 1968இல் வெளிவந்த படம் பணமா பாசமா. இந்தப் படத்தில் இடம்பெற்ற எலந்த பழம் எலந்த பழம் என்னும் பாடல் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியடைந்தது. இந்தப் பாடலை எழுதிய கவிஞர் கண்ணாதாசனே இப்படி ஒரு பாடலை எழுதிவிட்டோமே என வெட்கப்படும் அளவுக்குப் பாடலின் வெற்றி அமைந்தது. இந்தப் பாடல் காட்சிக்கு நடனமாடிய விஜய நிர்மலா பின்னாளில் அதிகப் படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்னும் காரணத்துக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது வரலாற்று விசித்திரம். அந்தப் பாடல் காட்சியாக்கப்பட்ட விதத்தில் பாடலைப் பார்க்கும் எந்தப் பெண்ணையும் சட்டென முகஞ்சுளிக்கவைத்துவிடும். இது கறுப்பு வெள்ளைக் காலத்தில் வந்த பாடல்.
பொதுவாக, நமது படங்களில் ஆணும் பெண்ணும் இணைந்து பாடும் பெரும்பாலான காதல் பாடல் காட்சிகள் ஆடையணிந்த நீலப் படங்களோ என்னும் அளவுக்கு அவற்றில் விரசம் தலைவிரித்து ஆடுவதும் அங்க அசைவுகள் ஆபாசம் கொப்பளிக்க வெளிப்படுவதும் சாதாரணம். பெண்ணுடலை நுகர்வுப் பொருளாகச் சித்தரித்துக் கடைபரப்பும் பாடல் வரிகளைக் கொண்ட பாடல்கள் பெரிய வெற்றி பெறுவதும் இங்கே அடிக்கடி காணக் கிடைக்கும் காட்சிகளே. வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் எழுதிய பாடல்களில் காணப்படும் விரசங்களையும் ஆபாசங்களையும் பற்றி எவ்வளவோ எழுதப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் பாமரன் வாலி+வைரமுத்து= ஆபாசம் என ஒரு நூலே எழுதியிருக்கிறார்.
இந்தப் பாடல்களிலிருந்து வேறுபட்டதா ஓ சொல்றியா மாமா பாடல்? இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேகா இது சும்மா ஜாலியாக எழுதிய பாடல் என்கிறார். இப்படிப்பட்ட பாடலாசிரியர் ஆண்களை இழிவு படுத்திவிட்டார் என ஒரு சாரார் சொல்லிவருவதைப் பார்க்கும்போது நகைக்கத் தோன்றுகிறது.
இந்தப் பாடல்களிலிருந்து வேறுபட்டதா ஓ சொல்றியா மாமா பாடல்? இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேகா இது சும்மா ஜாலியாக எழுதிய பாடல் என்கிறார். பிபிசி தமிழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இதை ஒரு ஐட்டம் சாங் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நேர்காணல் பெண் ஒருவர் பெயரில் வெளியாகியிருக்கிறது. ஐட்டம் சாங் என்னும் அந்தச் சொல்லை எந்தவிதமான கூச்சமுமின்றிக் கூறியிருக்கிறார் பாடலாசிரியர் விவேகா. இப்படிப்பட்ட பாடலாசிரியர் ஆண்களை இழிவு படுத்திவிட்டார் என ஒரு சாரார் சொல்லிவருவதைப் பார்க்கும்போது நகைக்கத் தோன்றுகிறது. இந்தப் பாடல் உண்மையிலேயே பெண்களைப் பரிவுடன் அணுகும் பாடலா என்ற கேள்வியும் எழுகிறது.
எண்பதுகளில் வாங்க மாப்பிள்ள வாங்க என்னும் படத்தில் டி.கே.எஸ்.நடராஜன் பாடிய என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மை என்னும் பாடல் அப்போது வெகு பிரபலமானது. இதோ போல் அவர் பேய்வீடு என்னும் படத்துக்காகப் பாடிய அத்த பெத்த மல்லியப் பூவு என்னும் பாடலும் அநேகரால் கேட்கப்பட்டது. இந்த இரண்டு பாடல்களுமே ஆண், பெண் உறவு தொடர்பான கிளுகிளுப்பான சங்கதிகளைக் கொண்டிருக்கும். நாட்டுப்புறப் பாடல்களின் சாயலில் அமைந்த பாடல்கள் இவை. அறுபதுகளின் இறுதியில் எலந்தப் பழம் என்றால் எண்பதுகளில் என்னடி முனியம்மா தொண்ணூறுகளில் எப்படி எப்படி நீ சமஞ்சது எப்படி என எழுதிக் கவிஞர் வாலி தமிழின் கீழான ரசனைக்குத் தீனி போட்டார். சிம்பு நடித்த குத்து படத்தில் இடம்பெற்ற போட்டுத் தாக்கு பாடல் வரை வாலியின் வரிகள் வாலிக்கே இழுக்கைத் தந்தவை. பாடலாசிரியர் வைரமுத்து என்ன சளைத்தவரா? இவரது பல பாடல்கள் கவிஞரைச் சந்திக்கு இழுத்துவிடும் வல்லமை பெற்றவை.
ஜேஜே என்னும் படத்துக்காக இவர் எழுதிய மே மாதம் 98இல் நான் மேஜரானேனே பாடலில் ஓ சொல்றியா மாமா பாடலைப் போல் விலாவாரியாக எழுதியிருப்பார். அதிலும் உச்சபட்சமாக, எத்தனை உள்ளது பெண்ணில் ஏன் எதையோ தேடுறீங்க, பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க என்று பெண்களுக்கு அனுசரணையாக வரிசமைத்திருப்பார். ஆனால், அந்தப் பாடல் காட்சியாக்கப்பட்டபோது, மனசைக் காட்ட இயலாது என்பதால் பொன் வைக்கும் இடத்தில் பூவைப்பது போல் முழுக்க முழுக்க மார்பையே காட்சிப்படுத்தியிருப்பார்கள். பாலசந்தரிடம் பாடம் படித்துவந்த சரண் இயக்கிய படம் இது. பருவமெய்திய காரணத்தால் தான் உடம்பாகவே பார்க்கப்படும் துயரம் பற்றியும், தனக்கு ஏற்படும் சிக்கல்களைப் பற்றியும் இளம்பெண் ஒருவர் பாடும் பாடல் இது. இந்தப் பாடல் வந்தபோது, எந்த ஆண்கள் சங்கமும் வழக்குத் தொடுத்ததாகத் தெரியவில்லை. இதே இயக்குநர் பாடலாசிரியர் கூட்டணியில் உலக நாயகன் நடித்த வசூல்ராஜாவின் சீனா தானா பாடலும் கோடிக்கணக்கானோரைக் கவர்ந்திழுத்தது. இந்த எல்லாப் பாடல்களிலும் ஏதாவது ஒரு நடிகை அதிலும் அவரது உடம்பு காட்சிப்பொருளாக்கப்படுவதை அறிந்தே ஆடியிருப்பார், ஓ சொல்றியா மாமாவும் விதிவிலக்கல்ல என்பதுதான் துயரம்.
தனுஷ் நடித்த திருடா திருடியில் யுகபாரதி எழுதிய மன்மதராசா, மூணு படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி போன்ற பாடல்கள் தமிழர்களின் தேசிய கீதமானது. இதற்கிடையே சிம்புவின் பீப் சாங் வேறு வந்து ஒருதரப்பைக் கொதிக்கவைத்தது. இப்படியான பாடல்களின் வெற்றிதான் ஓ சொல்றியா மாமா பாடலுக்கான உந்துதலாக இருக்க வேண்டும். இந்தப் பாடலை எழுதிய விவேகாவே, இதை ஆண்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர் என மகிழ்ச்சியுடன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். இதே விவேகா இந்தப் படத்துக்காக எழுதிய, சாமி சாமி பாடலில், லுங்கிய ஏத்திக்கட்டி லோக்கலா நடக்கையில அங்கமே அதிருதுடா சாமி… புதுச் சேலை கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லனன்னா புடவைக்கான காசு வேஸ்ட் சாமி… எம் ஓரம் சாரம் தெரியும் அழக உத்து ப்பாரு சாமி நீ உத்துப்பாக்கலன்னா மனம் செத்துப்போகும் சாமி போன்ற வரிகளைக் கேட்டுப் பார்க்கும்போது, ஓ சொல்றியா மாமா பாடலும் இதைப் போன்ற பெண்ணைத் தொழுவதைவிடத் தொடுவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்ட ஒரு பாடலே என்பதை மிக எளிதாக உணர முடியும்.
ஒரு சின்ன வித்தியாசம் மட்டும் ஓ சொல்றியா மாமா பாடலில் உள்ளது. அது பாடல் சொல்லப்பட்ட விதம். உண்மையில் இந்தப் பாடலைப் பெண்ணியம் பேசும் எந்தப் பெண் விரும்புவார்? இது ஆண்களை இழிவுபடுத்தும் பாடல் என்ற கூற்றே இந்தப் பாடலைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே உணர்த்தும். ஏற்கெனவே நாம் மேலே கண்ட உதாரணப் பாடல்களில் எல்லாம் பெண்களின் உடம்பு எப்படிக் காட்சிப் பொருளானதோ இந்தப் பாடலிலும் அப்படியே காட்சிப் பொருளானது. ஆண்ட்ரியா பாடிய, சமந்தா ஆடிய இந்தப் பாடலுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பே இது ஆண்களின் ரசனைக்கான பாடல் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. இந்தப் பாடல் தங்களை இழிவுபடுத்துகிறது என்று சொல்லும் ஆண்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாகவே இருக்க வேண்டும். அதைப் போல் இது ஆண்களின் காமப் பார்வைக்குச் சாட்டையடி தருகிறது என்ற கூற்றும் நல்ல நகைச்சுவைக்கு உத்திரவாதம் தருகிறது.
Read in : English