Read in : English
கடந்த சில நாட்களாக முக்கியப் பேசுபொருளாகி இருப்பது ஓமிக்ரான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவிலிருந்து வந்த கொரோனா, தற்போது உருமாறி தென் ஆப்ரிக்காவிலிருந்து ஓமிக்ரான் என்ற பெயருடன் உலா வரத் தொடங்கியுள்ளது. பி.1.1.529 என்று மருத்துவத் தொழில்நுட்பரீதியாகக் குறிப்பிடப்படும் இந்த ஓமிக்ரான் எனப்படும் இந்த வைரஸை கவலைக்குரிய திரிபு என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் கட்டமைப்பு மாற்றங்களை அடைந்துள்ளது ஓமிக்ரான் என்பதாலும் மிக எளிதாகப் பரவக்கூடியது என்பதாலும தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ள, இந்த வைரஸ், தற்போது இந்தியாவிலும் காலடி வைத்துள்ளது. பெங்களூரில் இரண்டு போருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மீண்டும் தீவிரக் கண்காணிப்பு செய்யப்படுகிறது. தலை மேல் தொங்கும் கத்தி போல ஓமிக்ரான் எப்போது பரவுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை பரவில்லை என்பது ஆறுதல். இது எத்தனை நாளைக்குத் தொடரும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இந்த நோய்த் தொற்றின் அறிகுறிகள் என்ன என்பது தெரியவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் இந்தத் தொற்று பாதிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை இது பாதிக்குமா, பாதிக்காதா என்பதும் தெரியவில்லை. இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்கூட, அடுத்து என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே, இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா? கொரோனாவைத் தடுக்க லாக்டவுன் போட்டார்கள். ஓமிக்ரானுக்கும் லாக்டவுன் வருமா? என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒமிக்ரான் வைரஸ் வந்தால் அரசு சமாளிக்கத் தயாராக இருக்கிறது என்று அரசு, முன்எச்சரிக்கையாக மருத்துவ சிகிச்சை ஏற்பாடுகளில் மீண்டும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. முகக்கவசத்தை மறந்து பொது வெளியில் மீண்டும் சுதந்திரமாக நடக்கத் தொடங்கிய பலரை, ஓமிக்ரான் வைரஸ் மீண்டும் மிரட்டி முகக்கவசத்தைக் கட்டாயமாகப் போடச் செய்துள்ளது. முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடருவது அனைவருக்கும் நல்லது.
“இடுக்கண் வருங்கால் நகுக” என்று துன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழியைக் காட்டுகிறார் திருவள்ளுவர். Ê”துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வைத்தான் வள்ளுவனும் சரிங்க. Ðபாம்பு வந்து கடிக்கையில் பாழும் உயிர் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு… நான் சிரிக்கிறேன், சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே, நான் அழுகிறேன் அழுகிறேன், அழுக வல்லே”. இது கண்ணதாசன், ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்துக்காக எழுதிய பாடல். மனம் விட்டுச் சிரிச்சால் நோய் விட்டுப் போகும் இது பழமொழி.
எது எப்படி இருந்தாலும், உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஓமிக்ரானைப் பார்த்து கேலிப் புன்னகையுடன் சமூக வலைத்தளங்களில் களம் இறங்கிவிட்டார்கள் மீம்ஸ் கலக்கல்காரர்கள். மீம்ஸ் என்றால் வடிவேலு இல்லாமல் எப்படி?
Read in : English