Read in : English
2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் சமீபத்து தமிழக வரலாற்றில் ஒரு திரும்புமுனை காலகட்டம். இளந்தமிழர்கள் கொண்டிருந்த தங்கள் வேர்களைப் பற்றிய உணர்வையும், தங்கள் மரபுகளை இழந்து விடுவோமோ என்ற அவர்களின் பதற்றத்தையும் அந்தப் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. உதாரணமாக, அவர்கள் கோலா நிறுவன பொருட்களைப் புறக்கணிக்கும் கருத்தை முன்வைத்தார்கள்.
ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீதான தடை உள்நாட்டு மாட்டு வகைகளுக்கு எதிரான ஒரு முனைப்பு என்று போராளிகள் குற்றஞ்சாட்டினர். அப்போதிருந்து ஏ-2 பால் மிகவும் விரும்பக்கூடிய பொருளானது; ஏனெனில் அது சொந்தமண் பசுக்கள் கொடுத்தது.
இந்த ஏ-2 பால் தரத்திற்கு, தூய்மைக்கு, நல்ல ஊட்டச்சத்துக்களுக்கு ஓர் ஆகுபெயர் ஆனது. ஏ-1 பால் வெளிநாட்டிற்கான, ஆரோக்கியமின்மைக்கான, தீமைக்கான குறியீடானது.
நிஜத்தில் ஏ-2 பால் ஏ-1 பாலிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது?
பாலில் 87 விழுக்காடு தண்ணீர் உள்ளது. மீதி விழுக்காட்டில் கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை மற்றும் தாதுப்பொருள்கள் உள்ளன. கேஸெய்ன் என்பதுதான் பிரதானமான பால் புரோட்டீன்; அதுதான் பால் ஏ-1 அல்லது ஏ-2 என்பதைத் தீர்மானிக்கிறது. இன்னொரு புரோட்டீன் வேய்; அதுதான் கிரீமை உருவாக்குகிறது. பாலில் லிப்பேஸ், பாஸ்பேட் ஆகிய நொதிகளும் இருக்கின்றன.
கேஸெய்ன் புரோட்டீன் வகையில்தான் ஏ-1, ஏ-2 ஆகிய பால் வகைகள் வித்தியாசப்படுகின்றன. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் பிசிஎம்7 என்றழைக்கப்படும் பெப்டைட்தான். இந்தவகைப் புரோட்டீன்கள் 500 அமினோ அமிலங்களின் சங்கிலித்தொடர்; ஒரு அமிலம் மற்றொன்றைவிட வித்தியாசமானது. ஏ-1 பாலில் இருக்கும் ஹிஸ்டிடைன் என்னும் ஒருவகை அமினோ அமிலம் ஹிஸ்டமைன் என்றழைக்கப்படும் ஒரு திசுநீர்த்தேக்கியை (நோய் எதிர்ப்பு வினைகளில் பங்குபெறும் கரிம நைட்ரஜன் சேர்மத்தை) வெளியிடுகிறது. அது சில மனிதர்களுக்குள் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியது.
இந்த பெப்டைட் ஏ-2-வில் இல்லை. அதனால் இந்தவகைப் பால் எல்லோராலும் அருந்தக்கூடியது. “ஏ-1-க்கும், ஏ-2-க்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை, அமினோ அமில வித்தியாசம் தவிர,” என்று சொல்கிறார் ஹரியானாவில் கர்னலில் இருக்கும் தேசிய பால்வள ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானி ஒருவர். அவர் தன்பெயரைச் சொல்ல விரும்பவில்லை.
வெண்மைப் புரட்சி அல்லது ஆபரேஷன் ஃப்ளட் 1970களில் நவீனமயமாக்கப்பட்ட கால்நடைப் பண்ணைகளில் நிகழ்ந்தது. வெளிநாட்டு வகைகளான ஜெர்சி, ஹோல்ஸ்டெய்ன் ஃப்ரைசியன், ப்ரவுன் ஸ்விஸ் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன, பால்தரத்தை மேம்படுத்த. இந்தியாவில் கிர், ரதி, ஆங்கோ, சிகப்பு காந்தாரி போன்ற உள்நாட்டுப் பசு வகைகள் இருந்தன. ஆனால் அவற்றின் பால் உற்பத்தி வெண்மைப் புரட்சியின் லட்சியத்தை நிறைவேற்ற போதுமானதாக இல்லை. மிகவும் குறைச்சலாகவே இருந்தது.
வெண்மைப் புரட்சி இந்தியாவின் பால்வளத்துறையில் புரட்சி செய்தது. பால் உற்பத்தியில் உலகத்தில் இந்தியா ஓர் ஆகப்பெரிய நாடாக வளர்ந்தது. காலம் செல்லச் செல்ல, சுதேசிப் பசுக்களும், வெளிநாட்டுப் பசுக்களும் கலந்து ஒரு கலப்பினத்தை உருவாக்கின.
வெண்மைப் புரட்சி என்னதான் வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாவின் சுதேசி இனங்கள் குறைந்துபோனதற்கு அதுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விமர்சனம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பிரதானமானது. உள்நாட்டு இனங்களின் மரபணுக்கள் ஆதிக்கம் செய்தால், கலப்பின பசுக்களால் ஏ-2 பாலை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், அவை பெரும்பாலும் ஏ-1 பாலைத்தான் உற்பத்தி செய்கின்றன; அதுதான் இந்தியாவில் இன்று மிகஅதிகமாக அருந்தப்படும் பால்.
பால் புரோட்டீன்களைப் பிரித்தெடுக்கும் மனித செரிமானக் கட்டமைப்பு ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். இதில் ஒரு தந்திரம் இருக்கிறது. ஏ-2 பால் ஆராய்ச்சி நிறைய நிதிகளைப் பெறுகிறது. நியூசிலாந்த் பால்வளக் கழகம் அதை ஆதரிக்கிறது என்று சுவாதீன நிபுணர்கள் சொல்கிறார்கள். அகில உலக சதித்திட்டத்தின் தர்க்கத்தை இங்கே பொருத்திப் பார்க்க முடியும்.
புத்தம்புதிது மற்றும் ஆரோக்கியமானது
வெண்மைப் புரட்சி மாபெரும் பால் உற்பத்தியை உருவாக்கியது. அதனால் பாலை சிறு பைகளில் அடைத்து விற்க முடிகிறது. பாக்கெட் பால் பாஸ்சர் முறையில் நோய்க்கிருமிகள் அகற்றப்பட்டும், கொழுப்பு அணுக்கள் நீக்கப்பட்டும் செரிமானத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. அதில் உள்ள கூறுகள் அனைத்தும் சமநிலையில் இருக்கின்றன.
ஆலையிலிருந்து வரும் பால் மீது சந்தேகம் ஏற்பட்டதால், சுதேசிப் பசுக்களிடம் நேரடியாகக் கறக்கப்படும் புத்தம் புது பாலுக்கு மவுசு உண்டானது.
ராணிப்பேட்டை அருகே உள்ள பகவெளி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரும் இயற்கை வள விவசாயியுமான ராமுவிடம் சுதேசிப் பசு இனங்கள் இருக்கின்றன. அவரது இயற்கை விவசாயப் பண்ணையில் பசுக்கள் மேய்கின்றன. அவரது குடும்பம் மிகுதியான பாலை விற்பனை செய்கிறது. ”கறந்தபால் உயர்ந்தது. பாலின் தரம் பேணப்படுகிறது. அதிலுள்ள கூறுகள் எல்லாம் ஊட்டச்சத்து மிக்கவை,” என்கிறார் ராமு.
கறந்தபாலை நான்கு மணி நேரத்திற்குள் விநியோகித்து விடவேண்டும். அதற்குப் பின்பு அது கெட்டியாகி திடமாகிவிடும். பண்ணைகளுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையே இருக்கும் தூரம் என்பதுதான் இதிலிருக்கும் ஒரு சவால். புத்தம் புது பாலை தொலைதூரங்களுக்கு விநியோகிக்க முடியாது.
பாலின் கொழுப்பு அணுக்களை நீக்கும் முறையைக் கையாண்டு அதை பாக்கெட்டுகளில் விற்பது என்பது ஒரு நல்ல வழிதான். ஆனால் அப்படிச் செய்தால் பால் ஏ-2 வகையைச் சேர்ந்துவிடும்.
பாக்கெட் பால்தான் பரவலாகக் கிடைக்கிறது என்று சென்னை மாதவரத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் வானவன் சொல்கிறார். “பாக்கெட் பாலின் தரம் பற்றி எனக்கு ஒரு பயம் உண்டு. அது எப்படி பல நாட்களாகப் புத்தம்புதிதாக இருக்கும்?” என்று அவர் கேட்கிறார். பாக்கெட் பாலுக்கான ஆகப்பெரும் விளம்பரங்கள் மீதும் ஏ-2 பாலில் நிகழும் சமீபத்து வணிகப்போக்கின் மீதும் அவருக்கு சந்தேகம் உண்டு. “சுதேசி இனங்கள் தரும் பாலையே நான் தேர்ந்தெடுக்கிறேன்,” என்கிறார் அவர்.
இந்த மாதிரியான சந்தேகங்கள் இப்போது பரவலாக இருக்கின்றன. ஆயினும் ஆவின் முன்னாள் பொது மேலாளரான சிவசுப்ரமணியன் அவற்றை எல்லாம் புறந்தள்ளுகிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தி நிறுவனங்களில் சில தவறுகள் நடந்தது என்னமோ உண்மைதான்; ஆனால் அவை எல்லாம் கடந்தகாலத்து சமாச்சாரங்கள், என்கிறார் அவர். ஆவின் உட்பட பால் நிறுவனங்கள் எல்லாம் கொழுப்பு நீக்கும் முறையைக் கையாண்டு பால்தரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன. பாலும், வெண்ணெய் ஆகியவை எல்லாம் ‘ஸ்கிம்’ செய்யப்பட்டு கொழுப்பு நீக்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட பால்தான் பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது என்று அவர் சொல்கிறார். தரக்கட்டுப்பாடு, தர உறுதிப்பாடு, தர மேலாண்மை ஆகியவற்றை நோக்கி பால்பண்ணைகள் நகர்ந்துவிட்டன என்று சொல்லும் அவர், பதப்படுத்தப்பட்ட பால் பாதுகாப்பானது என்றும் கூறுகிறார்.
பாக்கெட்டில் அடைக்கும்போது பால் பாஸ்சர் முறையில் பதப்படுத்தப்படுகிறது. லூயி பாஸ்சர் என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியின் பெயரில் அழைக்கப்படும் வழிமுறைப்படி பால் 72 பாகை அளவுக்கு வெப்பமாக்கப்படுகிறது; பின்பு திடீரென்று அது குளிர்விக்கப்படுகிறது. நோய் தரும் பாக்டீரியாக்களைக் கொன்றுவிட்டு பாலின் ஆயுளை அதிகமாக்குகிறது. அடுத்து கொழுப்பு நீக்கும் முறையில் பால் சுத்திகரிக்கப்படுகிறது. பாலில் உள்ள கொழுப்புத் திரட்சிகளை உடைத்து ஒரே சீராக சின்னச்சின்ன துகள்களாக அவை மாற்றி அமைக்கப்படுகின்றன.
இந்த இரண்டு வழிமுறைகள் ‘பாஸ்சரைசேஷன்’, ‘ஹோமோஜெனிசேஷன்’ என்றழைக்கப் படுகின்றன. இந்த முறைகளில் வெளிப்பொருட்கள் ஏதும் சேர்க்கப்படுவதில்லை. இந்த வழிமுறைகளில் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன; கொழுப்புத் திரட்சிகள் உடைக்கப்படுகின்றன; ஆயினும் பி-12 போன்ற விட்டமின்கள் குறைந்துவிடுகின்றன. ஆகையினால் கறந்த புத்தம் புது பால்தான் மிக உயர்ந்தது; ஏனெனில் அதில் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.
கலப்பினங்கள் அல்லது வெளிநாட்டு இனங்களோடு ஒப்பிடுகையில், சுதேசியினப் பாலில் செழுமையான சத்து இருக்கிறது என்று தேசிய பால்வள ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி சொல்கிறார்.
சுதேசியினப் பாலில் கொழுப்புச்சத்து வெறும் 4 சதவீதத்திற்கு சற்று அதிகமாக மட்டுமே இருக்கிறது. உள்நாட்டுப் பசுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை; தீவனத்தைப் பாலாக மாற்றும் விகிதாச்சாரம் நன்றாகவே இருக்கிறது என்கிறார் அந்த விஞ்ஞானி.
ஆவினில் பல ஆண்டுகளாக வேலை பார்த்த காலத்தில் ஆவின் பாலில் கொழுப்பு, மற்றும் திடமான, கொழுப்பல்லாத கூறுகள் குறைந்து கொண்டே வந்ததைத் தான் பார்த்திருப்பதாகச் சிவசுப்ரமணியன் கூறுகிறார்.
1985-இல் அவர் ஆவினில் சேர்ந்தபோது, கொழுப்பு, மற்றும் திடமான, கொழுப்பல்லாத கூறுகளின் சதவீதங்கள் முறையே 5.2 மற்றும் 8.2 ஆக இருந்தன. அவை இப்போது 4 மற்றும் 8 ஆகக் குறைந்துவிட்டன; அதற்குக் காரணம் கலப்பினப் பசுக்களில் வெளிநாட்டு மரபணுக்களின் ஆதிக்கம் இருந்ததுதான் என்கிறார் சிவசுப்ரமணியன்.
பால் வகைகளுக்குள் உள்ள வித்தியாசங்கள் இப்போது அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்படுகின்றன என்கிறார் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் விக்யான் பிரச்சார் அமைப்பின் மூத்த விஞ்ஞானியான டி. வி. வெங்கடேஸ்வரன்.
பால் வகைகளுக்குள் உள்ள வித்தியாசங்கள் இப்போது அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்படுகின்றன. சுதேசி இனத்துப் பசும்பாலும்கூட கொழுப்பு நீக்கும் முறைக்கு ஆளாக்கப்பட்டு பாக்கெட்டில்தான் அடைக்கப்படுகிறது. மற்ற உயிரினங்களின் பாலை அருந்தும் ஒரே மிருகம் மனிதன்தான். இதுவே இயற்கைக்கு எதிரானது.
சுதேசி இனத்துப் பசும்பாலும்கூட கொழுப்பு நீக்கும் முறைக்கு ஆளாக்கப்பட்டு பாக்கெட்டில்தான் அடைக்கப்படுகிறது. மற்ற உயிரினங்களின் பாலை அருந்தும் ஒரே மிருகம் மனிதன்தான். இதுவே இயற்கைக்கு எதிரானது. சிலர்க்கு அலர்ஜி வருவது தவிர்க்க முடியாதது. கடந்தகாலத்தில் மக்கள் நிறைய கொழுப்புச்சத்து கொண்ட கறந்த பாலைத்தான் அருந்தினார்கள்.
ஆனால் அவர்கள் செய்த கடுமையான உழைப்பு அவர்கள் அருந்திய பாலை எளிதாகச் செரிமானம் அடையச் செய்தது என்கிறார் வெங்கடேஸ்வரன்.
Read in : English