Read in : English
கொரோனாவின் ஒன்று, இரண்டு, மூன்று என அடுத்தடுத்த அலைகள் உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், நான்காம் அலை பரவி வரும் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நான்காம் அலை பரவி வரும் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது
2019ஆம் ஆண்டின் இறுதியில் ஒலிக்க தொடங்கிய கொரோனா இன்னும் முடிந்த பாடில்லை. ஆல்பா, பீட்டா, டெல்டா என அடுத்தடுத்த படிநிலைகளில் உருமாற்றம் அடைந்து கொண்டே சென்ற கொரோனாவின் பிடியில் இருந்து எந்த நாடும் தப்பவில்லை. 2020ஆம் ஆண்டில் உச்சத்தில் இருந்த கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து உலக நாடுகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
ஆனால், தற்போது தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வீரியம் கொண்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் பாதிப்பு உணரப்பட்டுள்ளது. முதன் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள B.1.1.529 என்ற வீரியம் மிகுந்த, உருமாறிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து பெல்ஜியம், போட்ஸ்வானா, ஹாங்காங் நாடுகளிலும் தென் ஆப்ரிக்காவில் இருந்து சென்றவர்கள் மூலம் பரவியுள்ளது.
இதுவரை 100 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்று எற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும் அவருக்கும் உருமாற்றம் அடைந்த கொரோனா பரவியுள்ளது.
தடுப்பூசிகளுக்கு சவால் விடும் இந்த வைரஸ் தொற்றின் தீவிரத்தை உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. புதிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸிற்கு B.1.1.529 என பெயர் வைத்துள்ள உலக சுகாதார நிறுவனம், கவலைக்குரிய வைரஸ் என குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒமிக்ரான் கொரோனா வைரஸின் திரிபின் மரபணு பிறழ்வுகள் பெரிதாக ஆபத்தானவை இல்லை என்றாலும், சில பிறழ்வுகள் கவலைக்குரிய உருமாற்றமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களைக் காட்டிலும் இதன் உருமாற்றம் வேறுபட்டதாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உருமாற்றத்தில் அதீத பரிணாம வளர்ச்சியை கொண்டுள்ளதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இத்தகைய வீரியமிக்க கொரோனா வைரஸால் 4வது அலை ஏற்படுமா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. இதனால், வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு விமான சேவையை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் தவிர்த்துள்ளன.
புதிய உருமாறிய வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிப்பதால், உலக நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்கும் பணியில் இறங்கியுள்ளன.
எனினும், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைச் செலுத்தி கொண்டால் உருமாறிய கொரோனா தொற்றில் இருந்து உயிர் பிழைக்கலாம் என்கிறார் மருத்துவர் பாரூக் அப்துல்லா. இதுகுறித்து அவருடன் உரையாடல்:
கேள்வி: தற்பொழுது பரவி வரும் புதிய உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் திரிபில் 50 மரபணு பிறழ்வுகள் உள்ளன என்கிறார்கள். இதன் பாதிப்புகள் எந்த அளவுக்கு இருக்கும்?
பாரூக் அப்துல்லா: பொதுவாக, வைரஸ்கள் மனிதனின் உடலில் ஊடுருவ ஸ்பைக் புரோட் பயன்படுகிறது. வழக்கமாக வைரஸில் 30க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகள் இருக்கும். ஆனால், இந்த ஒமிக்ரானில் 50 மரபணு பிறழ்வுகள் இருப்பதால் பாதிப்பு கொஞ்சம் வேகமாக தான் இருக்கும்.
கேள்வி: 2வது அலையை ஏற்படுத்திய டெல்டா வைரஸை ஒமிக்ரான் வைரஸின் பரவும் தன்மை அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிகளவிலான பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி?
பாருக் அப்துல்லா: கொரோனாவின் முதல் அலை ஏற்பட்ட போது தடுப்பூசியை அவ்வளவாக செலுத்தவில்லை. அடுத்தடுத்த அலைகளின் போது மக்களிடையே தடுப்பூசி செலுத்தி கொள்ளும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்தி வருவதால் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதீத அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தாது, உயிரிழப்புகளும் முன்பை போல ஏற்பட வாய்ப்புகள் குறைவு. ஆகையால், வைரஸால் ஏற்படும் மரணத்தை தடுக்க தடுப்பூசி தீர்வு.
கேள்வி: தடுப்பூசிகளுக்கு சவால் விடும் இந்த ஒமிக்ரான், கொரோனா பாதித்தவர்களையும் மீண்டும் தாக்குமா? அப்படி பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு எந்த மாதிரியான விளைவுகள் உண்டாகும்?
பாருக் அப்துல்லா: சாதாரணமாக மனிதனுக்கு வைரஸ் தொற்று ஏற்படும். கொரோனா போன்ற வீரியம் கொண்ட வைரஸ்கள் மனிதர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் தடுப்பூசியை செலுத்தி கொண்டால் வைரஸ் தொற்றால் ஏற்படும் உடல் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். தற்பொழுது பரவி வரும் ஒமிக்ரான் வைரஸின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சோதனை முடிவுகளை கொண்டே எதையும் கணிக்க முடியும்.
கேள்வி: உடலில் அதிகமான பாதிப்பை உண்டாக்கும் தன்மையால் கவலைக்குரிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை பரவிய வைரஸ்களை காட்டிலும் ஒமிக்ரான் உண்மையில் கவலையளிக்க கூடியதாக இருக்க வாய்ப்பு உண்டா?
பாருக் அப்துல்லா: பீட்டா வைரஸின் பிறழ்சியான டெல்டா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அப்பொழுது தடுப்பூசியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தோம். டெல்டா வைரஸ் நாம் எப்படி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கூறுவதை போல் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுக்கூடிய திறன் கொண்டிருந்தாலும், முன்பை போல பேரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவாக தான் இருக்கின்றன.
வைரஸ் வேகமாக பரவினாலும், முறையாக தடுப்பூசியை செலுத்தி கொண்டால் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் ஏற்படாது. சிகிச்சைக்கு பிறகு வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வரலாம்.
வைரஸ் வேகமாக பரவினாலும், முறையாக தடுப்பூசியை செலுத்தி கொண்டால் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் ஏற்படாது
கேள்வி: புதிதாக உருமாறிய கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் என்ன?
பாருக் அப்துல்லா: கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரவல் குறைந்துள்ளது என அலட்சியமாக இருக்க கூடாது. அவரவரின் தனிப்பட்ட பாதுகாப்பு ஒட்டு மொத்த சமுதாயத்தை பாதுகாப்பு ஆகும். கட்டாயமாத முகக்கவசம் அணிய வேண்டும். முடிந்த வரை கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கேள்வி: கொரோனா என்ற வார்த்தை எப்பொழுது மறக்கக்கடிக்கப்படும்?
பாரூக் அப்துல்லா: எதிரி ஆயுதத்தை போடும் வரை போர் தொடரும் என்பார்கள். அதுபோல எத்தனை முறை உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் உருவெடுத்தாலும் மக்களிடம் ஏற்படும் தடுப்பூசி விழிப்புணர்வும், தடுப்பூசியை செலுத்தி கொள்வதும் வைரஸை பலப்படுத்தாமல் தோற்கடிப்பதற்கான வழியாகும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் போட்டுக் கொள்ளுங்கள்.
(டாக்டர் பாரூக் அப்துல்லா, சிவகங்கை மாவட்ட இளையான்குடி மருத்துமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றுகிறார். மருத்துவ வசதிகள் கிடைக்காத பகுதிகளிலும் பழங்குடியினர் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறார். இதுவரை நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பல மருத்துவ கட்டுரைகள் எழுதியிருக்கிறார்)
Read in : English