Read in : English
அமெரிக்கா சென்று திரும்பிய உலக நாயகன் கமல் ஹாசன், தான் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மருத்துவமனையில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
நோய்த்தொற்று குறைந்த நிலையில், மாநில அரசு ஏறக்குறைய எல்லா கோவிட் கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே சொல்லலாம். தீபாவளி பண்டிகையையும் நாம் சிறப்பாக கொண்டாடினோம்.
முகக்கவசம் குறித்தோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து யாரும் அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே சொல்லலாம். தீபாவளி பண்டிகையையும் நாம் சிறப்பாக கொண்டாடினோம்
இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமலுக்கும் கோவிட் தொற்று ஏற்படுகிறது என்றால், சில கேள்விகள் எழுகின்றன.
தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் கோவிட் வருமா? கோவிட் தடுப்பு எச்சரிக்கைகளை அலட்சியம் செய்யும் நமது நடவடிக்கைகளால் மூன்றாவது அலை வரும் வாய்ப்பு உண்டா?
அது இரண்டாவது அலை போன்ற பாதிப்புகளை உண்டாக்குமா? டாக்டர் பாரூக் அப்துல்லா நமது கேள்விகளுக்கு விடையளிக்கிறார்
கேள்வி: உலக நாயகன் கமல் கோவிட் தொற்றுக்கு உள்ளானதாகப் பதிவிடுகிறார். கோவிட் நோய்த்தொற்றின் நிலை தமிழகத்தில் எவ்வாறு உள்ளது?
அப்துல்லா: பெருந்தொற்று (epidemic ) எனும் நிலையில் இருந்து தொற்று (endemic) எனும் நிலைக்கு வந்திருக்கிறது. எனினும் யாருக்கு வேண்டுமென்றாலும் நோய் தொற்று ஏற்படலாம். தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தால் தீவிர நோயாக மாறாமல் தப்பிக்கலாம். வைரஸ் மாறுபாடு அடையும் பட்சத்தில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆனால் அது இரண்டாவது அலை போன்று தீவிரமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் வேண்டிய முன்னெச்சரிக்கைகளை கைக்கொள்வது சால சிறந்தது.
கேள்வி: இரண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் கோவிட் வரும் வாய்ப்புகள் என்ன? கமல் ஹாசன் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக்கொண்டதாகக் கூறி இருந்தாரே?
அப்துல்லா: இரண்டு தடுப்பூசி எடுத்து கொண்டாலும் கோவிட் வரும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் தடுப்பூசி மிக தீவிர நோயாக மாறுவதில் இருந்து நம்மை காப்பாற்றும். அதிக மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், கோவிட் பரவி நம்முடைய மருத்துவ உட்கட்டமைப்பை மூச்சு முட்டும் நிலைக்குக் கொண்டு செல்லாது. ஏனெனில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் நிலை வராது.
கேள்வி: கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இந்த அலட்சியம் நம்மை மூன்றாவது அலைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்புகள் உள்ளதா?
அப்துல்லா: கடந்த வருடம் ஏறக்குறைய இரண்டாம் அலை இதே சமயத்தில் தோன்றி மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. ஆனால் நம்முடைய நிலை இப்போது முன்னேறியுள்ளது. தீவிரத் தடுப்பூசி நடவடிக்கைகளிலும் இரண்டாம் அலையின் பாதிப்பினால் உண்டான நோய் எதிர்ப்பு சக்தியும் நமக்கு பெரிய பலம். இரண்டாம் அலையின் தீவிரத்தோடு மூன்றாம் அலை இருக்கும் என சொல்ல முடியாது.
இரண்டாம் அலையின் தீவிரத்தோடு மூன்றாம் அலை இருக்கும் என சொல்ல முடியாது
கேள்வி: நீங்கள் தீவிரத் தடுப்பூசி நடவடிக்கை பற்றி குறிப்பிட்டீர்கள். ஆனால் தடுப்பூசி மறுப்பு மனநிலையும் தமிழகத்தில் இருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து?
அப்துல்லா: ஒரு பிரிவினர் படிப்பறிவு இல்லாதோர். அவர்களுக்கு மூடநம்பிக்கையால் தடுப்பூசி குறித்த அச்சம். மறுபக்கம் மெத்த படித்தவர்கள். தீவிரமாகச் சிந்திப்பதால் வரும் எதிர்ப்பு மனநிலை. மூடநம்பிக்கையால் வரும் அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளால் படிப்பறிவு இல்லாதோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகிறார்கள். மெத்த படித்தவர்கள் எதிர்ப்பைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை. ஆனால் இந்த மறுப்பு கொஞ்ச கொஞ்சமாக மாறி வருகிறது என சொல்லலாம்.
கேள்வி: மூன்றாவது அலை வருமெனின், அதனை எதிர்கொள்வதற்கு எந்த அளவுக்குத் தயாராக உள்ளேம்? தமிழகத்தின் நிலை எவ்வாறு உள்ளது?
அப்துல்லா: இரண்டாம் அலை நமக்கு சில நல்ல படிப்பினைகளைத் தந்தது. நம்முடைய மருத்துவ உட்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் நமது மாநிலத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. ஒரு பரவலான நோய்த்தொற்று வந்தால் எப்படி சமாளிப்பது என்பது நம்முடைய சுகாதார பணியாளர்களுக்கு இப்போது தெரியும்.
மேலும் நாம் கிட்டத்தட்ட 80 முதல் 90 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கியுள்ளோம். இரண்டாம் டோஸ் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. நாம் தயாராக உள்ளோம் என்றே கூறலாம்.
Dr பாரூக் அப்துல்லா சிவகங்கை மாவட்ட இளையான்குடி மருத்துமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றுகிறார். இதுவரை நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பல மருத்துவ கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மருத்துவ வசதிகள் கிடைக்காத பகுதிகளிலும் பழங்குடியினர் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறார்.
Read in : English