Read in : English
சொந்த வாழ்க்கையாகட்டும், வணிகமாகட்டும் பலர் நிதி இலக்கை அமைத்துக் கொள்வதில்லை. என்னுடைய பல வருட தலைமை மற்றும் வணிகப் பயிற்சியாளர் அனுபவத்தில் இதைக் கண்கூடாக அறிந்திருக்கிறேன். அப்படியே இலக்கை நிர்ணயித்திருந்தாலும், அதற்கான தெளிவு இல்லாததையும் பார்த்திருக்கிறேன்.
நிதி இலக்கு இல்லாத வணிகம், தலையில்லா கோழிக்குஞ்சு போன்றது. என்ன செய்கிறோம், எதை நோக்கி செல்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் இருக்கும். ஆகவே, நன்றாக வரையுறுக்கப்பட்ட முழுவதுமான நிதி இலக்கு இன்றியமையாதது. நிதி மேலாண்மையில் முக்கியமான நிதி இலக்கை எவ்வாறு படிப்படியாக நிர்ணயிப்பது என்பது குறித்த வழிகாட்டி இதோ உங்களுக்காக:
1.சரியான நிதி இலக்கை வகுப்பதே உங்கள் வணிகத்தின் நிதி முன்னேற்றதிற்கான முதல் படி. கடினமான சூழலிலும், முதலீட்டாளர்களும், இயக்குநர்கள் குழுவும் வளர்ச்சி குறித்து உங்களுக்கு அழுத்தம் கொடுக்க நேரிடும். அவர்களின் எதிர்பார்ப்பு என்ன, உங்கள் குழுவும் நீங்களும் என்ன செய்ய முடியும் எனத் தெரியப்படுத்துங்கள். வளர்ச்சித் திட்டத்தை தெளிவாக தெரிவித்து ஒருமித்த கருத்தை எட்டுங்கள். உங்களின் “விருப்பப் பட்டியலை” தவிர்த்து, நிதி இலக்கை நிதர்சன நடைமுறைக்கு ஏற்றபடி அமைப்பது மிக முக்கியம்.
சவால்கள் பல இருந்தாலும், முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீட்டிற்கான வருவாயை எதிர்பார்ப்பது இயல்பு. இதனால் பல நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்படலாம். இதைத் தடுக்க தெளிவான புரிதலுடன் இரு முனைகளிலிருந்தும் அணுகுவது நல்லது.
நீங்கள் தொழிலதிபராக இருந்தாலும், நிதி இலக்கு அமைப்பது உங்கள் பொறுப்பாகும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், ஒரு வணிக மேம்பாட்டுப் பயிற்சியாளரை நியமித்துக் கொண்டு, தகுந்த ஆலோசனையை பெறலாம். உங்களின் நிதி வளர்ச்சியை மேம்படுத்தவதோடு, வளர்ச்சிக்கும் இவர் உதவுவார்.
2.உங்களின் வளர்ச்சியில் வெளிப்புற சூழலை உங்களால் கட்டுப்படுத்த இயலாவிட்டாலும், உங்கள் எல்லைக்கு உட்பட்டு, லாபத்தைப் பெருக்குவது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், உங்களின் இலக்கு இதைப் பொறுத்தே அமைய வேண்டும். தெளிவான இலக்கை நோக்கி வடிவமைக்கப்பட்ட நிதி இலக்கு அவசியம்.
3.விற்றுமுதல் அதிகரிப்பு, கடனின்றி செயல்படுதல், சிறந்த பணப்புழக்கம், அதிக லாபம், சந்தைப் பங்கு அதிகரிப்பு, பங்குக்கு அதிக வருவாய், முதலீட்டில் சிறந்த வருவாய், அதிக உற்பத்தித்திறன் என தனிப்பட்டோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிதி இலக்கு என எதுவாக வேண்டுமானலும் இது இருக்கலாம். உங்களின் வணிக இலக்கை பொறுத்து இது அமையும்.
இலக்கு எதுவாயினும் அடையக்கூடிய இலக்காக இருத்தல் வேண்டும். இலக்கை நிர்ணயிக்கும் போது, எதற்காக இந்த இலக்கு என சிந்தித்துச் செயல்பட்டால், நிதி இலக்கை அடைய எளிதாக இருக்கும்.
4.உங்கள் நிதி இலக்கு என்ன? வளர்ச்சியை எவ்வாறு அளவீடு செய்வீர்கள்? விற்றுமுதல் அதிகரித்தால் உங்கள் நிறுவன நிகர வருமானம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றாகுமா? அப்படியென்றால், வளர்ச்சி விகிதம் என்ன? இது போன்று பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, இலக்கு என்னவாக இருத்தல் வேண்டும் என தீர்மானியுங்கள்.
ஆகவே, எதன் அடிப்படையில் நிதி இலக்கை நிரணயிக்க வேண்டும்? கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அடிப்படையாக கொண்டு உங்கள் நிதி இலக்கை வடிவமைத்துக் கொள்ளலாம். எளிமையாக, TOM என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
T – Time frame – கால அளவு
O – Objectives – நோக்கம் M – Measurement – அளவீடு |
கால அளவு – எந்தக் கால அளவில் உங்கள் இலக்கை அடைய விரும்புகிறீர்கள்? அதை குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால காலங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். குறுகிய காலம் என்றால் 12 மாதங்களும், நடுத்தர காலம் என்றால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளும், நீண்ட காலம் என்றால் மூன்று வருடங்களுக்கு மேல் எனவும் வகைப்படுத்துங்கள். இந்த இலக்கை அனைவரிடமும் பகிர்ந்து அவர்கள் ஒப்புதலும் பெறுவது சிறந்தது. அவ்வப்பொழுது இலக்கு அளவீட்டைக் கணக்கிட்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
நோக்கம் – உங்கள் நிதி நோக்கம் என்ன? விற்றுமுதல் அதிகரிப்பு, சிறந்த பணப்புழக்கம், அதிக லாபம் என எதுவாக இருந்தாலும் தெளிவாக இந்த இலக்கை அமைத்துக் கொள்ளுங்கள். இது ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை என்றாலும் தனியாக தெளிவாக அமைப்பது நல்லது. வணிக சூழலுக்கு ஏற்ப சில பகுதிளை முதலில் தேர்ந்தெடுத்து கவனம் செலுத்துவது நல்லது. ஒரு குழுவாக ஒருங்கிணைந்து வேலை பார்த்தல் அவசியம்.
அளவீடு – அளவிட வேண்டிய முக்கியமான அளவீடுகள் என்ன? இதை முதலில் தேர்ந்தெடுங்கள். உங்களிடம் உள்ள பட்ஜெட்டில் என்ன செய்ய முடியும்? அதன் காரணம் என்ன? இவை அனைத்தையும் அலசி ஆராயுங்கள். இதை எண்ணிக்கையாகவோ அல்லது குறிப்பிட்ட சதவீதமாகவோ வரையறுத்துக் கொள்ளுங்கள். இறுதிப்படுத்திய பின், இவற்றை தெளிவாக குழுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது ஒருங்கிணைந்து செயல்பட உதவும். இதன் இறுதியில், இலக்கை அடைந்த பின், அது அளிக்கும் சந்தோஷம் குறித்து சொல்லத் தேவையில்லை.
மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையின் தகவல்கள் சங்கீதா சங்கரன் சுமேஷ் அவர்களின் “Where is The Moolah” என்ற புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டவை.
Read in : English