Read in : English
ஜெய்பீம் திரைப்படம் போலீஸ் அத்துமீறல்களையும் அடக்குமுறையையும் மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து பொது விவாதப் பொருளாக்கியுள்ளது.
கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலாக, நமது கிரிமினல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code), சட்டப்பிரிவுகள் 41(1) a, 41 (1) b, 41 (1) b a ஆகியவை, இந்திய போலீசுக்கு வானளாவிய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது. இன்றும் அது தொடர்கிறது.
நமது 1898ஆம் ஆண்டு கிரிமினல் நடைமுறைச் சட்டப் பிரிவு 41(1) a இன் கீழ் எந்தவொரு போலீஸ் அதிகாரியும், தமது கண் முன்பாக நடைபெறும் குற்ற சம்பவம் தொடர்பான நபரை (accused) அப்போதே நீதிமன்ற பிடி ஆணை (Without warrant) இன்றி கைது செய்யலாம்.
இங்கு, சட்டப்பிரிவு 41(1 )a-இன் கீழ் இரண்டு முதல் ஏழு ஆண்டு வரையில் தண்டிக்கப்படக்கூடிய குற்ற சம்பவம் தொடர்பானவர் குறித்த புகார் அல்லது தகவல் கிடைத்தாலோ, சந்தேகம் ஏற்பட்டாலோ எந்வொரு போலீஸ் அதிகாரியும் நீதிமன்ற பிடி ஆணை (Without warrant) இன்றி கைது செய்யலாம்.
அதே போல சட்டப்பிரிவு 41(1)b a-இன் கீழ் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் அல்லது தூக்கு தண்டனை அளிக்கப்படக்கூடிய குற்ற சம்பவம் தொடர்பானவர் குறித்து நம்பகமான தகவல் பேரில், எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் நீதிமன்ற பிடி ஆணையின்றி கைது செய்யலாம்.
ஒருவர் குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது குறித்த புகார், தகவல், சந்தேக அடிப்படையில், நமது போலீசுக்கு சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமலே கைது செய்வதற்கான அனைத்து அதிகாரத்தையும் 1898-ஆம் ஆண்டு கிரிமினல் நடைமுறைச் சட்டம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் வழங்கியதை 1973-ஆம் ஆண்டு நடைமுறைச் சட்டமும் சுதந்திர இந்திய ஜனநாயக ஆட்சிகாலத்திலும் உறுதிசெய்து வழங்கியுள்ளது.
ஒரு குற்ற சம்பவம் குறித்த புகார் உண்மையானதா, தகவல் சரியானதா, சந்தேகம் நியாயமானதா? எல்லாவற்றையும் (நமது கிரிமினல் நடைமுறைச் சட்டப் படி) தீர்மானிக்கும் உரிமையும், அதிகாரமும் அந்தந்த காவல்நிலைய போலீஸ் அதிகாரியிடம் தான் உள்ளது.
அந்த போலீஸ் அதிகாரி நேர்மையற்றவராகவும், நியாயம் பார்க்காதவராகவும் சட்ட அனுபவ அறிவில்லாதவராகவும், பணத்தாசை பிடித்தவராகவும் இருக்கும் பட்சத்தில், உண்மையற்ற புகாரின் பேரிலும், சரியில்லாத தகவல் அடிப்படையிலும், நியாயமற்ற சந்தேகத்தின் காரணமாயும் ஒரு அப்பாவி கைதுக்கு ஆளாகி சிறை செல்லலாம்.வளர்ந்த நாடுகளில் போலீசார் வெறும் புகாரின் அடிப்படையிலோ அல்லது தகவல் பேரிலோ, சந்தேக காரணத்தாலோ யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இங்கு போல வாரண்ட் இல்லாமல் கைது செய்துவிட முடியாது
வளர்ந்த நாடுகளில் போலீசார் வெறும் புகாரின் அடிப்படையிலோ அல்லது தகவல் பேரிலோ, சந்தேக காரணத்தாலோ யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இங்கு போல வாரண்ட் இல்லாமல் கைது செய்துவிட முடியாது
அங்குள்ள (வளர்ந்த நாடுகளில்) கிரிமினல் சட்ட நடைமுறை என்னவென்றால், ஒரு குற்ற சம்பவம் தொடர்பாக, யார் பேரில் புகார் வந்தாலும், தகவல் தெரிந்தாலும், சந்தேகம் ஏற்பட்டாலும், போலீசார் முதலில் தொடங்குவது, இங்கு போல கைது நடவடிக்கையில் அல்ல.
முதலில் புலன் விசாரனையை (Investigation) துவங்கி, குறிப்பிட்ட குற்றம் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் (சந்தேக நபர்/குற்றம் சாட்டப்பட்ட நபர் உட்பட) விசாரித்து வாக்குமூலம் பெறுகிறார்கள்.
சம்பவ இடத்தை சோதிக்கிறார்கள். மருத்துவர்கள், ரசாயன பரிசோதகர்கள், முதலானவர்களின் தொழில்நுட்ப உதவியை பெற்று, விஞ்ஞான ரீதியாக (Scientific approach) குற்ற சம்பவத்தை அலசி ஆய்வு செய்து, சாட்சிய ஆதாரங்கள் சேகரித்த பின், குற்றம் செய்த நபர் இவர் தான் என (100 சதவீதம்) உறுதியான பின், உரிய அரசு வழக்கறிஞர் மூலம் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை (Charge sheet) சமர்பித்து, நீதிமன்ற வாரண்டை நீதிபதியின் ஒப்புதலுடன் பெற்று குற்றம் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை கைதுசெய்து சிறைக் காவலுக்கு அனுப்புகிறார்கள்.
இந்தியாவில் 2011-ஆம் ஆண்டில், நமது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்திய போலீஸ் கமிஷன் (Indian Police Commission) மற்றும் இந்திய சட்ட கமிஷன் (Indian Law Commission) வெளியிட்டிருந்த அறிக்கைகளின்படி இந்தியாவில் கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள் 40% மட்டுமே. ஆக 60% பேர் மீதான வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்படாதவை அல்லது பொய் வழக்குகள் என்பதால் விடுதலையாகிறார்கள்.
இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், இந்தியாவின் கிரிமினல் சட்டநடைமுறை, இன்னும் ஆதிகாலத்தைப் போல மிகவும் பிற்போக்கானதாக அல்லது வளர்ந்த அல்லது முன்னேறிய நாடுகளின் நடைமுறையிலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பின்தங்கியுள்ளதாக இருக்கிறது. அதாவது குற்ற சம்பவம் தொடர்பாக ஒருவரை தேர்வுசெய்து (Fix the Accused first) கைது செய்துவிட்டு, அந்நபரைத் தவிர அச்சம்பவத்திற்கு வேறு யாரும் காரணமல்ல என அவரிடமே ஒப்புதல் வாக்குமூலமும், அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஒத்தவிதமாய் இதர மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்களை தயாரித்து (Go for Investigation next) உறுதிசெய்து குற்ற பத்திரிக்கையை சமர்ப்பிப்பதாகும்.
வளர்ந்த நாடுகளில், குற்ற சம்பவம் தொடர்பாக, சந்தேக நபரை (Accused) விட்டுவிட்டு, அவரைக் குறித்த ஆதாரங்களையெல்லாம் சேகரித்துவிட்டு (Collection of evidence) குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து வாரண்ட் பெற்று அதன் பின், சம்மந்தப்பட்டவரை கைதுசெய்வதாகும்.
காக்கிச் சீருடையில் போலீசார் ஒரு நபரை, அவரது குடும்பம் சொந்தபந்தம் மற்றும் பொதுமக்கள் முன்பாக கைது செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள் மோசமானவை. அந்த நபர்பேரில் அவரது குடும்பம் வைத்திருந்த நம்பகத்தன்மை (Faith) கேள்விக்குள்ளாகிறது, அடுத்து சுற்றியுள்ள சொந்தபந்தமும், பொதுமக்கள் எனும் சமூகமும் இழிவாக பேசத்துவங்குகிறது. அவரது செல்வாக்கும் அந்தஸ்தும் காணாமல் போகிறது.
காக்கிச் சீருடையில் போலீசார் ஒரு நபரை, அவரது குடும்பம் சொந்தபந்தம் மற்றும் பொதுமக்கள் முன்பாக கைது செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள் மோசமானவை.
கடைசியாக அவரது நெருங்கிய உறவினர்களான மனைவி மக்களுடைய வாழ்க்கை ஓடும்ஆற்று நீரில் துடுப்பில்லாமல் பயணம் செய்யும் படகைப்போல் தத்தளிக்கத் தொடங்கிவிடுகிறது.
ஒரு நபரின் கைதுக்குப் பின் நடக்ககூடியவை இவ்வளவுதானா என்றால் இல்லை. கைதுக்குள்ளான நபரை பொதுமக்கள் முன்னால் ஓரளவு நாகரிகமாயும், மரியாதையாகவும் அழைத்துச் செல்லும் போலீசார், காவல்நிலைய எல்லைக்குள் சென்றவுடன், அந்த நபருக்கு கொடுக்கும் மரியாதையும், நடத்தும் விதமும் வேறு.
தமிழில் எந்த பேப்பரிலும் எழுதமுடியாத கெட்ட வார்த்தைகளாலும், மிரட்டல் அச்சுறுத்தல். வார்த்தைகளாலும் வதைத்தெடுப்பார்கள். எந்தக் குற்ற சம்பவத்தின் தொடர்பாக கைது செய்து அழைத்து வந்தார்களோ, அதைத் தான்தான் செய்தேன் என அந்நபர் ஒப்புக்கொள்ளும்வரையில், உடலில் ரத்த காயம் ஏற்படாத வகையில் அடித்து துன்புறுத்துவார்கள்.
இந்திய நாடெங்கிலுமுள்ள காவல் நிலையங்களில் எங்காவது நடக்கும் சித்திரவதைக் கொடுமைகள், கற்பழிப்புகள், லாக்கப் சாவுகள் குறித்து செய்தித்தாள்களில் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறன்றன. நின்றபாடில்லை.
குறிப்பாக 1975-இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 19 மாத அவசரநிலை காலத்தின் (Emergency) போது, நாடெங்கிலும் ஆங்காங்கே நடந்த காவல் நிலைய சித்திரவதைக் கொடுமைகள், போலி என்கவுண்டர்கள் குறித்தும், அதன் பின்னிட்டு சுமார் 20 ஆண்டு காலத்தில் நடந்த போலீஸ் கொடுமைகள் (Police Atrocities) குறித்தும் போடப்பட்ட பொது நல வழக்குகள் மூலம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற 11 வழிகாட்டுதல்களை வழங்கியது.
போலீசின் காவல் நிலைய படுகொலை, கற்பழிப்பு, சித்திரவதை ஆகியவற்றிலிருந்து, கைதுக்குள்ளாகும் நபர்களைக் காப்பாற்ற D.K.பாசு வழக்கில் தீர்ப்பு வழங்கியதுடன், அந்த வழிகாட்டுதல்களை கிரிமினல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து நாடாளுமன்றம் சட்டமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
அப்படி சட்டமாக்கும் வரையில், மேற்படி வழிகாட்டுதல்களை செயல்படுத்தாத போலீஸ் அதிகாரிகள் பேரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவேண்டும் என்றும் மிகுந்த அக்கறையுடனும் கடுமையாகத் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற D.K.பாசு வழக்கில் 1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட வழிகாட்டுதல்கள் அடிப்படையில் 1.11.2010-இல் கிரிமினல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் 41-A, 41-B, 41-C, 41-D திருத்தம் செய்யப்பட்டு, சில சாதாரணக் குற்றங்களுக்கு கைதுக்கு பதிலாக நோட்டீஸ் அனுப்பவும், கைது செய்யும் போலீஸ் அதிகாரிக்கு உள்ள கடமைகள் பற்றியும், மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் (கைதுகள் தொடர்பான விவரங்களை நிர்வகிக்க) கண்ட்ரோல் ரூம் நிறுவப்பட வேண்டியும், கைதுக்குள்ளாகும் நபர் தமது விருப்பத்திற்கு ஒரு வழக்கறிஞரை அணுகவும், சம்மந்தப்பட்ட காவல்நிலைய விசாரணையின் போது உடனிருக்க கோரவும், அவருக்கு உரிமையுண்டு என விதிமுறைகளாக சுமார் 14 ஆண்டுகள் கழித்து அமலுக்கு வந்தன.
இப்படி உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், ஒரு நபரின் கைதுக்குப்பின், கைதுக்குள்ளான நபரிடம், போலீசார் என்னவிதமாய் நடந்துகொள்ளவேண்டும் என சட்டமாக்கப்பட்டும், அவர்கள் திருந்தவில்லை.
ஏனென்றால், 1898-இல் பிரிட்டிஷ் ஆட்சியில் அமலில் இருந்த கிரிமினல் நடைமுறைச் சட்டம் தான், சுதந்திர இந்தியாவிலும் 1973-இல் புதுப்பிக்கப்பட்டது எனும் பெயரில் அமலில் உள்ளது.
போலீசுக்கான கைது அதிகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வளர்ந்த நாடுகளில் ஒரு நபரைக் கைது செய்வது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், சம்மந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதியிடம் இருக்கும்போது, இங்கு மட்டும் சாதாரண போலீஸ் அதிகாரியிடம் (ஹெட்கான்ஸ்டயிள், எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்) உள்ளது ஏன்?
இந்திய கிரிமினல் நடைமுறைச் சட்ட கைது அதிகாரத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் பாதிப்புகள் –
i. தங்குதடையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற கைது அதிகாரத்தால், போலீசார் மக்களிடம் அகம்பாவமாயும், ஆணவமாயும், அலட்சியமாயும் நடக்கிறார்கள்.
ii. தற்போதுள்ள கிரிமினல் நடைமுறைச் சட்ட பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள கைது மற்றும் புலன் விசாரணை அதிகாரத்தில், உயர் நீதிமன்றம், மட்டுமல்ல உச்சநீதிமன்றமும் கூட தலையிட முடியாது.
iii. அப்பாவிகள் பொய் வழக்குகளில் கைதாவதை தடுக்க வாய்ப்பில்லை.
iv. அப்பாவிகள் சித்திரவதைக்கு உள்ளாவதையும், காவல் நிலைய படுகொலைக்கு (Custodial Death) ஆளாவதையும் தடுக்க முடியவில்லை.
v. அப்பாவி பெண்கள் கைதாகும்பட்சத்தில், காவல் நிலைய கற்பழிப்பு (Custodial Rape) நடக்காது என்பதற்கு உத்திரவாதமில்லை.
vi. ஒரு அப்பாவி கைதாகி சமூதாயத்தில் மதிப்பு மரியாதை இழந்து, பணம் சொத்தெல்லாம் இழந்து, சிறையில் வாடி வதங்கி, குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்ய மாதங்கள், சில வருடங்கள் கழித்து, நீதிமன்ற விசாரணையில் குற்றவாளி இல்லை என தீர்ப்புவரும்போது,, அந்த அப்பாவி இழந்த வாழ்க்கைக்கு இழப்பீடு கொடுக்க அந்தச் சட்டத்தில் எந்த வழியும் இல்லை.
சரி செய்ய வேண்டியது என்ன?
அன்று 1898-ம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனிய அரசால் அமலுக்கு கொண்டு வரப்பட்ட, பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரிகளுக்கான கைது அதிகார (கிரிமினல் நடைமுறை) சட்டப் பிரிவுகள் 41(1)b மற்றும் 41(1)ba முற்றிலுமாக, இந்திய நாராளுமன்ற தீர்மானத்தால் ரத்து செய்யப்பட வேண்டும். அதாவது கடந்த 123 வருடங்களாக, இந்திய போலீசால் பின்பற்றி வரப்பட்ட, (ஒரு நபர் பேரிலான குற்ற சம்பவம் குறித்து புகார் – தகவல் – சந்தேக அடிப்படையில்) புகார் – கைது – புலன் விசாரணை – குற்றப் பத்திரிக்கை – நீதிமன்ற விசாரணை – தீர்ப்பு என்கிற வரிசை நடைமுறையை முற்றிலுமாக மாற்றி, வளர்ந்த நாடுகளின் போலீசார் பின்பற்றுவதைப்போல், கைது வாரண்டு வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு நபர் பேரிலான குற்றசம்பவம் குறித்து புகார் – தகவல் – சந்தேகம் வந்தவுடன் முதலில் புலன் விசாரணை, பிறகு குற்றப்பத்திரிக்கை, பிறகு நீதிமன்ற வாரண்ட் அடிப்படையில் கைது, பிறகு நீதிமன்ற விசாரணை, கடைசியாக தீர்ப்பு, எங்கிற வரிசை நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது நம் நாட்டில் அமலில் இருக்கும் 1973ஆம் ஆண்டு கிரிமினல் நடைமுறைச் சட்டத்திற்கும், வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் கிரிமினல் நடைமுறைச் சட்டத்திற்கும், இருக்கின்ற மிகப்பெரிய இடைவெளியைப் பற்றியும், இரண்டிலுமுள்ள (மக்களுக்கான) சாதக பாதகங்களையும் கொஞ்சம் அலசுவோமா?
இங்கு ஒரு கிரிமினல் புகார், காவல் நிலையத்தில் FIR-ஆக பதிவு ஏற்பட்டவுடன், இந்திய போலீஸ் செய்யும் முதல் வேலை குற்றம் சாட்டப்பட்ட அல்லது சந்தேக நபரை கைது செய்வதுதான்.
இப்படி எந்தவித முன் விசாரணையோ, புலனாய்வோ செய்யாமலும் அரசியல் சட்டம், சாட்சியச் சட்டம், தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்கள் பற்றிய அடிப்படை அறிவோ, தெளிவோ இல்லாமலும், தாம் எந்தவித ஆதாரமும் சாட்சியமும் சேகரிக்காமலே எடுக்கப்பட்ட கைது முடிவை (Decision for Arrest) உறுதிப்படுத்தும் நோக்கத்தில் செயற்கையாக தனிநபர் சாட்சியங்களை உறுவாக்குவதிலும், கைதுக்குள்ளான நபரையே தான் செய்யாத குற்றத்தைக்கூட தானே செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி சித்திரவதைக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கி, கடைசியில் ஜோடிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதிலும் போய் முடிகிறது.
பிரபலமான இந்திய வரலாற்றாசிரியர் ரொமிலா தப்பார் ஒருமுறை சொன்னார் – இந்திய போலீசார் குற்றம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சேகரித்த பின்னால் கைது நடவடிக்கைக்கு போகாமல், ஒருவரை கைது செய்துவிட்டு ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
(கட்டுரையாளர், தர்மபுரி மாவட்டம் பாலகோடில் உள்ள வழக்கறிஞர்)
Read in : English