Read in : English
வணிகமோ சொந்த பயன்பாடோ, எதுவாயினும் செலவுகள் இன்றியமையாதது. ஆனால் எதற்காக எவ்வாறு செலவழிக்கிறோம் என அறிந்து புத்திசாலித்தனமாக செயல்படுகிறீர்களா? செலவுகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுகிறதா? திட்டமிட்டு செலவு செய்கிறீர்களா?
ஒரு உதாரணத்துடன் விரிவாக இதை பார்க்கலாம்.
பெருந்தொற்று முடக்கம் காரணமாக எனது வணிக வாடிக்கையாளர் ஒருவரின் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளித்து, வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் தங்களது வாடிக்கையாளரை அதிகரிக்க, சந்தைப்படுத்தும் முயற்சியை அதிகரிக்க அந்நிறுவனம் முற்பட்டது. இதற்காக பல விதமான விளம்பர யுக்திகளை மேற்கொண்டு, அவர்களது வருவாயில் சுமார் 15% தொகையை விளம்பரத்திற்காக செலவழித்தனர். இது வழக்கமாக அவர்கள் செலவிடும் தொகையை விட 10% கூடுதலாகும்.
இந்த முயற்சியின் விளைவு என்னவாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? இதன் படிப்பினைகள் இதோ:-
• வருவாயை அதிகரிக்க செலவு மேற்கொண்டாலும், விற்பனை இலக்கை நிர்ணயிக்கவில்லை.
• வருவாய் அதிகரிக்காமல் இல்லை. 20% கூடுதலாக அந்நிறுவனத்தால் ஈட்ட முடிந்தது, ஆனால் இதை விட அதிகம் எதிர்ப்பார்த்திருந்தனர்.
• இந்த கூடுதல் வருவாய், விளம்பர யுக்தி காரணமாக வந்ததா என உறுதியாக கணிக்க முடியவில்லை.
• தெளிவான சந்தைப்படுத்தும் யுக்தியை கடைப்பிடிக்கவில்லை என உணர்ந்தனர்.
• விளம்பர செலவு திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்பட்டது.
• சந்தைப்படுத்துதலுக்கு செலவழிக்க வேண்டும் என்பதற்காக 15% தொகை செலவழிக்கப்பட்டது.
• ஒரு பெரிய விளம்பர முயற்சிக்கான முதலீட்டின் முடிவில் வருவாயை கணக்கிட முடியாமல் போனது.
• ஒரு நேர்த்தியான திட்டத்தை கடைப்பிடிக்கவில்லை என அவர்கள் உணர்ந்தார்கள்.
• குறிப்பிட்ட காலக்கட்டத்தில், சந்தைப்படுத்தும் முயற்சியின் முடிவை அளவிட சரியான வழிமுறை இல்லை என உணர்ந்தனர்.
செலவுகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுகிறதா? திட்டமிட்டு செலவு செய்கிறீர்களா?
இதே போல், மற்றொரு வாடிக்கையாளருடன் சொந்த செலவு பற்றி நான் மேற்கொண்ட உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு பெரிய நிறுவனத்தில் தொழில்நுட்ப தலைவரக உள்ள பிரேம் வேலையில் தன் தனித்துவத்தை வெளிப்படுத்துவராக திகழ்ந்தார். கை நிறைய வருமானம் இருந்தும் பெரிதாக சேமிப்பு இல்லை. உபரி வருமானம் அனைத்தையும் செலவழித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக, அவரின் எடையும் கூடியதால், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி நிறுவனத்தில் சந்தாவில் இணைந்து, தனக்கென ஒரு பெர்சனல் உடற்பயிற்சியாளரையும் நியமித்துக் கொண்டார். அவரின் சக பணியாளர் போல் தானும் ஒரு நவீன மிதிவண்டியை வாங்கினார்.
இதன் விளைவு என்ன? நீங்கள் நினைத்தது போலவே, இது நீண்ட நாள் நீடிக்கவில்லை. உடல்பயிற்சி கூடத்தில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் உற்சாகம் குறைந்தது. அலுவலகத்தில் நீண்ட நேர வேலைக்கு பின், அதிகாலையில் எழுவது சவாலாக அமைந்தது. அதனால், தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்திற்க்கு செல்வதை நிறுத்தியதோடு, அதி நவீன மிதிவண்டியும் துரு பிடிக்கத் தொடங்கியது. அவரின் எடை மட்டும் கூடிக் கொண்டே போனது!
அவருடைய படிப்பினைகள்:
• நிதி முடிவுகளை ஆவேசத்துடன் எடுக்கக் கூடாது. .
• சரியான திட்டமிடலின்றி செலவுகளை மேற்கொள்ளக் கூடாது.
• தெளிவான இலக்கு இல்லாமல் செலவிழத்தல் கூடாது.
• வேற்று வழிகளை ஆராயாமல் முடிவெடுக்கக் கூடாது.
• மற்றவர்களைப் பார்த்து நாமும் அதையே செய்ய முனையக் கூடாது.
• தேவையற்ற செலவுகளை மேற்கொள்ளக் கூடாது.
செலவுத் திறனை (வணிகம் மற்றும் சொந்த) மேம்படுத்த, கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கடைப்பிடிக்கலாம்:-
1. செலவுகளுக்கு தகுந்த வரம்பினை வகுத்தல்
2. அடையக்கூடிய இலக்குகளை நிர்யணித்தல்
3. தெளிவான யுக்தியை வகுத்தல்
4. கணக்கிடக்கூடிய இலக்கை நிர்யணித்தல்
வேற்று வழிகளை ஆராயாமல் நிதி முடிவுகளை ஆவேசத்துடன் எடுக்கக் கூடாது
உங்கள் அலுவலக மற்றும் சொந்த வாழ்க்கையில் இது குறித்து சிந்திக்க சில அணுகுமுறைகள் இதோ:
• கடந்த இரண்டு வருடங்களில் நீங்கள் மேற்கொண்ட தேவையற்ற செலவுகள் யாவை?
• இந்த தேவையற்ற செலவை எவ்வாறு தடுத்திருக்க முடியும்?
• மீண்டும் இது போன்ற செலவை மேற்கொள்ளாமல் இருக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களின் செலவுத் திறனை மேம்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
கட்டுரையாளர், சங்கீதா சங்கரன் சுமேஷ், பட்டயக் கணக்காளர். தலைமை நிதி அதிகாரியாக இருந்து பிசினஸ் அண்ட் லீடர்ஷிப் பயிற்சியாளராக இருப்பவர். பிசினஸ் ஆலோசகரும்கூட. Ðபன்னாட்டு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு உள்பட 25 ஆண்டுகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்.
Read in : English