Read in : English
மெட்ரோ ரயிலுக்கான இருக்கைகள் விரைவில் சென்னையில் தயாரிக்கப்பட உள்ளன. ரயில் இருக்கை அமைப்புகளுக்கான இந்திய – கொரிய கூட்டுத் தொழில் நிறுவனமான மசானி ரமேஷ் என்ஜினியரிங் (Machani Ramesh Engineering -MRE) நிறுவனம் இவற்றை தயாரிக்க உள்ளது.வரும் டிசம்பரில் இருந்து, சென்னையில் மெட்ரோ ரயில் இருக்கைகளுக்கான வணிகரீதியான உற்பத்தி தொடங்க இருக்கிறது.
எஸ்எஸ்எஸ் ஸ்பிரிங்ஸ் (SSS Springs) மற்றும் தேவோன் கார்ப்பரேஷன் (Daewon Corporation) நிறுவனங்கள் 60: 40 சதவீத பங்குகள் என்ற அடிப்படையில் உருவாக்கியுள்ள கூட்டுத் தொழில் நிறுவனம் மசானி ரமேஷ் என்ஜினியரிங்.
ஆட்டோமொபைல், பாதுகாப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பிற துறைகளில் ஆர்வம் கொண்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த மசானி குழுமத்தின் ஓர் அங்கம்தான் எஸ்எஸ்எஸ் ஸ்பிரிங்ஸ் நிறுவனம்.
ஸ்பிரிங்ஸ் பார்ட் உற்பத்தியில் இந்தியாவிலேயே இது மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது.
தென் கொரியாவைச் சேர்ந்த தேவோன் கார்ப்பரேஷன், ஆட்டோமொபைல் வாகன இருக்கைகள் தயாரிப்பில் உலகிலேயே முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.
ரூ.100 கோடி ஆர்டருடன் எம்ஆர்இ நிறுவனம் அதன் செயல்பாடுகளைத் தொடங்க இருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மெட்ரோ ரயில்களை இந்தியா உருவாக்க இருப்பதாக எஸ் எஸ் எஸ் ஸ்பிரிங்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சதிஷ் மசானி தெரிவித்தார்.
இப்போது 10 நகரங்களில் மட்டுமே இருக்கும் மெட்ரோ ரயில் போக்குவரத்து 50-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைய இருக்கிறது.
ஆண்டுக்கு 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள சந்தையில் இந்த கூட்டுத் தொழில் நிறுவனம் ஈடுபட இருப்பதாக சதீஷ் மசானி குறிப்பிட்டார்.
நாட்டில் இப்போது 800 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இணைப்பு அமைந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் 1,100 கி.மீ. தொலைவுக்கு இது விரிவடையும். 2047வாக்கில், இந்தியாவில் 5,000 கி.மீ. தொலைவுக்கு 100 நகரங்களைத் தழுவி மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அது சீனாவையும் தாண்டி, உலகிலேயே மிகப் பெரிய மெட்ரோ ரயில் சேவையாக இருக்கும் என சதீஷ் மசானி நம்பிக்கை தெரிவித்தார்.
வளர்ந்து பெருகி வரும் வலுவான இந்த தொழில் வாய்ப்புகளுக்கு இந்த நிறுவனம் ஈடுகொடுக்கும் என்றும், உள்நாட்டு சந்தைத் தேவைகளை நிறைவேற்றுவதுடன், வரும் ஆண்டுகளில் ஏற்றுமதிக்கான பொருள்களையும் இந்தக் கூட்டு நிறுவனம் தயாரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றுக்காக கூட்டு நிறுவனப் பங்குதாரர்கள் தங்களது முதலீட்டை படிப்படியாக 25 மில்லியன் டாலருக்கு மேல் அதிகரிக்க இருப்பதாகவும், ஆட்டோமொபைல் துறைக்கு இருக்கைகள் சப்ளை துவங்கப் போவதாகவும் மேலாண்மை இயக்குநரான அசோக் குமார் நாயக் கூறினார்.
கொரியாவின் தேவோன் கார்ப்பரேஷன் நிறுவனமானது இருக்கை அமைப்புகளை கொரியாவில் இருந்து தில்லியில் உள்ள பம்பார்டியர் டிரான்ஸ்போர்ட்டேஷன் நிறுவனத்துக்கு அனுப்பி வருகிறது. பம்பார்டியர் நிறுவனம்தான் டெல்லி மெட்ரோ நிறுவனத்துக்கு ரயில் பெட்டிகளை விநியோகம் செய்து வருகிறது.
ஆட்டோமொபைல் மற்றும் ரயில் இருக்கைகள் வணிகத்தில் உலக அளவில் முன்னணியில் உள்ள தங்கள் நிறுவனம், இந்தியாவில் நிலைத்து நீண்ட காலம் செயல்படும் வாய்ப்பை எதிர்நோக்குவதாக எதிர்நோக்குகிறது.
அதிக வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையிலான, எடை குறைவான, பாதுகாப்பான இருக்கைகள், அவற்றின் வடிவமைப்பு தொடர்பாக நவீன தொழில்நுட்பங்களை தங்கள் கூட்டு நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று தேவோன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் ஹெர்பர்ட் கிம் தெரிவித்தார்.
இரண்டாவது கட்டமாக, பஸ்களுக்கும் இதர ஆட்டோமொபைல் துறை வாகனங்களுக்கும் இருக்கைகள் தயாரித்து அளிக்கப் போவதாக சதீஷ் மசானி கூறினார்.
பெங்களூரில் இருந்து செயல்படும் எஸ்எஸ்எஸ் ஸ்பிரிங்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே மிகப் பெரிய ஸ்பிரிங் உற்பத்தி நிறுவனம் ஆகும்.
அமெரிக்கா உள்பட 14 இடங்களில் ஸ்பிரிங் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. டயோட்டா, ஹோண்டா, சுஸுகி, ஹுண்டாய், டைய்ம்லர், பாஷ் போன்ற ஆட்டோமோட்டிவ் கருவிகள் தயாரிக்கும் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இந்த கம்பெனி தனது உற்பத்திப் பொருள்களை வழங்கி வருகிறது.
Read in : English