Read in : English
தும்பி என்ற தட்டான், படைபோல் பறக்கும் காலம் நெருங்கிவிட்டது. தட்டான், தட்டாரப்பூச்சி, புட்டான் என, இதற்கு பல பெயர்கள். அழைக்க இன்னும் பல பெயர்கள் உண்டு. தமிழகத்தில் வட்டாரத்துக்கு உரிய அழகியலோடு அதன் பெயர் வடிவமைகிறது. நுாதனமான அதன் வண்ண சேர்க்கை கவர்ந்து இழுக்கிறது.
தும்பிகள் ஏன் இந்த காலத்தில் பறக்க வேண்டும்?
உயிரினங்களின் சூழலை சமன் செய்ய என்று எடுத்துக் கொள்வோம். அப்படியானால் சூழல் சமமாக இல்லையா?
இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது.
சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்காவிட்டால், கொசு போன்ற ரத்தக்காட்டேரிகள் பெருகும். சூழலில் அவற்றின் ஆதிக்கம் அதிகமாகும். அவை, உணவு தேடி ரத்தம் குடிக்கும். அப்போது, நோய்களும் பரவும். டெங்கு போன்ற நோய்கள் இந்த வகையில் பரவும்.
இது உயிர் சூழலின் சமநிலையைக் கெடுக்கும்.
மழைக்காலம் துவங்கும் போது, அரசின் உள்ளாட்சி ஊழியர்கள் மழைநீர் கால்வாயை துார்வாரி சரி செய்கின்றனர். சுற்றுப்புறத்தை துாய்மைப்படுத்துவர். கொசு தடுப்பு மருந்து தெளிப்பர். தெருவில், சுண்ணாம்பு கோலம் போடுவர்.
இவை எல்லாம், சூழலை சரி செய்வதற்கு தான்.
இது போன்ற செயல்களில், பொதுமக்களாகிய நாமும் இணையலாம். பொது இடங்களில் என்று இல்லை; வீட்டின் சுற்றுப்பகுதியில்.
இயற்கையும், சூழலை சமன் செய்கிறது.
எப்படி?
நம்மை சுற்றி பறக்கும் தும்பிகளை கூர்ந்து கவனித்தால் அதை அறியலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் காலம் இது.
மழை அறிகுறி தென்படுகிறது. லேசான ஈரப்பதத்துடன் வெப்பம் சமநிலையாக கவிகிறது. இந்த சூழ்நிலை பூச்சிகளுக்கு சாதகம். அவை பெருகுகின்றன.
கொசுக்கள் பெருகுவதால் சூழல் சமநிலை கெடுகிறது. இதைத் தடுக்கும் விதமாக, தும்பிகள் பெருகுகின்றன. தும்பிகளுக்கு உணவு, கொசு மற்றும் அவற்றின் முட்டை. கொசு வாழும் அதே சூழலில் தும்பிகளும் வாழுகின்றன. ஆனால் ஒரு வித்தியாசம். கெசுக்கள் இரவிலும் சஞ்சரிக்கின்றன. தும்பிகள் பகலில் மட்டுமே பறந்து வினோதமான வண்ணக்கலவையால் நிரப்புகின்றன. கற்பனையைத் துாண்டி ஆர்வம் ஊட்டுகின்றன.
சரி, இனி தும்பிகள் பற்றி:
தும்பி உடலை மூன்று பாகங்களாக பிரிக்கலாம்
முதலில் தலை; அடுத்து நெஞ்சு; கடைசியாக வால் போல் உள்ள வயிறு.
தலைப் பகுதியில் பெரிய இரண்டு கூட்டுக்கண்களும், வாயும், இரண்டு உணர்விழைகளும் உண்டு. பறக்கும் போதே, இரை நடமாட்டத்தைக் கண்காணிக்கும்.
உடல் பகுதியில் ஆறு கால்கள், நான்கு இறக்ககைள் உண்டு. கால்களில் மெல்லிய மயிர் போன்ற இழைகள் உண்டு. பறக்கும் போது ஆறு கால்களையும் சிறு கூடை போல் வைத்துக்கொள்ளும். அப்பொழுது அதில் சிக்கும் கொசு, ஈ, பட்டாம்பூச்சி போன்ற பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும்.
நான்கு சிறகுகளால் பறக்கிறது தும்பி. இலையில் பச்சையத்தை சுரண்டினால் எப்படி தெரியும். அதுதான் அதன் இறகுகளின் தோற்றம். மணிக்கு 70 முதல் 90 கி.மீ. கேவகத்தில் பறக்கும் திறன் பெற்றுள்ளது. இரை பிடிக்கும் போது, வேகம் இன்னும் அதிகம்.
ஆண்டுக்கு, 14000 முதல் 18000 கி.மீ.வரைப் பறக்கக்கூடியவை. முன் இறக்கைகள் உடலோடு சேரும் பகுதி அகலம் குறைவாக இருக்கும். பின் இறக்கையின் அடிப்பகுதி சேரும் இடம் அகலமானது. வினோதமான இந்த வடிவத்தை, ‘சீரிலாயிறகி’ என்கின்றனர்.
பறந்த நிலையில் ஒரே இடத்தில் நிற்கும். இதை, ‘ஞாற்சி’ என்பர். பறக்கும் போது திடீர் என, 180 டிகிரி திரும்பி பறக்கும் திறனும் அதற்கு உண்டு.
உலகில் இதுவரை, 6000 வகை தும்பிகளை அறிந்துள்ளனர். இந்தியாவில், 503 இனங்கள் உள்ளன. உலகில், 32.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவை உள்ளதாக கணித்துள்ளனர்.
பெண் தும்பி, முட்டைகளை நீரிலோ, நீரருகே உள்ள மண்ணிலோ, நீர்ச்செடிகளிலோ இடுகிறது. முட்டைகள் வெப்ப மண்டலத்தில் ஒரு மாத அளவிலே பொரிக்கும். குளிர் மண்டலப் பகுதியில், இரண்டு மாதம் முதல், ஏழு மாதங்கள் வரை எடுக்கும்.
அந்த முட்டைகளில் இருந்து பிறப்பது, சிறகில்லாத தும்பி. இது, ஐந்து ஆண்டுகள் வரை, நீருக்குள் வசிக்கும். பின், சிறகு முளைத்து, பறக்கத் துவங்கும். பின், இரண்டு மாதங்கள் வரை பறந்து திரிந்து முட்டையிட்டு மடியும்.
சரி, இவை தும்பி பற்றிய பொதுத்தகவல்.
தும்பி உங்களுக்கு பிடித்த பூச்சி. பார்க்கும் போது மகிழ்ச்சியை தரும். நல வாழ்வுக்கான சூழலை உருவாக்கும். பயிர் விளைச்சலில் உதவும்.
இனி தும்பிகளை கவனத்துடன் ரசியுங்கள். அவை, வாழ்க்கை சுழற்ச்சியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் உயிரினம்.
தும்பியை, ஒரு ஹெலிகாப்டர் போல் நினைவு படுத்த முடியும்; விமானமாக நினைக்க முடியும். ஆனால் தும்பி பறக்கும் தொழில் நுட்பம் வேறு. அதை அறிய முயலுங்கள்; கற்பனை செய்யுங்கள். புதிய வழியிலான தொழில் நுட்பத்தை உருவாக்குங்கள். அதை பயன்படுத்தி, உலகில் எளிதாக பறந்து திரியலாம். தும்பிகளையும் பாதுகாக்கலாம். தும்பிகளைப் பற்றி பாட்டும், கவிதையும் இலக்கியமும் எழுதலாம்.
தீபாவளிக்கு பிந்தைய வாரத்தில், கிராமப்புற கந்தன்கோவில்களில் கொண்டாடப்படும் சூரன் திருவிழா, தும்பிகளுடன் தொடர்புள்ளது. அது பற்றி தேடலாம் வாங்க.
தமிழ் சொற்கள் – புதியவை
ஞாற்சி – பறந்து கொண்டே ஓரே இடத்தில் நிற்பது
சீரிலாயிறகி – சீரற்ற இறக்கைகள் கொண்டது
Read in : English