Read in : English
அமேசான் பிரைமில் நவம்பர் 2 அன்று வெளியாகப் போகும் ஜெய் பீம் திரைப்படத்தின் ட்ரெயிலரை ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படத்தின் ‘கையில எடு பவர’ பாடலையும் இதே அளவில் பார்த்திருக்கிறார்கள். பழங்குடியினப் பெண்ணுக்கான நீதிக்காக அரசை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் சமூக வலைத் தளத்தில் தொடர்ந்து புழங்கிவருவோர்.
சாதிரீதியான பாகுபாட்டை அழுத்தமாக முன்வைத்திருக்கும் படமாக இது உருவாகியிருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறுகிறது படத்தின் ட்ரெயிலர். ட்ரெயிலரில் இடம்பெற்ற திருடன் இல்லா சாதி இருக்கா வசனம் இப்போதே மீமாக உலா வருவதைப் பார்க்க முடிகிறது. ஜெய் பீம் என்னும் தலைப்பும், இத்தகைய வசனங்களும் பழங்குடியினப் பெண்ணுக்கான நீதி என்னும் கருவும் சூரரைப் போற்று படத்தில் தவறவிட்ட ஆஸ்கரைப் பெறுவதற்கான முயற்சியோ என எண்ணவைக்கிறது.
ஜெய் பீம் படத்துக்கும் சூரரைப் போற்று படத்துக்குமான ஒற்றுமைகளே இப்படி யோசிக்கவைக்கின்றன. அப்படம் பற்றி வெளிவரும் தகவல்கள், சூரரைப் போற்று படத்தில் ஆழமாக வெளிப்பட்டிருக்காத ஒடுக்கப்பட்டோர் அரசியல் ஜெய் பீம் படத்தில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கக் கூடுமோ என்ற எண்ணவைத்திருக்கின்றன.
ஒடுக்கப்பட்டோருக்கான நீதி என்பது ஆஸ்கர் கனியை விழச் செய்யும் ஆற்றல்மிக்க கல் என நினைக்கிறதோ ஜெய் பீம் குழு? இந்தப் பின்னணியில் ஆஸ்கர் விருதுக்கும் நம் படங்களுக்குமான உறவை அசைபோடலாம்.
ஜெய் பீம் படத்தின் நாயகன் சூர்யா நடித்து, இதே அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு வெளியான, திராவிட அரசியல் முலாம் பூசிய, சூரரைப் போற்று ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்டது. அது, 93 ஆம் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த 366 படங்களில் ஒரே இந்தியப் படம் என்னும் பெருமையைப் பெற்றிருந்தது. சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை எனப் பல பிரிவுகளில் சூரரைப் போற்று ஆஸ்கர் போட்டியில் கலந்துகொண்டது. இறுதியில் சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதைத் தவறவிட்டுவிட்ட போதும், ஓடிடியில் வெளியாகி முதன்முறையாக ஆஸ்கர் போட்டிவரை சென்ற தமிழ்ப் படம் என்றவகையில் வரலாற்றில் குறித்துவைக்கப்படும்.
உண்மையில், 2021ஆம் ஆண்டு விருதுக்கென இந்தியாவிலிருந்து ஜல்லிக்கட்டு என்னும் மலையாளப் படமே அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.அதே நேரத்தில், ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான ஜிஆர். கோபிநாத்தின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான, பொழுதுபோக்குப் படமான சூரரைப் போற்று பணம் கட்டியே போட்டியில் கலந்துகொண்டது.
உலக அளவிலான படங்கள் 12,500 அமெரிக்க டாலர் பணம் கட்டி, தங்கள் படத்தை ஆஸ்கர் விருதுக் குழுவுக்குப் போட்டுக் காட்டும் வாய்ப்பை ஆஸ்கர் நிறுவனம் வழங்குகிறது என்கிறார்கள். அந்த வகையில்தான் சூரரைப் போற்று படம் ஆஸ்கருக்குச் சென்றதே ஒழிய இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையின் பேரில் அன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கும் ஆஸ்கருக்குமான தொடர்பின் முக்கியமான கண்ணியாக இந்த ஆண்டு நூற்றாண்டு காணும் சத்யஜித் ராயைத் தான் சொல்ல முடியும். அவரது வாழ்நாள் சாதனைக்கு மரியாதை தரும் வகையில், 1992ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருதுக் குழு அவருக்குச் சிறப்பு விருதளித்தது. ஆனால், அபு சன்சார் (1959), மகாநகர் (1963), சாத்ரஞ் கே கிலாரி (1978) ஆகிய அவரது படங்கள் அதற்கு முன்பே இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வுகளாக இருந்தபோதும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில்கூட இடம்பெறவில்லை.
சத்யஜித் ராய்க்கு முன்னதாக ஆஸ்கர் விருதை வென்றவர் பானு அதையா. அவர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் இயக்கத்தில், பென் கிங்ஸ்லி நடித்த காந்தி (1982) திரைப்படத்தின் ஆடை வடிவமைப்புக்காக ஜான் மாலோ என்ற ஆங்கிலேயருடன் விருதைப் பகிர்ந்துகொண்டார். கிரிக்கெட் விளையாட்டுச் சம்பவங்களாலான அமீர் கான் நடித்த லஹான் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பானு அதையாதான். அவர், குரு தத்தின் பியாசா, 1942: எ லவ் ஸ்டோரி, டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் படையெடுப்பு 1957ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அந்த ஆண்டு இந்தியாவிலிருந்து முதன்முறையாக மதர் இந்தியா எனும் இந்திப் படம் ஆஸ்கர் விருதுக்கான இந்தியப் பரிந்துரையாகத் தேர்வுசெய்து அனுப்பப்பட்டது. மெஹ்பூப் கான் இயக்கத்தில் நர்கீஸ் நடித்த அந்தப் படம் 1959ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டிப் பட்டியலில் இருந்தபோதும் ஆஸ்கரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் நழுவவிட்டது. அப்போது ஆஸ்கர் விருதைத் தட்டிச்சென்றது த நைட்ஸ் ஆஃப் கேபிரியா என்னும் இத்தாலிப் படமே.
இதற்கடுத்து இந்தியாவிலிருந்து 1988 ஆம் ஆண்டு 61ஆம் ஆஸ்கர் விருதுக்கு சலாம் பாம்பே திரைப்படமும், 2001 இல் 74ஆம் ஆஸ்கர் விருதுக்கு லஹான் திரைப்படமும் அனுப்பப்பட்டன. அவை இரண்டும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கலந்துகொண்டன. ஆனாலும், இறுதிப் போட்டியில் அவை தோல்வியே கண்டன; விருதை வெல்லவில்லை. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட இந்தப் படங்கள் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் மட்டுமே போட்டியில் கலந்துகொண்டன. இப்போது இந்தப் பிரிவு சிறந்த சர்வதேசப் படம் என அழைக்கப்படுகிறது.
மதர் இந்தியா, சலாம் பாம்பே, லஹான் ஆகிய படங்களைத் தவிர, இந்தியப் பரிந்துரையின் பேரில் அனுப்பப்பட்ட எந்தப் படமும் ஆஸ்கர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தமிழில் தெய்வமகன் (1969), நாயகன் (1987), அஞ்சலி (1990), தேவர் மகன் (1992) குருதிப்புனல் (1995), இந்தியன் (1996), ஜீன்ஸ் (1998), ஹே ராம் (2000), விசாரணை (2016) ஆகிய படங்கள் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டன. விசாரணை திரைப்படம் சில கட்டங்களைத் தாண்டிய போதும் இறுதிப் போட்டியில் நுழைய முடியவில்லை.
ஐந்து முறை கமல் ஹாசனின் தமிழ்ப் படங்களும் ஒருமுறை சாகர் என்னும் இந்திப் படமும் ஒருமுறை சுவாதி முத்யம் என்னும் தெலுங்குப் படமும் ஆஸ்கருக்கெனப் பரிந்துரைக்கப்பட்டன.
அதிலும் 1985, 1986, 1987 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் நடித்த இந்திப்படம், தெலுங்குப் படம், தமிழ்ப் படம் ஆகியவை ஆஸ்கர் விருதுக்கென இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக இருந்தன. எனினும், இதுவரை அவர் நடித்த ஒரு படம்கூட ஆஸ்கர் பரிந்துரைக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
காட் ஃபாதர் ஹாலிவுட் படத்தைப் பார்த்திருக்கும் ஆஸ்கர் குழுவின் எந்த உறுப்பினர் நாயகனுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்?
ஆனாலும், ஆஸ்கர் நாயகன் என ரசிகர்களால் கமல்ஹாசன் அன்புடன் அழைக்கப்படுகிறார். அது தமிழ் ரசிகர்கள் அவரது நடிப்புக்குக் கொடுத்திருக்கும் அங்கீகாரம் என்றே புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. இப்போதைக்கு கமலுக்குக் கிடைத்த ஆஸ்கர் அதுதான். ஆஸ்கர் சொல்லித்தான் நமக்கு கமலின் மதிப்பு தெரிய வேண்டுமா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிஜமான ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான். கமலை நாயகனாக்கிய பாலசந்தர்தான் ரஹ்மானையும் இசையமைப்பாளராக்கினார்.
ஸ்லம்டாக் மில்லியனர் என்னும் ஆங்கில மொழிப் படத்தின் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை ரஹ்மான் பெற்றார். அந்தப் படத்தில் சிறந்த பின்னணியிசை வழங்கியதற்காகவும் சிறந்த பாடலுக்கான இசைக்காகவும் அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் அந்தப் படத்தில் சிறப்பாக ஒலிக் கலவைப் பணியை மேற்கொண்ட, கேரளாவைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டிக்கும் விருது கிடைத்தது.
ஆஸ்கர் விருதுக்கான பயணம் நீண்ட தொலைவைக் கொண்டது. அதன் அரசியலும் நடைமுறை விதிகளும் மிகச் சிக்கலானவை. வாக்களிக்கும் உரிமை பெற்றோர் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் என்கிறார்கள். ஆஸ்கர் விருதைப் பெற்றுவிட முயலும் மலையாளத் திரைப்பட இயக்குநர் ஒருவரது பயணத்தை விவரிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த மலையாளப் படம் அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ (2019).
இந்தப் படத்தை இயக்கிய சலிம் அஹமது தனது ஆதமின்ட மகன் அபு படத்துக்கான ஆஸ்கர் விருதுப் பயணத்தில் பெற்ற அனுபவத்தையே இந்தப் படத்தில் காட்சிகளாக்கினார் எனப் பேசப்பட்டது. ஆக, எல்லா விருதுகளையும் போல ஆஸ்கர் விருதும் சர்ச்சையையும் அரசியலையும் உள்ளடக்கியதே. இத்தகைய தடைகளை எல்லாம் தாண்டி ஆஸ்கர் விருது பெற வேண்டும் என இந்தியப் படங்கள் ஏன் முனைப்பு காட்டுகின்றன?
விசாரணை படத்துக்காக ஆஸ்கர் கதவைத் தட்டிப்பார்த்த இயக்குநர் வெற்றிமாறன் ஆஸ்கர் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாகப் பல விஷயங்களை நாளிதழ் ஒன்றில் பகிர்ந்துகொள்கிறார். இந்தியப் படங்கள் ஆஸ்கர் விருதைப் பெறாதபோதும், அதில் கலந்துகொள்வதையே பெருமைக்குரிய விஷயங்களாகக் கருதுகின்றன. அதனால் பெரும் பொருள் செலவானாலும் பரவாயில்லை எனக் கருதிப் போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.
வெளிநாட்டுப் படங்களைப் பொறுத்தவரை அவை சிறந்த சர்வதேசப் படம் என்னும் பிரிவிலேயே விருதைப் பெற இயலும். ஃபிலிம் ஃபெடெரேசன் ஆஃப் இந்தியா என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பின் தேர்வுக் குழுவினரே, தங்களிடம் விண்ணப்பிக்கப்பட்ட 14 படங்களிலிருந்து ஒரு படத்தைத் தேர்வுசெய்து அனுப்புகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்கவும் கட்டணம் உண்டு.
ஆஸ்கர் குழுவில் வாக்களிப்போரைக் கவர்ந்த படங்களை அவர்கள் சிறந்த சர்வதேசப் படம் என்னும் பிரிவைத் தாண்டி, சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிப்பு போன்றவற்றுக்கும் பரிந்துரைக்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார் வெற்றிமாறன். அப்படியான படங்கள் அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமாம். லைஃப் இஸ் பியூட்டிபுல் என்னும் இத்தாலிப் படத்துக்குச் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவிலும், சிறந்த நடிகர் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. அதேபோல் பாராசைட் படத்துக்கும் சிறந்த சர்வதேசப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் விருது கிடைத்தது.
இத்தகைய விதிவிலக்குகள் உள்ளன என்றபோதும் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை மறந்துவிடலாகாது. ஆனாலும், ஆஸ்கர் கனவை மனத்தில் தேக்கியே திரைப்பயணத்தை இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆஸ்கர் விருது கிடைக்கிறதோ இல்லையோ அந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலைச் சமூக வலைத்தளத்தின் வழியே பரப்புகிறார்கள். இதன் மூலம் படம் தொடர்பான நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது சந்தை மதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
அடிப்படையில் ஆஸ்கர் ஹாலிவுட் திரைப்படங்களின் கலைத்தன்மை, தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆஸ்கர் நிறுவனத்தின் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கான விருது.
அவர்களின் ரசனை, விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்த ஆஸ்கர் விருதைப் பெறுவதில் நமக்கு என்ன பெருமை? அதை ஏன் நாம் போராடிப் பெற வேண்டும்? நமது ரசிகர்களைத் திருப்தி செய்து நமது நாட்டில் கிடைக்கும் வெற்றிகளையும் விருதுகளையும்விட ஆஸ்கரைப் பெரிதாக நினைப்பது ஒருவகையான தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடே. மேலும், ஆஸ்கர் விருது மட்டுமல்ல அதைப் பெறும் படங்களில் வெளிப்படும் அரசியலும் நமக்குத் தூரமானது; அந்நியமானது.
ஆஸ்கர் விருதுப் படங்களின் பட்டியலைப் பார்த்தாலே ஆஸ்கர் அரசியலை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். பல சந்தர்ப்பங்களில் இன வெறி, நிற வெறி போன்ற விஷயங்களை மனிதநேயத்துடன் வெளிப்படுத்தும் படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் கொடுக்கப்படுகின்றன. இது ஒருவகையில் அவர்களது குற்றவுணர்வுகளுக்கான வடிகால்.
அங்கே போய் நாம் ஏன் எதிர்பார்ப்புடன் நிற்க வேண்டும்? சூத்திரர், பார்ப்பனர், பஞ்சமர் என்று பிரிந்து கிடக்கும் நமது சாதிய வாழ்வைப் பேசும் நமது படங்களின் அரசியலை அவர்கள் எந்த அளவுக்கு விளங்கிக்கொள்ள இயலும்?
மேலும், நமது சூரரைப் போற்று போன்ற பொழுதுபோக்குப் படத்துக்கு ஆஸ்கரை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அதனால் தான் ஆஸ்கர் எதிர்பார்க்கும் விஷயங்களுடன் ஜெய் பீம் படத்தை உருவாக்குகிறார்களோ?
தமிழ்ப் படங்களில் நாயகனை நாலும் தெரிந்தவனாகக் காட்டுவற்கு, அவன் ஆங்கிலத்தை அநாயாசமாகப் பேசும் காட்சியை வைப்பார்கள். அப்படியான ஆங்கில மோகம் போல்தான் ஆஸ்கர் மோகமும். அதை நம் கலைஞர்கள் உணராதவரை, என்றாவது பொழிந்துவிடாதா என ஆஸ்கர் வானத்தை அண்ணாந்து பார்த்தபடியேதான் அவர்கள் இருப்பார்கள். அப்படியான படங்களில் ஒன்றாகுமா ஜெய் பீம்?
Read in : English