Read in : English

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தமிழக அரசு.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிந்து விட்ட சூழ்நிலையில், தற்போது பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வுக்காகப் படிப்பதுடன் நீட் தேர்வுக்கும் படிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியாமல் திரிசங்கு நிலையில் இருக்கிறார்கள் தமிழக மாணவர்கள்.

இந்த நிலையில், “தமிழக அரசின் மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசுகளுக்கு இருக்கக்கூடிய உரிமையை மதிக்கும் வகையில் அதற்குக் குடியரசுத் தலைவர் விரைவில் அனுமதி வழங்க வேண்டும்’’ என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

“மத்திய மாநில அரசுகளுக்கான உரிமைகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷனும் அதற்குப் பின் அமைக்கப்ட்ட பூஞ்சி கமிஷனும் பொதுப் பட்டியலில் இருக்கக்கூடிய ஒரு பொருளின் மீது மாநிலத்தின் நிலைமைக்குத் தகுந்தாற்போல ஒரு மாநில அரசு சட்டத்தை இயற்றிக் கொண்டால்  அத்தகையச் சட்டத்தைக் காப்பாற்றுவதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 254வது பிரிவின் நோக்கம் எனக் கூறியுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் நுழைவுத் தேர்வு நடத்த விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு தனது 92வது அறிக்கையில் கூறியுள்ளது. மார்டன் டென்டல் காலேஜ் வழக்கில், இதைத்தான் நடைமுறைப்படுத்தச் சொல்லியது உச்சநீதிமன்றம்” என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் கஜேந்திரபாபு.

மாநில அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு மட்டுமே இந்த மசோதா

“மருத்துவத்துறையையும் மருத்துவக் கல்வியையும் பிரித்துப் பார்க்க முடியாது. Ñமாநிலத்தின் சுகாதாரத் துறையின் தேவைக்குத் தகுந்தபடி மருத்துவர்களை உருவாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மத்திய அரசின் நோக்கம் கல்வியில் வணிகமயத்தைக் கட்டுப்படுத்துவதும் தனியார் கல்லூரிகளில் நடக்கும் முறையற்ற மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதும்தான் என்றால் அந்த நோக்கத்துக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றிய மசோதா முரண்பட்டதல்ல. ஏனெனில், மாநில அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு மட்டுமே இந்த மசோதா. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பல்கலைக்கழகத்தை ஒழுங்குபடுத்துவது என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. எனவே, மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிட முடியாது” என்கிறார் அவர்.

மாநில பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்களை தேசிய மருத்துவக் கமிஷன் (நேஷனல் மெடிக்கல் கமிஷன்) சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்த முடியாது. இந்த நிலையில் மாநில அரசு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ கமிஷனின் சட்டத்தின் 14வது பிரிவு பொருந்தாது என்பதை தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

“தரமான மருத்துவர்களை உருவாக்குவதே நீட் தேர்வின் நோக்கம் என்கிறது மத்திய அரசு. கல்வி வணிகமயமாவதை நீட் தேர்வு ஊக்குவிக்கிறது. நீட் தேர்வு பயிற்சிக்காக தனியார் பள்ளிகளும் கோச்சிங் மையங்களும் வணிக நோக்குடன் செயல்படுகின்றன.நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தாலும்கூட, தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் சேர முடியாது போகிறது. ஆனால் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்கூட, பணம் இருந்தால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலைமை உள்ளது. எனவே, நீட் தேர்வின் நோக்கமே அடிபட்டுப் போகிறது” என்கிறார் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்.

“நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற்றாலும் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவு இடங்களைப் பெறும் வகையில் தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களை தொடர்ந்து மேம்பட்ட தரத்துடன் நடத்த வேண்டும்” என்று கூறும் சமூக சமுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத்,

`மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் ஏற்படுள்ள கடுமையான நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் நீட் மட்டுமே காரணம் என்ற முடிவுக்கு வருவது நோயைத் தவறாக அறிதலுக்கு (Wrong Diagnosis) ஒப்பாகும். மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதைத் தடுக்கவும் அரசின் உறுதியான நடவடிக்கை தேவை” என்றார்

அதிமுக ஆட்சிக் காலத்தில் அனுப்பப்பட்டட மசோதா, என்ன காரணத்திற்காகத் திருப்பி அனுப்பப்படுகிறது என்று குறிப்பிடப்படாமல் திரும்பி வந்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு குறித்து நீதிபதி ராஜன் தலைமையிலான நிபுணர் குழு அமைத்து அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக  சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிற மாநிலங்களின் ஆதரவையும் கோரியுள்ளார். இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி வழங்குவரா அல்லது ஏதாவது காரணம் சொல்லி தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்புவரா என்பதையும் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் மருத்துவக் கனவுகளோடு பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் திரிசங்கு நிலையில் இருக்க வேண்டியதுதான்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival