Read in : English
“அதிர்ஷ்ட கலம் பூஜ்யமாகி இருளில் விழுந்து கிடக்கும் பல சங்கீத மேதைகளைப் போல, சில பெரிய பாடகர்களும் தங்களுக்கு உரித்தான புகழைப் பெறவில்லை. இந்த துரதிர்ஷ்ட கோஷ்டியில் கரிச்சான் ஒன்று.
ஆனால், அது புகழைப் பற்றிக் கவலைப்படவில்லை. வெறும் இனிமைக்காக ஆத்மார்த்தமாக தன்னுடைய ஆனந்தத்திற்காகவே நாதோபாசனை செய்கிறது” என்று தி. ஜானகிராமன், எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனைப் பற்றி எழுதும் போது (கிராம ஊழியன் 1.6.1944) குறிப்பிட்டுள்ளார்.
இது கு.ப.ராவுக்கு மட்டுமல்ல, அவரை ஆதர்ஷ புருஷராகக் கருதும் கரிச்சான் குஞ்சுவுக்கும் பொருந்தும்.
கரிச்சான் குஞ்சு என்று அன்புடன் அழைக்கப்படும் ஆர். நாராயணசாமி (10.7.1919 – 12.1.1992) பழைய தஞ்சை மாவட்டத்தின் சேதனீபுரத்தில் பிறந்தவர். வயிறு வளர்க்க எழுத்தை எப்படியும் பயன்படுத்தலாம் என்று அறியாத அந்த மனிதர் இலக்கியத்தை நம்பி வாழ்ந்ததால் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் ஏராளம். அது பற்றி அவரே எழுதியிருக்கிறார்.
“கு.ப.ரா. இறந்த பிறகு என்நிலை பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாயிற்று. நேர்மைக்கும் உண்மைக்கும் இடமில்லாத சூழ்நிலையில் மாதம் 30 ரூபாய் வந்து கொண்டிருந்த தமிழாசிரியன் உத்தியோகம் போய்விட்டது. அல்லது நானே விட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐந்தாறு வயிறுகள் உள்ள குடும்பம். என் தாயார் மிகவும் வருத்தப்பட்டார். வேறு பள்ளியில் உத்யோகம் கிடைக்க வாய்ப்பில்லாத மாதம் அது.
ஆகஸ்ட் என்று நினைக்கிறேன். கு.ப.ராவுடன் திருச்சிக்கு எப்போதோ சென்ற போது அங்கே பேராசிரியர் சாரநாதன் அவர்களுடைய நட்பு கிடைத்திருக்கிறது. அவர் எங்கோ வந்தவர் நினைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தார்.
என் கதையை சொன்னேன். என் தாயாரைக் கூப்பிட்டுக் கேட்டார். கேட்க வேண்டுமா, அவள் ஒரே பிரலாபம். பட்டினிக் கதையை விரித்து விட்டாள். வந்ததே சினம் புரொபஸருக்கு. அட முட்டாளே! அவன் (கு.ப.ரா.) தான் வயிற்றுக்குச் சாப்பிடாமலே செத்துப் போனான். அவன் சிஷ்யன் நீயும் பட்டினி கிடந்து இலக்கியம் செய்து சாகப் போகிறாயோ? முட்டாள், உயிருடன் உள்ள ஒரு நாய் செத்துப் போன சிங்கத்தைவிடப் பெருமை படைத்த ஒன்று: கிளம்பு: வா என்னோடு. உன் தாயாருக்கு மாதம் முப்பதோ நாப்பதோ நான் அனுப்பிவிடுகிறேன். நீ என்னுடன் இரு. எங்கள் பள்ளிக்கூடத்திலோ அல்லது ஈ.ஆர். பள்ளியிலோ சொல்லி வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி அழைத்துப போனார்.(வைகை கு.ப.ரா. மலர். 1979).
இப்படி அவரது வாழ்க்கை கரடு முரடாக இருந்தது. புதுச்சேரியில் பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டில் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்தார். பின்னர் கும்பகோணம் திரும்பிவிட்டார். எந்த வேலையும் அவருக்கு நீண்ட நாள் நிலைக்கவில்லை. நான்கு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது எப்படி என்று கடைசிக் காலங்களில் அவர் தவித்தார்.
இப்படி வாழ்க்கைச் சிக்கல்களுடன் காலம் தள்ளிக் கொண்டிருந்தாலும்கூட, யாரும் அவரைப் பார்க்க வந்து விட்டால் உற்சாகமாகிவிடுவார். கரிச்சான் குஞ்சுவின் படைப்புகளைப் படிப்பதைவிட, அவரிடம் நேரில் பேசிக் கொண்டிருப்பதே அலாதி மகிழ்ச்சிதான். நெற்றியில் திருநீறு பட்டையுடன் உச்சிக்குடுமியுடன் இருக்கும் இந்த வயதான மனிதரிடம் பேசுவதற்கு என்ன இருக்கும் என்று பார்க்கிற யாரும் எண்ணிவிடலாம். வெற்றிலை சீவலை வாயில் ஒதுக்கிக் கொண்டு, அவர் பேசத் தொடங்கிய சில கணங்களில் சின்னக் குழந்தை போல தவழ்ந்து நமது இதயத்தில் ஒட்டிக் கொள்வார்.
இலக்கியத்தின் நவீனப் போக்குகள் பற்றியும் புதிய எழுத்தாளர்களையும் பற்றியும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்.
இளைஞர்களுடன் உரையாடுவதில் அவருக்கு அலாதிப் பிரியம். அவர்களிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப்பார். பேசும்போது, தனது பழைய அனுபவங்களை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்து கொள்வார். தகுதியானவர்களைப் பாராட்டுவார். போலித்தனங்களைப் பார்த்து கோபம் கொள்வார். மகிழ்ச்சியான நேரங்களிலும், கோபமான நேரங்களிலும் அவரது உரையாடல்களின் ஊடே கெட்ட வார்த்தைகள் இயல்பாக சரளமாக வந்து போகும்.
ஜானகிராமன் எழுத்துகள் மீது கரிச்சான் குஞ்சுக்கு அவருக்கு விமர்சனம் உண்டு. ஆனாலும், அவருடன் இளமைக் காலத்திருந்து தொடங்கிய நெருங்கிய அன்னியோன்ய நட்பு கடைசி வரை என்றும் குறைந்தது இல்லை. ஜானகிராமன் இறந்தபோது, “என் நண்பன் மட்டுமா ஜானகி, என் உறுப்புகளுள் ஒன்றாயிருந்தவன்” என்று மனம் நெகிழ்ந்து எழுதினார்.
கும்பகோணத்தில் நடக்கும் இலக்கியக் கூட்டங்கள் என்றால் பெரும்பாலும் வந்துவிடுவார். கடைசிக் காலத்தில் தள்ளாமையும் பார்வைக் குறைவும் இருந்தாலும்கூட, யாராவது துணையுடன் தஞ்சாவூரில் நடக்கும் சும்மா இலக்கியக் கூட்டங்களுக்கும் வந்ததுண்டு. கும்பகோணத்தில் மக்கள் யுத்தக் குழுவினர் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்டு, தேர்தல் பாதை திருடர் பாதை, புரட்சி ஓங்குக என்று கோஷமிட்டுச் சென்றவர்.
இப்படிப்பட்ட வித்தியாசமான இந்த கரிச்சான் குஞ்சு நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
அவர் எழுதிய ‘பசித்த மானிடம்’ முக்கியத்துவம் வாய்ந்த நாவல்.
நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரின புணர்ச்சியை கையாண்ட இந்த நாவலில் வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் குணாதிசயங்களையும் நுட்பமாக எழுதியிருக்கிறார்.
பாரதி தேடியதும் கண்டதும் (1982), கு.ப.ரா. (1990) ஆகியவை இவரது கட்டுரை புத்தகங்கள். தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாய எழுதிய what is living and what is dead in Indian Philosophy என்ற புத்தகத்தை இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பவையும் அழிந்தனவும் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஆனந்தவர்த்தனரின் `த்வன்யாலோகம்’ என்ற சமஸ்கிருத நூலை ‘தொனி விளக்கு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.
இலக்கிய உலகில் குழுக்களைச் சார்ந்த இலக்கிய பீடாதிபதிகளுக்குக் கிடைக்கும் அந்தஸ்து, கரிச்சான் குஞ்சு போன்ற கும்பல் சாராத இலக்கியவாதிகளுக்குக் கிடைத்துவிடுமா என்ன?
அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகக் கூறமுடியாது. இலக்கிய அனுபவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் புத்தகமாக அவர் எழுதியிருந்தால் அது மிகச்சிறந்த படைப்பாக அமைந்திருக்கும்.
எண்பதுகளின் தொடக்கத்தில் கும்பகோணத்தில் நான் இருந்தபோது கரிச்சான் குஞ்சு எனக்கு நல்ல பழக்கம். கதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் சிறகு விரித்த அவரது அனுவபங்களைக் கேட்டு எழுத வேண்டும் என்று நினைத்து 16.6.1986அன்று கும்பகோணத்துக்கு வந்தேன். என்னுடன் எனது நண்பர் தஞ்சை ப்ரஷாஷும் என்னுடன் வந்தார். அன்று மாலை 3 மணியளவில் கரிச்சான் குஞ்சுவின் வீட்டில் அவருடன் நடத்திய உரையாடலை சிறிது நேரம் எழுதினோம்.
பின்னர் பேச்சுச் சுவாரசியத்தில் தொடர்ந்து எழுதாமல் விட்டுவிட்டோம். அதன் பிறகு சிலமுறை கும்பகோணத்தில் அவரைச் சந்தித்து பல விஷயங்கள் பேசினாலும்கூட அதைப் பதிவு செய்து அந்தப் பேட்டியை முழுமையாக்க இயலவில்லை. அந்த உரையாடலின் சில பகுதிகள்:
எழுத்துத் துறைக்கு நீங்கள் வந்தது எப்படி?
1939-40களில் கலைமகளில் எனது முதல் கதை ‘ஏகாங்கி’ என்ற புனைப்பெயரில் ‘மலர்ச்சி’ என்ற தலைப்பில் வந்தது. 1938 முதல் தி. ஜானகிராமனுடைய தூண்டுதலால் மணிக்கொடியையும் பாரதியும் படித்தேன். மதுரையில் இருந்த ராமேஸ்வர தேவஸ்தானம் பாடசாலையில் தமிழ் வித்வான் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தேன்.
அந்தப் பாடசாலையின் சூழ்நிலை மிகவும் சனாதனமானது. வடமொழி கற்பித்த ஆசிரியர்கள் தவிர தமிழ் கற்பித்த ஆசிரியர்களும் வைதீகமானவர்கள். அப்பாடசாலையில் சிரோன்மணி வகுப்பிலும் வித்வான் வகுப்பிலும் கற்றவர்கள் சென்னைப் பல்கலைக்கழக பட்டப் பரீட்சைகளுக்குப் போகிறவர்கள்.
ஆகவே, அதை கௌரவமாக, ஆனால் ரொம்பவும் மறைவாக காலேஜ் என்று சொல்லிக் கொள்வோம். நான் படித்த போது, அந்தக் கல்லூரியின் முதல்வர் வி.சுப்பிரமணிய ஐயர். அவர் பாரதியாரின் இளைய தாயாருக்குச் சகோதரர். மிகவும் முற்போக்கான கல்வியும் பண்பாடும் சிந்தனைகளும் உள்ளவர்.
நான் பாரதியாரைப் படித்து என்னுடன் கற்ற மாணவருக்குப் பாரதியாரின் பெருமைகளைக் கூறுவது வழக்கம். இதனை அறிந்த ஆசிரியப் பெருமக்கள் பெருங்குற்றம் என இதனைக் கருதி என்னைத் தண்டனைக்குள்ளாக்கினார்.
தண்டனை, காசு பணமில்லை; இரண்டு நாள்களுக்குச் சாப்பாடு இல்லை என்று கூறிவிட்டார்கள். பாரதியின் புத்தகங்களைப் பறிமுதல் செய்து விட்டனர். நல்லவேளையாக அதை எரித்துவிடவில்லை. முதல்வர் என்னைத் தனியே அழைத்து தண்டனையை ரத்து செய்து, இனிமேல் பாடசாலைக்குள் பாரதியைப் படிக்காதே என்றார். அதன்பிறகு மாலை வகுப்பு முடிந்ததும், என்னைத் தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் அரசியல், சமூகம், சனாதன சீர்த்திருத்தம் என்பன போன்ற பல விஷயங்களை எனக்கு விளக்கி என் கண்ணைத் திறந்துவிட்டார். பிறகு நிறையவே படித்தேன்.
1940இல் சென்னை மாம்பலம் ராமகிருஷ்ண மிஷன் ஹைஸ்கூலில் தமிழாசிரியனாக வேலையில் சேர்ந்தேன். அப்போது ஆசிரியர் பயிற்சிக்காக ஜானகிராமன் சென்னைக்கு வந்து என்னுடன் அறையில் சேர்ந்து வசித்தார். பயிற்சி முடிந்ததும் எழும்பூரில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் அவனுக்கு வேலை கிடைத்தது. கு.ப.ராவின். ‘கனகாம்பரம்’ தொகுப்பை மிகவும் விரும்பிப் படித்துக் கொண்டிருந்தோம். அப்போது கும்பகோணத்திலிருந்து வந்த நண்பர், கு.ப.ரா. கும்பகோணத்தில் இருப்பதாகவும் கண் பார்வை சற்றே கிடைத்திருப்பதாகவும், ஆனால் தனிமையில் வருந்துகிறார் என்றும் கூறினார்.
உடனே நாங்கள் இருவரும் சென்னையில் எங்களது உத்யோகங்களுக்கு ராஜினாமா கொடுத்துவிட்டு கும்பகோணத்திற்கு வந்து சேர்ந்தோம். கும்பகோணத்தில் ஜானகிராமனுக்கு டவுன் ஹைஸ்கூலிலும், எனக்கு நேட்டிவ் ஹைஸ்கூலிலும் வேலை கிடைத்தது. இரண்டு வருஷத்திற்கும் குறைந்த காலம்தான் அவருடன் பேசிப் பழகும் பாக்கியம் பெற்றோம்.
1943இல் அவர் அகால மரணடைந்தார். அவருடன் இருக்கும்போது நான் கிராம ஊழியன், கலா மோகினி ஆகிய இரண்டு இலக்கியப் பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருந்தேன். ஆர். நாராயணசாமி என்ற எனது சொந்தப் பெயரிலேயே எழுதினேன். அவர் இறந்த பிறகு அவரைப் பற்றிய இரங்கல் குறிப்பை ‘கலாமோகினி’ இதழில் எழுதியபோது புனைந்து கொண்ட பெயரே கரிச்சான் குஞ்சு என்பது. கரிச்சான் என்பது பாரத்வாஜ பக்ஷியின் தமிழ்ப் பெயர். கு.ப.ரா. சிறுகதை தவிர வேறு பல விஷயங்கள் எழுதும்போது, தான் பிறந்த பாரத்வாஜ கோத்திரத்தை நினைவுகூரும் வகையில் கரிச்சான் என்ற பெயரில் எழுதினார். அந்த கரிச்சானின் குஞ்சாக நான் பிறந்தேன்.
அதன் பிறகு பெரும்பாலும் கலைமகள், ஹிந்துஸ்தான், சிந்தனை பத்திரிகைகளில் எழுதிவந்தேன். 1949இல் எம்.வி.வெங்கட்ராம் ஆசிரியராகவும் நான் துணை ஆசிரியராகவும் இருந்து தேனீ இலக்கியப் பத்திரிகையை நடத்தினோம். பெருங்கனவுகள் கண்டோம். ஆறு மாதங்கள் இலக்கிய களிமயக்கத்தில் இருந்த பிறகு 1948 ஜூலையில் பழையபடி ஆனா ஆவன்னா ஆகினேன். அதன் பிறகு சந்திரோதயம், சிவாஜி இதழ்களிலும் மற்ற இதழ்களிலும் எழுதி வந்தேன்.
தேனீ ஏன் நின்றுபோய் விட்டது?
எம்.வி. வெங்கட்ராம் பல ஆயிரங்களைச் செலவழித்த பிறகு ஒரு போலிப் பணக்காரரான அவருடைய நண்பர் ஒருவர் தேனீயை மேலும் தொடர்ந்து நடத்துவதற்கு முதல் போடுவதாகச் சொல்லிச் சொல்லியே காலதாமதப்படுத்திவிட்டார். தேனீ ஆறு இதழ்களுக்குப் பின் வரவர இளைத்துத் தேய்ந்து பாலாரிஷ்டத்துக்கு இரையாகியது.
உங்கள் சிறுகதைகளில சிறந்த படைப்பு என்று எது?
ஜானகிராமன், வெங்கட்ராம் ஆகியோரின் படைப்புகளைப் போன்ற தரத்தைத் தங்கள் கதைகள் எட்டவில்லை என விமர்சகர்கள் கருதுகிறார்களே! அதுகுறித்து என்ன கருதுகிறீர்கள்?
வெங்கட்ராம் முந்தைய தலைமுறை. எனது கதை அமைப்பு வேறு. ஜானகிராமன் வெகுஜன எழுத்தாளராகலாம். கு.ப.ரா அன்றே சொன்னார்: நீ ஒரு நாளும் பாப்புலர் ரைட்டராக முடியாது: நீ ஒரு தீவிர எழுத்தாளனாவாய் என்று கூறினார்.
தமிழ்ச் சிறுகதைகளில் எனது வார்ப்புத் தனி. அவர்களது பாங்கு தனி. ஜானகிராமன் படைப்புகள் ஜனரஞ்சகமானவை. எனது படைப்புகள் எனக்குத் திருப்தி அளிக்கின்றன.
நான் சர்சைக்குரியவன். நான் யதார்த்தத்தை எழுதுபவன். ஆங்கிலச் சிறகுகள் எனக்கில்லை. நான் எழுதுவது குறைவு. வருடத்துக்கு ஆறு கதை. ஐ ஆம் ஏ ஸ்லோ கோச். நான் சரித்திரக் கதைகளை அபூர்வமாக எழுதியுள்ளேன். வாரன் ஹேஸ்டிங்ஸ் பற்றிய படைப்பு உன்னதமானது. ‘உறவுமுள்’ என்ற என் கதையைப் படித்துப் பாருங்கள்.
கே.பி.ரங்காச்சாரி ரேடியோ நாடகம் எழுத அழைத்தார். ஜானகிராமன் மறுத்தார். நான் எழுதினேன். பேராசிரியர் சாரநாதன் பாராட்டி எழுதினார். பெர்னாட்ஷாவின் சென் ஜோன் போல எழுதியதால் ரங்காச்சாரி பாராட்டி எழுதினார். ஜானகிராமன் நாடகங்கள் நாடகங்களே அல்ல.
ஜானகிராமனுக்கு அரட்டை ரொம்ப பிடிக்கும். எனக்கு அரட்டை பிடிக்காது. ஜானகிராமன், அவர் அப்பா, தம்பிகள், பெண்கள் உட்கார்ந்து பேசிய பேச்சு அபாரம். அவரது எழுத்தின் உலகமே அதுதான்.
பாடசாலை, விதவை, பெண் படைப்புக் கதாபாத்திரங்கள் உண்மையாயிருந்தும் யதார்த்ததிற்கு முரணாக சமூகம் அங்கீகரிக்காத வகையில் சித்திரித்தார் ஜானகிராமன். மரப்பசு அம்மணி போல் இன்னும் நூறு வருடத்திற்கு ஒரு பிராமணப் பெண் பிறக்க முடியாது.
வெங்கட்ராம் எழுத்துகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெரும்பான்மையானவை கவிதை போன்றவை. அவர் மொழிக்கும் நடைக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் ரொம்பவும் உயர்ந்தது. அவருடைய நாவல்கள் உண்மையான வாழ்க்கைப் பிரதிபலிப்புகள். தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நாவலாசிரியர் அவரே; அவர்தான்.
அவர் எழுத்துகள் தீவிரமானவை. ஜனரஞ்சகம் எல்லாம் பெயரும் புகழும் பெற்றுவிட்டன என்பதுதான் உண்மை.
தற்போதைய விமர்சனப் போக்கு எப்படி இருக்கிறது?
ஒரு தலைச் சார்புடையனவாய் இருக்கின்றன.
எழுத்துலகைப் பற்றிய தங்களது கணிப்பு என்ன?
நான் எழுத்தாளனாக ஆகாமல் இருந்திருந்தால் சில நேரங்களில் நான் அடையும் வேதனைகள் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் அந்த வேதனைகளிலிருந்து தெளியும் அளவுக்கும் இருக்கும்; பிஞ்சு விவேகம் நன்றாகப் பழுத்திருக்கும் என்று நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறேன்.
இப்போது இருக்கும் பணம் பண்ணும் எழுத்து இலக்கிய தாகமுடையது என்று எந்த அறிவிலியும் நினைக்கமாட்டான்.
ஆனால், பத்திரிகைகளில் வரும் எழுத்தை இலக்கியம் என்று கருதி நாம் ஏன் அவஸ்தைப்பட வேண்டும்?
பெரும்பான்மை மக்கள் விரும்பிப் படிப்பதெல்லாம் இலக்கியம் என்றால், வடுவூரார், கோதைநாயகி வகையறாக்களின் எழுத்துகள் மறைந்திருக்குமா? அதுபோலவே காலம் என்கிற பெரிய நீதிபதி நல்லனவற்றை நிலைக்க வைத்துக் கொண்டு அல்லனவற்றை நீக்கிவிடும்.
Read in : English