Read in : English

தென்னகத்தின் வற்றாத நதியான தாமிரபரணியில் 12 நாள்கள் மகாபுஷ்கர நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. பிராமணர்கள் முதல் அய்யா வழி இயக்கத்தினர், தலித் இயக்கத்தின் ஜாண் பாண்டியன் வரை பல தரப்பினரும் கலந்து கொண்டு குளித்துச் சென்றுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என இந்த நிகழ்வைப் பற்றிக் கூறிக் கொண்டாலும், வரலாற்றில் 144 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியொரு விழா நடந்ததற்கு எவ்வித பதிவுகளும் இல்லை என மறுக்கின்றனர் ஒரு சாரார். இதுகுறித்து, மேலும் விரிவாக அலச இன்மதி சார்பில் களமிறங்கினோம்.

சுவாமி.இராமானந்த மகராஜ்

பாபநாசம் சேனைத் தலைவர் திருமண மண்டபம் கிராமப்புற பூசாரிகளால் நிறைந்திருந்தது.  மகாபுஷ்கரம் துவங்கிய நாள் முதல் கடைசி நாள் வரை ஒவ்வொரு நாளும் இந்து சமய மாநாடுகள் புஷ்கர ஏற்பாட்டாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.  தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் பாபநாசம் பொறுப்பாளராக கருதப்படும் சுவாமி இராமானந்த மகராஜ் தன்னை அகில பாரதீய துறவிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நம்மிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இந்தியா முழுவதுமிருந்து வரும் சாதுக்களையும், அகோரிகளையும் வரவேற்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தர ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

நாம் அங்கு சென்ற போது, சமய சொற்பொழிவு நடந்த வண்ணம் இருந்தது. மேடையில் சமயத் தலைவர் ஒருவர் இந்து சமயக் கருத்துகளை எடுத்துக் கூறிக் கொண்டிருக்க, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த கிராம பூஜாரிகள் அதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சொற்பொழிவு முடிந்ததும் இன்மதி சார்பில் சுவாமி இராமானந்த மகராஜுடம் பேசினோம். “கடந்த ஆண்டு காவிரி மகாபுஷ்கரத்தை நடத்தினோம். இந்த ஆண்டு தாமிரபரணியில் நடத்துகிறோம்” என்று கூறத் தொடங்கிய அவர் புஷ்கர விழாக்களின் பின்னணியை விளக்கினார். “ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நதி தேவதையாக இருக்கிறது. மேஷ ராசிக்கு கங்கை, ரிஷப ராசிக்கு நர்மதை என இருக்கும். தற்போது குரு விருச்சிக ராசிக்கு செல்வதால், விருச்சிக ராசியின்  நதி தேவதையாக தாமிரபரணி உள்ளது. அதனால் தான் இங்கு இந்த விழா நடைபெறுகிறது.போன ஆண்டு துலாம் ராசிக்கு  நதி தேவதையான காவிரியில் இது நடந்தது. மகாபுஷ்கரம் என்பது  12 குருபெயர்ச்சிகளுக்கு ஒருமுறை வரும் மகா குருப்பெயர்ச்சி. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது. இதனையே மகாபுஷ்கரம் எனக் கூறுகிறோம், அதே நேரம் 12 ஆண்டுக்கு ஒரு முறை வருவதை புஷ்கரம் என்கிறோம்.”

விஸ்வ இந்து பரிஷத்தின் ஒரு பிரிவான அகில பாரதீய துறவிகள் சங்கத்தில் 450 க்கும் மேற்பட்ட சந்நியாசிகள் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறுகிறார் சுவாமி இராமானந்த மகராஜ். ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதும் உள்ள 12 நதிகளிலும்,உள்ளூர் மக்களின் உதவியுடன் இந்த புஷ்கர விழாக்களை இந்த துறவிகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்து மத அமைப்புகளுடன் மடாலயங்களும் உதவுகின்றன.

காவிரி மகாபுஷ்கரம் முடிந்தவுடனேயே   இந்தக் குழுவினர்,  தாமிரபரணியின் 149  படித்துறைகளும் அமைந்த ஒவ்வொரு ஊர்களிலும்,  அங்குள்ள மக்களையும், ஆன்மீகவாதிகளையும் ஒருங்கிணைத்து குழு  அமைத்துள்ளனர். அந்த மக்கள் குழுவினர் அந்தந்த பகுதிகளில் குளிக்க வரும் பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகளைச் செய்து தருகின்றனர். அத்துடன் மகாபுஷ்கரம் குறித்த பிரச்சாரங்களையும் முன்னெடுக்கின்றனர். நீராட வருபவர்கள் ஆழமான பகுதிகளுக்குச் சென்றுவிடாமல் இருக்க ஆற்றில் தடுப்புகளும், நீரில் மூழ்குபவர்களை மீட்க மீட்புப் படையினரும் ஒவ்வொரு படித்துறையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

புஷ்கரம் என்ற வார்த்தையையே தற்போது தான் கேள்விப்படுவதாகக் கூறும் பரமசிவன், இத்தகையதொரு வாய்ப்பு தாமிரபரணிக்கு கிடைத்திருப்பதே பெருமையான விஷயம் எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

இதுவரை பல லட்சம் பேர் நீராடியிருப்பர் என்பது சுவாமி இராமானந்த மகராஜின் கணக்கு. அடுத்த இரு தினங்களில் மேலும் பல லட்சம் பேர் நீராட வருவார்கள் என்பது அவரது கணிப்பு. அது போன்றே, பாபநாசம், திருநெல்வேலி உள்ளிட்ட படித்துறைகளையொட்டிய பகுதிகளில் சமய மாநாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன், அன்னதானங்களும் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கான செலவுகளை காஞ்சி மடாலயம், சிருங்கேரி மடாலயம் உள்ளிட்ட மடாலயங்கள் செய்வதாகக் கூறுகிறார் சுவாமி இராமானந்த மகராஜ். கூடவே, சிருங்கேரி மடாலயத்தின் சார்பில் சதுர்வேதி பாராயணம் செய்ததாகவும் கூறுகிறார்.

நெல்லையை பூர்வீகமாகக் கொண்டு கோவையில் வசித்து வரும் சி.கிருஷ்ணன் வைதீக குடும்பத்தில் பிறந்தவர். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரியும் இவர், தங்கள் பாரம்பரியச் சடங்கு முறைகளைத் தவறாமல் கடைபிடித்து வருபவர். திருநெல்வேலியில் உள்ள குறுக்குத் துறைப் படித்துறையில் நீராட வந்த எண்ணற்ற பக்தர்களுள் அவரும் ஒருவர். நீராடுவதற்காக ஏற்ப ஆற்றில் இறங்கிய அவருக்கு அங்கிருந்த குருக்கள் ஒருவர் மந்திரங்கள் சொல்ல ஆற்றில் இறங்கிய கிருஷ்ணனும் அந்த மந்திரங்களை முணுமுணுத்தபடியே ஆற்றில் மூழ்கி எழுகிறார். “மனதில் தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் நதியை சங்கல்பித்து, குருக்கள் சொல்லித்தரும் மந்திரங்களைக் கூறியபடியே 11 முறை மூழ்கி எழுந்தேன்” என  நீராடி முடித்து ஈரத் துணியுடன் வெளியே வந்த சி.கிருஷ்ணன் கூறினார்.  பிராமணக் குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு  குருக்கள் சொல்லித் தான் நீராட வேண்டுமா ? என அவரிடம் கேட்டபோது, “குருக்கள் என்பவர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள். அவர்களை பிரம்மாவுக்கு இணையாகக் கருதுகிறோம். அவர்களின் வழிகாட்டுதலின் படியே குளிக்க வேண்டும்” எனக் கூறியவர், தான் அணிந்திருந்த ஈரத் துண்டினை பிழிந்து காயவைத்தார். பின்னர் தன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யத் துவங்கினார். “தாய், தந்தை உட்பட மூன்று தலைமுறைக்குட்பட்ட முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குகிறோம்” எனக் கூறியவர், அது முடித்து அருகிலிருந்த சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டுத் திரும்பினார்.

முருகனை வழிபட்டு வந்த பிறகு, கிருஷ்ணன் புஷ்கரம் குறித்து விளக்கத் துவங்கினார். “1992இல் நான் ஆந்திராவுக்கு சென்ற போது, கிருஷ்ணா நதியில் இவ்வாறு புஷ்கரம் நடப்பதாகச் சொன்னார்கள். அப்போது அங்கு சென்று குளித்து வந்தேன்” என்றார்.  தனக்கு மகாபுஷ்கரமும் அதன் வரலாறுகள் பற்றியெல்லாம் தெரியாது எனக் கூறிய அவர், அது பற்றிய செய்திகள் வருவதை மட்டுமே படித்திருக்கிறேன் என்றார்.

மதன மோகன்

ஆனால், பாபநாசத்திற்கு இரண்டாவது முறையாக  நீராட வந்த சிவகாசியைச் சேர்ந்தவரான த. மதனமோகன், மாறுபட்ட வகையில் குளிக்கத் துவங்கினார். ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அவர், ஆனந்த வாழ்வியல் என்ற பெயரில் இயற்கையான உணவுகளை உட்கொள்ளுவது குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருபவர். கூடவே, அவர் ஒரு ஜோதிடரும் கூட. அதனால் தான் என்னவோ நாம் அவரிடம் பேசத் துவங்கியவுடன், குரு  பெயர்ச்சி குறித்தும்,அதனுடன் தொடர்புடைய புஷ்கர நிகழ்வு குறித்தும் புராணக் கதைகளை எடுத்துக் கூறத் துவங்கினார். சுமார், 70 வயது மதிக்கத்தக்க தோற்றம் கொண்ட மதன மோகனின் பேச்சிலும், நடையிலும் மகாபுஷ்கரம் குறித்த ஆர்வம் எதிரொலித்தது. தனது உறவினர்களுடன், தாமிரபரணி ஆற்றில் தான் கொண்டு வந்திருந்த பூக்களை மிதக்கவிட்ட அவர், தனது கால்கள் நனைய நீரில் சற்று நேரம் நின்ற பின்னர், இடுப்பளவு நீரில் சென்று, நீராடி விட்டுத் திரும்பினார்.“ தாமிரபரணி மகாபுஷ்கரில் நீராட நான் வருவது இரண்டாவது முறை” எனக் கூறிய அவர், இதற்கு முன்னர் தான் ஜடாயு தீர்த்ததில் குளிக்க சென்றிருந்ததாகக் கூறுகிறார். “நீரில் மூழ்கும் முன்பும், பின்பும் தெய்வங்களை மனதில் நினைத்துக் கொள்கிறோம். நான் சிவன், விஷ்ணு மற்றும் குல தெய்வங்களை மனதில் நினைத்தேன்” எனக் கூறினார். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு காவிரி மகாபுஷ்கர விழாவில் கலந்து கொண்டு குளித்ததாகக் கூறும் அவர், வட மாநிலங்களில் நடக்கும் புஷ்கர விழாக்களில் கலந்து கொள்ள இயலவில்லை என்றார்.

மதனமோகன், கிருஷ்ணனைப் போல் குருக்களை நாடாமல் தாங்களே நீராடியது குறித்து அவரிடம் கேட்டபோது, “பிராமணர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். அந்த வழிகள், மற்ற சாதியினர்ருக்கு பின்பற்றுவது இல்லை” எனக் கூறினார். கடைசியாக, தெய்வம் வாய்ப்பளித்தால் தான் மீண்டும் இந்த மகாபுஷ்கரம் முடிவதற்குள் வருவேன் என்று கூறிச் சென்றார் நம்மிடம்.

தாமிரபரணி மகாபுஷ்கரத்தைப் பொறுத்தவரை, சமூகத்தின் அனைத்து தரப்பினருமே ஜாதி மத வித்தியாசம் இன்றி கலந்து கொண்டார்கள் என்றே கூற வேண்டும். பாளையங்கோட்டையைச் சேர்ந்த பரமசிவன், தலித் சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர். தனது குடும்பத்தினருடன், குறுக்குத் துறை படித்துறைக்கு குளிக்க வந்த அவர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைப் பின்பிற்றி வருவதாகக் கூறுகிறார். இருப்பினும், “144வருடங்களுக்கொருமுறை வரும் இந்த மகாபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் நீராடுவதன்   மூலம், குருபகவானின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறும் அவர், குளிக்கும் போது தெய்வங்களையும், முன்னோர்களையும் மனதில் நினைத்துக் கொண்டதாகக் கூறுகிறார். “அடுத்த மகாபுஷ்கரத்தில் நான் இருப்பேனா என்பது தெரியாது.  இதனை, எனக்கு கிடைத்த நல்வாய்ப்பாகவே கருதுகிறேன்” எனக் கூறினார்.

ஆனால், புஷ்கரம் என்ற வார்த்தையையே தற்போது தான் கேள்விப்படுவதாகக் கூறும் பரமசிவன், இத்தகையதொரு வாய்ப்பு தாமிரபரணிக்கு கிடைத்திருப்பதே பெருமையான விஷயம் எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார். அதே நேரம், ஆற்றில் இறங்கி குளித்த பரமசிவனோ, ஆற்று நீரை கைகளால் தெளித்தபடி, நீரில் இறங்கி வழக்கமான முறையில் குளித்துவிட்டுக் கரை திரும்பினார்.

சுவாமி.இராமானந்த மகராஜுடன் பால.ஜனாதிபதி

அய்யா வழி இயக்கத்தைப் பொறுத்தவரை 19 ஆம் நூற்றாண்டில் தென் திருவாங்கூரில் தோன்றிய சமூக சீர்த்திருத்த இயக்கமாகும். அன்றைய திருவிதாங்கூரில் நிலவி வந்த ஜாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முதன் முதலாக குரல் கொடுத்த இவ்வியக்கத்தின் ஸ்தாபகரான அய்யா வைகுண்டர், அதற்குக் காரணமாக இருக்கும் வர்ணாஸிரம தர்மத்தை எதிர்த்தார். இவ்வியக்கத்தினர் இந்து மத வழிபாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், உருவங்களை வழிபடாமல் விளக்கு மற்றும் நிலைக் கண்ணாடியை வைத்து வணங்குகின்றனர்.

இவ்வாறு மாறுபட்ட வழிபாட்டு முறையினைக் கொண்டிருக்கும் அய்யா வழி இயக்கத்தினரும் இந்த தாமிரபரணி புஷ்கரத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அய்யா வழி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தாமிரபரணி மகாபுஷ்கரில் கலந்து கொள்ளலாமா எனப் பலரும் கேட்பதாகக் கூறுகிறார் அய்யா வழி தர்ம பரிபாலன இயக்கத் தலைவர்களுள் ஒருவரான பால.ஜனாதிபதி. “அய்யா வழி, மாறுபட்ட வழிபாட்டு முறையைக் கொண்டிருப்பினும் அய்யாவின் முன்னோர்கள் பின்பற்றிய வழியில், இந்த தாமிரபரணி மகாபுஷ்கரை வாழ்த்த வந்திருக்கிறோம்” என்கிறார் அவர். பாபநாசத்தில் அக்டோபர் 16ம் தேதி காலையில் அய்யா வழி இயக்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் காவிக் கொடியுடன் திரண்டு, பால.ஜனாதிபதி தலைமையில் ஊர்வலமாக வரத் தொடங்கினர். சுவாமி.இராமானந்த மகராஜ் தலைமையிலான குழுவினர் அவர்களை வரவேற்றனர். தொடர்ந்து, படித் துறைக்கு சென்ற அவர்கள், பூக்களைத் தூவி, தாமிரபரணியை வாழ்த்தினர். தொடர்ந்து, அய்யா வழி இயக்கத்தின் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் வரவே, அய்யா வழி சமய மாநாடும் துவங்கியது.

ஊர்வலமாக வரும் அய்யா வழி இயக்கத்தினர்

“கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே, தாமிரபரணி மகாபுஷ்கரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு எங்களை அழைத்திருந்தனர். அதில்  நான் கலந்து கொண்டபோது, பாபநாசத்தில்  அக்டோபர் 16இல் அய்யா வழி சமய வகுப்பு மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது” என்றார் பால.ஜனாதிபதி. திரு ஏடு வாசிப்புடன் துவங்கிய இந்த மாநாடு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் என மாலை வரை நீண்டது.

இந்த தாமிரபரணி மகாபுஷ்கரில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கூட கலந்து கொள்ளத் தவறவில்லை. தாமிரபரணி ஆறு கடந்து செல்லும் மேலச்சேவல் பகுதி இஸ்லாமியர்கள், தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் ஒரு பகுதியாக கடந்த 14 ஆம் தேதி கலந்து கொண்டனர். கூட்டமாக அணி திரண்டு வந்த அவர்கள், ஆற்றில் நீராடிய பின்னர், ஆற்றங்கரையோரமே தொழுகையிலும் ஈடுபட்டனர். மேலச்சேவலைச் சேர்ந்த ஜமாலுதீன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருபவர். தாமிரபரணி புஷ்கரத்திற்காகவே சென்னையிலிருந்து வந்ததாகக் கூறும் அவர், இப்பகுதியில் தன்னைப் போல் பல இஸ்லாமியர்களும் தாமிரபரணி புஷ்கரத்தில் கலந்து கொண்டு தொழுகை நடத்தியதாக கூறுகிறார் அவர். “ எங்களைப் பொருத்தவரை, இதனை மதநல்லிணக்கத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறோம். தாமிரபரணி ஆறு, ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் வளத்தையும் வாழ்வையும் அளிக்கக் கூடிய ஆறாக உள்ளது. அதனால் தான், அதன் புஷ்கர விழாவில் நாங்களும் கலந்து கொண்டோம்” என்றார் அவர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனோ அடிப்படையில் கிறிஸ்தவர். இஸ்லாமியர்கள் மேலச்சேவல் பகுதியில் தொழுகை நடத்திய அதே நாளில் திருநெல்வேலி குறுக்குத் துறை படித்துறையில் தானும் குளித்ததாகக்  கூறுகிறார் ஜாண் பாண்டியன். “144 ஆண்டுக்கு ஒரு முறை மகாபுஷ்கரம் ராசிகளின் அடிப்படையில் வருவதாகக் கூறுகிறார்கள். எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. நான் பத்திரிக்கைகளில் படித்துத் தெரிந்து கொண்டதை வைத்தே கூறுகிறேன்” எனக் கூறுகிறார். இந்த மகாபுஷ்கரத்தில் குளிப்பதற்காக, ஜீயர்கள் தன்னை அழைத்ததாகக் கூறும் அவர், அவர்கள் கூறிய முறைப்படியே தான் நீராடியதாகக் கூறினார். “சூரியனை வணங்கச் சொன்னார்கள். வணங்கினேன். பின்னர் தண்ணீரைக் கைகளால் தெளித்து விட்டு நீரில் மூழ்கிக் குளித்தேன்” எனக் கூறினார். ஜான் பாண்டியனைப் பொருத்தவரை, லட்சக்கணக்கான மக்கள் ஜாதி, மத வித்தியாசமின்றி தாமிரபரணியில் ஒற்றுமையுடன் குளித்ததற்கு சாட்சியாக இருக்கிறார். “மக்கள் அனைவரும் அமைதியுடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றே நான் அதில் கலந்து கொண்டேன்” எனக் கூறும் அவர், தன்னைப் பங்கெடுக்க அழைப்பு விடுத்த ஜீயர்களும் அவ்வாறே தன்னைக் கூறி அழைத்ததாகவும் கூறுகிறார்.

தாமிரபரணி ஆற்றின் கரையில் சிறப்புத் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்

மகாபுஷ்கரம் 144 ஆண்டுகளுக்கொருமுறை வருவது என்றும், தாமிரபரணி மகாபுஷ்கரம் அவ்வாறு 144 ஆண்டுகள் கழித்து தற்போது வந்திருக்கிறது என்றம்  பரவலாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இக்கருத்தினை மறுக்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான தொ. பரமசிவன்.  “144 ஆண்டுகளுக்கு  முன்னர் அவ்வாறு தாமிரபரணி புஷ்கரம் நடந்ததற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. வரலாற்றில் நடக்காத ஒரு சம்பவத்தைக் கூறி, ஏமாற்றுகிறார்கள்” என்று கூறினார் அவர்.

தொ.பரமசிவனின் கருத்தையே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளரான ஜி.பாஸ்கரனும் கூறுகிறார். “ கடந்த 144ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு புஷ்கரம் நடந்தததற்கு எவ்வித தடயமும் இல்லை” எனக் கூறிய அவர், “12 ராசிகளுக்கான நதிகளாக இந்தியாவில் இருந்து மட்டும் ஏன் இந்த 12 நதிகளை மட்டும் தெரிந்து எடுத்தார்கள் ? இந்தியாவில் இதையும் தாண்டி நதிகள் உள்ளனவே ? ஏன் உலகின் மிகப்பெரிய நதிகளான அமேசான், நைல் மற்றும் மஞ்சள் ஆறுகள் தேர்வுச் செய்யப்படவில்லை?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்.

“தாமிரபரணியை ஒட்டி வாழும்  நெல்லை, தூத்துக்குடி வாழ் மக்கள் இந்த நதியை நேசிக்கின்றனர்” எனக் கூறும் ஜி.பாஸ்கரன், “குடி நீர், விவசாயம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தாமிரபரணித் தண்ணீரை முதன்மையாகப் பயன்படுத்தவேண்டும். ஆனால், அந்த நிலை மாறி கார்ப்பரேட்டுகளுக்கே தாமிரபரணி தண்ணீர் என்றாகிவிட்டது. இதனை மறைக்கவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங் பரிவார இயக்கங்கள் திட்டமிட்டு புதிய புதிய மத விழாக்களை தாமிரபரணி ஆற்றின் பெயரில் நடத்துகின்றனர்.” எனக் குற்றஞ்சாட்டுகிறார்.

புஷ்கரத்தில் குளிக்க வரும் தலித் இயக்கத் தலைவர் ஜாண் பாண்டியன்

பொதுவாகவே, இது போன்ற மத நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸால் பரவலாக்கப்படுவதாக கூறப்படுவது குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர்களுள் ஒருவரான நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, “தாமிரபரணி புஷ்கரத்தில் அரசியல் ரீதியாக ஒன்றும் நாங்கள் எதுவும் செய்யவில்லை. குருப்பெயர்ச்சியை ஒட்டிய ஒரு தெய்வீக நிகழ்வாகவே இதைக் கருதி ஆன்மீகப் பணியாக செய்தோம்” எனக் கூறிய அவர், கடந்த 144 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்று மகாபுஷ்கரம் நடந்தது என்றோ அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்கரம் நடந்ததாகவோ தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்.

12 நாள்கள் நடந்த இந்த மகாபுஷ்கர விழாவிற்கு ஒரு கோடி பேர் வந்தார்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ள போதிலும், அதில் பத்தில் இரு பங்கு அளவே அதாவது சுமார் இருபது லட்சம் மக்களே வந்திருப்பார்கள் என உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பரவலாக தாமிரபரணி மகாபுஷ்கரம் தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், இதில் கலந்து கொண்டவர்களுக்கும் கூட புதிதாக தெரிந்தாலும், இந்த மகாபுஷ்கரம், இந்துத்வா அரசியலைப் பயன்படுத்தி மேலும் காலூன்ற எந்தளவு பயனளிக்கும் என போகப் போகத் தான் தெரியும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival