Read in : English
`மாதொருபாகன்’ என்ற நாவலை எழுதியதற்காக பெருமாள் முருகன், ஆண்டாள் பற்றிக் கூறியதற்காக வைரமுத்து…என்று மாற்றுக் கருத்துகளைக் கூறுபவர்களின் குரல்களை அடக்குவதற்கான முயற்சி தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சைவ சித்தாந்தம் குறித்து பேசி வரும் கருத்துகளுக்காக இந்துத்துவ அமைப்புகளின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார் சைவ சித்தாந்தப் பெருமன்றத் தலைவரும் சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை தலைவருமான பேராசிரியர் நல்லூர் சா. சரவணன்.
1905ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சைவ சித்தாந்த மகா சமாஜத்தை (சைவ சித்தாந்த பெருமன்றம்) திருக்கோவலூர் ஆதீன ஐந்தாம் முறை தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் (ஞானியார் அடிகள்) தோற்றுவித்தார். பெரியாரின் `குடியரசு’முதல் இதழை வெளியிட்டவரும் இவரே. மறைமறைமலை அடிகளார் உள்ளிட்ட சைவ, தமிழறிஞர்கள் பலர் இந்த அமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் இருந்திருக்கின்றனர். சைவ சமய ஆராய்ச்சி குறித்த `சித்தாந்தம்’ என்ற இதழையும் ஆய்வு நூல்களையும் இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது.
`மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ என்ற தலைப்பில் தொல்லியல் ஆய்வாளர் ஆ.பத்மாவதி எழுதிய புத்தகத்தை சைவ சித்தாந்தப் பெருமன்றம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சில கருத்துகளும் அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் நல்லூர் சரவணன் பேசிய பேச்சுகளின் கருத்துகளும் இந்து சமயத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் செய்தனர். அம்பேத்கர் பெரியாரிய வாசகர் வட்ட மாணவர்கள், பேராசிரியர் நல்லூர் சரவணனுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். இந்துக் கோவில்கள் மீட்பு மாநாட்டில், பேராசிரியர் சரவணனை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று எச்.ராஜா ஆவேசமாகப் பேசினார்.
இந்தப் புத்தகத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில், சிவலிங்க வழிபாடு இல்லை. அங்கு கொடிமரம் இல்லை. மாணிக்கவாசகருக்கு தனி சந்நிதி உள்ளது. வருடாந்திர விழா நடக்கும் பத்து நாட்களில் மாணிக்கவாசகர் உருவமே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே, ஆவுடையார் கோவில் என்பது மாணிக்கவாசகர் எனும் குருவுக்காகக் கட்டப்பட்ட கோயில். வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து இதை சிவன் கோவில் என்பதற்கான ஆதாரத்தைக் காண முடியவில்லை. இது எட்டாம் நூற்றாண்டில் உருவான கோவில் இல்லை. இது 13ஆம் நூற்றாண்டில் உருவானது. ஆவுடையார் கோவிலை அடுத்த தென் வெள்ளாற்றங்கரையின் வடக்கூரில் உள்ள கோயில் ஆதி கயிலாயம் எனப்படும் கோயில். இதனையே மாணிக்கவாசகர் திருவாசகம்பாடி வணங்கிய திருப்பெருந்துறை”. என்று தொல்லியல் ஆய்வாளர் ஆ. பத்மாவதி, ` மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும் என்கிற புத்தகத்தில் கூறியுள்ளார். இதேபோல, மாணிக்கவாசகர் வரலாற்றை விவரிப்பதற்கு உரிய ன்றியமையாத நிகழ்ச்சி நரி-பரியான கதை குறித்து வரலாற்றின் உண்மையை அறிவியல் அணுகுமுறையில் அவர் கூறியுள்ள கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.
இந்தக் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் நரியும் பரியும் குறித்து மா. ரத்தினசபாபதி எழுதிய கட்டுரை, மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி குறித்த கே.ஜி.சேஷய்யர் எழுதிய கட்டுரை, திருப்பெருந்துறை என்பது தமிழ்நாட்டு ஆளுடையார் கோவிலே என்பது குறித்து எஸ்.ராதாகிருஷ்ணன் ஐயர் எழுதிய கட்டுரைகளும் பின்ணிப்பாகத தரப்பட்டுள்ளன.
“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நூலில் ஆவுடையார் கோவிலை சிவன் கோவில் அல்ல என்று சொல்வதா என்பதுதான் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த சிலரது கோபத்துக்குக் காரணம். ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்படும் கருத்து இது. இதில் எங்களுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. சைவ சித்தாந்தத்துக்கு சங்கரரின் மதம் முற்றிலும் முரண் என்றும் ஆரிய வேதக் கருத்துகளுக்கு எதிராக மாணிக்கவாசகர் கூறியதை மேற்கோளாக வைத்து வேத மதத்துக்கும் சைவ சமயத்துக்கும் இடையிலான போராட்டம் பற்றியும் நான் பேசி இருக்கிறேன். அந்தணர்களும் ஆதீனங்களும் சைவத்துக்கு வர வேண்டும் என்று `சித்தாந்தம்’ இதழ் தலையங்கத்தில் எழுதியிருக்கிறேன். இதனால், என் மீது கோபம் கொண்ட இந்துத்துவ அமைப்புகள் என்னை பல்கலைக்கழகத்திலிருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று என்று கோரி, ஆளுநரிடமும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் மனுக்கள் அளித்துள்ளன. அத்துடன் என்னை அவதூறு செய்தும் பேசி வருகிறார்கள். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலும் எனது சொற்பொழிவு நிகழ்ச்சிகள், இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்னை அவதூறாக பேசியவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அதன் மூலமாவது இப்பிரச்சினை முடிவுக்கு வருமா என்று பார்க்கிறேன்” என்கிறார் சரவணன்.
“சைவ சித்தாந்தத்தில் முதன் முதலில் எம்ஏ பட்டமும் பிஎச்டி பட்டமும் பெற்றவன். பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருககையில் பணிபுரிந்தவன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சைவ சித்தாந்தம் தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறேன். கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து வருகிறேன். சைவ சமய சித்தாதந்தத்துக்கு ஆதரவாகப் பேசி வரும் எனக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகளின் அவதூறு நடவடிக்கைகளைப் பார்த்தும்கூட ஆதீனங்கள் மௌனமாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறும் சரவணன், யாரையும் அவதூறு செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. தான் காதால் கேட்டதும், விருப்பப்படுவதுமான கருத்துகளைக் கொண்டும், புராணச் செய்திகளை நம்பிக் கொண்டும் இருக்கிறவர்கள், தொல்லியல் ரீதியான ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமாக விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஆய்வுக் கருத்துகளுக்கு ஆதாரப்பூர்மாக மறுப்புத் தெரிவிக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதேசமயம், எனது ஆய்வுக் கருத்துகளைக் கூறக்கூடாது என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்புகிறார்.
ஒரு கருத்துக்கு எதிராக மாற்றுக் கருத்து என்பது வரலாற்று நெடுகிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாதங்கள், விவாதங்கள் கருத்துத் தளத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆய்வுப்பூர்வமாக எழுதப்படும் கருத்துகளுக்கு ஆதாரங்களுடன் மறுப்புத் தெரிவிக்கலாம். கடந்த காலத்தில் வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே ஏற்பட்ட அருட்பா மருட்பா சர்சை நீதிமன்றம் வரை கூட சென்றது. ஆனால், நல்லூர் சரவணன் போன்றவர்கள் மாற்றுக் கருத்துக் கூறுவதையே தடுக்க முயற்சிப்பது என்ன ஐனநாயகம் இது?
இந்த சர்ச்சை குறித்து பேராசிரியர் நல்லூர் சரணவனின் விளக்க உரை:
Read in : English