Read in :
English
அனைத்து வயது பெண்களையும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனுமதிப்பது நமது மரபுக்கு எதிரானது என்கிறார் தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்த பெண் குருசாமி பத்மாவதிப் பாட்டி.
ஐயப்பபன் மீது இருக்கும் பக்தியால் கடந்த 39 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும் அவர், தனது ஐய்யப்ப தரிசன அனுபவங்களை விளக்குகிறார்:
பத்மாவதி பாட்டி
“எனது இரண்டாவது சகோதரர் 23 வயதில் நோய்வாய்பட்டு அவதிப்பட்டு வந்தார். கேரளத்தைச் சேர்ந்த பெரியகுருசாமி காமேஸ்வரன் ஐயர், சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வாருங்கள் என்று கூறினார். அதேபோல், அங்கு சென்று வந்த அதே ஆண்டில் எனது சகோதரர் குணமடைந்துவிட்டார். எங்களது குடும்பம் வைஷ்ணவக் குடும்பம். அந்த குருசாமி மூலம் ஐயப்பனை எங்கள் கண்ணில் காட்டினார். ஐயப்பனை தரிசித்ததில் இருந்து எங்களுக்கு அனைத்தும் நன்றாக நடந்து வருகிறது. அதனால் நாங்கள் ஐயப்பனை மனதார தரிசிக்க தொடங்கினோம்.
அன்றிலிருந்து எனது சகோதரர் 22 ஆண்டுகள் மலைக்கு சென்றார், அவர் ஐய்யப்பன் கோவில் செல்லும் காலத்தில் அவருக்கு பூஜைகள் செய்ய நான் உதவிகள் செய்வேன். அதிலிருந்தே எனக்கும் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்பது ஆசை. எனது 38 வயதில் மாதவிடாய் காலத்தை கடந்ததும் நான் ஐயப்பனை தரிசனம் செய்ய அந்த மலைக்குச் செல்ல தொடங்கினேன். 1976ல் சென்னை பள்ளிக்கரணைக்கு குடிபெயர்ந்தேன்.
1977 முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் தூய்மையாக விரதமிருந்து, மலைக்கு சென்று வருகிறேன். ஐயப்ப தரிசனத்தின் போது, கேரளத்தில் பிற கோயில் அனைத்தையும் தரிசித்துள்ளேன். இளவயது காலத்தில் பெரியப்பதைகளில் சென்றுள்ளேன். சமீப காலங்களில் நாங்கள் சென்னையில் இருந்து ரயிலில் சென்று பம்பையில் இருந்து மலையேறிவிட்டு திரும்ப ரயிலிலேயே வந்துவிடுவோம். என்னுடன் சுமார் 20 சாமிகள் வருவார்கள். அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் தான். நான் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களைத் தான் கூட்டிச்செல்வேன். என்னுடன் 6, 7 பெண்கள் வருவார்கள். ஒவவொரு ஆண்டும் குறைந்தது 5 கன்னிசாமிகளுக்கு மாலை போட்டு அழைத்துச் சென்றுள்ளேன். இதுவரை கணக்கில் பார்த்தால் 100 சாமிகளுக்கு மேல் மாலை போட்டு அழைத்துச் சென்றுள்ளேன்.
எனது 38 வயதில் மாதவிடாய் காலத்தை கடந்ததும் நான் ஐயப்பனை தரிசனம் செய்ய அந்த மலைக்குச் செல்ல தொடங்கினேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இதய அறுவைசிகிச்சை நடைபெற்றது, அதனால் மருத்துவரின் அறிவுரையுடன் பல்லக்கில் ஐய்யப்பன் கோவிலுக்குச் செல்கிறேன். இந்த முறை கேரளத்தில் அடைமழை காரணமாக திருவாங்கூர் தேவஸ்தானம் கோயில் நடையை திறக்காததால் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் கோயிலுக்கு சென்று வந்தேன்”” என்கிறார் பத்மாவதி பாட்டி.
“அனைத்து வயது பெண்களையும் ஐயப்பன் கோவிலுக்கு அனுமதிப்பது .தெய்வத்தை அவமதிக்கும் செயல். மாதவிடாயக்கு ஆளாகும் சிறிய வயதுப் பெண்கள் எப்படி விரதத்தைக் கடைப்பிடிக்க முடியும். 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும், பெண்களால் அவ்வாறு இருக்க முடியாது. 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் பக்குவாக செயல்படுவார்கள். மனப்பக்குவம் உள்ளவர்கள் தான் மலைக்கு போகவேண்டும். நான் சாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டவள். அனைத்து வயது பெண்களையும் ஐய்யப்பன் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கக்கூடாது. தெய்வத்துக்கு எதிரான செயலை செய்ய நான் தூண்டுகோலாக இருக்க மாட்டேன். இந்தத் தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டும்”” என்று கூறுகிறார் பெண் குருசாமி பத்மாவதி பாட்டி.
Read in :
English