Read in : English
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று தமிழக அரசு புதிதாக ஆணை பிறப்பித்துள்ளது.
“கடந்த மார்ச் மாதம் பிளஸ் ஒன் பொது தேர்வு முதன் முறையாக நடத்தப்பட்டதால், புதிய தேர்வு முறைகள் பற்றிய போதிய தெளிவின்மை, குழப்பம் ஆகியவை காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு சரியான முறையில் தயாராகாத காரணத்தால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அந்தத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேல்நிலை முதலாம், இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்களைப் பதிவு செய்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கினால், அந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அவர்களது உயர்கல்வி தொடங்கி வேலைவாய்ப்பு வரை அதன தாக்கம் நீடிக்கும்.
பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களே உயர்கல்வி பயில தகுதியானவர்கள். மேல்நிலை முதலாம், இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்துப பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் (பிளஸ் ஒன் தேர்வுக்கு 600 மதிப்பெண்கள், பிளஸ் டூ தேர்வுக்கு 600 மதிப்பெண்கள்) வழங்கப்படும். மாணவர்களின் நலன் கருதி, பிளஸ் டூ பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டும் உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று அந்த அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“சில தனியார் பள்ளிகளின் அழுத்தத்தால் இந்த முறை வந்துள்ளதாகத் தெரிகிறது” – எஸ்.எஸ். ராஜகோபாலன்
பிளஸ் ஒன் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அட்மிஷன் நடைபெறும் என்று கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்து விட்டது. இந்தக் குறுகிய காலத்திற்குள்ளாகவே, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையை தமிழக அரசு தற்போது திடீரென்று மாற்றியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தனியார் கல்வி நிறுவனங்களின் லாப வேட்கைக்குத் துணை போகவே இந்த அரசாணை பயன்படும். ஓராண்டுப் பாடத்தை ஈராண்டு நடத்தி மதிப்பெண் எடுக்கவைத்தே பழகிப்போன தனியார் பள்ளிகளால் இரண்டாண்டும் பொதுத்தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்த முடியவில்லை. இதனால் தேர்ச்சி விகிதமும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் விகிதமும் குறையும் என்பது தனியார் பள்ளிகளின் அச்சம். இதன் தொடர்விளைவாக, முதலாண்டில் மதிப்பெண் குறைவாகப் பெற்று இரண்டாம் ஆண்டு மதிப்பெண்ணுடன் கூட்டி சராசரி மதிப்பெண் கணக்கிடும் போது 50 விழுக்காட்டிற்கும் குறைவாக மதிப்பெண் இருந்தால், தனியார் கல்லூரிகளில் குறிப்பாக பொறியியல் மாணவர் சேர்க்கை பெரும் அளவு பாதிக்கும். இதற்காகவே இந்த அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,
“சில தனியார் பள்ளிகளின் அழுத்தத்தால் இந்த முறை வந்துள்ளதாகத் தெரிகிறது” என்று கூறும் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், “பிளஸ் டூ தேர்வு முடிவுகளை ஆய்வு செய்து வெளியிடும் ஊடகங்கள் கடந்த ஆண்டில் பிளஸ் ஒன் தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். அப்போது பல உண்மைகள் வெளியாகும்”” என்கிறார். போதிய ஆசிரியர்களை நியமிக்காமல், போதிய கற்பித்தல் நாட்கள் பாடங்களை நடத்தாமல் இருந்தால் அரசுப் பள்ளிகளில் நல்ல தேர்ச்சியை எப்படி பெற முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
“மருத்துவ, தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம் பெற செய்வதற்காக பிளஸ் ஒன் பாடத்தை நடத்தாமல், பிளஸ் டூ பாடத்தை மட்டுமே பல தனியார் இரண்டு ஆண்டுகள் நடத்தி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைத்தன. இந்த நிலையைப் போக்குவதற்குதான் பிளஸ் ஒன் வகுப்புக்குப் பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. பிளஸ் ஒன் தேர்வு மதிப்பெண்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குப் பயன்படாது என்றால், அதன் பிறகு பிளஸ் ஒன் படிப்பில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். பள்ளி நிர்வாகங்களும் பிளஸ் டூ பாடங்களை பிளஸ் ஒன் வகுப்பிலேயே நடத்தும் பழைய நிலை மீண்டும் தொடரும்” என்கிறார் பேராசிரியர் பிரபா கல்விமணி.
“பிளஸ் ஒன், பிளஸ் டூ ஆகிய இரு ஆண்டுகளிலும் நடத்தப்படும் பாடங்களிலும் மாணவர்களைத் தகுதிபடுத்தினால்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்களை வெற்றி பெறச் செய்ய முடியும் “என்கிறார் அவர்.
“பிளஸ் டூ தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை இருக்கலாம். ஆனால், பிளஸ் ஒன் பாடத்திலிருந்து 40 சதவீதக் கேள்விகளும் பிளஸ் டூ பாடத்திலிருந்து 60 சதவீத கேள்விகளும் கேட்க வேண்டும். நீட் தேர்வில் 47 சதவீத வினாக்கள் பிளஸ் ஒன் வகுப்பு பாடங்களிலிருந்து கேட்கப்பட்டவை என்பதைப் பார்க்க வேண்டும். தற்போது புளு பிரிண்ட் இல்லை. மாணவர்கள் பாடத்தைப் புரிந்து படித்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலை உள்ளது. இதை மாற்ற நடக்கும் ஒரு முயற்சியின் தொடக்கமாகத்தான் இதைப் பார்க்க வேண்டியதிருக்கிறது” என்கிறார் எழுத்தாளரும் கல்வியாளருமான ஆயிஷா நடராஜன்.
“அரசுப்பள்ளில் போதுமான அளவு ஆசிரியர் இல்லை என்ற நிலையில் அரசு தன் பொறுப்பில் இருந்து தப்பிக்கவே இத்தகைய முடிவு பயன்படும். இந்த புதிய அரசாணையைத் திரும்பப்பெற்று, கல்வியாளர்கள், ஆசிரியர், மாணவர், பெற்றோர் அமைப்புகள், கல்வியல் செயல்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிகளை அழைத்து அவர்களின் கருத்துக்களை அறிந்து அத்தகைய கருத்துக்களைத் தொகுத்து உயர்நிலைக்குழுவில் வைத்து விவாதித்து அதன் பிறகே எந்த முடிவையும் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
எனினும், பிளஸ் ஒன் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன் என்ற தற்போதைய அறிவிப்பு, அவர்களுக்கு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிம்மதி தற்காலிகமானது.
Read in : English