Read in : English

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பைப் போலவே, பல் மருத்துவப் படிப்புகளிலும் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு கவுன்சலிங் முடிவில் பிடிஎஸ் படிப்பில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 30 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

பொதுவாகவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இரண்டு படிப்புகளிலும் சேருவதற்கு ஒரே விண்ணப்பம்தான். ஒரே ரேங்க் பட்டியல்தான் வெளியிடப்படும். எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்காதவர்கள்தான் பிடிஎஸ் படிப்பில் சேருவார்கள் என்ற நிலைமை தொடர்ந்து இருந்து வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆன பிறகு, எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர இடம் கிடைக்காத மாணவர்களில் பலர் பிடிஎஸ் படிப்புகளில் சேராமல், நீட் தேர்வை மீண்டும் எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர தயாராகி வருகிறார்கள். இதனால் பிடிஎஸ் படிப்பில் காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன என்கிறார்கள் சில கல்வியாளர்கள்.

“பிடிஎஸ் படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது பாடப்பிரிவுகளில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள், அடுத்த ஆண்டில் தொடர்ந்து படிக்க முடியாது. அரியர்ஸ் பாடங்களில் தேர்ச்சி பெற்ற பிறகுதான், தொடர்ந்து படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், படிப்புக் காலம் அதிகமாவதுடன், மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாகவும் பிடிஎஸ் படிப்பில் சேருவதில் பல மாணவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்” என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.

“தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்துக்கு மேல் செலவாகும். இந்த அளவுக்கு பணம் செலவழித்து பிடிஎஸ் படிப்புகளைப் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு தொடக்க நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சேருகிறவர்களுக்கு தொடக்க நிலையில் ரூ.15 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரைதான் ஊதியம் கிடைக்கிறது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணத்தில் சேர்ந்து படித்து விட்டு, நல்ல ஊதியம் கிடைப்பதில்லை என்பதும் மாணவர்களின் ஆர்வம் குறைவதற்கு முக்கியக் காரணம்” என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“நமது நாட்டில் இன்னமும் அதிகமான பல் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். இருந்தாலும், பல் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் முழு நேர வேலை கிடைப்பதில்லை. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தைக் குறைப்பதுடன், பல் மருத்துவப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் புதிதாக பணி இடங்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்கிறார் அவர்.

கடந்த ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் உள்ள இடங்கள் அனைத்தும் நிரம்பிய போதிலும்கூட நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 265 இடங்கள் காலியாக இருந்தன.

அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைவு என்பதால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் அங்கு காலி இடங்கள் எதுவும் இல்லை. ஆனால், இந்த ஆண்டில் பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருந்த 264 இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருந்த 600 இடங்களுக்கும் மாணவர்களைச் சேர்ப்பதற்காக மருத்துவக் கல்வி இயக்ககம் மீண்டும் புதிதாக விண்ணப்பங்களைப் பெற்றது.

இதற்காக நடந்தப்பட்ட கவுன்சலிங் திங்கள்கிழமை முடிவடைந்தது. கவுன்சலிங் முடிவில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 35 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 505 இடங்களும் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த 540 இடங்களையும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அந்தந்த பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக் கொளள மருத்துவக் கல்வி இயக்ககம் அனுமதி வழங்கும். பிடிஎஸ் படிப்பில் காலி இடங்கள் உள்ள சூழ்நிலையில், கட்டணத்தைக் குறைத்து வாங்கியாவது மாணவர்களைச் சேர்ப்பதில் தனியார் பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் முனைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள பல் மருத்துவப் படிப்புகளில் எந்த அளவுக்கு இடங்கள் பூர்த்தியாகியுள்ளன என்ற விவரங்கள் தெரியவில்லை.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival