Read in : English
குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த மூர்த்தி, தனது விடா முயற்சியால் படித்து டாக்டராகியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்தவர் மூர்த்தி. அவரது அப்பா கூலித் தொழிலாளி. தனது பாட்டி ஊரான தர்மபுரி மாவட்டம் கைலாயபுரத்தில் பள்ளிப் படிப்பைப் படித்துக் கொண்டிருந்த மூர்த்தியின் குடும்பம், வாழ்க்கைச் சூழ்நிலைக்காக பெங்களூருக்குக் குடிபெயர்ந்தது. அதனால் தொடக்கப் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விட்டு பெங்களூர் சென்ற மூர்த்தி, படிப்பை விட்டு விட்டு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கட்டட வேலைகளைச் செய்யும் நிலைக்கு ஆளானார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஊருக்குத் திரும்பிய மூர்த்தி, குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்து படித்தார்.
பின்னர், ஊத்தங்கரை அரசு பள்ளியில் தொடர்ந்து தமிழ் வழியில் 9, 10ஆம் வகுப்புகளைப் படித்த அவர், எஸ்எஸ்எல்சி தேர்வில் 500க்கு 459 மதிப்பெண்கள் பெற்றார். அந்த மாவட்டத்திலேயே குழந்தைத் தொழிலாளியாக இருந்து பிறகு பள்ளிப் படிப்பைப் படித்த மாணவர்களில் முதலிடம் பெற்றார். அதனால், அப்போது மாவட்டக் கலெக்டராக இருந்த அமுதா, மூர்த்தியை தர்மபுரியில் உள்ள விஜய வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவசமாகப் படிக்க ஏற்பாடு செய்தார். படிப்பதற்காக டியூஷன் எதுவும் செல்லவில்லை. அதற்கான வசதியும் அவருக்கு இல்லை. ஆனாலும், பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1123 மதிப்பெண்கள் பெற்றார். எம்பிபிஎஸ் படிப்பில் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள் 193. தலித் மாணவரான அவருக்கு 2011இல் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
“தர்மபுரி மாவட்ட தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் உதவி பெற்று படித்தேன். அங்கிருந்த திட்ட அலுவலர்கள் எனது படிப்புக்கு மிகவும் உதவியாக இருந்தனர். 2011இல் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டாலும், என்னைப் படிக்க வைக்க கூரை வீட்டில் வாழ்ந்த எனது குடும்பத்துக்கு வசதி இல்லை. எனது நிலைமையைப் பற்றி அறிந்த ஓமலூரில் சுகம் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் மணிக்கண்டனும் அவரது மனைவி உமா மகேஸ்வரியும் எனது படிப்பைச் செலவை ஏற்றுக் கொண்டனர். தமிழ் வழியில் படித்து விட்டு கல்லூரியில் ஆங்கில வழியில் படிப்பது தொடக்கத்தில் சிரமமாக இருந்தது. ஆறு மாதத்தில் நான் சமாளித்து நன்கு படிக்கத் தொடங்கி, டாக்டர் பட்டமும் பெற்று விட்டேன்” என்கிறார் மூர்த்தி.
“அதன் பிறகு, சில மாதங்கள் சேலத்தில் டாக்டர் திருவருள் செல்வன் நடத்தும் திரு மருத்துவமனையில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே, மருத்துவ முதுநிலைப் படிப்பைப் படிப்பதற்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்தேன். அவரது உதவியுடன் தற்போது சென்னையில் தங்கி தனியார் கோச்சிங் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். எம்.டி. ஜெனரல் மெடிசின் அல்லது எம்எஸ் ஆர்த்தோ படிக்க விரும்புகிறேன். அடுத்து முதுநிலைப் படிப்பில் இடம் கிடைத்து விட்டால், படிக்க உதவித் தொகையும் கிடைக்கும். படித்து முடித்தும் அரசு வேலையில் சேர்ந்து விடலாம்” என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் அவர்,
“எனது தம்பி பூபாலன், டயாலிசிஸ் டெக்னீஷியன் டிப்ளமோ படித்து வருகிறான். பள்ளிப் படிபபை இடையிலேயே விட்டு விட்ட எனது தங்கைக்குத் திருமணம் முடிக்க வேண்டியிருக்கிறது. எனது தாயையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. வேலைக்குச் சேர்ந்து விட்டால் நிலைமை சரியாகிவிடும்” என்று கூறும் டாக்டர் மூர்த்தி. மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்காக வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு நம்பிக்கையுடன் தயாராகி வருகிறார் .
Read in : English